6) இத்தா ஒரு விளக்கம்

நூல்கள்: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இத்தா ஒரு விளக்கம்

கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் “இத்தா’ எனப்படுகிறது.

கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.

முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.

இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.

ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால் தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான் 2:228) தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூறமுடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.

குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.

இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர் காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.

(அல்(அல்குர்ஆன்: 65:4)

கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவிலிலி-ருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல்(அல்குர்ஆன்: 65:4)

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.

இவ்வசனத்திலிலி-ருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.

இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம் செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன் தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கால கட்டத்தில் பகிரங்கமான முறையில் மணம் பேசுதல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. மறைமுகமாக திருமணம் குறித்து பேசிக் கொள்வதில் தவறில்லை.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:235)

கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடைகளைத் தவிர!

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

(புகாரி: 313)

இதைத் தவிர ஏனைய காரியங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மேலே கூறப்பட்டுள்ள காரியங்கள் தவிர மற்றவற்றுக்கு சாதாரண நாட்களில் பெண்களுக்கு என்ன சட்டமோ அது தான் இந்த இத்தா காலத்திலும் உள்ளது.

ஆனால் இன்று நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில், இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.

வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைத்து வைக்கின்றனர். பெண்களைச் சூரிய ஒளி கூட படாத வகையில் இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அவர்கள் வானம் பார்க்கக் கூடாது; வெளிச்சம் பட்டுவிடக் கூடாது; யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காகப் பாயிலுள்ள ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும், சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.

அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.

சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம். இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணைப் பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்குத் தடை உள்ளது.

இது போன்று மார்க்கத்தில் இல்லாத கற்பனைக் கட்டுப்பாடுகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த எளிய மார்க்கத்தை கடின மார்க்கமாக ஆக்கி விட்டவர்கள், அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைக்கும் பழக்கம் பிற மதத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகும். கணவனை இழந்தவர்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டும்; அலங்காரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ் விதிக்கவில்லை. காரணம், இது அல்லாஹ்விடமிருந்து வந்த கரை படாத கலப்படமில்லாத மார்க்கமாகும். மக்கள் மீது எந்தச் சிரமத்தையும் விதிக்காத எளிய மார்க்கமாகும்.

இத்தாவிலும் சலுகைகள்

கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா குறித்து பார்த்தோம். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்றாலும், அதே கால அளவு இருக்கத் தேவையில்லை.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 2:228)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகும். மேலும், பைபிள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டதைப் போன்று, விவாகரத்துச் செய்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஒரேயடியாகத் தடை விதிக்கவில்லை. இந்த மூன்று மாதவிடாய் காலத்திற்குள் கணவன், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்குகிறது.

ஒருவர் ஒரு பெண்ணை மணமுடித்து, அவளைத் தொடாமலேயே விவாகரத்துச் செய்து விட்டால் அந்தப் பெண் இத்தா அனுஷ்டிக்க வேண்டுமா? என்றால் தேவையில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

(அல்குர்ஆன்: 33:49)

இது போன்ற இல்லறவியலின் ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி, தான் ஓர் எளிய மார்க்கம் என்பதை உலகுக்குப் பறை சாற்றி நிற்கின்றது.

தீட்டான பெண்கள் வீட்டுக்குத் தூரம்?

மாதவிடாய் என்பது மாதந் தோறும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கைக் கூறாகும். கரு முட்டைகள் உடைந்து வெளிவரும் கழிவாகும்.

பெண்களுக்கு இவ்வாறு மாதவிடாய் ஏற்படும் போது மக்கள், அப்பெண்ணைத் தீண்டத் தகாதவளாகப் பார்க்கின்றனர். அவர்களைத் தீட்டுப்பட்டவர்கள் என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. வீட்டுக்குத் தூரமானவர்கள் என்றும் குறிப்பிட்டு, அவ்வாறே நடத்தவும் செய்கின்றனர். அப்படி ஓர் அருவருப்பான தோற்றத்தை மதங்கள் மக்களிடம் உருவாக்கி விட்டிருக்கின்றன.

