அழிக்கப்பட்ட சமுதாயங்களும் நாம் பெறவேண்டிய படிப்பினைகளும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

  1. இறைத்தூதர்களுக்கு முரண்படுதல்
  2. தேவையில்லா கேள்வியைக் கேட்டல்
  3. மார்க்க வரம்புகளை மீறுதல்
  4. சட்டதிட்டங்களில் சமரசம் செய்தல்
  5. உலக இன்பங்கள் மீது மோகம் கொள்ளுதல்
  6. விதியைப் பற்றி தர்க்கம் செய்தல்
  7. குழப்பத்தை ஏற்படுத்துதல்
  8. கஞ்சத்தனம் கொள்ளுதல்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

முன்னுரை 

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

நமக்கு முன்னால் வாழ்ந்து சென்ற சமுதாய மக்கள் சம்பந்தமான செய்திகளை திருமறையில் இறைவன் தெரிவித்திருக்கிறான். முன்சென்றவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முழுமையாக இல்லாவிட்டாலும், அவர்களின் காரியங்களில் நமக்குப் படிப்பினையும் போதனையும் இருக்கின்ற சிலவற்றை விளக்கியுள்ளான்.

இதுபோன்று, முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இறைச் செய்தியின் வாயிலாக முன்சென்ற சமுதாய மக்களைப் பற்றிய பல செய்திகளை நமக்குச் சொல்லியுள்ளார்கள். அவர்களில் அழிந்து போனவர்களைப் பற்றியும் அதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அழிந்தார்கள் என்று சொல்வது ஆளே இல்லாமல் மடிந்து போனார்கள் என்ற அர்த்தத்தில் இல்லை. மாறாக, சத்தியத்தை விட்டும் விலகி வழிதவறி சென்று வழிகேட்டிலே விழ்ந்து விட்டார்கள் என்ற பொருளில் எடுத்துரைத்துள்ளார்கள். இந்த விளக்கத்தை, கடந்த காலத்தில் வாழ்ந்து அழிந்து போனவர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளின் மூலம் விளங்கலாம்,

இந்த வகையில், முன்சென்ற சமுதாயத்தில் இறைவனின் கோபத்திற்கு உள்ளானவர்கள், சத்தியத்தைப் புறக்கணித்தவர்கள், மார்க்கத்தைத்  தெரிந்த பிறகு வழிதவறிச் சென்றவர்கள் பற்றி நபியவர்கள் தெரிவித்த செய்திகள் நமது காரியங்களை சீர்திருத்தம் செய்து திருத்திக் கொள்வதற்குத் துணைபுரியும் என்பதால் அவற்றை இங்கு இந்த உரையில் தெரிந்துக் கொள்வோம்.

இறைத்தூதர்களுக்கு முரண்படுதல்

மார்க்கம் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் முஹம்மத் நபியவர்கள் நமக்குத் தெரிவித்து விட்டடார்கள். இவ்வாறு நபியின் போதனை வழிகாட்டுதல், விளக்கம் தெளிவாக இருக்கும் போது அதை அறிந்த பிறகும் அதற்கு எதிர்க்கருத்து கொண்டு கருத்து வேறுபாடு கொள்வது தவறான, மோசமான பண்பாகும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் எதற்காகவும் எவருக்காகவும் நமது சத்தியத்தூதரின் கருத்துக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கவே கூடாது என்று பின்வரும் செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான்.

ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 7288)

هَجَّرْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، قَالَ: فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ، فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ، فَقَالَ: «إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ»

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, “உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 5180, 4818)

தங்களது தூதருடைய போதனைக்கு எதிரான கருத்தைக் கொண்டது முன்சென்ற மக்களை வழிகெடுத்துவிட்டது. இத்தகைய பண்பில் இருப்பவர்கள் வழிதவறிச் செல்வதை இன்றும் நாம் காணலாம். இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போதித்த சட்டதிட்டங்கள் அறிவுரைகள் பட்டவர்த்தமாகத் தெளிவாக இருக்கும் போது அதற்கு மாற்றமாகச் சிலர் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

நபிகளாருடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக நபித்தோழர்கள், இமாம்கள் போன்ற முன்னோர்களின் சுய விளக்கத்திற்கும் கருத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள். ஒற்றுமை, நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிரான கருத்துகளை அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

உள்ளங்கை நெல்லிக்கனி போல தூதரின் போதனைகள் தெளிவாக இருக்கும் போது மற்ற மற்ற காரணங்களுக்காக அவற்றிற்கு முரண்பாடாகச் சொல்வது, செய்வது, ஆதரிப்பது தவறான போக்காகும். இவ்வாறு தங்களுக்கு வந்த தூதருக்கு முரண்பாடாகச் செயல்படும் பண்பே முன்னோர்களை அழித்துவிட்டது.

