07) ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை
ஆன்மீகத் தலமையாலும் பலனடையவில்லை
ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.
அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி பெறுகின்றனர். நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விட அதிக மோசடிக்காரர்களாகவும் இவர்களே திகழ்கின்றனர்.
* தம்மைக் கடவுளின் அம்சமென வாதிடுவது
* சாபமிடுவதாக அச்சுறுத்துவது
* ஆசி வழங்குவதாகக் கூறி ஏமாற்றுவது
* புலனுக்குத் தெரியாதவை பற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது
* கட்டளைகள் யாவும் மற்றவர்களுக்குத் தானே தவிர தனக்குக் கிடையாது என்று நடந்து கொள்வது
* வயிறு வளர்க்கவும், சொத்து சேர்க்கவும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்வது
* மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பது
என்றெல்லாம் பலவிதமான மோசடிகள் காலங்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன. இவற்றில் எதையும் செய்யாதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாக எதிர்த்த ஒரே ஆன்மீகத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்ந்தார்கள்.
ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளைக் கண்டு ஆன்மீகத்தை முழுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்கள் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவுக்கு ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை எதிர்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசடிகளை எதிர்த்தார்கள்.
ஆன்மீகத் தலைவர்களுக்கு அளவு கடந்த மரியாதை செய்யப்படுவதைக் கண்டு அதை எதிர்த்த எத்தனையோ தலைவர்கள் அது போன்ற மரியாதை தமக்குச் செய்யப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வரலாற்றில் அநேக சான்றுகள் உள்ளன. நாமே இத்தகையவர்களை இன்றளவும் சந்தித்து வருகிறோம்.
ஆனால், ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத் தலைவர்களுக்குச் செய்யப்படும் அளவு கடந்த மரியாதையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். அறியாத மக்களால் தமக்கே அத்தகைய மரியாதை செய்யப்படும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்தி அதைத் தடுத்தார்கள். அவர்களை மாமனிதர் என்று வரலாறு போற்றுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.
ஆன்மீகத் தலைமை அரசியல் தலைமையை விட வலிமையானது. இந்தத் தலைமையின் காரணமாகத் தான் அரசியல் தலைமை கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வந்தடைந்தது எனலாம்.
இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பல நூறு ஆன்மீகத் தலைவர்களில் அவர்களும் ஒருவர் என்ற நிலையில் அவர்களின் தலைமை இருக்கவில்லை. மாறாக, முழுமையான அதிகாரம் படைத்த ஒரே ஆன்மீகத் தலைவராக அவர்கள் திகழ்ந்தார்கள்
உயிரைக் கொடுக்கச் சொன்னால் கூட கொடுப்பதற்குத் தயாரான மக்கள் கூட்டம் அவர்களுக்கு இருந்தது.
அவர்களது எந்த உத்தரவையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எந்தக் கேள்வியுமின்றி நிறைவேற்றக்கூடிய தோழர்களை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
அப்படி இருந்தும் ஆன்மீகத் தலைமையைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் அவர்கள் பெற்றதில்லை.
முதன் முதலில் அவர்கள் செய்த முக்கியமான பிரகடனமே இது தான்!
‘எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்’ என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை(அல்குர்ஆன்: 18:110, 41:6) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
நம்மைப் போன்றவர்களுக்கு இது சாதாரண பிரகடனமாகத் தோன்றலாம். ஆன்மீகத் தலைவர்களுக்கு இது ஆபத்தான பிரகடனமாகும். ‘நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நாங்கள் தனிப் பிறவிகள்; தெய்வப் பிறவிகள்; அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்கள்’ என்ற பிரகடனத்தில் தான் அனைத்து ஆன்மீகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.
இந்த மாமனிதரோ அந்த ஆணி வேரையே பிடுங்கி வீசுகிறார்.
ஏதோ பெயரளவுக்கு இப்படி அறிவித்து விட்டு நடைமுறையில் அதற்கு மாற்றமாக நடந்திருப்பார்களோ என்று யாரும் நினைக்க வேண்டாம். நடைமுறைப்படுத்தாத ஒரு பேச்சையும் பேசாத தலைவர் நபிகள் நாயகம். தமது வாழ் நாள் முழுவதும் இதை நடைமுறைப் படுத்திக் காட்டி விட்டுச் சென்றார்கள்.
அவர்களின் வரலாற்றில் இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் தனது அருள் போர்வையை என் மீது போர்த்தினால் தவிர நானும் அப்படித் தான்’ என்றார்கள்.
மனிதன் தனது வாழ் நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்தாலும் அதற்காக சொர்க்கம் எனும் மகத்தான பரிசைப் பெற இயலாது. ஏனெனில் சொர்க்கம் என்பது நினைத்ததெல்லாம் கிடைக்கக் கூடிய அழியாத பெரு வாழ்வாகும். மனிதர்கள் செய்யும் சிறிய செயல்களுக்கு பெரிய அளவில் இறைவன் நன்மைகள் வழங்குவ தால் தான் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
‘நீங்களுமா?’ என்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘எனது நிலை வேறு’ என்று அவர்கள் பதிலளித்தால் அந்த மக்கள் அதை அப்படியே நம்பியிருப்பார்கள். ‘நான் செய்யும் வணக்கத்திற்கு எத்தனை சொர்க்கம் தந்தாலும் போதாது; அந்த அளவுக்கு நான் வணக்கம் புரிகிறேன்’ என்று அவர்கள் கூறினாலும் மக்கள் நம்பியிருப்பார்கள்.
நான் சொர்க்கத்துக்குப் போவதாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் அருள் இருந்தால் தான் நடக்கும். எனது செயல்களால் அல்ல என்று அறிவிப்பது ஆன்மீகத் தலைவர்களுக்கு மிகவும் கஷ்டமானதாகும்.
ஆன்மீகத் தலைவர்களிடம் ஆசி பெறுவதை பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் அதற்கு முன் ஒரு பெரியாரிடம் ஆசி பெறுகின்றனர். இவ்வாறு ஆசி பெற்று விட்டு அக்காரியத்தில் இறங்கினால் அக்காரியம் கை கூடும் எனவும் நம்புகின்றனர்.
ஆசி வழங்கும் பெரியார்களும் இதை உள்ளூர விரும்புகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்ற மனிதர்கள் தான். ஆன்மீகத் தலைவர்களின் காரியங்கள் கூட பெரும்பாலும் கை கூடுவதில்லை. அவர்களுக்கே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தங்களிடம் எந்த ஆற்றலும் இல்லை என்பது ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தாலும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இந்த நம்பிக்கையையும் ஒழித்துக் கட்டினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் என்னைப் பற்றி பேசும் போது என்னிடம் எதையும் பிரார்த்திக்கக் கூடாது. என்னிடம் ஆசி கேட்கக் கூடாது. எனக்காக இறைவனிடம் நீங்கள் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்களுக்குக் கட்டளை பிறப்பித் தார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களைப் பற்றி பேசும் போது ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுகிறார். எழுத்தில் சுருக்கமாக ‘ஸல்’ எனக் குறிப்பிடுகிறார். ‘அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்’ என்பது இதன் பொருள்.
மாபெரும் ஆன்மீகத் தலைவரான தமக்காக மற்றவர்கள் இறை வனிடம் இறையருளை வேண்ட வேண்டும் என்று அவர்கள் கற்றுத் தந்ததால் தான் முஸ்லிம்கள் எந்த மனிதனையும் வணங்குவதில்லை; ஆசி வாங்குவதில்லை. ஆன்மீகத்தின் காரணமாக கிடைக்கும் ஆசி வழங்கும் பெருமையைக் கூட ஒழித்துக் கட்டினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் நபிகள் நாயகத்துக்குப் பக்கபலமாக இருந்தார். அவர்களின் பிரச்சாரத்துக்கும் உறுதுணையாக இருந்தார். அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது அவரைச் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அகில உலகையும் படைத்த இறைவன் ஒரே இறைவன் தான்’ என்ற கொள்கையின் பால் அவரை அழைத்தார்கள். அவர் அதனை ஏற்க மறுத்து தமது பழைய கொள்கையிலேயே மரணித்து விட்டார். அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிதும் கவலைப் பட்டார்கள். அப்போது ‘நீர் நினைத்தவரை உம்மால் நேர்வழியில் செலுத்த இயலாது. தான் நாடியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான்’ என்ற வசனம் (28:56) அருளப்பட்டது.
ஒருவரை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என்று இறைவன் கண்டித்ததாக அறிவித்ததன் மூலம் அல்லாஹ்வின் தூதராக இருப்பதால் அல்லாஹ்வின் அதிகாரம் ஏதும் தமக்கு வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.
