அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இவ்வுலகில் வாழும் போது பொருளாதார ரீதியாக சிரமப்படுவோருக்கு கடன் வழங்கினால், அதன் பின் அதனை வசூல் செய்ய அவகாசம் கொடுத்தால் அல்லது தள்ளுபடி செய்தால் மறுமையில் மிகப்பெரும் நன்மைகளை பெறமுடியும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு போதனை செய்கிறது.

மறுமையை நம்பிய சமுதாயமா நாம்?

வியாபாரம் செய்வதற்காக இன்று நாடார் சமுதாயத்தில் பொருள் கடன் கொடுத்து உதவுகின்றார்கள். அதல பாதாளத்தில் கிடப்பவனுக்கு பொருளாதாரம் எனும் மலை உச்சியில் இருப்பவர்கள் கடன் எனும் கயிறு கொடுத்து, கை கொடுத்து உதவுகின்றார்கள். உலகையே குறிக்கோளாகக் கொண்ட அந்தச் சமுதாயம் இந்த நல்ல காரியத்தைச் செய்கின்றது. ஆனால் மறுமையை நம்பிக்கை கொண்ட இந்தச் சமுதாயம் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது என்பதைக் கணக்கில் கொள்ளச் செய்கிறது.

இது அல்லாமல் ஒரு முஸ்லிம் தன் அண்டை வீட்டுக்காரருக்கு, தன் வீட்டில் ஆக்கிய உணவுகளை வழங்கச் செய்து அவர் எப்படி காலம் தள்ளுகிறார் என்று பக்கத்து வீட்டுக்காரரின் பிரச்சனையை இஸ்லாம் பார்க்கச் செய்கிறது. இன்று நம்முடைய சமுதாயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது.

لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ۚ لَا يَسْـــَٔلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:273)

தன் சமுதாயத்தில் உள்ள சகோதரன் என்ன சிக்கலில் சிரமத்தில் இருக்கிறான்? என்று பார்த்து அல்லாஹ் உதவச் சொல்கிறான். இவ்வாறு கண்டறியாதவர்களை அல்லாஹ் அறிவிலி என்கின்றான்.

அல்லாஹ் தனது வசனத்தில் கூறியது போன்று அடுத்தவரிடம் வாய் திறந்து யாசிக்காமல் இருப்பவர்களை, அவர்கள் வாய் திறந்து யாசிக்க வைக்காது உதவச் சொல்கின்றது இஸ்லாம். “ஜகாத்’ எனும் பொருளாதாரத்தை இது போன்றவர்களுக்கு வழங்கச் சொல்கின்றது.

இன்று இஸ்லாமிய சமுதாயக் கூட்டமைப்பில் இது போன்ற நற்பணிகளெல்லாம் அரிதாகிப் போய் விட்டது. விபச்சாரம் என்ற வாசலை அடைத்த இஸ்லாம் மனிதனின் உடற்கூறுகளைக் கவனித்து ஒன்றுக்கு மேல் நான்கு வரை திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அது போல் யாசகம் கேட்கும் பாதையை அடைத்த இஸ்லாம் ஜகாத், தான தர்மம், கடன் போன்ற வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றது

தொழிலுக்கு யாரேனும் வந்து கடன் உதவி கேட்கும் போது கொடுக்கும் நிலையில் உள்ளவரின் உள்ளத்தில் உதிக்கின்ற முதல் எண்ணம் இவன் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் என்ன செய்வது? என்பது தான். இந்த எண்ணத்திற்கு அவர் வலுவூட்டினால் நிச்சயமாக அவர் கொடுக்க மாட்டார். இப்படிப்பட்டவர் ஏதேனும் ஒன்றில் ஏமாந்ததும் அன்று அவன் கடனாகக் கேட்டானே, அவனுக்குக் கொடுத்திருந்தாலாவது, நம்முடைய பணம் அவனிடம் கடனாக நின்றிருக்குமே என்று பின்னால் யோசிப்பார். இது ஒரு நிலை.