தேவையில்லா கேள்வியைக் கேட்டல்

எந்தவொரு செய்தியையும் கேள்வி கேட்டு தெளிவு பெற்று கொள்வது தவறில்லை. மார்க்க விஷயமாக இருந்தாலும் உலக விஷயமாக இருந்தாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. அதேசமயம், கேட்கப்படும் கேள்வி அவசியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையில் கேள்விகள் கேட்கும் பழக்கம் இருக்கவே கூடாது.

குறிப்பாக மார்க்கச் சட்டங்ளை அணுகுவதில் இந்தப் பண்பு இருக்கவே கூடாது. காரணம், முன்சென்ற சமுதாய மக்களை அழித்து நாசமாக்கிய கெட்ட பண்புகளுள் இந்தப் பண்பும் ஒன்று என்று பெருமானார் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச் செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 4702)

நபியவர்களின் வழிகாட்டுதல்கள் எவற்றிலும் தேவையின்றி கேள்வி கேட்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. ஆனால், மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகளிலே இவ்வாறான கேள்விகள் அதிகமாக இருப்பதை நாம் காணலாம். பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காத, பயனளிக்காத, சபையில் சொல்வதற்குத் தகாத கேள்விகளை எழுப்பி விடையளித்திருக்கும் வேடிக்கையும் கேவலத்தையும் மத்ஹபுகளில் நிறைந்து வழிவதைக் காணலாம்.

இதனாலேயே மத்ஹபுகளில் விழுந்தவர்கள் மாநபியின் போதனைக்கு மாறுசெய்யும் காரியங்களை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். எனவே கேள்விகளை கேட்கும் முன்னர் யோசித்து செயல்பட வேண்டும். நோன்பு, தொழுகை, ஹஜ் போன்ற சட்டதிட்டங்களில் இப்படி அடுக்கடுக்கான அவசியமற்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கும் மக்களை இன்றும் காணலாம்.

மார்க்க வரம்புகளை மீறுதல்

இந்த உலகில் வாழும் போது நமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? தடை செய்யப்பட்டவை எவை என்பதைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காணலாம். அதுபோன்று எந்தவொரு மார்க்க விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும்? எப்படிச் செய்யக் கூடாது? என்ற விளக்கமும் பரிபூரணமாக இருக்கின்றன.

இப்படியிருக்க, அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என்ன சொன்னார்கள் என்று கடுகளவும் கண்டு கொள்ளாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற வகையில் கண்டபடி வாழ்பவர்களைப் பார்க்கிறோம். இந்தப் பண்பு அழிவில் தள்ளிவிடும் என்ற பயம் சிறிதும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பின்வரும் செய்தியைத் தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ، فَإِنَّهُ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمُ الْغُلُوُّ فِي الدِّينِ

“மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னு மாஜா: 3029, 3020)

தனிமனித ஒழுங்குகள் முதல் சமுதாயச் செயல்பாடுகள் வரை அனைத்திலும் எப்படி இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது? என்ற நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவ்வாறான சட்டதிட்டங்களை அறிந்து கொண்டதோடு அவற்றுக்கு அடிபணிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதிகமானோர் அவ்வாறு இருப்பதில்லை என்பது தான் வருத்தமான செய்தியாக இருக்கிறது.

பச்சை குத்துவது, அரைகுறை ஆடை அணிவது, பொய் பேசுவது, லஞ்சம் வாங்குவது, மது குடிப்பது, அடுத்தவர்களுக்கு அநீதி இழைப்பது, வட்டி, வரதட்சணை வங்குவது, அடுத்தவர்களுக்குரியதை அபகரிப்பது என்று வரம்பு மீறுவதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்கள் பலரைப் பார்க்கிறோம். இதுபோன்ற வரம்புமீறும் காரியங்கள் மக்களை அழிவில் கொண்டுபோய் விட்டுள்ளது என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

 عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ
أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ عَلَى المِنْبَرِ، فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ، وَكَانَتْ فِي يَدَيْ حَرَسِيٍّ، فَقَالَ: يَا أَهْلَ المَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ؟ وَيَقُولُ: «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ»

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), “மதீனாவாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டு விட்டு,  “நபி (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுப்பதையும், “பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்‘ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 3468)

