12) அழைப்பாளரின் பொறுப்புகள், கடமைகள்
v சகஜமாக பழகுங்கள். வலுக்கட்டாயமாக பேசுங்கள்.
பிற மதங்களில், கொள்கைகளில், கட்சிகளில், ஒருவர் பேச்சாளர் ஆகிவிட்டால், சாதாரண மக்களிடத்திலிருந்து விலகி நடக்க ஆரம்பித்துவிடுவார். இதுபோன்ற தன்மையை ஒருபோதும் ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். மக்களிடம், நிர்வாகிகளிடம் நீங்களாக வலியச்சென்று பேசுங்கள். கிளைகளின் செயல்பாடுகளை பற்றி விசாரியுங்கள். தெரிந்தால் ஆலோசனை கூறுங்கள்.
குறிப்பாக, பாமர மக்கள் அருகில் வந்து, அன்போடு எதாவது கேட்பார்கள், ”அப்ப.. தர்காவுக்கு போனா நன்மை கிடைக்காதா பாய்?” என்பது போல அப்பாவித்தனமாக எதாவது கேட்டால், ”கிழிஞ்சுது பொழப்பு. இவ்வளவு நேரம் மூச்சை போட்டு கத்திகிட்டு இருக்கேன். என்னத்த கவனிச்சிங்க?” என்பது போல விரட்டிப் பேசிவிடாதீர்கள். மக்களை திருத்துவதற்கு, உங்களின் பேச்சு பாதி, உங்களின் நடத்தை பாதி, மேடையில் மென்மையை பற்றி பேசிவிட்டு, மக்களிடத்தில் எரிந்து விழுந்தால் உங்கள் பேச்சினால் எந்த நன்மையும் ஏற்படாது.
அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். தர்மம் செல்வத்தை குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியானுக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.(முஸ்லிம்: 5447)
”(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளால், நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்” (அல்குர்ஆன்: 3:159) ➚ என்று அல்லாஹ் நபியின் நற்குணத்தை பாராட்டுகிறான். நபிகள் நாயகத்தை பின்பற்றும் ஒவ்வொருவருக்கும், இதில் அழகான முன்மாதிரி இருக்கிறது.
v நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
உங்களுக்கு நாவன்மையும், மார்க்க அறிவும் இருக்கிறது என்பதற்காகத்தான் உங்களை பேச அழைத்திருக்கிறார்கள். உங்கள் பேச்சை மார்க்கத்தை சொல்லுவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். நிர்வாக ரீதியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை, ஆலோசனைகளை ஜும்மாவில் பேசாதீர்கள். அது பேசப்படவேண்டிய இடமல்ல.
ஒரு பள்ளிக்கு போகிறீர்கள் அங்கு கழிவறை சரியாக இல்லை. இதைப்பற்றி நிர்வாகிகளிடம் தான் சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு, ஜும்மா மேடையில் நின்று கொண்டு, ”கழிவறை கட்டத்தெரியாதவர்களெல்லாம் இன்றைக்கு நிர்வாகியாக இருக்கிறார்கள்” என்று பேசுவது சரியான செயல் அன்று. எதை எந்த இடத்தில் பேசவேண்டும் என்பதை அறிந்து, சபையறிந்து பேசுங்கள்.
அதுபோல, மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து நீங்கள் எடுத்துக்கொண்டு வந்த தலைப்பை நிர்வாகிகள் வேண்டாம் என்று அறிவுறுத்தினால், ஒதுங்கிக்கொள்ளுங்கள். நிர்வாகிகளோடு ஒரு போதும், வம்புக்கு நிற்காதீர்கள். ஒரு பயானை எப்படி நடத்துவது, எங்கே நடத்துவது, என்ன தலைப்பில் பேசச்சொல்வது என்பது அனைத்தும் நிர்வாகிகளுக்கு உள்ள கடமை, அதிகாரம். கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசுவது மட்டுமே உங்களுக்கு உள்ள கடமை. உங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஒரு ஒருங்கிணைந்த ஜமாத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர், அதற்கு கட்டுப்பட்டு நடப்பது, மிகமிக அவசியம். கட்டுக்கோப்பை குலைப்பது, ஜமாத்தையே சீர்குலைத்துவிடும்,
நிர்வாகிகள் ஏதேனும் முடிவெடுக்கும் போது, ஆலோசனை கூறுவது தவறல்ல. எனினும் மக்களுக்கெல்லாம் போதனை செய்கிற காரணத்தால், உங்களது ஆலோசனையைத்தான் நிர்வாகம் ஏற்று செயல்படவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் சிந்திக்கும் திறன் உள்ளது. அவர்கள் முடிவெடுத்த காரியம் தோல்வியில் முடிந்தாலும் பரவாயில்லை. அதற்காக அவர்களை குறை சொல்லி புறம்பேசித் திரியக்கூடாது.