இறைவனை வணங்கும் போது மனிதர்களால் மனம் ஒன்றிப் போய் வணங்க முடிவதில்லை. இறைவனை வழிபடும் நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் குறுக்கிடுவதை ஒவ்வொருவரும் அனுபவப்பூர்வமாக உணர்கிறோம்.
ஆன்மீகத் தலைவர்களின் நிலையும் இது தான். ஆனாலும் ஆன்மீகத் தலைவர்கள் தங்களைப் பற்றி பொய்யான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியுள்ளனர். தாங்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனுடன் ஒன்றி வணக்கம் புரிவதாக மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களும் அதை அப்படியே நம்புகின்றனர்.
இதன் காரணமாகவே இறைவனிடம் தங்கள் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்காமல் ஆன்மீகக் குருமார்கள் வழியாகக் கேட்டு வருகின்றனர்.
இந்தப் பித்தலாட்டத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முறியடித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடையை அணிந்து தொழுதார்கள். அந்த வேலைப்பாடுகளின் பால் அவர்களின் கவனம் சென்றது. தொழுது முடித்ததும் ‘எனது இந்த ஆடையை அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு அவரது ஆடையை எனக்கு வாங்கி வாருங்கள்! ஏனெனில் இந்த ஆடை எனது தொழுகையில் ஈடுபாட்டை திசை திருப்பிவிட்டது’ என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனம் ஆடையின் வேலைப்பாடுகளில் சென்றது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும். ‘நான் உங்களைப் போன்றவன் அல்ல. என்னை எதுவும் கவனத்தைத் திருப்ப முடியாது’ என்று அந்த மக்களை நபிகள் நாயகம் (ஸல்) ஏமாற்ற விரும்பவில்லை. மாறாக தொழுகையில் ஈடுபடும் போது உங்கள் கவனம் எவ்வாறு திரும்புமோ அது போல் என் கவனமும் திரும்பும். இந்த ஆடையின் வேலைப்பாட்டைப் பார்த்தவுடன் அதன் பால் என் கவனம் சென்று விட்டது’ என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.
நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன். அப்போது பின்னால் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது. அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகத் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(புகாரி: 707, 708, 709, 710, 868)
தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுக்குத் தான் கவனம் வேறு பக்கம் செல்லும். என் கவனம் தொழுகையில் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் மக்களை நம்ப வைத்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் மக்களை நம்ப வைக்கின்றனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குழந்தையின் அழுகுரல் தொழுகின்ற தமது கவனத்தை ஈர்ப்பதாகவும், அது தம் காதில் விழுவதாகவும், அதன் காரணமாகவே தொழுகையைச் சுருக்க மாக முடிப்பதாகவும் தாமே முன் வந்து மக்களிடம் அறிவிக்கிறார்கள்.
தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால், ‘தாம் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் அல்லர்’ என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது வழக்கமாகத் தொழுவதை விட அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தொழுதார்கள். தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன். எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
மக்கள் சுட்டிக் காட்டிய போது ‘எனது நிலை வேறு; உங்கள் நிலை வேறு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் மக்கள் இதை மறுக்கப் போவதில்லை. இன்று முதல் தொழுகை முறை மாற்றியமைக்கப்பட்டு விட்டது எனக் கூறி நபிகள் தமக்கு மறதி ஏற்பட்டதை மறைத்திருக்கலாம்.
ஆனால், இந்த மாமனிதர் மிக முக்கியமான வழிபாட்டில் தமக்கு மறதி ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இனி மேல் இவ்வாறு ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ‘இதற்குக் காரணம் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே’ என்கிறார்கள்.
சராசரி மனிதனே தனது தவறை சபையில் ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்டுவதையும், வெட்கப்படுவதையும் காண்கிறோம். இந்த ஆன்மீகத் தலைவரோ தாமும் மற்றவரைப் போன்ற மனிதர் தாம் என்பதை எந்த நேரத்திலும் பகிரங்கப்படுத்திட தயக்கம் காட்டாதவராக இருக்கிறார்கள்.
‘நானும் உங்களைப் போன்ற மனிதனே’ என்று பிரகடனம் செய்துவிட்டு அதை எந்த அளவுக்கு உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான மற்றொரு சான்றையும் பாருங்கள்.
தாம்பத்திய உறவுக்குப் பின்னர் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை.
ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் ‘அப்படியே நில்லுங்கள்’ எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள்.
அவர்கள் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். என்ன இவர்கள் இவ்வளவு கவனமில்லாமல், அக்கரையில்லாமல் தொழுகை நடத்த வந்து விட்டார்களே என்று மக்கள் நினைப்பார்கள் என்றெல்லாம் இந்த மாமனிதர் வெட்கப்படவில்லை. மற்றவர்களைப் போலவே தாமும் ஒரு மனிதர் தாம்; மற்றவருக்கு ஏற்படுவது போலவே தமக்கும் மறதி ஏற்படும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்துகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள். அதன் காரணமாக தலைநகரில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் அவர்கள் சுமந்து கொண்டார்கள்.
தலைநகரான மதீனாவைப் பொருத்த வரை அவர்கள் தாம் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்கள்.
தலைமை நீதிபதியாக இருப்பதுடன் ஆன்மீகத் தலைவராகவும் இருப்பதால் தமது தீர்ப்பில் எந்தத் தவறும் நிகழாது என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். அதை அப்படியே மக்கள் நம்பியிருப்பார்கள். நபிகள் நாயகத்தின் தீர்ப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் வேண்டுமானால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதலாம். அவரும் கூட வெளிப்படையாக அதை விமர்சிக்க முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த மாமனிதர் என்ன சொன்னார்கள்?
‘மக்களே! என்னிடம் நீங்கள் வழக்கு கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட தனது வாதத்தை நிலை நாட்டும் திறமை பெற்றவராக இருக்கிறார். நானும் அதைக் கேட்டு அதை உண்மை என நம்பி தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் அவனுக்கு அது கேடாக முடியும்’ என்று எச்சரித்தார்கள்.
(புகாரி: 2458, 2680, 6967, 7169, 7181, 7185)
ஒருவரது வாதத் திறமையைப் பார்த்து நீங்கள் எவ்வாறு தவறான முடிவுக்கு வருவீர்களோ அது போலவே நானும் முடிவு செய்யக் கூடியவன் தான். எனது தீர்ப்புக்கள் வாதங்களின் அடிப்படையில் தான் அமையுமே தவிர எனது ஆன்மீக சக்தியினால் உண்மையைக் கண்டுபிடித்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக இருக்காது என்று எந்த ஆன்மீகத் தலைவராவது அறிவித்ததுண்டா?
தான் கூறியது தவறு என்று அம்பலமான பிறகும் அதற்கு ஆயிரம் வியாக்கியானம் கூறி சமாளிக்கும் ஆன்மீகத் தலைவர்களிடையே யாரையும் ஏமாற்றாத, மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாத தலைவராக இவர்கள் காட்சி தருகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்போது தான் மதீனா நகருக்கு வந்த நேரம். அங்கே பேரீச்சை மரங்கள் தான் பிரதான உற்பத்தியாக இருந்தது. அங்குள்ள மக்கள் மரங்களுக்கிடையே மகரந்தச் சேர்க்கை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) கண்டனர். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார்கள். ‘இப்படிச் செய்வது தான் வழக்கம்’ என்று அவர்களிடம் அம்மக்கள் எடுத்துக் கூறினார்கள். ‘இதைச் செய்யாதிருந்தால் நன்றாக இருக்குமே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களும் இவ்வாறு செய்வதை விட்டு விட்டனர். அந்த வருடத்தின் மகசூல் குறைந்து விட்டது. இது பற்றி நபிகள் நாயகத்திடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நானும் ஒரு மனிதன் தான். உங்கள் வணக்க வழிபாடுகள் குறித்து நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எனது சொந்த அபிப்பிராயத்தின் படி ஏதேனும் கட்டளையிட்டால் நானும் மனிதனே’ என்றார்கள்.
இறைவனின் தூதர் என்ற முறையில் வணக்க வழிபாடுகள், தக்கவை, தகாதவை பற்றிக் கூறினால் அதை மட்டும் பின்பற்றுங்கள்! மனிதன் என்ற முறையில் எனது அபிப்பிராயத்தைக் கூறினால் அது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று பிரகடனம் செய்ததன் மூலம் தாம் எப்போதுமே மனிதர் தான். மனிதத் தன்மை அடியோடு நீக்கப்பட்ட தெய்வப்பிறவி அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார் கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் ‘நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக் கிறார்’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் ‘இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு’ என்றார்கள்.
சபைகளில் தலைவர்களைக் கூடுதல் குறைவாகப் புகழ்வது வழக்கமான ஒன்று தான். ஆன்மீகத் தலைவர் என்றால் இது இன்னும் சர்வ சாதாரணம். ஆனால் இந்த மாமனிதர் அந்த மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை.