எந்த வகையிலும் மார்க்க விஷயத்தில் வரம்பு மீறுதல் நம்மிடம் இருக்கக் கூடாது. மார்க்கக் கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டு வரம்பு மீறுபவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பேணுதலாக இருக்கிறோம்; பயபக்தியோடு நடந்து கொள்கிறோம் என்று வரம்பு மீறுபவர்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் பர்தாவைப் பேணாமல் வரம்பு மீறக்கூடாது. அதேசமயம், பேணுதல் என்ற பெயரில் கால்பாதங்கள் மற்றும் முன்கைகளுக்கும் உறைகளை அணிய வேண்டும்; முகத்தை கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்று பர்தா விஷயத்தில் வரம்பு மீறுவதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் தொழுகை, நோன்பு போன்ற மார்க்கக் கடமைகளில் இருக்கும் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களை சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். இந்த மாதிரி எந்த விதத்திலும் வரம்பு மீறக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் மனிதனுக்கு ஏற்ற சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கும் இந்த எளிமையான மார்க்கம் இத்தகையவர்களுக்கு, இன்னும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் கடுமையான, கொடுமை புரியும் மார்க்கம் போன்று தோற்றமளிக்கும் அபாயம் இருக்கிறது. இதைப் பெருமானாரின் பின்வரும் வரிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள்.

இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 39)

சட்டதிட்டங்களில் சமரசம் செய்தல்

சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும் விட்டுகொடுக்காமல், மற்ற கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான முறையில் பின்பற்ற வேண்டும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எதற்காகவும் எவருக்காகவும் வளைக்கக்கூடாது. ஆளுக்கும் இடத்திற்கும் ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்வது திரிப்பது நம்மை தடம் புரளச் செய்துவிடும் மோசமான பண்பு என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் பண்பு இருந்தவர்கள் வழிகேடுகளில் வீழ்ந்து, கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் விடுக்கும் பின்வரும் எச்சரிக்கையை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.

“மக்ஸூமி‘ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?” என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 6788)

இதையறியாமல், ஏழைகளிடம் ஒருவிதமாகவும் பணக்காரர்களிடம் ஒரு விதமாகவும் மார்க்க செய்திகளைக் கையாள்பவர்களைப் பார்க்கிறோம். அதுபோல தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்கள் தவறு செய்யும் போது அலட்சியமாக விட்டுவிடுவது; அதேசமயம் அறிமுகமற்றவர்கள், நெருக்கமற்றவர்கள் தவறு இழைக்கும் போது கடுமையாக நடந்து கொள்வது என்றும் சிலர் செயல்படுகிறார்கள்.

சொந்த ஊரில் ஒருவிதமாகவும் வெளியூர்களில் வேறு விதமாகவும் இடத்திற்கு, எதிர்ப்புகளுக்கு ஏற்ப சட்டதிட்டங்களை மாற்றிக் கொண்டு வேடம் போடும் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பண்பு கொண்டவர்கள் இந்தச் செய்தியைத் தெரிந்த பிறகாவது திருந்துவார்களா?

உலக இன்பங்கள் மீது மோகம் கொள்ளுதல்

தன்னை வணங்குவதற்காகவே ஏக இறைவன் மனிதர்களைப் படைத்திருந்தாலும் அவர்களின் உலக வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்காகச் செல்வம் போன்ற பல அருட்கொடைகளை கொடுத்திருக்கிறான். அவற்றின் மூலம் அவர்களை சோதிக்கவும் செய்கிறான். ஆகவே படைத்த இறைவனை மட்டும் தொழுது அவனது கட்டளைகளுக்கு ஏற்ப வாழ்வதிலேயே நம்முடைய முதல் கவனம் இருக்க வேண்டும். அதையடுத்த இடத்தையே உலக வாழ்க்கையின் இன்பங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் அதிகமான  மக்கள் உலக இன்பங்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவற்றைச் சேகரிப்பதற்காக மார்க்த்தை மறந்து அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சிலர் போதுமென்ற மனம் இல்லாமல் மற்றவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சுகபோக வாழ்க்கைக்காக அலைந்து திரிகிறார்கள்.

இதன் விளைவாக, இத்தகையவர்கள் பணத்திற்காகக் கடமைகளைத் தவற விடுகிறார்கள். தவறானவற்றை தேடிப்பிடித்துச் செய்கிறார்கள். மார்க்க நெறிமுறைகளைப் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் சென்று வழிகேடுகளில் விழுந்துவிடுகிறார்கள்.