கொடுக்கும் நிலையில் உள்ளவரின் சிந்தனைப் பொறியில் தட்டுகின்ற இன்னொரு சிந்தனை என்னவெனில், நாம் இவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து நம்முடைய அந்தத் தொகையில் இவன் முன்னேறுவதை விட நாமே அந்தத் தொகையைப் பயன்படுத்தி முன்னேறினால் என்ன? என்ற எண்ணம் ஏற்படுவது மற்றொரு நிலை. இது போன்ற எண்ணம் ஏற்படுவது இயல்பானது தான்.

மறுமையில் கிடைக்கும் மகத்தான கூலி

இஸ்லாத்தில் எல்லாமே மறுமையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. ஒருவர் அடுத்தவருக்காகக் கொடுக்கும் அந்தத் தொகையில் இவரே தன்னை வளர்க்கலாம். ஆனால் இவர் அடுத்தவருக்காகக் கொடுக்கின்ற இந்த தொகைக்குரிய நன்மைகளையெல்லாம் மறுமையில் அல்லாஹ் இவருக்கு வழங்கி விடுகின்றான். எல்லாவற்றிற்குமே அல்லாஹ்விடம் கூலி உண்டு. கொடுப்பவர் அல்லாஹ்வுக்காகவே கொடுக்க வேண்டும்.

ஒரு வேளை, கடன் பெற்றவர் நட்டம் அடைந்து விட்டால் அந்தத் தொகையை மீட்பதற்காக வட்டிக்காரனைப் போன்று இரக்கமற்ற அரக்கக் குணம் கொண்டவனாக நடந்து விடக் கூடாது. ஒன்று அவகாசம் கொடுக்கலாம். அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்து விடலாம். இந்த இரண்டிற்கும் மறுமையில் கிடைக்கும் நன்மையைப் பார்ப்போம்.

مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ ، قَالَ : ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ، قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللهِ تَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ ، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ، قَالَ لَهُ : بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ

“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

அறி : சுலைமான் பின் புரைதா (ரலி)
நூல் : (அஹ்மத்: 23046)

உதாரணமாக நஸீர் என்பவர் ஜலீல் என்பவருக்கு ஜனவரி 2005 முதல் தேதி பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்கின்றார். அவர் அளிக்கும் அவகாசம் ஒரு வருடம். அதாவது டிசம்பர் 2005 வரை தவணை எனில், ஒவ்வொரு நாளும் கடன் கொடுத்தவர் இந்தப் பத்தாயிரத்தைத் தர்மம் செய்தவர் போல் ஆகின்றார். டிசம்பர் 2005 தாண்டிய பிறகும் கடன் பெற்றவர் திரும்பத் தரவில்லை. அவருடைய கஷ்டத்தைப் புரிந்து கொண்டு கடன் கொடுத்தவர் 2006 டிசம்பர் வரை அவகாசம் அளிக்கின்றார் எனில் அவர் ஒவ்வொரு நாளும் ரூ.20,000/- தர்மம் செய்தவர் போலாகின்றார்.

வட்டியை ஒரேயடியாக வெட்டி வீழ்த்தும் மார்க்கம் எந்த அளவுக்கு நன்மைகளை அள்ளி அபரிமிதமாக அளவுக்கதிகமாக வழங்குகின்றது என்று பாருங்கள். மனிதன் இலாப நட்ட கணக்குப் பார்க்கும் மனநிலை கொண்டவன் என்பதாலும் கடன் வழங்கியவர் அந்தத் தொகையைத் தன் தொழிலுக்காகப் பயன்படுத்தி இலாபம் சம்பாதிப்பதை தியாகம் செய்கின்றார் என்பதாலும் அல்லாஹ் மறுமையில் இவருக்குக் கூலியாக வாரி வழங்குகின்ற சன்மானங்களைக் கவனியுங்கள்.

இதைச் செல்வந்தர்கள் கைக்கொண்டிருந்தால் ஏழைகள் எத்தனை வளங்களையும், நலங்களையும் பெற்றிருப்பார்கள் என்று நாம் எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கடன் தொடர்பான விவகாரங்களில், வழக்குகளில் அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அணுகுமுறையைக் கையாளுகின்றார்கள்.