நாளை நடப்பதை மனிதன் எப்படி அறிய முடியும்? கடவுள் மட்டும் தானே அறிவார். இந்தத் தன்மை தனக்கு உள்ளதாக இவர்கள் பாடுகிறார்களே என்பதற்காகத் தான் பாட்டை நிறுத்தச் செய்கிறார்கள். ‘உங்களுக்கு எப்படி நாளை நடக்கவுள்ளது தெரியாதோ அது போலவே எனக்கும் தெரியாது’ என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.
தமக்கு மறைவானது எதுவும் தெரியாது என்பதை மக்கள் மன்றத்தில் வைத்து விடுமாறு இறைவன் கட்டளையிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதைத்(அல்குர்ஆன்: 6:50, 7:188) ➚வசனங்களில் காணலாம்.
‘அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!
‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
எவ்வளவு அற்புதமான முழக்கம் என்று பாருங்கள்! புகழ்ச்சியை வெறுப்பது போல் சிலர் காட்டிக் கொள்வர். ஆனால் உள்ளூர அதை விரும்புவார்கள். இந்த மாமனிதர் தமக்கு மறைவான விஷயம் தெரியாது என்று கூறியது மட்டுமின்றி தமக்கெதிரான ஆதாரத்தையும் தாமே எடுத்துக் காட்டுகிறார்கள். தம்மை வரம்பு மீறி புகழக் கூடாது என்று கூறி அதற்கு ஆதாரத்தையும் தமக்கெதிராக எடுத்து வைத்த அற்புதத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.
மறைவானது எனக்குத் தெரிந்திருந்தால் எந்தக் கெடுதியும் எனக்கு ஏற்பட்டிருக்காது. கெடுதி ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்த்திருப்பேன். வெறும் நன்மைகளாகவே நான் அடைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் நடக்கவில்லையே? உங்களைப் போலவே நானும் துன்பங்களைச் சுமக்கிறேன்; நாடு கடத்தப்பட்டேன்; கல்லடி பட்டேன்; வறுமையில் வாடுகிறேன்; நோய் வாய்ப்படுகிறேன். இதிலிருந்து எனக்கு மறைவாகவுள்ள எதுவும் தெரியாது என்பதை விளங்க மாட்டீர்களா? என்று மக்களிடம் அறிவிக்குமாறு இறைவன் தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறுகிறார்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஆரம்ப நேரம். அன்றைய மக்களால் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷிக் குலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவர்கள் என்பதால் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர்.
ஆனாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கைப் பிரச்சாரத்தை முக்கியப் பிரமுகர்களும், உயர் குலத்தவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைச் சாதாரண மக்கள் தான் அதிக அளவில் ஏற்றிருந்தார்கள்.
இந்த நிலையில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொள்கை விளக்கம் அளித்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இவ்வாறு கொள்கைப் பிரச்சாரம் செய்த போது நடந்த நிகழ்ச்சி பின் வருமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளில் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் என்பார் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு அந்தப் பிரமுக ரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டன.
‘தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சி யம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வயச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்’
நூல்கள் :(திர்மிதீ: 3254), முஸ்னத் அபீயஃலா 3123
முக்கியமான பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது முக்கியமற்றவர்களை அலட்சியப்படுத்துவது மனிதர்களின் இயல்பாகும். குறிப்பாக, ஆன்மீகத் தலைவர்களிடம் இது அதிகமாகவே காணப்படும். செல்வந்தர்களுடனும், முக்கியப் பிரமுகர்களுடனும் தான் அவர்கள் நெருக்கம் வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்கள் மூலம் ஆதாயம் அடைய முடியும்.
இச்சம்பவம் நடந்த கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வசதியான நிலையில் இருந்தார்கள். ஆதாயம் அடையும் நோக்கத்திற்காக முக்கியப் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் நல்வழியின் பால் திரும்பினால் மற்றவர்களும் நல்வழிக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் கண் பார்வையற்ற அந்தத் தோழர் வருகிறார். நபிகள் நாயகத்தின் குரலை வைத்து அங்கே அவர்கள் இருப்பதை அறிந்து கொண்டு அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்கிறார். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சங்கடப்படுகிறார்கள். ‘முக்கியப் பிரமுகர்கள் இது போன்ற நபர்களை மதிக்க மாட்டார்கள். நேரம் தெரியாமல் இவர் இந்த நேரத்தில் வந்து விட்டாரே’ என்று முகத்தைக் கடுகடுப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இது மனிதனின் இயல்பு தான்.
வந்தவர் பார்வையற்றவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்ததை அவர் அறிந்து கொண்டிருக்க முடியாது. அவரை அலட்சியம் செய்ததையும் அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது. ‘நாம் கூறியது நபிகளின் காதுகளில் விழுந்திருக்காது’ என்று தான் அவர் கருதியிருப்பார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்ததும், கடுகடுப்படைந்ததும் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக முன் வந்து கூறியதன் காரணமாகவே நமக்கும், உலகத்துக்கும் தெரிய வருகின்றது.
‘என் இறைவன் அல்லாஹ் எனது இந்தப் போக்கைக் கண்டித்து விட்டான். நான் முகம் சுளித்ததையும், அலட்சியம் செய்ததையும் இறைவன் தவறென அறிவித்து விட்டான்’ என்று மக்கள் மன்றத்தில் அறிவிக்கிறார்கள்.
இது திருக்குர்ஆனில் 80 வது அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் உள்ளளவும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
‘தான் ஒரு மனிதர் தாம்; மனிதர் என்ற முறையில் தம்மிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை எந்த நேரத்திலும் அவர்கள் மறுத்ததில்லை; மறைத்ததுமில்லை’ என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
‘நான் தவறு செய்தாலும் தவறு தவறு தான்’ என்று அறிவித்த ஆன்மீகவாதிகளை உலக வரலாறு கண்டதே இல்லை.
அது மட்டுமின்றி முகச் சுளிப்புக்கு உள்ளானவர் சமுதாயத்தில் மதிப்புக்குரியவர் அல்லர். தாழ்வாகக் கருதப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்; வசதியற்றவர்; அற்பமாகக் கருதப்பட்டவர்; பார்வையுமற்றவர்.
பெருந்தன்மையாளர்கள் என்று பெயரெடுத்தவர்கள் கூட ஓரளவு சுமாரான நிலையில் உள்ளவர்களிடம் தான் பெருந்தன்மையைக் கடைப்பிடிப்பார்களே தவிர மிகவும் இழிநிலையை அடைந்தவரிடம் பெருந்தன்மையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
அற்பத்திலும் அற்பமாகக் கருதப்பட்டவரைக் கூட இந்த மாமனிதர் ஏமாற்ற விரும்பவில்லை. அவரை மதிக்கத் தவறியது தனது குற்றமே என்பதைப் பறைசாற்றுகிறார்கள்.
அது மட்டுமின்றி, கண் பார்வையற்ற இவர் விஷயத்தில் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை தான் இதை விடச் சிறப்பானது.
இதன் பின்னர் இவரைக் காணும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதை செலுத்துவார்கள்.
நூல் : முஸ்னத் அபீ யஃலா 3123
இவர் மூலம் அல்லாஹ் எனக்கு நல்ல அறிவுரை வழங்கினான் என்று அவரை மிகவும் மரியாதையோடு நடத்தினார்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்று மாமன்னராக உயர்ந்த பின் அமைத்துக் கொண்ட ஆட்சியில் இவருக்கு முக்கியப் பங்கையும் அளித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களம் சென்ற போது இரண்டு தடவை இவரிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்கள்.
(அஹ்மத்: 11894, 12530),(அபூதாவூத்: 2542)
நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியை பிலால் (ரலி), இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இருவரிடம் தான் நபிகள் நாயகம் (ஸல்) ஒப்படைத்திருந்தார்கள்.
(புகாரி: 617, 620, 623, 1919, 2656, 7348)
இவருக்கு இவ்வளவு உயர்ந்த தகுதியை வழங்கியிருப்பதிலிருந்து இந்த மாமனிதரின் போலித்தனமில்லாத பரிசுத்த ஆன்மீக வாழ்வை அறிந்து கொள்ளலாம்.
மிக எளிதில் மக்களை ஏமாற்ற உதவும் ஆன்மீகத் தலைமையை எவ்வாறு அப்பழுக்கற்றதாக ஆக்கிச் சென்றார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட போர்களில் உஹதுப் போரும் ஒன்றாகும்.
இப்போரில் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இறைத் தூதரைக் காயப்படுத்தி பற்களையும் உடைத்தவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்’ என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்ற குர்ஆன் வசனம் (3:128) அப்போது அருளப்பட்டது.
