ஆண்களுக்கும் பாதுகாப்பளிக்கும் புர்கா

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

ஆண்களுக்கும் பாதுகாப்பளிக்கும் புர்கா

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் எம்.இ.எஸ். முஸ்லிம் கல்விக் குழுமம் உள்ளது. இந்த கல்விக் குழுமத்தின் சார்பில் 35 கல்லூரிகள், 72 பள்ளிகள் நடத்தப் படுகின்றன. இந்த கல்விக் கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் புர்கா உடை அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என குழுமத்தின் சார்பில் கல்லூரி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியவுடன் மாணவ, மாணவிகளின் சீருடையை முடிவு செய்வது கல்வி நிறுவனர்களின் தனிப்பட்ட உரிமை. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது என குழுமம் விளக்கமளித்துள்ளது.

பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, கல்லூரியாக இருந்து, பாடம் நடத்தும் ஆசிரியைகளும் பெண்களாக இருக்கும் பட்சத்தில் வகுப்பறைக்குள் மாணவிகள் புர்கா அணிய வேண்டியதில்லை. இது மாதிரியான பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் வகுப்பறைக்கு வந்தவுடன் புர்காவை கழற்றி விடுவார்கள். வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு போகும் போது மட்டும் தான் மீண்டும் புர்கா அணிந்து கொள்வார்கள். கல்விக் குழுமத்தின் உத்தரவு இந்த மாணவிகளை பாதிக்காது.

அதே சமயம் பள்ளி, கல்லூரி, இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்விக் கூடமாக இருந்தாலோ அல்லது மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலோ அத்தகைய வகுப்பறைக்குள் இருக்கும் மாணவிகள் புர்கா அணிவது அவசியமாகும். இதை கல்விக் குழுமங்களும் தடைச் செய்ய முடியாது. ஏனெனில் அரசமைப்பு சட்டத்தின் 25(1)வது பிரிவில் இந்திய குடிமகன் தான் விரும்பிய மதத்தை தழுவ, பின்பற்ற, பிரச்சாரம் செய்ய உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அடிப்படை உரிமையாகும்.

இந்தப் பிரிவின் படி புர்கா அணிவது அடிப்படை உரிமையாக இருக்கும் போது அந்த உரிமையை பறிக்க கல்விக் குழுமங்களுக்கு அதிகாரம் கிடையாது. எனவே பள்ளி, கல்லூரிகள் முஸ்லிம் மாணவிகள் அணியும் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நினைக்காமல் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கல்வி நிலையங்களையும், அதில் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆண் ஆசிரியர்களையும், மாணவிகளுக்கு பாடம் நடத்த பெண் ஆசிரியைகளையும் நியமிக்க வேண்டும்.

ஆணும், பெண்ணும் கலந்து பழகுவதால் தான் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது கூட பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதே நேரம் தலைமை நீதிபதியின் நீதிமன்ற உதவியாளராக பெண் இல்லாமல் ஆண் இருந்திருந்தால் அவர் மீது பாலியல் புகார் எழ வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இந்நிலை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு மட்டுமல்ல…. கல்விக் குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கூட வரலாம்.

எனவே ஆண்களையும், பெண்களையும் பிரித்து வைப்பது பெண்ணுக்கு மட்டும் பாதுகாப்பில்லை. ஆணுக்கும் தான் அது பாதுகாப்பு என்பதை எல்லோரும் உணர்ந்து நடக்க முன்வர வேண்டும். குறிப்பாக முஸ்லிம் கல்வி நிலையங்களை நடத்துவோர் இதை அறிந்து நடக்க முன்வர வேண்டும். முன் வருவார்களா?

Source:unarvu(17/05/2019)