Ì அதேபோல, நிர்வாகிகளும் மார்க்க அறிஞரை மற்றவர்களைப் போல நடத்தாமல், ”கல்வியறிவுள்ளவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டவர், தகுதி உயர்த்தப்பட்டவர்” என்று அல்லாஹ் கூறுவதை உணர்ந்து அவர்களுக்குரிய கண்ணியத்தை தரவேண்டும். சில சோம்பேறி நிர்வாகிகள், பேச்சாளரையே ”நோட்டீஸை கொடு, ஸ்டூல் எடுத்துப்போடு, இடத்தை கூட்டிபெருக்கிவிட்டு, பின்னர் நீங்களே பயானும் செய்துவிடுங்கள். கடைசில வசூலை மறந்துடாதிங்க” என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. பேச்சாளரை நீங்களே வேலைக்காரனைப் போல நடத்தினால், பிறகு அவர் பேசும் செய்திகளுக்கு எப்படி மதிப்பிருக்கும்?
و حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ قَالَ أَخْبَرَنِي الْعَلَاءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي
”பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 147) எனவே, நிர்வாகிகள் பேச்சாளரையோ, பேச்சாளர் நிர்வாகிகளையோ மட்டமாக கருதுவது கூடாது.
”காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையை கொண்டும், பொறுமையை கொண்டும் போதித்துக் கொள்வோரையும் தவிர” (சூரா அஸ்ர்)
v ஆரம்பத்திலிருந்தே நட்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்டது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள, பிரச்சாரகர்கள் தான் இருக்கும் பகுதி நிர்வாகிகளிடம் நட்பை ஏற்படுத்துவது அவசியமானது. தான் நேசிக்கும் நண்பருக்காக யாரும் எதையும் செய்வார்கள். வண்டியில் போய்க்கொண்டிருக்கும் போது, பின்னாலிருந்து ஒருவர் இடித்துவிடுவார். ”அவனை சாகடிச்சுடனும்” என்ற வெறியோடு திரும்பிப்பார்க்கும் போது, நாம் நேசிக்கும் நமது நண்பராக இருந்தால், ”ஓ.. அப்துல்லாவா?, பார்த்து, பத்திரமா போங்க. உங்களுக்கு எங்கயாவது அடிபட்டுடுச்சா?” என்று இன்முகத்தோடு பேசுவோம். இதுவே மனித இயல்பு. எனவே, நட்பு என்னும் ஆயுதத்தை பயன்படுத்துங்கள்.
அதுபோல பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ள, நல்ல தொழில் செய்யும் நண்பரிடம் ஓரிரு லட்சம் முதலீடு செய்து மாத வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களால் ஓரிரு மணிநேரம் ஒதுக்க முடிந்தால், கணிசமான லாபம் தரும் சிறுவியாபாரங்கள் நிறைய இருக்கின்றன. பலநிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளடமிருந்து தினமும் ஆர்டர் எடுக்க, பணத்தை வசூலிக்க நம்பகமான ஆட்களின்றி தவிக்கின்றனர். பகுதிநேர டிடிபி, டிசைனிங் என வருமானத்திற்கு நூற்றுக்கணக்கான வழிகள் உள்ளன.