வேதனைப்படுத்தப்பட்டவர்கள் எதிரிகளைக் குறித்து இவ்வாறு கூறுவது சாதாரணமான ஒன்று தான். இறைத் தூதரைக் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் பயன்படுத்திய வாசகத்தை இந்த வகையில் குறை கூற முடியாது. ‘தனக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகவும் தன்னுடன் மோதியவர்களைச் சபித்தே அழித்து விடுவேன் என்பது போன்ற ஆன்மீக ஆணவமும் இந்தச் சொற்றொடரில் இல்லை. இது ஒரு வேதனையின் வெளிப்பாடு தானே தவிர வேறு இல்லை’ என்று தான் நாம் நினைப்போம். ஆனால், இறைவன் இதை விரும்பவில்லை.
இறைத் தூதரைக் காயப்படுத்தினால் காயப்படுத்தியவர்கள் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என்பதில்லை. இறைவன் நாடினால் இத்தகைய கொடூரமானவர்களுக்கும் இவ்வுலகில் வெற்றியை வழங்குவான். மறுமையில் தான் இவர்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்.
இறைத் தூதரைத் தாக்குவதோ, ஆதரிப்பதோ இவ்வுலகின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. அது இறைவனாக எடுக்கின்ற முடிவாகும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதை போதிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர் இந்த அடிப்படைக்கு எதிரானது என்று இறைவன் கருதுகிறான். தமக்கு இறைத் தன்மை உள்ளது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தா விட்டாலும், வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தாலும் இறைவன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூட விரும்பவில்லை.
தனது அதிகாரத்தில் தலையிடுவதாக இறைவன் எடுத்துக் கொள்கிறான்.
எனவே தான் முஹம்மதே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவுறுத்துகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட வேதனையை விட அவர்கள் கடவுளாகக் கருதப்படும் வாசலை முழுமையாக அடைக்க வேண்டும் என்பதில் தான் இறைவன் கவனம் செலுத்தினான்.
‘யாராவது இவரிடம் மோதினால் தோல்வி நிச்சயம்’ என்ற நிலை ஏற்பட்டால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற அதிகாரம் இறைத் தூதரிடமும் உள்ளது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலும் அதை விட முக்கியமான இந்த அறிவுரையை வழங்குகிறான்.
‘இவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்’ என்று வேதனை தாள முடியாமல் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் இறைவனின் இந்தக் கட்டளையையும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.
என்னைத் தாக்கியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் என நான் கூறியது தவறு தான். இதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும். என்னை என் இறைவன் கண்டித்து விட்டான் என்று அந்த வேதனையிலும் மக்களிடம் தெரிவித்து விடுகிறார்கள்.
(குர்ஆன் என்பது அவர்களாகக் கற்பனை செய்து கொண்டதாக இருந்தால் இந்த வேதனையான நேரத்தில் இப்படிக் கற்பனை செய்து தன்னைத் தானே எவரும் கண்டித்துக் கொள்ளவே மாட்டார். இயல்பாகவே இது சாத்தியமாகாது. திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது தனி விஷயம்.)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) மூலம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சில ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனாலும், ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட நான்கு பெண் மக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருந்தனர்.
மதீனாவுக்கு வந்து அங்கே மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமது பாட்டனார் இப்ராஹீம் நபியின் பெயரை அக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் எல்லா தந்தையரும் மகிழ்ச்சியடைவதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், ஆண் குழந்தையைக் கொடுத்த இறைவன் சிறு வயதிலேயே அக்குழந்தையைத் தன் வசம் எடுத்துக் கொண்டான். பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார்.
இக்குழந்தை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைத்திருந்த அன்பைப் பின் வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.
அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது…
இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. ‘அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா?’ என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இது இரக்க உணர்வாகும்’ என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். ‘கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்’ என்றும் கூறினார்கள்.
தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது.
சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.
யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.
மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது.
அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.
மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.
சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்ய மின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில் தான் இருந்தார்கள்.
ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.
இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.
ஒரு அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.
இதைக் கேட்கின்ற அவர் முகத்தில் தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமானவர்களாகவே உள்ளனர். தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் அரசியல் தலைவருக்கே இந்த வார்த்தை இனிக்கிறது என்றால் ஆன்மீகத் தலைமையை என்ன வென்பது?
ஆனால், இந்த ஆன்மீகத் தலைவரோ இதைக் கேட்டு அருவருப்படைகிறார். நானே நாளை மறையும் போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டாலும் அதற்கு என் மரணம் காரணம் அல்ல என்ற கருத்தையும் உள்ளடக்கி அறிவுரை கூறுகிறார். அதுவும் தமது சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மக்களுக்கு ஏற்பட்ட அறியாமைத் துன்பத்தை அகற்றிட முன்னுரிமை தருகிறார்.
உலக வரலாற்றில் இத்தகைய அற்புத மனிதரை யாரேனும் கண்டதுண்டா?
தேடித் தேடிப் பார்த்தாலும் எள்ளின் முனையளவு கூட மக்களை ஏமாற்றாதவராக இவர் மட்டும் தான் தென்படுகிறார். ஏமாற்றுவதற்கு எல்லா விதமான வாய்ப்புகள் இருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறார்.
அன்பு மேட்டு அல்லது அறியாமையின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் வரம்பு மீறிப் புகழும் விதமாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவதுண்டு. அல்லது வரம்பு மீறி நடந்து கொள்வதுண்டு. இது போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம் மக்களை எச்சரிக்காது இருந்ததில்லை. தம்மை மனித நிலைக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று அறிவுரை கூறி அவர்களின் அறிவை மேம்படுத்தாமல் இருந்ததில்லை.
நாம் மதிக்கின்ற ஒரு மனிதர் இன்று மழை பெய்யும் போல் தெரிகிறதே எனக் கூறுவார். பல நேரங்களில் அவர் கூறுவது போல் நடக்கா விட்டாலும் சில நேரங்களில் அவ்வாறு நடந்து விடுவதுண்டு. ‘நீங்கள் கூறியவாறு மழை பெய்து விட்டதே’ என்று அவரிடம் நாம் குறிப்பிடுவோம். அவர் எதைக் கூறினாலும் அது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் நாம் அவ்வாறு கூறுவதில்லை. இந்த முறை அவர் கூறியது போல் தற்செயலாக நடந்து விட்டது என்று உணர்ந்து தான் இவ்வாறு கூறுகிறோம்.
இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் அறிவித்த அனைத்தும் நிறைவேறின. இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் மனிதர் என்ற முறையில் ஊகம் செய்து கூறிய விஷயங்களில் சில விஷயங்கள் நடந்து விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்தின் தோழர்கள் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்ற கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
மரியாதை வைத்திருக்கின்ற மனிதரைப் பற்றி நாம் கூறும் சொல்லை விட நபித் தோழர்களின் இந்தக் கூற்று இறை நினைவுக்கு நெருக்கமானதாகும். ஏனெனில் ‘நீங்கள் கூறியபடி நடந்து விட்டதே’ என்று தான் நாம் குறிப்பிடுவோம். ‘அல்லாஹ்வும், நீங்களும் நினைத்த படி’ எனக் கூற மாட்டோம். ஆனால், நபித்தோழர்கள் ‘அல்லாஹ் நினைத்தபடியும் நீங்கள் நினைத்தபடியும் நடந்து விட்டது’ எனக் கூறி அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வை முதலில் கூறி விட்டு அதன் பின்னர் நபிகள் நாயகத்தைக் கூறியதாலும், அந்த மக்களின் இதயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெய்வீக அம்சம் கொண்டவர்கள் அல்ல என்பது ஆழமாகப் பதிந்திருந்ததாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தடை செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது.
‘ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன் என்பது இதன் பொருள். ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது இவ் வாறு கூறுவது வழக்கம்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு ‘அது என்ன?’ என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பாதிரியார் ‘நீங்கள் சத்தியம் செய்யும் போது கஃபாவின் மீது ஆணையாக எனக் கூறுகிறீர் களே அது தான்’ என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஃபாவின் எஜமான் மீது ஆணையாக’ எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். பின்னர் அந்தப் பாதிரியார் ‘முஹம்மதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’ என்று கூறினார். ‘சுப்ஹானல்லாஹ்’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது என்ன?’ என்ற கேட்டார்கள். ‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்’ என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனி மேல் யாரேனும் ‘அல்லாஹ் நினைத்த படி’ என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு ‘பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’ என்று கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.
‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறுவதன் மூலம் நபித் தோழர்கள் அல்லாஹ்வுக்கு நிகராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கருதவில்லை. ஆயினும், அந்த வார்த்தைப் பிரயோகம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது போல் உள்ளதாக மாற்று மதத்தவர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். இதை ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இது அல்லாஹ் நினைத்ததாகும். பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’ என்று கூறுமாறு கட்டளையிடுகிறார்கள்.
