02) இந்த நூலில் என்ன உள்ளது?

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

¢ இந்த நூலில் என்ன உள்ளது?

 புதிதாக பிரச்சாரம் செய்யவிரும்பும் மக்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? தவிர்க்கவேண்டியவை என்ன? பயத்தை வெல்லும் வழிமுறைகள் என்ன? பேச்சாளர் கவனிக்கவேண்டிய புறவிஷயங்கள் என்ன? என பல்வேறு செய்திகள் இந்த நூலில் உள்ளன.

”10 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்கிறேன். நான் பேசினால் யாரும் கேட்பதில்லை. என்னை யாரும் மதிப்பதில்லை” என்று புலம்பும் பேச்சாளர்கள், பிரச்சாரத்தில் செய்யும் தவறுகளையும். கடைபிடிக்கவேண்டிய யுக்திகளையும் இந்த நூல் பட்டியலிடுகிறது. குறிப்பாக மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்வது எப்படி என்று விளக்குவதே இந்த நூலின் முக்கிய நோக்கம். இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாக படித்து செயல்படுத்தினால் அல்லாஹ் நாடினால், நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் ஆவது உறுதி.

¢ தவறான நம்பிக்கைள்

மக்களுக்கு பயான் செய்யவேண்டும், அதன் மூலம் நன்மைகளை பெறவேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருந்தாலும், ”பிரச்சாரம் செய்வது மிகவும் கடினமான பணி, அதற்கென்று தனித்திறமை வேண்டும்” என்று நினைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்ய தயங்குகின்றனர். குறிப்பாக,

  • மதரஸாவில் நான்கைந்து வருடம் ஆலிம் படிப்பு படித்தவர்கள் தான் பயான் செய்யமுடியும் என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு. இன்றைக்கு நம்மிடையே பிரச்சாரம் செய்யும் தாயிக்களில் ஏராளமானோர் மதரஸாவில் படிக்காதவர்கள் தான். தங்களது சுயமுயற்சியால் மார்க்க அறிவை வளர்த்துக்கொண்டவர்கள். குறிப்பாக, உலகளாவிய அளவில் பிரச்சாரம் செய்யும் நபர்களில் 80 சதவீதம் பேர், மதரஸா சென்று முறையாக கல்வி பயிலாதவர்கள், தங்களின் சுயமுயற்சியால் சட்டதிட்டங்களை அறிந்துகொண்டு சிறப்பாக பிரச்சாரம் செய்பவர்கள்.மதரஸாவில் பயின்றவர்கள் தான் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று சில அறிஞர்கள் ஃபத்வா கொடுக்கின்றனர். இது தவறு. இவர்களிடம், ”தான் அறிந்த மார்க்க சட்டத்தை ஒருவர் பிறருக்கு சொல்லித் தரலாமா?” என்றால் கூடும் என்பார். ”நூறுபேருக்கு சொல்லித்தரலாமா” என்றால் கூடும் என்பார். ”அதையே மேடையில் நின்று சொன்னால் மட்டும் கூடாதா?” என்ற எதிர்கேள்விக்கு இவர்களிடம் எந்த பதிலும் இருப்பதில்லை. எனவே, மதரஸாவில் படிக்காதவர்கள் பிரச்சாரம் செய்வதில் எந்த தவறும் இல்லை.
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

”நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள் (அல்குர்ஆன்: 9:71)”  என்று இறைவன் கூறுகிறான், எனவே அழைப்புப்பணி, ஈமான் கொண்ட அனைவருக்கும் உரியதேயன்றி, குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் உரியதல்ல.