இதுதவிர, முழுநேரமாக பிரச்சாரம் செய்பவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த அவர்கள் படும்பாடு மிகவும் கொடுமையானது. நிர்வாகிகளுக்கு பொறுப்பு இருக்கிறது. அருகில் இருக்கும் இவர்களை புறக்கணித்துவிட்டு, ”ஊருக்கு தர்மம் செய்யப்போகிறேன்” என்று கூறுவது சரியல்ல. உதவி பெறுவதற்கு இவர்கள் மிகவும் தகுதியானவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا ۗ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அல்குர்ஆன்,2:273) நீங்கள் சார்ந்திருக்கும் நிர்வாகம் இந்த இறைகட்டளையின் முக்கியத்துவத்தை விளங்காமல் இருந்தால், தகுந்த ஆலிம்களைக் கொண்டு நிர்வாகிகளுக்கும், மக்களுக்கும் புரியவையுங்கள்.
பொருளாதார சிரமம் நிரந்தரமானதல்ல. உங்கள் பிள்ளைகளுக்கு சிரத்தையெடுத்து கல்வியை புகட்டுங்கள். அவர்கள் மூலமாக கூட அல்லாஹ் உங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவான்.
v பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
மக்களிடத்தில் சரியான இஸ்லாத்தை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவும், உலக வாழ்கையே போதும் என்று, அதிலேயே மூழ்கி கிடக்கும் மக்களுக்கு மறுமை சிந்தனையை உருவாக்கவேண்டும் என்பதற்காகவும் தான், பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், பெண்கள் பயான்கள் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பயானுக்கு பின்னாலும், பலஆயிரங்கள் செலவு செய்யப்படுகிறது. ஏராளமான மக்கள் தங்களது சொந்த வேலைகளை விட்டுவிட்டு, ஏதாவது செய்தி கிடைக்காதா? என்று வந்து அமர்ந்திருப்பார்கள். வரவிருப்பம் இல்லாத எத்தனையோ நபர்களை, நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருப்பார்கள்.
அதுபோல, நிர்வாகிகளுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தி, கிளைகளின் செயல்பாடுகளை அதிகப்படுத்தும் வகையில் பலஆயிரம் செலவு செய்து தர்பியாக்களும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. ஒரே ஒரு பொதுக்கூட்டமானாலும் சரி, தர்பியாவானாலும் சரி, வெறும் முப்பதாயிரம் ரூபாய் வசூல் செய்வதற்கு, குறைந்தது 100 பேரையாவது சந்தித்து நிலைமையை விளக்கி நடையாய் நடந்து அந்ததொகையை வசூல் செய்யவேண்டும்.
இது போன்ற நேரங்களில், சரியாக குறிப்புகளை எடுக்காமல், மக்களுக்கு பயன்படும் செய்திகளை சொல்லாமல் ஏனோதானோ என்று நேரத்தை வீணாக்கினால், கண்டிப்பாக மறுமையில் பதில் சொல்லவேண்டிய கேள்வியாக இது மாறிவிடலாம். எனவே பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
¢ குறிப்பாக ஜும்மா உரையை பயன்படுத்துங்கள்.
ஜவேளை தொழுகையை சரியாக நிறைவேற்றாத பல மக்கள்,
ஜும்மாவை விடாமல் நிறைவேற்றிவிடுவார்கள். மார்க்கத்தை அறிந்துகொள்ள, இதைத் தவிர வேறு வாய்ப்பு அவர்களுக்கு அமைவதில்லை. இந்த தருணத்தை பயன்படுத்தி, அவர்களை தொழுகையாளிகளாக மாற்ற முயற்சிக்கலாம். தர்மம் செய்யாத கஞ்சர்களுக்கு, தர்ம சிந்தனையை உருவாக்கலாம். இணைவைப்பில் வீழ்ந்துகிடக்கும் மக்களை அதிலிருந்து காப்பாற்றலாம். பேய், பிசாசு, சூனிய நம்பிக்கையில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை தரலாம். இப்படி ஜும்மாவை பயன்படுத்தி, ஏராளமான நன்மைகளை நாமும் செய்து குவிக்கலாம். மக்களையும் திருத்தலாம். தெருமுனை பிரச்சாரத்திற்கு வராத மக்கள், பொதுக்கூட்டத்திற்கு வராத மக்களெல்லாம் ஜும்மா பயானுக்கு வருவார்கள். அவர்களை வென்றெடுக்கும் சரியான வாய்ப்பு இந்த ஜும்மா உரை தான்.