விபரீதமான எண்ணத்தில் நபித் தோழர்கள் கூறியிருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்திலேயே தடை செய்திருப்பார்கள்.
ஆயினும், வார்த்தை அமைப்பு நபிகள் நாயகத்தையும், அல்லாஹ்வையும் சமமாக ஆக்குவது போல் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டவுடன் அதில் உள்ள நியாயத்தை ஏற்கிறார்கள்.
‘ஐயா! பாதிரியாரே! நாங்கள் அந்த எண்ணத்தில் அவ்வாறு கூறவில்லை’ என்று வாதம் செய்திருக்க முடியும். ஆன்மீகத் தலைவர் என்பதால் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று சாதித்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் சாதித்து வரு கின்றனர். அவ்வாறு சாதிக்காமல் அந்த வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் பின்னர் இந்த நிகழ்ச்சியை அறியாதவர் யாரேனும் பழைய வழக்கப்படி பேசினால் அதைக் கடுமையாகக் கண்டித்து விடுவார்கள்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது’ என்று கூறினார்கள்.
(அஹ்மத்: 1742, 1863, 2430, 3077)
‘இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர், நீங்கள் நினைத்தீர்கள்’ என்ற சொற்றொடரை தமக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறாமல் இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொது அனுமதியும் கொடுக்கிறார்கள்.
‘இது அல்லாஹ் நினைத்ததும் இன்னார் நினைத்ததுமாகும் என்று கூறாதீர்கள். மாறாக இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர் இன்னார் நினைத்தார் எனக் கூறுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள் :(அபூதாவூத்: 4328),(அஹ்மத்: 22179, 22257, 22292)
எந்தச் சொல்லைத் தமக்குப் பயன்படுத்தலாம் என அனுமதித்தார்களோ அதை எந்த மனிதருக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறார்கள்.
ஆன்மீகத் தலைவர்கள் என்று கருதப்படுவோருக்கு மற்றவர்களுக்குச் செய்யப்படுவதை விட அதிகப்படியான மரியாதை செய்யப்படுவது உலகெங்கும் காணப்படும் வழக்கமாகவுள்ளது.
நாட்டின் அதிபரே ஆனாலும் அவரால் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவரின் முன்னால் கைகட்டி நிற்கும் நிலையை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடும் காட்சியையும் காண்கிறோம்.
அன்று முதல் இன்று வரை உலகெங்கும் காணப்படும் நிலை இது தான்.
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்களுக்கு இது போன்ற மரியாதை செய்யப்படும் போது அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை நாம் மன்னித்து விடலாம். ஆனால், ஆன்மீகத் தலைவர்கள் இத்தகைய மரியாதையை ஏற்றுக் கொள்வதை மன்னிக்க முடியாது. ஆன்மீகத் தலைவர் என்பவர் மற்றவர்களை விட அதிகம் பக்குவப்பட்டவராக இருத்தல் அவசியம்.
மற்றவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது போல் ஆன்மீகத் தலைவர் எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர்களை விட அதிகமான அடக்கம் அவரிடம் காணப்படுதல் வேண்டும்.
மக்களிடம் அதிகமான மரியாதையை எதிர்பார்ப்பவர் நிச்சயம் மனப்பக்குவம் அடையவில்லை என்பது தான் பொருள். அறிவுடைய மக்கள் இப்படித் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த அடிப்படை அறிவு கூட பெரும்பாலான மக்களுக்கும் இல்லை. ஆன்மீகத் தலைவர்களுக்கும் இல்லை. உலகிலேயே இதை உறுதியாகக் கடைப்பிடித்த ஒரே ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ‘இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்’ என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். ‘மாட்டேன்’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி)
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ‘எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது’ என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. ஆன்மீகவாதிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதுண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்குச் செய்யப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.
வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.
ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே இந்தச் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகமே.
உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத் தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத் தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.
எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்குத் தெரியும் வகையில்) இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்!
நூல்கள் :(அபூதாவூத்: 1746)(அஹ்மத்: 8449)
யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கை யில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.
(புகாரி: 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை. இந்த அளவுக்குத் தெளிவான எச்சரிக்கை விடுத்து மனித குலம் முழுமையாக நம்புவதற்கு ஏற்ற ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) பிரகாசிக்கிறார்கள்.
மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.
சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம். தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம். இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.
இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.
நபிகள் நாயகத்தையும் பார்க்கிறோம்.
ஐம்பது வருடத்துக்குள் பகுத்தறிவு, மூட நம்பிக்கையாக இங்கே மாறியது போல் அந்த மாமனிதரின் சமுதாயம் மாறவில்லை. ஸ் அவர் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவருக்காகச் சிலை வடிக்கவில்லை.
* அவரது சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.
* அவருக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.
* அவரது அடக்கத் தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.
* எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவரால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.
* காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.
வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். எழுந்து நிற்பவனும் நம்மைப் போன்ற மனிதன் தானே! நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா? என்று ஒரு தலைவரும் சிந்தித்ததாக உலக வரலாற்றில் நாம் அறியவில்லை.
மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப் பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம். ‘நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுய மரியாதைக்கு இழுக்கு அல்லவா?’ என்ற எந்தத் தலைவரும் அறிவுரை கூறியதாக நாம் காணவில்லை.
அரசியல் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. சுய மரியாதைத் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. ஆன்மீகத் தலைவர்களும் கூறியதில்லை.
இந்த மாமனிதரோ எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) ‘அமருங்கள்’ என்றார். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்.
நூல்கள் : திர்மிதி 2769(அபூதாவூத்: 4552)
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.
மற்றவர்களுக்கு இவ்வாறு போதித்தாலும் தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால் தமக்காக மட்டும் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை விரும்பினார்களா? நிச்சயமாக இல்லை.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.
நூல்கள் :(அஹ்மத்: 12068, 11895)(திர்மிதீ: 2678)
நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ‘பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்’ என்று கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக(புகாரி: 689, 732, 733, 805, 1114, 688)ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார் கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) முன்னால் அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோன்றுகிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள். தமக்கு மரியாதை செலுத்துவ தற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்ததை அறியும் போது இந்த மாமனிதரின் அப்பழுக்கற்றத் தூய்மை நம் கண்களைக் கலங்க வைக்கிறது.
கண்ணை மூடிக் கொண்டு ஒருவரின் பின்னே செல்ல நினைத்தால் அதற்கான முழுத் தகுதியும் இவருக்கு மட்டுமே உள்ளது. எந்த வகை யிலும் இவர் நம்மை ஏமாற்றவே மாட்டார். தமது அற்பமான சுயநலனுக் குக் கூட நம்மைப் பயன்படுத்த மாட்டார் என்று ஒருவரைப் பற்றிக் கருதுவதாக இருந்தால் இவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்தத் தகுதியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர்.
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.
ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.
தமக்காக எழுந்து நிற்பதைக் கூட நிராகரித்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்வதால் தான் முஸ்லிம்கள் அவரை நூறு சதவிகிதம் பின்பற்றுகின்றனர்.
மக்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதிலும், எல்லா வகையிலும் மக்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதிலும் தான் ஆன்மீகத் தலைவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
மக்களுடன் சர்வ சாதாரணமாக அவர்கள் நடந்து கொண்டால் ,மனிதத் தனிமைக்கு அப்பாற்பட்ட எந்தச் சிறப்பும் அவர்களுக்கு இல்லை என்பது மக்களிடம் வெளிச்சமானால் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் தான் தாம் ஒரு ஆன்மீகத் தலைவராக இருந்த போதும் எந்த வகையிலும் தாம் மனிதத் தனிமைக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். அறியாத மக்கள் அவர்களை மனித நிலையை விட்டும் அப்பாற்பட்டவர்களாகக் கருதினாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் இத்தகைய கருத்துக்கு இடமிருந்தாலோ அதை உடனடியாகக் கண்டித்துத் திருத்தி விடுவார்கள்.
அவர்களின் வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் போது அவர்களுக்கு இயன்றதையே கட்டளையிடுவார்கள். அப்போது சில நபித் தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களைப் போன்றவர்களாக இல்லை. அல்லாஹ் உங்களின் முன் பாவங்களையும், பின் பாவங்களையும் மன்னித்து விட்டான்.’ என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அந்தக் கோபத்தின் அறிகுறி அவர்களின் முகத்தில் தென்பட்டது. ‘ நான் உங்களை விட இறைவனை அறிந்தவன். அவனை அதிகம் அஞ்சுபவன்’ எனக் கூறினார்கள்.
பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் தாம் கூறும் ஆன்மீக நெறியைத் தாம் கடைப் பிடிக்காவிட்டாலும் தமது சீடர்களும், பக்தர்களும் முழுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வீடு வாசல் குழந்தை குட்டிகள் என அனைத்தையும் மறந்து தனது குருநாதரே கதி என்று கிடப்பவர்களைத் தான் இவர்கள் மிகவும் விரும்புவார்கள்.
இத்தகையோர் கூட்டம் பெருகப் பெருகத் தான் இவர்களது மதிப்பும், செல்வமும் உயரும்.
ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எது இயலுமோ அதைத் தான் செய்ய வேண்டும். ஆன்மீகத்தின் பெயரால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து விடக் கூடாது’ என்று அறிவுரை கூறி வந்தார்கள்.
குடும்பம், ஆட்சி, நிர்வாகம், பிரச்சாரம் என்று பல்வேறு பொறுப்புக்கள் அவர்கள் மீது இருந்ததால் முழு நேரத்தையும் வணக்க வழிபாடுகளிலேயே அவர்களும் செலவிட மாட்டார்கள்.
ஆயினும் சில நபித் தோழர்கள் வேறு விதமாக நினைத்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதராக இருப்பதால் அவர்கள் குறைவாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போதுமானது. ஏனெனில், இறைத் தூதர் என்ற தகுதியின் மூலம் மறுமையில் அவர்கள் மகத்தான பதவியைப் பெற்று விட முடியும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அப்படி நடக்கக் கூடாது. அவர்களை விட நாம் அதிகமதிகம் மார்க்கத்திற்காகச் செலவிட்டாக வேண்டும் என்பது தான் அவர்களின் நினைப்பு.
எல்லாக் காலத்திலும் மக்களின் நம்பிக்கை இப்படித் தான் இருக்கிறது. இதனால் தான் ஆன்மீகத் தலைவர்கள் கஞ்சா அடிக்கின்றனர். பெண்களுடன் உல்லாசம் புரிகின்றனர். இதைப் பார்க்கும் பக்தர்கள் அவர் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் கடவுளுக்கு வேண்டப்பட்டவர் (?) என்பதால் அவரது தவறைக் கடவுள் கண்டு கொள்ள மாட்டார்; நாம் அப்படி நடந்தால் மட்டும் தான் கடவுள் தண்டிப்பார் என்று அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக நினைக்கின்றனர்.
ஆனால் அறியாத மக்களின் இந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக இந்த மாமனிதர் பயன்படுத்திக் கொண்டாரா? ‘ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான். நான் உங்களை விட்டு வேறுபட்டவன் தான்’ எனக் கூறினார்களா?
மாறாகக் கடும் கோபம் கொள்கிறார்கள். அந்தக் கோபம் அவர்களது முகத்திலும் தென்படுகிறது. இறைவனை அதிகமாக அஞ்சுகின்ற நானே இயன்றதை மட்டுமே செய்யும் போது உங்களை நீங்கள் வருத்திக் கொள்வது எப்படிச் சரியாகும்? எனக் கூறி அந்த மக்களின் அறியாமையை நீக்குகிறார்கள்.
இத்தகைய அறியாத மக்கள் மற்ற ஆன்மீகத் தலைவர்களின் கைகளில் சிக்கியிருந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வெளிப்படையாக நான் செய்கிற வணக்கம் மட்டும் தான் உங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாத முறையில் நான் கடவுளோடு எப்படி ஒன்றிப் போய் வணங்குகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு முழுவதும் உறங்காமல் தவத்திலேயே நான் மூழ்கி இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்றெல்லாம் புளுகி மக்களைத் தங்களின் அடிமைகளாகவே வைத்திருப்பார்கள்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்தார்கள். ‘அவர் பெயர் அபூ இஸ்ராயீல். உட்காராமல் நின்று கொண்டிருப்பது என்றும், நிழலை அனுபவிப்பதில்லை எனவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பது எனவும் அவர் நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று மக்கள் விளக்கினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்காருமாறும், நிழலை அனுபவிக்குமாறும், பேசுமாறும், நோன்பை மட்டும் முழுமைப் படுத்துமாறும் அவருக்குக் கூறச் சொன்னார்கள்.
எந்த ஆன்மீக வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டினார்களோ அந்த ஆன்மீகத்தின் பெயரைச் சொல் ஒருவர் அதி தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார்.
இம்மாமனிதர் இறைவனின் தூதராக இல்லாமல் வேறு நோக்கத்திற்காக இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்திருந்தால் இத்தகையோரை ஊக்குவித்திருப்பார்கள்.
இது போன்ற கிறுக்குத்தனமான காரியங்களைச் செய்வோர் தான் ஆன்மீகத் தலைவர்களின் முக்கியமான பலம்.
தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தனது தொண்டன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு சாவதை சாதாரண அரசியல் தலைவர்களே உள்ளூர விரும்புகின்றனர். ஆன்மீகம் இதை விட அதிகம் போதை தரக் கூடியது. தன்னால் மதிக்கப்படும் குரு, தன்னை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மனிதப் படுக்கைகளாக மாறும் பக்தர்களை இன்றைக்கும் பார்க்கிறோம்.
தன்னைக் காண்பதற்காக வாகனத்தில் செல்ல வசதி இருந்தும் சுட்டெரிக்கும் வெயில் கால்நடையாகவே பக்தர்கள் நடந்து வருவதைக் கண்டு ஆனந்தம் அடையும் ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம்.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும், சிறுவர்களும் கூட பல நாட்கள் நடையாக நடந்து தங்கள் குருநாதரைக் காண வருகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் விரைவான வாகனங்களை யாரும் பயன்படுத்த முடியும். ஆனாலும் அறியாத மக்கள் சாரைசாரையாக பல நாட்கள் நடந்து வருவதில் கிடைக்கும் விளம்பரங்கள் வாகனத்தில் வந்தால் கிடைக்காதே!
இந்த மாமனிதரைப் பாருங்கள்!
1) உட்காராமல் நிற்க வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் ஒருவர் முடிவு செய்கிறார்.
2) யாருடனும் பேசவே மாட்டேன்
3) பகலெல்லாம் வெயில் தான் நிற்பேன். நிழலை அனுபவிக்க மாட்டேன்.
4) காலமெல்லாம் நோன்பு நோற்பேன்
என்று நான்கு காரியங்களைச் செய்வதாக இவர் செய்த தீர்மானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அடியோடு நிராகரிக்கிறார்கள்.
‘நோன்பு மட்டும் வைத்துக் கொள்! மற்ற மூன்று தீர்மானங்களையும் மாற்றிக் கொள்’ என ஆணையிடுகிறார்கள்.
ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்த முயன்றவர்கள் கூட இந்த இடத்தில் தோற்று விட்டனர். தமக்காக மற்றவர்கள் வெயில் காத்திருக்க வேண்டும்! கஷ்டப்பட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டனர்.
ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அனைவரும் தோற்ற இடத்தில் இந்த மாமனிதர் வென்று காட்டுகிறார்!
அபூ ஜுஹைபா (ரலி) கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபூ தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி), ‘உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை’ என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, ‘நான் நோன்பு வைத்திருக்கிறேன்’ என்றார். ‘நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்’ என்று ஸல்மான் கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி) ‘உறங்குவீராக!’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், ‘உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி) ‘இப்போது எழுவீராக!’ என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ‘ உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!’ என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபூ தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘ஸல்மான் உண்மையையே கூறினார்!’ என்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். மதீனா நகரில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே தஞ்சமடைவதற்கு முன்பே அவர்களின் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட மதீனாவைச் சேர்ந்த பலர் மக்கா சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே ஏற்றிருந்தனர். ‘நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால் எங்களிடம் வாருங்கள்! உயிரைக் கொடுத்தும் உங்களைக் காப்போம்’ என்று உறுதி மொழியும் கொடுத்தனர்.
எனவே தான் தஞ்சமடைய மதீனா நகரை நபிகள் நாயகம் (ஸல்) தேர்வு செய்தனர். அவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் ஏராளமானவர்கள் அகதிகளாக வந்து குவிந்திருந்தனர்.
அகதிகள் பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) சமாளித்த விதம் அவர்களின் மார்க்கத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி எனலாம்.
‘மதீனாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அகதியாக வந்துள்ள ஒருவரைத் தமது சகோதரராக ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) முன் வைத்த திட்டம்.
மதீனத்து நன் மக்கள் ஒவ்வொருவரும் வெளியூரைச் சேர்ந்த ஒருவரை ஏற்று சோறு போடுவதுடன் நின்று விடவில்லை. சொத்தில், வியாபாரத்தில், தோட்டம் துறவுகளில், ஆடைகளில், வீட்டில் என அனைத்திலும் பாதியைத் தமது கொள்கைச் சகோதரருக்கு வழங்கி னார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் கூட இப்படி பங்கு போட்டுக் கொடுக்க முடியுமா என்று நினைக்குமளவுக்கு நடந்து கொண்டனர்.