عَنْ كَعْبٍ
أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى يَا كَعْبُ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ قَالَ ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا وَأَوْمَأَ إِلَيْهِ أَيِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللهِ قَالَ قُمْ فَاقْضِهِ

“இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் கொடுத்திருந்த கடனைப் பள்ளிவாசலில் வைத்து நான் கேட்டேன். எங்கள் இருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து “கஅபே!” என்று கூப்பிட்டார்கள். “இதோ! வந்தேன். அல்லாஹ்வின் தூதரே!” என்றேன்.

“பாதி” என்பதைக் காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி “உமது கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராக” என்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். “எழுவீராக! பாதியை நிறைவேற்று வீராக” என்று (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி) யிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : கஃப் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 457) 

தர்மங்களைப் பெற்றேனும் தள்ளுபடி செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டவர்களைக் கண்டு வாளாவிருந்ததில்லை. உடனே அவருடைய கடனைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளைக் காண ஆரம்பித்து விடுகின்றார்கள்.

 عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ
أُصِيبَ رَجُلٌ فِى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى ثِمَارٍ ابْتَاعَهَا فَكَثُرَ دَيْنُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَصَدَّقُوا عَلَيْهِ ». فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ فَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِغُرَمَائِهِ « خُذُوا مَا وَجَدْتُمْ وَلَيْسَ لَكُمْ إِلاَّ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பழங்கள் வாங்கிய வகையில் ஒருவரது கடன் அதிகமாகி அவர் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித் தோழர்களை நோக்கி) “அவருக்குத் தர்மம் செய்யுங்கள்” என்றார்கள். ஆனால் வசூலான தொகை கடனைப் பூர்த்தி செய்யுமளவுக்கு எட்டவில்லை. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் அவருடைய கடன்காரர்களிடம், “கிடைத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதைத் தவிர வேறு எதுவுமில்லை” என்று சொன்னார்கள்.

அறி : அபூசயீத் அல்குத்ரி (ரலி)
நூல் : (முஸ்லிம்: 3170)

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்காகத் தர்மங்களைப் பெற்றேனும் கடனைச் செலுத்தியிருப்பதை நாம் காண முடிகின்றது. இன்று கடன்பட்டவர்கள் நடுத்தெருவில் உள்ள அரண்மனை போன்ற வீடுகளை விற்று விட்டுச் செல்வதை சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏழைக்கு இரங்கியவருக்கு இறைவன் இரங்குதல்.
عَنْ رِبْعِىِّ بْنِ حِرَاشٍ عَنْ حُذَيْفَةَ قَالَ
أُتِىَ اللَّهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللَّهُ مَالاً فَقَالَ لَهُ مَاذَا عَمِلْتَ فِى الدُّنْيَا – قَالَ وَلاَ يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا – قَالَ يَا رَبِّ آتَيْتَنِى مَالَكَ فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ وَكَانَ مِنْ خُلُقِى الْجَوَازُ فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ وَأُنْظِرُ الْمُعْسِرَ. فَقَالَ اللَّهُ أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ تَجَاوَزُوا عَنْ عَبْدِى ». فَقَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِىُّ وَأَبُو مَسْعُودٍ الأَنْصَارِىُّ هَكَذَا سَمِعْنَاهُ مِنْ فِى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் அடியார்களிலிருந்து ஓர் அடியார் அவனிடம் கொண்டு வரப்படுவார். அவருக்கு அல்லாஹ் செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான். அதனால் அவரிடம், “உலகத்தில் நீ என்ன அமல் செய்தாய்?” என்று அல்லாஹ் கேட்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, “அல்லாஹ்விடத்தில் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க மாட்டார்கள்” என்ற (அல்குர்ஆன்: 4:42) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதற்கு அடியான், “என்னுடைய ரட்சகனே! உன்னுடைய பொருளை எனக்கு வழங்கினாய். மக்களிடம் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கடன்பட்டவருக்கு (கடனை) தள்ளுபடி செய்வது என்னுடைய குணமாகும். அதனால் (கடன்பட்ட) பணக்காரரிடம் நளினமாகவும், (கடன்பட்ட) வறியவருக்கு தவணையும் அளித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிலளித்தார். உடனே மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ், “இந்த அடியானை விட நான் மிகவும் உரிமை படைத்தவன். எனவே, இந்த அடியானின் பாவத்தைக் கண்டு கொள்ளாது விட்டு விடுங்கள்” என்று (மலக்குகளிடம்) கூறுகின்றான்.