இறைவனின் கட்டளைகளும், இறைதூதரின் வழிகாட்டுதல்களும், பெரும்பாலும் பிரச்சாரகர்கள் மூலமாகத்தான் மக்களுக்கு சென்றடைகிறது. ஒரு ஊரில் 50 லட்சம் மக்கள் இருந்தாலும் அவர்களில், ஒரு ஜமாஅத்தால் மேடை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்ட உங்களைப்போன்ற ஓரிறை கொள்கை பிரச்சாரகர்கள் வெறும் 10 அல்லது 20 பேர் தான் இருப்பார்கள். இது இறைவன் நமக்கு தந்த மிகப்பெரிய அருட்கொடை. எனவே அல்லாஹ் நமக்கு அளிந்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதை வீணாக்கிவிட்டு மறுமையில் கவலைப்பட்டு நிற்கக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் : ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ (அல்குர்ஆன்: 102:8) ➚
(உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடை பற்றி அந்நாளில் விசாரிக்கப்படுவீர்கள்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து (மறுமையில்) அவர் விசாரிக்கப்படுவார். (புகாரி: 2409)
எனவே பிரச்சாரத்திற்கு கிளம்பும் நேரத்தில், நம் பொறுப்பை எண்ணிப்பார்த்து, இன்று நாம் சொல்லும் செய்தி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். இறைசிந்தனையை ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில் நாம் பேசவேண்டும் என்ற பொறுப்புணர்வோடு கிளம்புங்கள்.
v விரும்பியதை செயல்படுத்தலாம்
பிரச்சாரகர்களுக்கு தங்கள் கடமையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு உள்ளது போல, புதுப்புது திட்டங்களை நிறைவேற்றும் திறனும் அவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் மக்களிடத்தில் நம்மால் கொண்டு செல்லமுடியும். இறைவன் நாடினால் அதை செயல்படுத்தவும் முடியும். உதாரணமாக, ஒரு ஊரில் வட்டியில்லா கடன் உதவித்திட்டம் செயல்படுத்த வேண்டுமெனில், ஒரு பிரச்சாரகர் நினைத்தால், எவ்வித சிரமமுமின்றி இதனை தான் செய்யும் பிரச்சாரத்தின் மூலமே வழியுறுத்தி செயல்படுத்த முடியும்.
இரத்ததான முகம் நடத்தவேண்டுமானாலும் சரி, பள்ளிக்கு நிதி திரட்ட வேண்டுமானாலும் சரி, சிறுவர் மதரஸா ஆரம்பிக்கவேண்டுமானாலும் சரி, பெண்களை பள்ளிக்கு வரவைப்பதாக இருந்தாலும் சரி இப்படி எந்த புராஜெக்ட்டையும் ஒரு பிரச்சாரகர் நினைத்தால், தனது பேச்சின் மூலம் அதன் நன்மைகளை வழியுறுத்தி, இறைவன் நாடினால் அதை செயல்படுத்தமுடியும்.
இந்த வாரம் ஜும்மாவில் அதனை வழியுறுத்தி பேசிவிட்டு வந்தால், அடுத்த வாரமே அந்த திட்டத்தை துவக்கிவிட்டு, அதனை ஆரம்பித்து வைக்க உங்களை அழைப்பார்கள். இப்படி எத்தனையோ இடங்களில் நடந்துள்ளதை அனைவரும் அறிவோம். எனவே உங்களது நாவன்மையை பயன்படுத்தி இதுபோன்ற நன்மைகளையும் அவ்வப்போது செய்யுங்கள்.