யூத மதம் இதில் தலைமை வகிக்கின்றது.

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக.

அவள் விலக்கலாயிருக்கையில், எதின் மேல் படுத்துக் கொள்ளுகிறாளோ எதின் மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் படுக்கையின் மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 15:19-23

மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஏழு நாட்கள் வீட்டை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும், அவள் எதையெல்லாம் தொடுகிறாளோ அவையனைத்தும் தீட்டுப்பட்டவை என்றும், அவள் உட்கார்ந்த இடமும் தீட்டு என்றும் பைபிள் பழைய ஏற்பாட்டின் இந்த வசனங்கள் கூறுகின்றன.

அது மட்டுமின்றி, மாதவிடாய் பெண்களைத் தொட்டவர்களும், அவள் இருந்த இடத்தையும், படுக்கையையும் தொட்டவர்களும் தீட்டுப்பட்டவர்கள் என்றும் யூத மதம் கூறுகின்றது.

யூத மதத்தின் கொள்கைகளை மையமாகக் கொண்டு அமைந்த மனு தர்மமும் இது போன்றே குறிப்பிடுகின்றது.

சண்டாளன், விலக்கானவள், பிணம், பிணத்தைத் தொட்டவர் ஆகியவர்களைத் தொட்டால் நீராடுக!

தீட்டுக்கு மாற்று என்ற தலைப்பின் கீழ் 111வது வசனத்தில் மனு தர்மம் இதைக் கூறுகின்றது.

இஸ்லாம் தான் இந்தக் கொடுமைகளைக் களைந்து எறிகின்றது. இது பற்றி திருக்குர்ஆன் கூறுகின்றது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:222)

இந்த வசனம் அருளப்பட்டதன் பின்னணியைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது,

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஒரு தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன்: 2:222)

என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடலுறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் (நபி (ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை” என்று பேசிக் கொண்டனர்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்லிம்: 455),(அபூதாவூத்: 225)

மாதவிடாய் பெண்களிடம் இல்லறத்தைத் தவிர மற்றவை அனைத்தும் ஆகும் என்று அறிவித்து, பெண்களின் மீது பூட்டப் பட்டிருந்த இரும்புச் சங்கிலிகளை இஸ்லாம் உடைத்தெறிகின்றது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவற்றை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 7:157)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள், பெண்கள் மீது போடப்பட்டிருந்த விலங்குகளை தகர்த்தெறிகின்றார்கள்.

இந்த எளிய மார்க்கத்தின் இனிய இறைத்தூதர் அவர்கள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை எப்படி எல்லாம் நடத்தியிருக்கிறார்கள் என்று பாருங்கள்!

கணவனுக்குத் தலை வாருதல்

யூத, இந்து மதங்கள் தீட்டுப்பட்ட பெண்களைத் தொட்டாலே குளிக்க வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இந்த எளிய மார்க்கத்தின் தூதர் (ஸல்) அவர்கள், தமது மனைவி மாதவிடாயாக இருந்த நேரத்தில் தமது தலையைக் கழுவி விடுமாறு கூறுகின்றார்கள்.

ஹிஷாம் பின் உர்வா அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? பெருந்தொடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?” என்று கேட்கப் பட்டது.

அதற்கு, “இதுவெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இயல்பான விஷயம் தான். (மாதவிடாய் ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் (கூட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரி விடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையிலிருக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்குத் தலை வாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 296)

மாதவிடாய்ப் பெண்ணை அணைத்துக் கொள்ளுதல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையிலுள்ள (தமது மனைவியரான) எங்களில் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணைத்துக் கொள்ள விரும்பினால் மாதவிடாய் வெளிப்படுமிடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உஙகளில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

(புகாரி: 301)

ஒன்றாகப் படுத்துக் கொள்ளுதல்

(நபி ஸல் அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி, மாதவிடாய் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். ஆயினும் அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கருப்புப் போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்.

