இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்?
இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்?
இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான்காரர்கள் – பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று காவி அமைப்பினர் அவதூறாகப் பேசி வருகிறார்கள். இப்படி அவதூறு சுமத்துபவர்கள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் எம்.பி. அஸதுத்தீன் உவைஸி கூறினார். இப்படி இவர் சொன்னதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. இந்திய நாடு இரண்டாகப் பிளவு பட்ட போது இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என வழி திறந்து விடப்பட்டது. ஆனால் இந்திய நாட்டின் மீது பற்று கொண்ட இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை.
காரணம் இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்திருந்த மாறாத பற்று. நாட்டை விட்டுச் செல்வதற்கு இந்திய முஸ்லிம்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு காவி அமைப்பினருக்கு கிடைத்திருந்தால் அடுத்த நிமிடமே அவர்கள் நாட்டை விட்டு ஓடிப் போயிருப்பார்கள். இது கற்பனையல்ல நிஜம். நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்பவர்களில் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் உள்ளனர். அப்படி இந்தியர்கள் எனப் பொதுவாக குறிப்பிடப்படும் அவர்கள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
போதிய மதிப்பெண் எடுக்காத காரணத்தால் இங்குள்ள நல்ல கல்வி நிறுவனங்களில் சீட் மறுக்கப்படுபவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடிப்போய், அங்கு பார்ட் டைமாக வேலை பார்த்துக் கொண்டு பல்கலைக் கழகங்களிலும் படித்து, அங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள். இப்படி கல்வி வாய்ப்புக்காக காவி சிந்தனையாளர்கள் நாட்டை விட்டு ஓடி, வேறு நாடுகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர். அது போல் இந்திய மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் 90 சதவீத உயர்சாதி மாணவர்கள், கல்வி வாய்ப்பு தந்த இந்த நாட்டுக்குச் சேவையாற்றாமல் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் செட்டிலாகி விடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலையே செய்தாலும் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம். ஏனெனில் இந்த நாடு எங்களுக்குச் சொந்தமான நாடு என்று பல கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழும் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என்றும், பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்றும் சொல்லும் போது அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் தானே! இந்த அவசியத்தைத் தான் உவைஸி எடுத்துரைத்தார். இதற்குப் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் ‘முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பாகிஸ்தான் என்ற தனி நாடு கிடைத்து விட்டது. இனிமேலும் அவர்கள் இந்தியாவில் வசிக்கக் கூடாது.
முஸ்லிம்களுக்கென தனி எல்லைகள் கொடுக்கப்பட்டு விட்டன. அப்படி இருக்கையில் அவர்கள் இந்தியாவில் ஏன் வசிக்கின்றனர்? அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. வினய் சத்தியார் விஷம் கக்கியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இந்துத்துவா நாடாக ஆக்கி, வர்ண, சாதி அடிப்படையில் இந்திய மக்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்கி ஆள வேண்டும் என்பது காவிகளின் திட்டம். இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கும் வரை இந்தத் திட்டம் நிறைவேறாது. இந்திய மக்களவை அடிமைப்படுத்த முடியாது என்பதால் தான் இந்தியாவை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என இவர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியா – ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் பிரகடனம் செய்கிறது. இந்த மதச்சார்பற்ற இந்தியாவில் வசிக்க காவி அமைப்பினருக்கு மனம் இல்லையெனில் ஆப்பிரிக்க நாடான மொரிஷியசுக்கு அவர்கள் ஓடி விட வேண்டும். 1968ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற மொரிஷியஸில் 70 சதவீத இந்துக்கள் வாழ்கின்றனர். இந்த நாட்டின் பரப்பளவு 2040 ச.கி.மீ.களாகும். 13 லட்சம் மக்கள் மட்டுமே இங்கு வசிப்பதால் காவி அமைப்பினருக்கு இங்கு தங்க இடம் கிடைக்கும். எனவே இவர்கள் இங்கு ஓடி விடலாம்.
கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வேறு நாடுகளுக்கு போய் குடியேறும் இவர்கள் இந்தியாவில் மதச்சார்பின்மை பிடிக்காவிட்டால் மொரிஷியசுக்குப் போவதற்கு என்ன தயக்கம்? இந்தியாவில் 19 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இவற்றுக்காக முஸ்லிம்கள் வெளிநாடுகளில் போய் நிரந்தரமாகக் குடியேறுவதில்லை. ஒரு வேளை வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றால் அங்கிருந்து அன்னியச் செலாவணி ஈட்டி இந்தியாவுக்குத் தந்து விட்டு, கடைசியில் இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் நலனுக்காக உழைக்கின்றனர்.
எனவே இந்தியாவை விட்டு வெளியேற விரும்பாத இந்த இந்திய முஸ்லிம்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவது என்பது நடக்காது. இதற்குப் பதிலாக மதச்சார்பற்ற இந்தியாவை விட்டு காவி சிந்தனையாளர்கள் மொரிஷியசுக்கு குடி பெயர்வது எளிதானது. இதை காவி அமைப்புகள் கவனத்தில் கொண்டு இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என குறைக்காமல் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கான வேலையை அவர்கள் தொடங்க வேண்டும். இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்?