உங்கள் வாழ்கையின் நோக்கம் என்ன? : ”மறுமையின் சேமிப்பிற்காக, எனது மரணத்திற்கு முன்னதாகவே எதையாவது சாதிக்கவேண்டும்!”, என்பதை ஒரு லட்சியமாகவே ஆக்குங்கள். உதாரணமாக, ”ஹதீஸ் கிதாபுகளையோ, தப்ஸீர்களையோ தமிழில் மொழி பெயர்த்தல், ஹதீஸ்களை தரம்பிரித்தல், பத்தாயிரம் பேருக்கு குர்ஆனை கொடுத்தல், இஸ்லாமிய சட்டதிட்டங்களை தொகுத்தல், சாஃப்ட்வேராக மாற்றி மக்களுக்கு தருதல், இஸ்லாம் பற்றிய புத்தகங்களை எழுதுதல், ஒரே ஒரு பள்ளியையாவது உருவாக்குதல், பைத்துல்மாலை உருவாக்குதல் என இன்ஷா அல்லாஹ் எதையாவது செய்துவிட்டுத்தான் மரணிப்பேன்,” என்று உறுதிஎடுங்கள். இதை சாதிப்பது பிரச்சாரகருக்கு எளிதானது.
v அல்ஹம்துலில்லாஹ்
பேசிமுடித்த பல நேரங்களில், ”இன்று உருப்படியான செய்திகளை சொல்லியிருக்கிறோம். திருப்தியாக இருக்கிறது” என்று நமக்கே தெரியும். அதுபோன்ற நேரங்களிலும் சரி, ”சூப்பரா சொல்லிபுட்டிங்க” என்று பிறர் பாராட்டும் போதும் சரி, ஒருபோதும் மமதைக்கு இடம் தந்துவிடாதீர்கள். நாம் பிரச்சாரம் செய்வது, இதுபோன்ற பாராட்டுகளுக்காக அல்ல. இந்த அற்பமான செல்லாகாசுக்கு ஆசைப்பட்டு, விலைமதிப்பற்ற இறைவனின் சுவனத்தை இழந்துவிடக்கூடாது.
و حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ وَأَبُو كَامِلٍ وَاللَّفْظُ لِأَبِي كَامِلٍ قَالَا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصَمِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَرَ بِجُبَّةِ سُنْدُسٍ فَقَالَ عُمَرُ بَعَثْتَ بِهَا إِلَيَّ وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا وَإِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتَنْتَفِعَ بِثَمَنِهَا
மறுமைநாளில் ஒரு ஆலிம் கொண்டுவரப்பட்டு, இவ்வுலகில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு என்ன கைமாறு செய்தீர்கள் என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ”இறைவா! உனக்காக குர்ஆனை ஓதினேன். நானும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுத்தேன்” என்பார். அதற்கு இறைவன், ”நீ பொய் சொல்கிறாய். “நீ ஒரு அறிஞர், அழகாக குர்ஆனை ஓதுபவர்“ என்று மக்கள் சொல்வதற்காகவே செயல்பட்டாய். அது பூமியிலேயே சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறி, அல்லாஹ் அவரை நரகில் முகம்குப்புற தள்ளுவான். (முஸ்லிம்: 3865)
எனவே கவனமாக இருங்கள். பிறர் பாராட்டும் போது, அந்த புகழுக்கு உரியவன், இறைவன் தான் என்பதை, பிரகடனப்படுத்தும் விதமாக, அல்ஹம்துலில்லாஹ் என்று உளப்பூர்வமாக கூறுங்கள்.
அதுபோல, நாடறிந்த பிரச்சாரகரை நேசிக்கும் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பார்கள். நாமும், அதுபோன்றவரும் அருகருகே அமர்ந்திருக்கும் போது, அவருக்கு மட்டும் மக்கள் அதிக கண்ணியம் தருவது நம் உள்ளத்தில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தலாம். பலவருடங்கள் மக்களோடு பழகியவர் என்பதால் மக்கள் அதிகமாக அவரை நேசிக்கிறார்கள் அவ்வளவுதான். மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் ஒருவர் சிறந்தவர் ஆகிவிடமுடியாது. இறையச்சம் அதிகம் உள்ளவரே இறைவனிடத்தில் சிறந்தவர் என்ற ஹதீஸை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால், உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். எனவே, ரப்பி அஊதுபிக மின் ஹமஸாதிஷ் ஷயாத்தீன். (23:97) அல்லது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (புகாரி: 3303) என்ற துஆவைக் கொண்டு ஷைத்தானை விரட்டிஅடியுங்கள்.
