அஸ்மாஉல் ஹுஸ்னா-அல்லாஹ்வின் அழகியப் பெயர்கள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

بسم الله الرحمن الرحيم

அஸ்மாஉல் ஹுஸ்னா-அல்லாஹ்வின் அழகியப் பெயர்கள்

அகில உலகையும் படைத்து ஆளும் இறைவனின் இயற்பெயர் அல்லாஹ் என்றாலும் அவனது அழகிய பண்புகளைக் குறிக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன.

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.

(அல்குர்ஆன்: 20:8)➚

وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 7:180)➚

قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا

“அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்தபோதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது தொழுகையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

(அல்குர்ஆன்: 17:110)➚

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 59:24)➚

அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் எந்தப் பெயராலும் அல்லாஹ்வை அழைக்கலாம்.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியுள்ளனர்.

صحيح البخاري

2736 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ»

அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2736)

அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன என்றக் கருத்தில் மேற்கண்டவாறு வரும் ஹதீஸ் சரியானதாகும்.

(திர்மிதீ: 3507) இல் வரும் ஹதீஸ் பற்றிய விமர்சனம்

(திர்மிதீ: 3507) இலும் இன்னும் சில நூல்களிலும் வரும் அறிவிப்பாளர்தொடர்களில் அந்த 99 பெயர்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன. இவைகள் தான் தற்போது மக்களிடம் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த ஹதீஸில் கூறப்படும் பெயர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல் அல்ல என்றும், இதை முத்ரஜ் என்றும் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் செய்தியை அறிவிக்கும் வலீத் பின் முஸ்லிம் அவர்கள் தான், அந்த பெயர்களை கூறியுள்ளார். இதை தனது ஆசிரியர்களிடமிருந்து கேட்டும், அவர் ஆய்வு செய்தும் கூறியிருக்கலாம். இந்த திர்மிதீ ஹதீஸில் அல்லாஹ் எனும் பெயரைச் சேர்க்காமல் 98 பெயர்களே உள்ளன. இதில் அல்அஹத் எனும் 68 வது பெயர் கூறப்படவில்லை.

புகாரி ஹதீஸின்படி அல்லாஹ்வின் பெயரைச் சேர்க்காமல் 99 பெயர்கள் வரவேண்டும். ஆனால் இந்த ஹதீஸில் அப்படி வரவில்லை. மேலும் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவற்றில் ஒரு பெயர் உள்ள இடத்தில் வேறு பெயர்களும் கூறப்பட்டுள்ளன. மேலும் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இதல்லாத வேறு சில பெயர்களையும் கூறியுள்ளதாக சரியான ஹதீஸ்கள் உள்ளன.

அஸ்மாஉல் ஹுஸ்னாவை தொகுப்பதில் உள்ள முன்று நிலைப்பாடு

அஸ்மாஉல் ஹுஸ்னா என்ற தலைப்பில் சில அறிஞர்கள் நூல்களை எழுதியுள்ளனர். இவர்களில் சிலர் அஸ்மாஉல் ஹுஸ்னாவை எவ்வாறு முடிவு செய்யவேண்டும் என்பதற்கு சில அளவுகோல்களையும், சட்டவிதிகளையும் குறிப்பிட்டு அதன்படி தொகுத்துள்ளனர்.

இது விசயத்தில் உள்ள முன்று நிலைப்பாடு.

1 . சிலர் அஸ்மாஉல் ஹுஸ்னா 99 பெயர்கள் மட்டுமே என்ற அடிப்படையில் தொகுத்துள்ளனர்.

இப்னு ஹஸ்ம் போன்றோர் இந்தக் கருத்தையே கூறியுள்ளனர். மேலும் இப்னு ஹஸ்ம் அவர்கள் இதை குர்ஆனிலும், சரியான ஹதீஸ்களிலிருந்து தான் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2 . வேறுசிலர் அஸ்மாஉல் ஹுஸ்னா 99 பெயர்கள் மட்டுமல்ல. அதற்கு அதிகமாகவும் உள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வரையறுப்பதற்கு எந்தவித நிபந்தனையும் தேவையில்லை என்ற அடிப்படையில் தொகுத்துள்ளனர்.

ஃபக்ருத்தீன் ராஸீ அவர்கள் கூறும் வினோதமான கருத்து: அல்லாஹ்விற்கு 4000 பெயர்கள் உள்ளன. அவற்றில் 1000 பெயர்களை அவன் மட்டுமே அறிவான். வானவர்களுக்கு 3000 பெயர்களை கற்றுக் கொடுத்தான். நபிமார்களுக்கு 2000 பெயர்களை கற்றுக் கொடுத்தான். மக்களுக்கு 1000 பெயர்களை கற்றுக் கொடுத்தான். (இதற்கு எந்த ஆதாரமும் இல்லை)

3 . வேறுசிலர் அஸ்மாஉல் ஹுஸ்னா 99 பெயர்கள் மட்டுமல்ல. அதற்கு அதிகமாகவும் உள்ளன. ஆனால் இந்தப் பெயர்களை குர்ஆனிலும், சரியான ஹதீஸ்களிலிருந்து தான் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைப்படி தொகுத்துள்ளனர். மேலும் இவர்கள், ஹதீஸில் கூறப்படும் சிறப்பு அவற்றில் ஏதேனும் 99 பெயர்களை மனப்பாடம் செய்தால் கிடைக்கும் என்றும் விளக்கம் கூறுகின்றனர்.

நவவீ, இப்னு தைமிய்யா, இப்னுல் கய்யிம், இப்னு கஸீர், இப்னு ஹஜர், இப்னு உஸைமீன் போன்ற அதிகமான அறிஞர்கள் இந்தக் கருத்தையே கூறியுள்ளனர். இதற்கு கூறும் சில ஆதாரங்கள் பார்க்க:(அஹ்மத்: 3712) ,(புகாரி: 4712) ,(முஸ்லிம்: 839) ,

….

இந்த நூல்களில் மஹ்மூத் பின் அப்துர்ரஸ்ஸாக் என்ற அறிஞர் أسماء الله الحسنى الثابتة في الكتاب والسنة – குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் மட்டும் வந்துள்ள பெயர்களை தொகுத்து விரிவாக விளக்கியுள்ளார்.

ஒரு பெயரை அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் சேர்ப்பதற்கு அவர் 5 நிபந்தனைகளைக் கூறுகிறார்.

1. அந்தப் பெயர் குர்ஆன் அல்லது சரியான ஹதீஸில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
2. மொழி அடிப்படையில் தனிப்பெயராக தெரியவேண்டும்.
3. தனித்து பொருள் தர வேண்டும். (வேறு வார்த்தையுடன் இணைக்க தேவை ஏற்படக்கூடாது. நிபந்தனையிட்டு கூறும் தேவை ஏற்படக்கூடாது. வேறு வார்த்தையிலிருந்து எடுத்து கூறக்கூடாது)
4. பெயர்ச்சொல் பண்பை (ஸிஃபத்-தன்மையை) குறிக்க வேண்டும்.
5. பண்பை (தன்மையை) குறிக்கும் வார்த்தை இறைவனுக்குரிய முழுமையான பண்பை குறிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைக்குட்பட்ட 99 பெயர்களை கூறியுள்ளார். நாம் அந்த 99 பெயர்களையும், அத்துடன் மற்ற பெயர்களையும் குறிப்பிடுகிறோம்.