அஸருக்கு பின் உறங்கினால் அறிவு கெடும்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ

எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)

நூல்கள்: முஸ்னது அபீயஃலா 4918 மஜ்மவுஸ் ஜவாயித் பாகம் 2 பக்கம் 229

அஸ்ருக்குப் பின் ஒருவர் உறங்கினால் அவரது அறிவு பாழாகி விடும் என இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இது சுன்னத் ஜமாஅத் மத்ரஸா மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமானதாகும். ஆசிரியர்கள் இதைச் சொல்லித்தான் அஸருக்குப் பின் உறங்கும் மாணவர்களைப் பயமுறுத்துவார்கள். இந்தச் செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்களா?

இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற தனது நூலில் (பாகம் 3 பக்கம்69ல்) இமாம் இப்னுல் ஜவ்சீ அவர்கள் பதிவு செய்து விட்டு இது சரியான செய்தி அல்ல. இதில் இடம் பெறும் காலித் என்பவர் பொய்யர் ஆவார் என குறிப்பிடுகிறார்கள்.

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இமாம் தஹபீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.