அரவணைத்து உதவுவதில் இவர்களை யாருமே வெல்ல முடியாது என்பதால் அன்ஸாரிகள் (உதவியாளர்கள்) என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்கள்.
நாம் மேலே சுட்டிக் காட்டிய நிகழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.
அபூ தர்தா என்பார் மதீனாவைச் சேர்ந்தவர். சல்மான் ஈரானைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் இணைவதற்காகவே வந்தவர் சல்மான். சல்மானை அபூ தர்தாவுக்குச் சகோதரராக நபிகள் நாயகம் (ஸல்) நியமித்தார்கள்.
ஆனால் அபூ தர்தாவோ ஆழ்ந்த மார்க்கப் பற்றுள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிபாட்டில் முழுமையாக மூழ்கி விட வேண்டுமென்பதற்காக இரவெல்லாம் தொழுகையிலேயே நிற்பார். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூட இவர் செய்யத் தவறினார். அது மட்டுமின்றி ஒரு நாள் விடாமல் தினமும் நோன்பு நோற்றும் வரலானார்
இதனால் தாம்பத்தியத்தையே மறந்த நிலைக்கு ஆளான போது தான் சல்மானுக்கு விபரம் தெரிந்து கண்டிக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்துகிறார்.
முடிவில் இந்த விவகாரம் நபிகள் நாயகத்திடம் வந்த போது, சல்மான் கூறியது தான் சரி என ஒற்றை வரியில் நபிகள் நாயகம் விடையளித்தார்கள்.
தனது மார்க்கத்தையும், வழி முறையையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் கூட்டம் உருவானதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) ஆனந்தம் கொள்ளவில்லை; அவரைப் பாராட்டவில்லை; அவரைப் போல் நடக்குமாறு மக்களை ஊக்குவிக்கவுமில்லை.
மாறாக, நான் கூறியதைச் செய்வதென்றாலும், மனைவி, மக்கள், உடல், கண் போன்ற அனைத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளுக்குத் தடையாக ஆகி விடக் கூடாது எனக் கூறி அவரது அறியாமையை விலக்கி நெறிப்படுத்துகிறார்கள்.
நபிகள் நாயகத்துக்கு வேறு நோக்கம் ஏதும் இருந்திருந்தால் இது போன்ற செயல்களை அவர்கள் ஊக்குவித்திருக்க வேண்டும். அதில் தான் அதிக விளம்பரமும், புகழும் கிடைத்திருக்கும்.
இது போல் மற்றொருவர் பக்தியிலேயே மூழ்கி உலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்த போது அவரைத் தேடிச் சென்று இது போன்ற ஒரு அறிவுரையைச் சொல்ல அவர்கள் தவறவில்லை
இதோ அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்
அப்துல்லா பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறியதாவது:
‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகின்றதே!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், ‘ஆம்! அல்லாஹ் வின் தூதரே!’ என்றேன். ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்! (சில நாட்கள்) விட்டு விடும்! (சிறிது நேரம்) தொழும்! (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன; உம் விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில் (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்குப் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் சிரமத்தை வந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என் மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது! ‘அல்லாஹ்வின் தூதரே நான் வலு உள்ளவனாக இருக்கிறேன்!’ என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது? என்று நான் கேட்டேன் ‘வருடத்தில் பாதி நாட்கள்!’ என்றார்கள்.’அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார் என அபூ ஸலமா கூறுகிறார்.
மக்களின் அறியாமையை நீக்கி அவர்களை மேம்படுத்தத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பினார்களே தவிர அவர்களது அறியாமையில் குளிர்காய விரும்பவில்லை என்பதை இந்நிகழ்ச்சியும் உறுதி செய்கின்றது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தங்கினேன். (விடிந்ததும்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளும் தண்ணீரையும், தேவையான இன்னபிறவற்றையும் எடுத்து வைத்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘என்னிடம் எதையாவது கேள்’ என்றனர். அதற்கு நான் ‘சொர்க்கத்தில் உங்களுடன் தோழமையாக இருப்பதை உங்களிடம் கேட்கிறேன்’ என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இதைத் தவிர வேறு ஏதாவது (கேள்)’ என்ற கூறினார் கள். ‘அது தான் வேண்டும்’ என நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உனது நன்மைக்காக அதிகமதிகம் வணக்கத்தில் ஈடுபட்டு எனக்கு உதவுவாயாக’ என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ரபீஆ பின் கஅப் (ரலி),
தமக்குத் தண்ணீர் எடுத்து வைத்ததற்காக இவ்வுலகப் பொருட் களில் எதையாவது கொடுக்கலாம் என்ற கருதியே என்னிடம் கேள் என நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். ஆனால், அவரோ இவ்வுலகப் பொருட்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் உங்களுடன் சொர்க்கத்தில் இருப்பதைத் தான் கேட்கிறேன் எனக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) இறைத் தூதராக இல்லாதிருந்தால், அப்படியே ஆகட்டும் எனக் கூறியிருக்கலாம். அவரும் மன நிறைவு அடைந்திருப்பார். மறுமை என்ற வாழ்க்கை இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் இல்லை என்றும் வைத்துக் கொண்டால் இப்படிச் சொல்வது மிக எளிதானது தான்.
ஆனால் மறுமை நாளில் அனைவரும் இறைவனின் அடிமைகளாகத் தான் வந்தாக வேண்டும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததாலும், அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததாலும் ‘ஒருவரைச் சொர்க்கவாசியாக அல்லது நரகவாசியாக ஆக்குவது இறைவனின் கட்டளைப்படி நடக்கக்கூடியது தானே தவிர என் கட்டளைப்படி நடக்கக்கூடியது அல்ல என்பதை உணர்த்தும் விதமாக வேறு கோரிக்கையைக் கேட்கச் சொல்கிறார்கள்.
அவர் தனது பழைய கோரிக்கையிலேயே பிடிவாதமாக இருப்பதைக் கண்டவுடன் ‘நீ சொர்க்கம் செல்வது, எனக்குத் தண்ணீர் எடுத்துத் தந்து உதவுவதால் மட்டும் ஆகக் கூடியதல்ல. மாறாக, இறைவன் உனக்கு விதித்துள்ள கடமைகளைச் செய்து அவனது அன்பைப் பெற வேண்டும். இறைவன் உன் மீது அன்பு கொள்ளும் வகையில் நீ நடந்து கொண்டால் மட்டுமே அது சாத்தியம்’ என்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.
சாதாரண ஊழியம் செய்தவரை விட்டு விடுவோம். தமது குடும்பத்தாருக்கும், தமது நெருங்கிய உறவினருக்கும் அவர்கள் செய்த எச்சரிக்கையும் இதுவாகத் தான் இருந்தது.
தமது உறவினர் அத்தனை பேரையும் அழைத்து ‘நீங்கள் என் செல்வத்தைக் கேளுங்கள் உங்களுக்குத் தருகிறேன். உங்களை அல்லாஹ்விடமிருந்து என்னால் காப்பாற்ற முடியாது. நீங்கள் தான் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்பது தான் அந்த எச்சரிக்கை.
‘அப்து முனாபின் சந்ததிகளே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! அப்துல் முத்தபின் சந்ததிகளே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! எனது மாமியாகிய உம்முஸ் ஸுபைரே! எனது மகளாகிய ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! எனது சொத்துக்களில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்! அல்லாஹ்விடமிருந்து உங்களை நான் காப்பாற்ற முடியாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆன்மீகக் குருவாக ஒருவர் மதிக்கப்பட்டால் அவருக்குப் பிறந்த தறுதலைகளும் அவ்வாறே இன்றைக்கு மதிக்கப்படுவதை மக்களிடம் காண்கிறோம்
இந்த மாமனிதரோ வாரிசு முறையில் எவரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ ஆக முடியாது. தனது வாரிசே ஆனாலும் நடத்தையின் மூலமாக மட்டுமே நல்லவராக முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார்கள்.
ஆன்மீக வாதிகளால் நமக்கு நன்மை செய்ய முடிகிறதோ, இல்லையோ அவரைப் பகைத்துக் கொண்டால் நிச்சயமாக அவரால் நமக்குத் தீமை செய்ய முடியும் என்ற தோற்றத்தை ஆன்மீக வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். ‘பிடி சாபம்’ என்று சொல் விட்டால் நமது கதி அதோ கதி தான் என்று மக்களை நம்ப வைத்து விடுகிறார்கள்.
பெண்களைக் கற்பழிப்பார்கள். வெளியே சொன்னால் சாபம் போட்டு விடுவேன் என்பார்கள்.
பணத்தை மோசடி செய்வார்கள். கேள்வி கேட்டால் சாபம் போடுவேன் என்பார்கள்.
