அழிக்கப்பட்ட அசத்தியமும் சாதனை படைத்த சத்தியமும்

பயான் குறிப்புகள்: கொள்கை

அழிக்கப்பட்ட அசத்தியமும் சாதனை படைத்த சத்தியமும்

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

எல்லா மதமும் எம்மதமே! எதுவும் எனக்கு சம்மதமே என்று கூறுகின்ற எவருக்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. எல்லா மதமும் என் மதமில்லை. இஸ்லாம் மட்டுமே என் மதம். இது மட்டுமே எனக்கு சம்மதம் என்று கூறும் பொழுது ஏற்படுகிற பிரச்சனை அவ்வளவு சாதாரணமான பிரச்சனையாக இருக்கவில்லை.

ஏனெனில் ஏனைய மதங்களை விட இஸ்லாம் மார்க்கம் சிறந்ததாக இருக்கிறது. இஸ்லாத்தில் அப்படியென்ன சிறப்பம்சம் இருக்கிறது என்று உற்று நோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போல இதன் இறைக் கொள்கை மற்ற கொள்கைகளை விட உயர்ந்து நிற்கின்றது.

படைத்தவன் ஒருவனே! அவனுக்கு இணை, துணை இல்லை. அவன் தனித்தவன், நிகரற்றவன், தேவையற்றவன், தூயவன், மிகப்பெரியவன், புகழுக்குரியவன் என்ற அனைத்து தன்மைகளும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறி உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரே சத்திய மார்க்கம் இந்த இஸ்லாம் மட்டும் தான்.

இன்ன பிற மதங்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றுவது அவ்வளவு கடினம் கிடையாது. ஏனெனில் அவர்களுக்கென்று எவ்விதப் பண்பாடுகளோ, கலாச்சாரங்களோ, கொள்கைப் பிடிப்போ கிடையாது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வாழ்க்கை முறை தான் அவர்களுடையது.

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என்பது அவர்களின் ஏட்டளவிலே தானே ஒழிய அவர்களுக்கென்று எந்த ஒழுக்க மாண்புகளையும் அதில் காண இயலாது. அதே வேளையில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பது எளிதும் கிடையாது. இஸ்லாம் மார்க்கத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றது.

ஆனால் அவர்களின் இந்த முயற்சியானது அவர்களில் பலரையே இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துவிடுகின்றது. ஏனென்றால் இது சத்திய மார்க்கம் அல்லவா! இந்த சத்தியத்தை அழிக்க முற்படும் அசத்தியவாதிகளின் நிலைமை என்னவாயிற்று? இஸ்லாம் எனும் சத்திய மார்க்கம் வீழ்ந்துவிட்டதா? இல்லை வளர்ச்சி அடைந்துவிட்டதா? என்று இந்த உரையில் காண்போம்..

ரோமப் பேரரசர்

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம்மிடம் கேட்டதாக அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மிடம் ‘அவர்கள் (முஸ்லிம்கள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா?’ என்று கேட்டேன். அதற்கு நீர் ‘அவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள்’ என்று கூறினீர். இறை நம்பிக்கை அத்தகையதே. அது நிறைவடையும் வரை (வளர்ந்து கொண்டேதான்) இருக்கும்.

நான் உம்மிடம் ‘அவரது மார்க்கத்தில் இணைந்தோரில் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு  அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும் போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

(புகாரி: 51)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (ரோம் நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ், நான் குறைஷி வணிகக் குழு ஒன்றில் இருந்தபோது எனக்கு ஆளனுப்பி அழைத்துவரச் செய்துவிட்டு, தம் மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, “நான் இவரிடம் (சில கேள்விகள்) கேட்பேன்; இவர் பதில் கூறும்போது பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார் என்று தெரிவித்து விட வேண்டும் என இவருடைய நண்பர்களிடம் கூறிவிடு’’ என்று சொன்னார்.

(பிறகு முழு ஹதீஸையும் சொன்னார்.) (இறுதியில்) அவர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், “நீர் சொல்வது உண்மையாயிருந்தால் என்னுடைய இவ்விரு பாதங்கள் இருக்கும் இடத்திற்கு விரைவில் அவர் (முஹம்மத்) அதிபராகி விடுவார் என அவரிடம் சொல்’’ என்று சொன்னார்.

(புகாரி: 7196)

இஸ்லாத்தை ஏற்காத ரோமப் பேரரசர் இஸ்லாத்தைப் பற்றியும் ஈமான் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்துள்ளார் என்பது மேற்கண்ட செய்தியில் நமக்கு நன்கு விளங்குகின்றது. இதில் நாம் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் வளர்ச்சியடையுமே தவிர அதில் பின்னடைவு ஏற்படாது என்பதை இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் கூறியிருப்பது மிகவும் பிரமிப்பை நமக்கு ஏற்படுத்துகின்றது.

நபி நூஹ் (அலை) காலம் முதல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் காலம் வரை, ஏன்? இன்றைய ஏகத்துவவாதிகள் வரை சத்தியத்தைச் சொல்லும் போதெல்லாம் அசத்தியவாதிகள் அழிச்சாட்டியம் செய்யாமல் இருந்ததில்லை.