அறி : ஹுதைஃபா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 3181) (2920)

இந்தக் கருத்தைத் தாங்கிய ஹதீஸ் புகாரியிலும் பல இடங்களில் இடம் பெறுகின்றது. ஐங்காலத் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றைச் செய்தால் போதும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பி இத்தகைய வணக்கங்களைச் செய்கின்றோம். ஆனால் இது போன்ற சமுதாயச் சேவையின் மூலம் சொர்க்கம் செல்வதைக் காணத் தவறி விடுகின்றோம். எனவே, நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுடன் இந்தச் சேவையையும் செய்கின்ற போது இது நம்மை சுவனத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றது.

அர்ஷின் நிழலில்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த ஹதீஸுக்கு அப்படியே செயல் வடிவம் கொடுத்தனர்.

عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ
أَنَّ أَبَا قَتَادَةَ كَانَ لَهُ عَلَى رَجُلٍ دَيْنٌ ، وَكَانَ يَأْتِيهِ يَتَقَاضَاهُ فَيَخْتَبِئُ مِنْهُ ، فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَخَرَجَ صَبِيٌّ فَسَأَلَهُ عَنْهُ فَقَالَ : نَعَمْ . هُوَ فِي الْبَيْتِ يَأْكُلُ خَزِيرَةً فَنَادَاهُ يَا فُلاَنُ ، اخْرُجْ فَقَدْ أُخْبِرْتُ أَنَّكَ هَاهُنَا فَخَرَجَ إِلَيْهِ فَقَالَ : مَا يُغَيِّبُكَ عَنِّي ؟ قَالَ : إِنِّي مُعْسِرٌ وَلَيْسَ عِنْدِي . قَالَ : آللَّهِ إِنَّكَ مُعْسِرٌ ؟ قَالَ : نَعَمْ . فَبَكَى أَبُو قَتَادَةَ ثُمَّ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ نَفَّسَ عَنْ غَرِيمِهِ أَوْ مَحَا عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ

அபூகதாதா (ரலி)யிடம் ஒருவர் கடன் பட்டிருந்தார். கடனைக் கேட்டு அவரிடம் செல்லும் போது அவர் ஒளிந்து கொள்வார். ஒரு நாள் (அவ்வாறு) வந்த போது சிறுவன் வெளியே வந்தான். அவனிடம் அவரைப் பற்றி விசாரித்த போது “ஆம் வீட்டில் கஸீரா (இறைச்சியும் மாவும் கலந்த சூப்) சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்” என்று சொன்னார். உடனே அபூகதாதா (ரலி) “இன்னாரே! வெளியே வந்து விடு. நீ அங்கு தான் இருக்கிறாய் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது” என்று சொன்னார்,

அவர் வெளியே வந்ததும் “நீ என்னை விட்டும் ஒளியக் காரணம் என்ன?” என்று கேட்டார். “என்னிடம் (ஒன்றும்) இல்லை. நான் கஷ்டப்படுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்ட அபூகதாதா (ரலி) அழுதார்கள். பிறகு “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.

அறி : முஹம்மது பின் அல்குரளி
நூல் : (அஹ்மத்: 22623)

இதே கருத்தில் முஸ்லிமிலும் ஹதீஸ் இடம் பெறுகின்றது. கடன் பட்டவர் தான் அழ வேண்டும். ஆனால் மேற்கண்ட இந்த ஹதீஸில் கடன் கொடுத்தவரான அபூகதாதா (ரலி) அழுகின்றார்கள். இதை எங்கேனும் நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கிய தோழர்களின் கூட்டத்தில் உள்ள அபூகதாதா (ரலி) அவர்கள் கடன்பட்டவர் படும் கஷ்டத்தைக் கண்டு அழுகின்றார். இப்படி இந்தச் சமுதாயம் சஹாபாக்களின் வழியில் ஆக்கம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இன்று கடன்கொடுத்தவர் கடன்பட்டவரிடம் காட்டுமிராண்டித்தனமாக நடப்பதைப் பார்க்கின்றோம். வாயில் வரும் வார்த்தைகளைத் திட்டி தீர்ப்பதை, தனது கொதிப்பைக் கொட்டி வார்ப்பதையும் பார்க்கின்றோம். நாக்கை பிடுங்கி சாகக் கூடாதா? தூக்கு மாட்டி தொங்கக் கூடாதா? என்று நெருப்புக் கங்குகளை அள்ளி வீசுகின்றார்கள்.