இந்த இடத்தில், நிர்வாகிகளும் ஒரு விஷயத்தை மனதில் நிறுத்துவது அவசியம். பிரச்சாரகரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவரை பாராட்டுவது தவறல்ல, ஆனால் பாராட்டு புகழ்ச்சியாக மாறிவிடக்கூடாது. ”பின்னி எடுத்துட்டிங்க. ஒரு மணிநேரம் போனதே தெரியல. இனி உங்கள விட்டா வேற தாயி கிடையாது” என்று எல்லைமீறி பேசும்போது, பலஹீனமான உள்ளத்தில் சிலநேரம் பெருமை ஏற்பட்டுவிடலாம். எனவே, பாராட்ட வேண்டுமானால், ”நல்ல பயனுள்ள கருத்தை சொன்னீங்க. இந்த ஹதீஸ் இதுவரை கேள்விப்படல. புதுப்புது செய்திகளை சொன்னீங்க” என்று அளவோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
Ì பேச்சாளர்கள் பயானைக்குறித்து மக்களிடமோ, நண்பர்களிடமோ கருத்துக் கேட்க விரும்பினால், ”சூப்பரா இருந்துச்சா? நச்சுனு இருந்துச்சா?” என்று எதையாவது கேட்காமல், கீழ்காணும் வகையில் உருப்படியான கேள்விகளை கேளுங்கள்.
- சொன்னது புரிந்ததா? – Easy to understand?
- பயனுள்ளதாக இருந்ததா? – Was it useful?
- போதுமான தகவல்கள் இருந்ததா? – Complete with enough details?
- கவரும் வகையில் இருந்ததா? – Was it attractive?
மேற்கண்ட கேள்விகள், உலகின் முன்னணி இணையதளங்கள் தங்களது ஆக்கங்கள் குறித்தும், பிரபல எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களைக் குறித்தும் கருத்துகேட்கும்போது, கேட்கும் கேள்விகள். மேற்குறிப்பிட்ட நான்கு கேள்விகளுக்குரிய பதிலில் இருந்தே, மக்களிடம் கேட்டு சரிசெய்ய வேண்டிய விஷயங்களை, சரிசெய்துகொள்ளமுடியும்.
Ì ஒழுக்க விஷயங்கள்: மக்கள் அருவறுக்கும் செயல்களை செய்துகொண்டு ஒருவர் பிரச்சாரகராக இருக்கக்கூடாது. மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே ”இதையெல்லாம் சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று பிரச்சாரகரைப் பார்த்து கேட்பதை விட இழிநிலை வேறெதுவுமில்லை.
மற்ற மக்களைப்போல பிரச்சாரகரும் தவறு செய்யக்கூடியவர் தான். ஆனால், மற்றவர்கள் தவறு செய்யும்போது, சாதாரணமாக எடுப்பவர்கள், பிரச்சாரகர்கள் செய்யும் போது, அப்படி எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவருடைய ஒட்டுமொத்த பிரச்சாரமும் நம்பகமற்றதாகிவிடும். அதைவிட முக்கியமாக, அவர் சார்ந்திருக்கும் ஜமாஅத்திற்கும் அவரால் கெட்டபெயர் உருவாகும். எனவே கவனமாக இருங்கள்.
v இன்னாலில்லாஹ்.
நாம், சரியாக தயாராகாமல் போய், அதனால் சரியாக பேசாவிட்டால் அது கண்டிப்பாக நம்முடைய தவறு. அதற்காக கவலைப்பட்டே ஆகவேண்டும். வரும் காலங்களில், திருத்திக்கொள்ளவேண்டும்.