  • இன்னும் சிலர், ”பேச்சுக்கலை என்பது மனிதன் பிறக்கும் போதே அவருக்கு உள்ள திறமை, இவ்வாறு உள்ளவர்கள் தான் பெரிய பேச்சாளர் ஆகின்றனர்” என்று நினைக்கின்றனர். இந்த நம்பிக்கையும் தவறு. மனிதர்களின் பிறவி மரபணுக்களுக்கும், அறிவுத்திறனுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். எனினும், அதற்கும் சுயமுயற்சியின் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய பேச்சுக்கலைக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், மரபணுக்களை விட, சூழ்நிலைக் கல்வியின் மூலமாகவே அறிவுத்திறன் அதிகமாகிறது அல்லது குறைகிறது என்று, அமெரிக்க பேராசிரியர் கிராஸ் (Dr.Kraus,Ph.D,Psychology dep, Illinois University,Urbana,US) அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பேச்சுக்கலை என்பது வளர்த்துக் கொள்வதுதானேயன்றி பிறவியிலேயே உள்ள திறமை அல்ல.
  • இன்னும் சிலர், ”நான் மக்களிடம் பேசும்போது, கைகால் நடுக்கம், பயம் ஏற்படுகிறது, இது எதிர்மறை அறிகுறி (Negative Feedback). எனவே எனக்கு மேடைப்பேச்சு வராது, இந்த பயம் இல்லாதவர்கள் தான் பேசமுடியும்” என்று நினைக்கின்றனர், இந்த கருத்தும் தவறு. Glossophobia (குளோசோஃபோபியா) என்று அழைக்கப்படும் மேடைபேச்சு பயத்தைப் பற்றி பின்னால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான ஒருசிலரைத் தவிர இன்றைக்கு இருக்கும் பேச்சாளர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் பயம், நடுக்கம் ஏற்பட்டவர்கள் தான். ஆனால் சில மாதங்களில் இது தானாகவே சரியாகிவிடும். எனவே பேசஆரம்பிக்கும் போது பயம் வருவது, உங்களுக்கு பேச்சுத்திறன் இல்லை என்பதற்கான அறிகுறி இல்லை. இது அனைவருக்குமே ஏற்படக்கூடியது தான்.

இதுபோன்ற தவறான நம்பிக்கைகளை முதலில், உங்கள் உள்ளத்திலிருந்து அகற்றிவிட்டு, உங்களாலும் பேசமுடியும், மார்க்கத்தை மக்களுக்கு போதிக்கமுடியும், என்று உறுதியான நம்பிக்கை வையுங்கள்.

¢ பேச்சாளர் ஆவதற்கு என்ன தான் தெரியவேண்டும்?

இஸ்லாம் அல்லாத பிற தத்துவங்களில் ஒருவர் பேச்சாளர் ஆவதற்கு ஏராளமான செய்திகள் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள். தமிழ் இலக்கியம், திருக்குறள், பாரதியார் கவிதைகள், காந்தியின் சத்தியசோதனை, நேருவின் உலக வரலாறு, அரசியல், சட்டம், மார்ஸிய, லெனினிய தத்துவங்கள், ஈஸாப் கதைகள், விவேகானந்தர் பொன்மொழிகள் என வரிசையாக பட்டியலிடுவார்கள்.

இஸ்லாமிய பயானுக்கு மேற்குறிப்பிட்ட எதுவும் தேவையில்லை. தலைப்பு சம்பந்தப்பட்ட இரண்டு குர்ஆன் வசனங்கள், இரண்டு ஹதீஸ்கள், இரண்டு உலக சம்பவங்கள் இருந்தால் போதுமானது. ஒரு சிறப்பான பயானை நிகழ்த்தி விடலாம். ஆம், பயான் செய்வது உண்மையிலேயே மிகமிக எளிதானது. இனி, ஒரு சிறந்த உரை எப்படி இருக்கவேண்டும் என்று பார்ப்போம்.

¢ சிறந்த உரை என்பது

  • குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இருக்கவேண்டும்.
  • உன்னித்து கவனித்தால் தான் விளங்கும் என்றில்லாமல், குறைந்த மூளைத்திறனை கொண்டு விளங்கக்கூடியதாக தெளிவாகவும் கோர்வையாகவும் இருக்கவேண்டும்.
  • மக்களை அந்த செய்தியின் பால் ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டும். அதாவது தொழுகையை பற்றி சொன்ன பிறகு தொழவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வேண்டும்.
  • நம் கருத்தை நிறுவவும், எதிர்கருத்தை உடைக்கவும் தேவையான நேர்மையான, வலிமையான வாதங்கள் மற்றும் சான்றுகள் உடையதாக இருக்கவேண்டும்.
  • மக்களை சலிப்பூட்டாத வகையிலும், நாகரீகமான வார்த்தைகளை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.
  • போதுமான தகவல்கள் உள்ளடக்கியதாகவும், சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய தீர்வை சொல்லக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

இந்த விதிகளின் அடிப்படையில் பயான் செய்யும் முறைகளையும், மக்களை கவரும் யுக்திகளையும் இனி வரிசையாக காண்போம்.