அரசாங்கம் ஜப்தி செய்வதைப் போன்று தட்டுமுட்டு சாமான்களைத் தெருவில் வீசி எறிந்து, ஏற்கனவே நாணி, கூனி குறுகி நிற்கும் கடன்பட்டவர் கடுமையாக அவமானப் படுத்தப்படுகின்றார்.

இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூகதாதா (ரலி), நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் ஊட்டிய போதனையில் நடந்து கொள்கின்றார். இந்த ஹதீஸில் அபூகதாதா (ரலி) தவணையளித்தார்களா? அல்லது தள்ளுபடி செய்தார்களா? என்ற குறிப்பு நமக்கு கிடைக்கவில்லை

பின் வரும் புகாரி ஹதீஸின் படி அபூகதாதா (ரலி) அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்யும் பண்பாளர் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அந்த அடிப்படையில் இங்கும் அவர்கள் நிச்சயமாகக் கடனைத் தள்ளுபடி செய்திருப்பார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். இது பற்றி இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம்.

ஹராமிய்யா கிளையைச் சார்ந்த இன்னார் மகன் இன்னாரிடம் எனக்குத் தரவேண்டிய பணப் பற்று உள்ளது. நான் அவருடைய குடும்பத்தாரிடம் சென்று ஸலாம் சொல்லி “அவர் இங்கிருக்கின்றாரா?” என்று கேட்டேன். வீட்டினர் “இல்லை” என்று பதிலளித்தனர்.

அப்போது வீட்டிலிருந்து விடலைப் பையன் ஒருவன் வெளியே என்னை நோக்கி வந்தான். நான் அவனிடம், “உன்னுடைய தந்தை எங்கிருக்கின்றார்?” என்று கேட்டேன். “உங்களுடைய சப்தம் கேட்டதும் என் தாயாரின் படுக்கை அறை கட்டிலுக்குச் சென்று விட்டார்” என்று பதில் சொன்னான். உடனே நான் (அவரை நோக்கி) “எங்கிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். வெளியே என்னிடம் வந்து விடு” என்று கூறினேன். உடனே அவர் வந்தார்.

“நீ என்னை விட்டு ஒளிய வேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, உங்களிடத்தில் பொய் சொல்லவும் வாக்களித்து விட்டு உங்களுக்கு மாறு செய்வதையும் பயந்தேன். (அதனால் தான் ஒளிந்தேன். இந்த விஷயத்தில்) நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழராவீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ கஷ்டப்படுபவனா? என்று நான் கேட்டேன். அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கஷ்டப்படுபவன் தான் என்றார்.

அபுல் யஸார் (ரலி) யிடமிருந்து இதை அறிவிக்கும் உப்பாதா பின் ஸாமித் (ரலி) யின் மகன் தொடர்ந்து கூறுகின்றார்.

அவருடைய கணக்குச் சீட்டைக் கொண்டு வந்து அதைத் தன் கையால் அழித்து விட்டு (கடன்பட்டவரை நோக்கி) திருப்பிக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் எனக்கு (அதை) நிறைவேற்றிவிடு. “(கடன்பட்டு) கஷ்டப்படுபவருக்கு யார் அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவரை அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலில் நிறுத்தி நிழலிடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லும் போது அவர்களை (தன் கண்களைச் சுட்டிக்காட்டி) என்னுடைய இரு கண்களின் பார்வை பார்த்தது. அவர்கள் சொன்னதை என்னுடைய செவிப்புலன் செவியுற்றது. அதை இந்த மனம் மனனம் செய்தது என்று நான் சான்று கூறுகின்றேன் என்று அபுல் யஸார் (ரலி) கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5736) 

இந்த ஹதீஸில் வாங்கிய கடனைத் தரவில்லையே என்று இந்த நபித்தோழர் கோபப்படுகின்றார். அதன் பின் நிதானமாகி நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளை நினைத்துப் பார்க்கின்றார்கள். உச்சந்தலைக்கு மிக நேராக மிக நெருக்கமாக வரும் உதய சூரியன் மறுமை நாளில் மூளையை உருகச் செய்யும் அவ்வேளையை ஒரு கணம் தனது எண்ண ஓட்டத்தில் ஓட விட்டுப் பார்த்து, அபூயஸார் (ரலி) கடனாளியை விட்டு விடுகின்றார்.