அதே நேரத்தில், மேற்குறிப்பிட்ட எல்லா யுக்திகளையும் நினைவில் வைத்து, ஏராளமான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, பேசும் சில நேரங்களில், நம் உரை சரியாக அமையாமல் போய்விடும். அதற்கு பதட்டமோ, அந்த நேரத்தில் உள்ள மனநிலையோ, தலைவலியோ, தூக்கமின்மையோ, வேறு காரணமோ இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ”சே..இப்டி ஆயிடுச்சே” என்று புலம்பிக்கொண்டே இருக்காமல், பாரத்தை இறைவனிடத்தில் ஒப்படைத்துவிடுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Ì சங்கடம் ஏற்படும் போது ஒருவர், ”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா” என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். அறிவிப்பவர் : உம்மு-ஸலமா (முஸ்லிம்: 1525)
இதன் பொருள் : ”நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். இறைவா! எனக்கு ஏற்பட்ட துன்பத்தில் சிறந்ததை பகரமாக தருவாயாக!” – என்ற துஆவை இழப்பு ஏற்பட்ட எல்லா நேரத்திலும் ஓதிக்கொள்ளுங்கள்.
v சிலஆண்டுகளில் வரஇருக்கும் பயான் முறைகள்
இன்ஷா அல்லாஹ், சிலஆண்டுகளில் மொழிமாற்று கருவிகள் நடைமுறைக்கு வரும். அப்போது. எந்த மொழி பேசும் மக்களிடத்திலும் நம் தாய் மொழியை கொண்டே உரைநிகழ்த்த முடியும். அதாவது. நீங்கள் தமிழ் மொழியில் பேசினால், அது தேவைப்படும் மொழியில் தானாக மொழி பெயர்க்கப்பட்டு ஸ்பீக்கரில் கேட்கும். இது கற்பனை அல்ல. இன்னும் சில ஆண்டுகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரஇருக்கும் தொழில்நுட்பம். தற்போதே இது, Text Translation Tools மற்றும் Speech Engine மூலமாக ஒருசில இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. எனவே, அல்லாஹ் நாடினால், நம் பிரச்சாரகர்கள் மிகவிரைவில் எந்த மொழி பிரச்சனையும் இல்லாமல் உலகின் பலபகுதிகளுக்கும் சென்று உரை நிகழ்த்துவார்கள்.
அதுபோல, இன்று கனினியில் ஹதீஸை டைப்செய்து தேடிஎடுக்கவேண்டியது உள்ளதல்லவா? எதிர்காலத்தில் ”இதனை தேடு” என்று கணினியிடம் நீங்கள் சொல்லிவிட்டு, மக்களிடம் பேசிக்கொண்டிருந்தால், கனினியே அந்த ஹதீஸை தேடிஎடுத்து மக்களுக்கு திரையில் காண்பிக்கும். எனவே, ஆதாரப்பூர்வமான சட்டங்களை உடனுக்குடன் ஒருநொடி கூட தாமதமின்றி மக்கள் அறிந்துகொள்ளமுடியும். (இதனை முன்னோட்டமாக செய்து பார்க்க, உங்கள் கனினியில் உள்ள GoogleCrome-மை ஓப்பன் செய்து, தேடுபெட்டியின் வலது மைக் பட்டனை அழுத்திவிட்டு, கனினியில் இணைக்கப்பட்டுள்ள மைக்கில் தேடவேண்டிய வார்த்தையை கூறுங்கள். ஒரு நொடிக்குள்ளாகவே நீங்கள் கூறியதை தேடிஎடுத்து தரும்!)
பயான் குறிப்புகளை, குர்ஆன் வசனங்களை நினைவில் வைக்க இன்று சிரமப்படுவது போல, எதிர்காலத்தில் சிரமப்படவேண்டியிருக்காது. நீங்கள் அணியும் மூக்கு கண்ணாடியின் மூலமே பயான் குறிப்புகள் மற்றும் தேவையான குர்ஆன், ஹதீஸை அதன் பொருளுடன் காண முடியும். அதே மூக்கு கண்ணாடியின் வழியாக மக்களையும் காணமுடியும். நீங்கள் ஹதீஸை காண்பது மக்களுக்கு தெரியாது. இதுவும் மிகவிரைவில் நடைமுறைக்கு வரஇருக்கும் தொழில்நுட்பம் தான்.
இதுபோன்ற இன்னும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக எதிர்கால பிரச்சார முறைகள் இலகுவானதாகவும், மக்களை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஜயமில்லை.