அவ்வாபீன் என்ற ஒரு தொழுகை உண்டா?
அவ்வாபீன் தொழுகை என்ற பெயரில் தப்லீக் ஜமாஅத்தினர் மக்ரிப் இஷாவுக்கு இடையில் ஆறு ரக்அத்களைத் தொழுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகிறார்கள்.
மக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : திர்மிதி, இப்னுமாஜா, இப்னு குஸைமா, தப்ரானி, முஸ்னத் அபீ யஃலா,
இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி அவர்களே இது சரியான செய்தி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்று புகாரி கூறியதாக திர்மிதி எடுத்துக்காட்டுகிறார்கள்.
அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், தாரகுத்னீ, ஆகியோர் இந்த உமர் என்பவரை பலவீனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவரது ஹதீஸ்கள் ஒரு மதிப்பும் இல்லாதவை என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளனர். இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டவை என்று புகாரி கூறுகிறார். இவரது குறையை அம்பலப்படுத்துவதற்காகவே தவிர இவரைப் பற்றி பேசுவது கூடாது. இமாம் மாலிக், இப்னு அபீ திஅப் உள்ளிட்ட பல நம்பகமானவர்கள் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
எனவே இது அறவே ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.
பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
மக்ரிபுக்குப் பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு ஐம்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் கஸ்வான் என்பார் இடம் பெறுகிறார்.
இது இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பானதாகும் என்று இப்னு அபூ ஹாதம் கூறுகிறார்கள். முஹம்மத் பின் கஸ்வான் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் ஆவார் என்றும் கூறுகிறார்கள்.
எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
யார் மஃரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர் : அம்மார் (ரலீ)
நூல் : தப்ரானி அவ்ஸத், சகீர்
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஸாலிஹ் பின் கதன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்த செய்தியையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இஹ்யா எனும் நூலில் கஸ்ஸாலி பின்வரும் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
மக்ரிபுக்குப் பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுகிறாரோ அது ஒரு வருட வணக்கத்துக்குச் சமமாக ஆக்கப்படும். அல்லது லைலதுல் கத்ர் இரவில் தொழுதது போல் ஆக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்படி கஸ்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.
கஸ்ஸாலி மிகவும் பிற்காலத்தவர். ஹிஜ்ரி 505ல் மரணித்தவர். இவர் ஒரு ஹதீஸைச் சொல்வதாக இருந்தால் ஹதீஸ் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டித் தான் ஹதீஸ் என்று சொல்ல வேண்டும். ஆனால் இவர் ஹதீஸ் என்ற பெயரில் எந்த நூலிலும் இல்லாத பல பொய்களை ஹதீஸ் என்று அவிழ்த்து விட்டுள்ளார்.
أحاديث الإحياء التي لا أصل لها للسبكي இஹ்யாவில் பதிவு செய்யப்பட்ட ஆதரமற்ற ஹதீஸ்கள் என்று சுப்கி அவர்கள் ஒரு நூல் எழுதி அவற்றைப் பட்டியலிட்டுள்ளார் என்றால் கஸ்ஸாலி ஹதீஸ்களில் எந்த அளவு விளையாடி உள்ளார் என்று அறியலாம்.
எந்த ஹதீஸ் நூலிலும் இல்லாத ஹதீஸ்கள் என்ற பட்டியலில் இந்தப் பொய்யான ஹதீஸையும் சுப்கி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
கணிணி யுகத்தில் நாம் தேடிப் பார்க்கும் போதும் இப்படி ஒரு ஹதீஸை நாம் காண முடியவில்லை. எனவே இது கஸ்ஸாலி இட்டுக்கட்டிய ஹதீஸாகும்.
(இவரை அறிவுக்கடல் என்று உலமாக்கள் புகழ்ந்து போற்றுவது வேதனையாகும்)
எனவே மக்ரிபிற்குப் பிறகு அவ்வாபீன் என்ற பெயரில் ஆறு ரக்அத்கள் தொழுவது பித்அத் ஆகும். இதை தவிர்க்க வேண்டும்.