கடன் கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள், கடன்பட்டவர் கொடுக்க முடியாவிட்டால் இது போன்று தள்ளுபடி செய்யும் மனப் பாங்குள்ளவர்களாக நமது சமுதாயத்தில் உருவாக வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் சீரும் சிறப்பும் பெறும்.

இதையெல்லாம் இங்கே கூற வேண்டிய காரணம் மறுமையை நம்பிய முஸ்லிம்கள் மறுமைக்காக கடன் கொடுப்பதில்லை. உலகத்தின் லாப நட்டக் கணக்கைப் பார்த்து, தன்னிடம் பொருளிலிருந்தும் கொடுக்க மறுத்து விடுகின்றனர். என்ன தான் நெருக்கமாக இருந்தாலும் எவ்வளவு தான் பழகியிருந்தாலும் நாம் கடன் என்று கேட்டதும் செல்வந்தர்கள் நம்மை ஏற இறங்கப் பார்க்கின்றார்கள். இவரெல்லாம் திரும்பத் தரப்போகிறாரா? என்று எத்தனையோ இழிவான எண்ணங்களைக் கடன் கேட்ட நொடிப் பொழுதில் கொண்டிருக்கின்றார் என்று அவரது பார்வை நமக்குப் புலப்படுத்திக் காட்டுகின்றது.

அந்த நேரத்தில் கடன் கேட்ட நாம் நொந்து நூலாகப் போய் விடுகின்றோம். ஏதோ பழகிய நண்பராலேயே அவர் நம் மீது கொண்டிருக்கும் பாரதூரமான பலவீன எண்ணத்தாலேயே, அவர் நம்மை ஒரு பெரும் மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விட்ட ஒரு பிரமையை உணர்கின்றோம். மறுமையின் நம்பிக்கை பிரதிபலிக்குமேயானால் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் அரவணைப்பு என்ற அருட்கொடையை எண்ணிப் பார்ப்போமானால் இதுவெல்லாம் எம்மாத்திரம் என்றாகி விடும்.

இப்படி ஒரு நிலை சமுதாயத்தில் நீடிக்குமானால் வங்கிப் பக்கம் வட்டி வாங்க எவருமே சென்றிருக்க மாட்டார்கள். எத்தனையோ சகோதரர்கள் பீடி, லாட்டரி, மது, வட்டி போன்ற தொழில்களை விட்டு வெளியே வரத் துடிக்கின்றனர். வங்கியில் வளமான இருப்பு வைத்திருக்கும் வசதிமிக்க சீமான்கள் இவர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து உலகத்தில் அனுபவிக்கும் நரக வாழ்க்கையை விட்டும் மறுமை உலக நரக வாழ்க்கையை விட்டும் பாதுகாக்க, கடன் கொடுத்துக் கை தூக்கி விட மறுக்கின்றனர்.

அப்படியே கடன் கொடுத்த பின் கடன்பட்டவர் கடனைச் செலுத்தாமல் தவிக்கும் போது அதைத் தள்ளுபடி செய்ய முன் வருவதில்லை. அத்தகையவர்கள் மன நிலையில் மேற்கண்ட ஹதீஸ்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பது இந்தக் கட்டுரையின் பலமான எதிர்பார்ப்பு.

இதை ஒவ்வொருவரும் தன்னுடைய உறவினரிடமிருந்து துவங்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தனது குடும்பத்திலிருந்து துவங்கி விட்டால் நிச்சயமாக அது சமுதாய மாற்றமாகப் பரிணமிக்கும். ஏனெனில் பல குடும்பங்களின் சங்கமம் தான் ஒரு சமுதாயம். அது தான் நாம் எதிர்பார்க்கும் சஹாபிய சமுதாயமாகும்.

அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

அழகிய கடனும் அர்ஷின் நிழலும். எம். ஷம்சுல்லுஹா