முந்தைய காலத்தில் இந்தப் பண்பைக் கொண்டிருந்த சமுதாயம் அழிவில் அகப்பட்டுக் கொண்டது. அவர்களைப் போன்று நாமும் ஆகிவிடுவோமோ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஞ்சியிருக்கிறார்கள். ஆதங்கப்பட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள்.

அபூஉபைதா (ரலி)  அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், “ஆமாம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு  வறுமை  ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது  அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்” என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
(புகாரி: 3158)

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப்போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன்.

மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகி விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
(புகாரி: 1344)

விதியைப் பற்றி தர்க்கம் செய்தல்

பிரபஞ்சத்தின் இரட்சகன் முக்காலத்தையும் அறிந்தவன். அவன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் துல்லியமாக அறிந்த நுண்ணறிவாளன். அவன் அனைத்து காலத்திலும் நிகழும் சம்பவங்களையும் பதிவேட்டில் ஒன்று விடாமல் பதிவு செய்திருக்கிறான். அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது; எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது.

அவன் நினைத்திருந்தால் நமக்கு வாழ்க்கை எனும் வாய்ப்பே கிடைத்திருக்காது. அவன் தமது  விருப்பத்தின்படி பல்வேறு காரணங்களுக்காக இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கிறான். நன்மை மற்றும் தீமையைச் செய்வதற்கு வாய்ப்பளித்து நம்மைச் சோதிக்கிறான்.

கடந்த காலம் என்பது இறைவனின் நாட்டப்படி நடந்து முடிந்தவை; எதிர்காலம் என்பது அவன் நாடினால் நடக்கவிருப்பவை என்பதைப் புரிந்து கொண்டு நாம் நல்வழியில் செல்ல வேண்டும். தீய வழிகளைப் புறக்கணிக்க வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இறைவனையும் அவன் அமைத்திருக்கும் விதியையும் குருட்டுத்தனமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இறைவனும் இல்லை; விதியும் இல்லை என்று வறட்டுவாதம் செய்கின்றனர். இறைவனின் ஆற்றலையும் அவனளித்த வாய்ப்பையும் விளங்காமல் தர்க்கம் செய்கின்றனர்.

இப்படி விமர்சிப்பவர்களில் சிலர் சத்தியத்தை விட்டும் தூர நிற்கிறார்கள். இன்னும் சிலர் கிடைத்த சத்தியத்தைத் துறந்து செல்கிறார்கள். இவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் விதியைப் பற்றி சர்ச்சைகளை எழுப்பி சச்சரவுகளில் ஈடுபட்டதால் திசைமாறிப் போனார்கள். வழிகேட்டில் வீழ்ந்து கெட்டழிந்தார்கள் என்று நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حِينَ تَنَازَعُوا فِي هَذَا الأَمْرِ،

“உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் இந்த (விதியின்) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டதால்தான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ: 2133, 2059)

குழப்பத்தை ஏற்படுத்துதல்

மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதிலும் செயல்படுத்துவதிலும் தவறிழைப்பவர்கள் அதன் மூலம் சமுதாயத்தில் குழப்பம் தோன்றுவதற்குக் காரணமாக ஆகிவிடுகிறார்கள். எனவே எந்த வகையிலும் மக்களுக்கு மத்தியில் வீணான சந்தேககத்தை, குழப்பத்தைத் தோற்றுவித்து விடக்கூடாது. கண்ணும் கருத்துமாக மார்க்க போதனைகளைக் கையாளவேண்டும். இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது நம்மை நாசப்படுத்திவிடும் என்பதைப் பின்வரும் சம்பவத்தின் வாயிலாக விளங்கலாம்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْعَصْرَ فَقَامَ رَجُلٌ يُصَلِّي، فَرَآهُ عُمَرُ فَقَالَ لَهُ: اجْلِسْ، فَإِنَّمَا هَلَكَ أَهْلُ الْكِتَابِ أَنَّهُ لَمْ يَكُنْ لِصَلَاتِهِمْ فَصْلٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَنَ ابْنُ الْخَطَّابِ»

நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடனே ஒருவர் எழுந்து தொழுதார். அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், “வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் அழிந்ததெல்லாம் அவர்களது தொழுகைகளுக்கு மத்தியில் தெளிவு இல்லாமல் இருந்ததால் தான்” என்று கூறினார்கள். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “உமர் உண்மையையே சொன்னார்” என்று கூறினார்கள்.