(புகாரி: 298)

தீட்டு கையில் இல்லை

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு, “ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்துக் கொடு” என்று கூறினார்கள். அதற்கு, “நிச்சயமாக நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேன்” என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவர்கள். “உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை” எனக் கூறினார்கள். பின்னர் அத்துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 450),(திர்மிதீ: 124)

மாதவிடாய்ப் பெண் தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற தீண்டாமையை இஸ்லாம் உடைத்து நொறுக்கி விடுகின்றது. அத்துடன் மாதவிடாய் ஏற்பட்ட பெண், தொழுகை விரிப்பை எடுத்து வருவதற்குக் கூட அனுமதிக்கிறார்கள். “மாதவிடாய் என்பது கையில் இல்லை” என்ற அற்புதமான கூற்றின் மூலம் உலகில் உள்ள மற்ற மதங்களிலுள்ள அனைத்து மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிகின்றார்கள்.

மாதவிடாய் பெண் ஹஜ் செய்தல்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்கிறார்கள். ஹஜ் செய்யும் கால கட்டத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. அதனால், ஏன் தான் ஹஜ் செய்ய வந்தோம்? என்று கடுமையான வேதனையை அடைகிறார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளிக்கும் அற்புதத் தீர்வைப் பாருங்கள்.

“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 305, 1650)

தீட்டுப்பட்ட பெண்கள் வீட்டுக்குத் தூரம் என்று மற்ற மதங்கள் கூறுகையில், அவள் வீட்டுக்கும் தூரமானவள் அல்ல! ஹஜ் போன்ற மிகப் பெரிய வணக்க வழிபாட்டைச் செய்வதற்குக் கூட தூரமானவள் அல்ல என்று இஸ்லாம் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

தீட்டுப் பெண் திடலுக்கு வருதல்

மாதவிலக்கான பெண்கள் பெருநாளன்று வீட்டில் முடங்கிக் கிடந்து விடக் கூடாது என்பதற்காகவும், “நமக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால் தான் நம்மால் இந்தப் பெருநாளின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போய் விட்டது’ என்று அந்தப் பெண்கள் மனச் சங்கடம் அடையக் கூடாது என்பதற்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை இட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் மக்களுக்குப் பின்னால் இருக்க வேண்டும். அன்றைய நாளின் பரகத்தை எதிர்நோக்கி அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தக்பீர் கூற வேண்டும். அவர்களோடு இவர்களும் துஆச் செய்ய வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ர-)

(புகாரி: 971)

தொழுகையைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கு கொண்டு பெருநாளின் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்வதற்கு இந்த எளிய மார்க்கம் வகை செய்கின்றது.

தொடர் உதிரப் போக்கும், தொழுகையும்

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கும் இந்த எளிய மார்க்கம் அளிக்கும் அருமையான சலுகையைப் பாருங்கள்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு, “இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-)

(புகாரி: 228)

இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு, அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று கூறி அவர்களுக்குச் சலுகையை வழங்குகிறது. அது மட்டுமின்றி இஃதிகாஃப் (பள்ளியில் தங்குதல்) என்ற வணக்கத்தைக் கூட தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாஙகள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.

(புகாரி: 2037)

மற்ற மதங்கள் மாதவிலக்கு ஏற்பட்ட மாதர்களை தீண்டக் கூட விடாமல் அவர்களைக் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கையில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அப்பெண்களுக்கு விடியலை வழங்குகின்றது.

குறிப்பிட்ட சில வணக்கங்களைத் தவிர்த்து மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்று அனுமதிக்கிறது. அது போல் இல்லற வாழ்க்கையிலும் உடலுறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளலாம் என்று கூறி, பெண்களுக்கு ஏற்ற இலகுவான மார்க்கமாகத் திகழ்கிறது.