“நம்பிக்கை கொண்டோம்’’ என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?

(அல்குர்ஆன்: 29:2)

நூஹ் நபி

நூஹ் (அலை) மக்களிடம் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள். அந்த மக்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறை பயம் சற்றும் இல்லாமல் இருந்தனர். அவர் கொண்டு வந்த கொள்கையை மக்களில் சாமானியர்களைத் தவிர வேறெவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரின் மனைவி மகன் உட்பட அனைவரும் இறை நிராகரிப்புக் கொள்கையிலே நீடித்திருந்தனர்.

ஏறத்தாழ 950 வருடங்கள் நூஹ் அம்மக்களோடு வாழ்ந்தார்கள். அவர்களின் பிரச்சாரம் வெறுப்பையும் புறக்கணிப்பையுமே அவர்களுக்கு அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் அல்லாஹ், அந்தச் சமுதாயத்தை அழிக்க முடிவெடுத்தான். ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களையும், உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லுங்கள் என்று கட்டளையிட்டான். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அல்லாஹ் பேரலைகளை கொண்டு அவர்களை அழித்தான்.

“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்’’ என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்‘’ என்று அவர் கூறினார். “இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!’’ (என்றும் கூறினார்)

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கியபோது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!’’ என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். “இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று (நூஹ்) கூறினார். மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது.

(அல்குர்ஆன்: 11:36-42)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

(அல்குர்ஆன்: 29:14-15)

“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’’ என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்’’ எனவும் கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 11:44)

நூஹ் (அலை) அவர்களும் அதே தண்ணீரில் தான் இருந்தார்கள். அசத்தியவாதிகளும் அதில் தான் இருந்தார்கள். அசத்தியவாதிகள் மட்டும் அழிந்தது எப்படி? அசத்தியவாதிகளின் கண்முன்னே சத்தியத்தை இறைவன் மேலோங்கச் செய்தான். சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அந்த சொற்பமானவர்களை வைத்தே இந்த சத்திய மார்க்கத்தைப் பரவச்செய்தான்.

இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயத்தினரும், அவர்களுக்குப் பின் பல சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். ஒவ்வொரு சமுதாயமும் தமது தூதர்களைத் தாக்க நினைத்தனர். பொய்யின் மூலம் உண்மையை அழிக்க தர்க்கம் செய்தனர். எனவே அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு அமைந்தது?

(அல்குர்ஆன்: 40:5)

இப்ராஹிம் நபி

அடுத்ததாக இப்ராஹிம் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்து சொன்ன போது அவரது தந்தையே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உன்னைக் கல்லால் அடித்து கொல்வேன் என்று கூறினார். இப்ராஹிம் (அலை) அவர்கள் சற்றும் மனம் தளரவில்லை. அந்தச் சிலை வணங்கிகளிடம்  அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக சத்தியத்தை எடுத்துக் கூறினார்கள். அவர்களோ வெறுப்படைந்தார்கள். இறுதியில் இப்ராஹிம் நபி வீரியமாக எவருக்கும் அஞ்சாமல் சிலைகளை உடைத்தெறிந்தார்கள்.

இப்ராஹிம் என்ற இளைஞர் தான் இந்தச் சிலைகளை உடைத்தெறிந்திருப்பார் என்று அவர்களுக்குக் கூறப்பட்டவுடன் இப்ராஹிம் நபியை நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியக் கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வோ நெருப்பிலிருந்து அவரைக் காப்பாற்றி சத்தியத்தை மேலோங்கச் செய்தான்.

ஒரு தனி மனிதனால் என்ன செய்ய முடியும்? ஒரு தனி மனிதன் ஒரு கூட்டத்தை எதிர்கொண்டு சாதிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு இப்ராஹிம் நபியவர்கள் சாவுமணியடித்த காட்சியை திருமறையில் நாம் காண்கின்றோம்.

“இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!’’ என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன

(அல்குர்ஆன்: 29:24)

ஸாலிஹ் நபி

ஸமூத் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி தான் ஸாலிஹ் (அலை) அவர்கள். இந்தச் சமுதாயத்தினரும் சிலை வணங்கிகள் தான். அவர்களை நேர்வழிபடுத்திட தூதராக அல்லாஹ் ஸாலிஹ் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் அல்லாஹ்வை நம்புவதற்கு ஒரு அத்தாட்சி வேண்டுமென்று கூற, ஸாலிஹ் நபிக்கு அல்லாஹ் ஓர் ஒட்டகத்தை அத்தாட்சியாக வழங்கினான்.

இந்த ஒட்டகத்தை அதன் பாதையில் செல்லவிடுங்கள். அதற்குத் துன்பம் தராதீர்கள் என்று அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான். அந்த அசத்தியவாதிகள் அல்லாஹ்வின் வார்த்தையை அலட்சியம் செய்தனர். அந்த ஒட்டகத்தை அறுத்து கொன்றனர். இதனால் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகினர். அல்லாஹ் நில நடுக்கத்தின் மூலம் அவர்களை அழித்தான்.

“ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!’’ (என்று அவர் கூறினார்). “ஸாலிஹ் தமது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதை அறிவீர்களா?’’ என்று அவரது சமுதாயத்தில் கர்வம் பிடித்த பிரமுகர்கள் அவர்களில் நம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் (கிண்டலாக) கேட்டனர்.

அதற்கு, (பலவீனர்கள்) “அவரிடம் கொடுத்து அனுப்பப்பட்ட செய்தியை நாங்கள் நம்புகிறோம்’’ என்று கூறினர். “நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்’’ என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர். பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். “ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்’’ எனவும் கூறினர். உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.  (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். “என் சமுதாயமே! எனது இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு நல்லதையே விரும்பினேன். எனினும் நலம் நாடுவோரை நீங்கள் விரும்பவில்லை’’ எனக் கூறினார்.

(அல்குர்ஆன்: 7:73-79)

அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்குப் பெரும் சிறப்பைக் கொடுத்திருந்தான். அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் கட்டும் அளவிற்குப் பலசாலிகளாக இருந்தனர். அல்லாஹ் தங்களுக்குக் கொடுத்த அருளை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. அவர்களின் பலம் அவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லை. அவர்களின் இறைமறுப்பே அவர்களை அழித்தது.

ஷுஐப் நபி

ஷுஐப் நபியவர்கள் சத்திய மார்க்கத்தைச் சொல்லும் போது மக்கள் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை உதாசீனப்படுத்தி கேலி செய்தனர். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கோ, புரிந்து கொள்வதற்கோ அவர்கள் தயாராக இருக்கவில்லை. மாறாக அலட்சியம் செய்தனர். அவரால் நம்மை என்ன செய்ய முடியும்? அவரோ பலவீனமானவர் என்றே கருதினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அல்லாஹ் அந்த அசத்தியவாதிகளைப் பெரும் சப்தத்தைக் கொண்டு அழித்து அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கினான். இவ்வாறு தான் இந்த அசத்தியவாதிகளை அழித்து சத்திய மார்க்கத்தை இறைவன் சுடர்விடச் செய்தான்.

நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அங்கே வசிக்காதவர்களைப் போல் (ஆனார்கள்). கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர் (இறையருளைவிட்டு) தூரமானது போல் மத்யன்வாசிகளும் தூரமானார்கள்.

(அல்குர்ஆன்: 11:94-95)

மூஸா நபி

மூஸா (அலை) அவர்கள் சத்திய மார்க்கத்தைச் சொல்லும் போது மக்களிடம் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; ஏராளம் என்று கூறலாம்.

நான் தான் கடவுள் என்று கூறிக்கொண்டு பனூ இஸ்ரவேலர்களை கொடுமைப்படுத்திக் கொண்டு திரிந்த ஃபிர்அவ்னிடம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி அவன் திருந்துவதற்காக இறைவனின் ஆற்றலினால் அற்புதங்களை அவனிடம் நிகழ்த்திக் காட்ட, அவனோ அதை ஏற்றுக் கொள்ளவுமில்லை. இறைவனுக்குக் கட்டுப்படவுமில்லை. மாறாக அவனது கர்வமும், அகந்தையும் அவனை அழிவில் ஆழ்த்தியது.

அவன் மூஸாவை பொய்ப்படுத்துவதற்கு ஏவிவிட்ட சூனியக்காரர்களே அவனுக்கெதிராகத் திரும்பி அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிரம் பணிந்த வரலாற்றை நாம் குர்ஆனில் காண்கின்றோம்.

மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர். “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்’’ என்றனர். “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள்.

உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்’’ என்று அவன் கூறினான். “கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்’’ என்று அவர்கள் கூறினர். “நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்’’ (என்றும் கூறினர்).

(அல்குர்ஆன்: 20:45-51)

“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’’ என்று அவன் கூறினான். “எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை.

நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்’’ என்று அவர்கள் கூறினார்கள். “எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்’’ (என்றும் கூறினர்.)

(அல்குர்ஆன்: 20:70-73)

ஃபிர்அவ்னுக்கோ கடுமையான கோபம். இறுதியில் மூஸா நபியையும் அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் ஃபிர்அவ்ன் அழிக்க முடிவுவெடுத்தான். அவனும், அவனது படையும் மூஸா நபியையும், அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் விரட்டி வந்தனர்.

மூஸா (அலை) அவர்கள் தப்பிக்க முடியாமல் திணற நாம் அனைவரும் மாட்டிக் கொண்டோம் என அம்மக்கள் எண்ணிய வேளையில் கணப் பொழுதில் அல்லாஹ் சத்தியவாதிகளைக் காப்பாற்றி அசத்தியவாதிகளை அழித்தான். அழிக்க வந்த அசத்தியம் அழிந்து போனது. சாதிக்கப் பிறந்த சத்தியம் சாதனை புரிந்தது.

மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.

(அல்குர்ஆன்: 20:65-67)

அல்லாஹ்வின் ஜோதியை யாராலும் அழிக்க முடியாது 

يُرِيْدُوْنَ لِيُطْفِــُٔـوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

(அல்குர்ஆன்: 61:8)