(அஹ்மத்: 23121, 22041)

இதற்கு மாற்றமாகச் சிலர் சம்பந்தமில்லாத, தேவையற்ற காரணங்களை சொல்லிக் கொண்டு கண்மூடித்தனமாக மார்க்க செய்திகளை அணுகுகிறார்கள்; செயல்படுகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல காரியங்கள் தானே நன்மைகளைத் தரும் காரியங்கள் தானே என்று சொல்லிக் கொண்டு எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட காரியங்கள் இன்று மார்க்க  சட்டதிட்டங்களில் ஒன்றோடு ஒன்றாகக் கருதி செயல்படுத்தும் பாரதூரமான நிலைக்கு சமுதாயம் சென்றுவிட்டது.

இதனால், பாங்கு சொல்வதற்கு முன்னால் நபிகளார் மீது ஸவவாத் சொல்வது, ஜுமுஆ அன்று இரண்டு பாங்கு சொல்வது, மவ்லூது ஓதுவது, கத்தம் ஃபாத்திஹா ஓதுவது என்று ஏரளாமான பித்அத்கள் சமுதாயத்திற்குள் புகுந்து மக்கள் குழம்பிக் கிடக்கிறார்கள். இதனால், நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாகச் செயல்பட்டு நன்மையை இழந்ததோடு பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கஞ்சத்தனம் கொள்ளுதல்

மனிதனிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளை மட்டுமல்லாது அவனிடம் இருக்கக் கூடாத கெட்ட பண்புகள் பற்றியும் இஸ்லாம் பேசுகிறது. அந்த வகையில் நம்மிடம் இருக்கக் கூடாத பண்புகளுள் ஒன்று கஞ்சத்தனம் ஆகும். இந்த பண்பு முந்தைய சமுதாயத்தையே அழித்திருக்கிறது. கஞ்சத்தனம் என்பது மனிதனைத் தீமையான, தடுக்கப்பட்ட காரியங்களின் பக்கம் திசை திருப்பி வழிகெடுத்துவிடும் என்பதை இந்தச் செய்தி மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِيَّاكُمْ وَالشُّحَّ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِالشُّحِّ، أَمَرَهُمْ بِالْبُخْلِ فَبَخِلُوا، وَأَمَرَهُمْ بِالْقَطِيعَةِ فَقَطَعُوا، وَأَمَرَهُمْ بِالْفُجُورِ فَفَجَرُوا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “மக்களே! கஞ்சத்தனம் கொள்வதை விட்டும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் கஞ்சத்தனத்தினால் அழிந்து போனார்கள். அது அவர்களுக்கு கருமித்தனத்தை கட்டளையிட்டது. அவர்கள் கருமித்தனம் கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு உறவுகளைத் துண்டிப்பதை கட்டளையிட்டது. உறவுகளைத் துண்டித்தார்கள். மேலும் அவர்களுக்கு பாவமான காரியங்களை கட்டளையிட்டது. பாவமான காரியங்களைச் செய்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(அபூதாவூத்: 1698, 1447)

மேற்கண்ட செய்தியைப் பிரதிபலிக்கும் விதமாக இன்றும்கூட இந்தக் கஞ்சத்தனத்திற்கு அடிமையானவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட அருட்கொடைகளை மார்க்கம் கூறும் விதத்தில் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். பொருளாதார ரீதியான தங்களது கடமைகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்றாமல் பின்வாங்கிவிடுகிறார்கள். இதனால், நன்மைகளைக் கொள்ளையடிக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதோடு தீமையான, மோசமான காரியங்களிலும் விழுந்துவிடுகிறார்கள்.

நம்மை நல்வழியில் நிலைக்கச் செய்யும் காரியங்களைத் தெரிந்து நடைமுறைப்படுத்தினால் மட்டும் போதாது. சத்தியத்தை விட்டு தூரப்படுத்தி அசத்தியத்தோடு ஐக்கியப்படுத்தும் காரியங்களையும் தெரிந்து அவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நாம் இந்த உலகிலும் மறுமையிலும் சிறப்பாக வாழ்ந்து உண்மையான வெற்றியைப் பெற முடியும். ஆகவே முந்தைய சமுதாயங்களை அழித்தொழித்த காரியங்கள் ஒரு போதும் நம்மை அண்டவிடாமல் அழகிய முறையில் வாழ்ந்து ஈடேற்றம் பெறுவோமாக. வல்ல இறைவன் நமக்குத் துணைபுரிவானாக.!

ஆகவே மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நிற்கும் நாளை அஞ்சி பயந்து இவ்வுலக வாழ்கையில் நல்லடியார்களாக வாழ்ந்து மறையும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.!