இவ்வளவு ரூபாய் கொடுத்தால் சிறப்பு பூஜை செய்து உன்னை எங்கேயோ கொண்டு போகிறேன் என்பார்கள். ஒன்றும் நடக்கவில்லை என்பதற்காக மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.
இந்த அயோக்கியனின் சாபம் நம்மை என்ன செய்து விடும் என்ற சாதாரண அறிவு கூட மக்களுக்கு இல்லாத நிலையை இவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
உலகில் உள்ள எல்லா ஆன்மீக வாதிகளைப் பற்றியும் இத்தகைய ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்திலும் கூட பத்துவா’ (சாபம்) செய்து விடுவார் என்று பயந்தே பலரும் போகளிடம் ஏமாந்து வருகின்றனர்.
மாபெரும் ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே இதையும் ஒழித்துக் கட்டியுள்ளார்கள்.
ஆன்மீகவாதிகளின் மிக முக்கியமான கேடயத்தையும் முறித்துப் போடுகிறார்கள்
சில நிகழ்ச்சிகளைப் பாருங்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து எதையோ பேசினார்கள். என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் பேச்சு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்விருவரையும் ஏசியதுடன் சபிக்கவும் செய்தார்கள். அவ்விருவரும் சென்ற பின் இவ்விருவருக்கும் கிடைத்த நன்மையை வேறு எவரும் அடைய முடியாது என்று நான் கூறினேன். நீ என்ன சொல்கிறாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். ‘அவ்விருவரையும் திட்டிச் சபித்தீர்களே’ என்று நான் கூறினேன். ‘ஆம்! நானும் ஒரு மனிதனே. எனவே நான் யாரையாவது திட்டினாலோ, சபித்தாலோ அதை அவருக்கு அருளாக ஆக்கி விடு என்று என் இறைவ னிடம் நான் உறுதி மொழி பெற்றுள்ளேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒரு அனாதைப் பெண் இருந்தாள். அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது ‘நீ பெரியவளாகி விட்டாய்! உன் வயது பெரிதாகாமல் போகட்டும்’ எனக் கூறினார்கள். உடனே அந்த அனாதைப் பெண் உம்மு சுலைம் அவர்களிடம் அழுது கொண்டே சென்றார். ‘மகளே என்ன நேர்ந்தது’ என்று உம்மு சுலைம் கேட்டார்கள். ‘என் வயது அதிகமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) எனக்கெதிராகச் சபித்து விட்டார்களே! இனி மேல் நான் வளராது போய் விடுவேனே’ எனக் கூறினார். உடனே அவசரமாக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது அனாதைக் குழந்தைக்கு எதிராகச் சாபம் இட்டீர்களா? எனக் கேட்டார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். ‘நான் எனது இறைவனிடம் உறுதி மொழி பெற்றுள்ளது உனக்குத் தெரியாதா? நானும் ஒரு மனிதனே! மற்ற மனிதர்கள் திருப்தியுறுவது போல் (சிலர் மீது) நானும் திருப்தியுறுவேன். மற்ற மனிதர்கள் கோபம் கொள்வது போல் நானும் கோபப்படுவேன். எனவே என் சமுதாயத்தில் எவருக்கு எதிராகவேனும் நான் பிரார்த்தனை செய்து அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டால் அதை அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வணக்கமாகவும் ஆக்குவாயாக’ என்று இறைவனிடம் பிரார்த்தித்துள்ளேன் என்றார்கள்.
‘இறைவா! நம்பிக்கையாளர் எவரையேனும் நான் ஏசினால் அதை மறுமையில் உன்னிடம் நெருங்குவதற்குக் காரணமாக ஆக்கி விடு!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததை நான் செவியுற்றுள்ளேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.
என் சாபத்திற்கு யாரும் பயப்பட வேண்டாம்!’ என்று கூறியது மட்டுமின்றி நான் கோபத்தில் யாரையாவது சபித்தால் அது அவருக்கு நன்மையாகத் தான் முடியும் எனவும் கூறிய ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இப்படி அறிவித்ததன் முலம் தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர், விமர்சனம் செய்வோரின் அச்சத்தைப் போக்குகிறார்கள்.
நியாயத் தீர்ப்பு நாளில் நான் தடாகத்தின் அருகே நிற்பேன். அப்போது என்னுடன் தோழமை கொண்டிருந்த சிலர் தடாகத்தை நோக்கி தண்ணீர் அருந்த வருவார்கள். அவர்களை நான் காணும் போது, வெட்கப்பட்டு என்னை விட்டும் திரும்பிக் கொள்வார்கள். ‘என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் ஆயிற்றே!’ என்று நான் முறையிடுவேன். ‘உமக்குப் பின் அவர்கள் என்ன செய்தார்கள் என்று உமக்குத் தெரியாது’ என்று எனக்குப் பதில் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்கள் :(முஸ்லிம்: 4259),(புகாரி: 4259, 4740, 6576, 6582, 6585, 6586, 7049)
என்னுடைய தோழர்கள் சிலர் (மறுமையில்) பிடிக்கப்படுவார்கள். அப்போது ‘என் தோழர்கள், என் தோழர்கள்’ என்று நான் கூறுவேன். ‘நீர் அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர்’ என்று என்னிடம் கூறப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(புகாரி: 3349, 3447, 4625, 6526)
கெட்டவர்களையெல்லாம் தீட்சைக் கொடுத்து நல்லவர்களாக்கு கிறோம் என்று கூறும் போகள் எங்கே? நல்லவன் யார் கெட்டவன் யார்’ என்பதை இறைவனால் மட்டுமே கண்டு கொள்ள இயலும் என அறிவித்த இந்த மாமனிதரின் போதனை எங்கே!
இத்தகைய ஆன்மீகத்தினால் யாருடைய சுயமரியாதைக்காவது பங்கம் ஏற்படுமா? யாரேனும் சுரண்டப்பட முடியுமா?
எப்படி நடப்பது நல்லது என்று அறிவுரை கூறத் தான் இறைவனால் தேர்வு செய்யப்பட்டுள்ளேனே தவிர மறுமையில் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் அதிகாரத்தைப் பெற்று வரவில்லை என்பதைப் பல முறை அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். அவர்களின் கீழ்க்கண்ட அறிவுரைகளைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அது பெரிய பாவம் என்பதையும் எடுத்துரைத்தார்கள். ‘கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கணைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் மறுமை நாளில் தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் அப்போது காண வேண்டாம். (ஏனெனில்) ‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று அப்போது நான் கூறி விடுவேன். கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தன் கழுத்தில் சுமந்து வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியையும், தங்கத்தையும் சுமந்து கொண்டு வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று அப்போது நான், கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
எத்தகைய அக்கிரமத்தையும் நாம் செய்யலாம். செய்து விட்டு ஒரு ஆன்மீகக் குருவைப் பிடித்து, அவருக்கு தட்சணை கொடுத்து விட்டால், அவரிடம் ஆசி வாங்கி விட்டால் அல்லது அவரிடம் அருள்வாக்கு பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்பது தான் பெரும்பாலான மக்களின் ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.
கொள்ளையடிப்பவர்கள், ஊழல் செய்வோர், சுரண்டுவோர் அதில் சிறு பகுதியைக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 20 ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறார்கள்.
இத்தகைய ஆன்மீகத்தால் யாருக்கு என்ன நன்மை? குற்றம் புரிவதை வாடிக்கையாகக் கொண்டவனை இத்தகைய நம்பிக்கைகள் திருத்துமா? ஒருக்காலும் திருத்தாது. மாறாக அவன் மேலும், மேலும் குற்றங்கள் புரிவதைத் தான் இந்த நம்பிக்கை உருவாக்கும்.
இத்தகைய நம்பிக்கை அவனை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்கள் அவனது அக்கிரமத்தால் பாதிக்கப்படவும் இந்த நம்பிக்கை தான் காரண மாக அமைகிறது. போ ஆன்மீக குருமார்கள் பலவிதத்திலும் மக்களை ஏமாற்ற இந்த நம்பிக்கை தான் முழு முதற்காரணமாக இருக்கிறது.
மனிதர்களை நல்வழிப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்களை தீமை செய்யத் தூண்டுகிற ஒரு நெறி தேவை தானா? என்று அறிவுடையோர் விமர்சனம் செய்கின்றனர்.
இந்த மாமனிதரோ இது போன்ற விமர்சனங்கள் வரவே முடியாத அளவுக்கு அணை போடுகிறார்.
அரசியல் அதிகாரத்தின் மூலம் இவர் எந்தப் பலனையும் அடையாதது போல் ஆன்மீகத் தலைமையின் மூலமாகவும் எதையுமே அடையவில்லை; யாரையும் ஏமாற்றவில்லை என்று அறியலாம்.