அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!- 2
தொடர் – 2
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே!
சென்ற தொடரில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வதற்கான காரணங்களில் அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்துவதன் விளக்கத்தை அறிந்தோம்.
இந்தத் தொடரில், படைத்தவனுக்கு நன்றி செலுத்துவதன் வெளிப்பாடாகவும், புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல என்பதை உணர்த்திடவும் அல்ஹம்துலில்லாஹ் கூறுவதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
நாயனுக்கு நன்றி செலுத்த அல்ஹம்துலில்லாஹ் கூறுவோம்
நாம் இக்கட்டான சூழலில் துவண்டு கிடக்கும் போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் உதவும் பொழுதோ, அல்லது ஒருவரின் உதவிக்காக அவரிடம் தேடிச் சென்ற போது அவர் நமக்கு மதிப்பளித்து, நமது கோரிக்கைக்குச் செவிசாய்த்து, நமக்காக உதவி செய்யும் பொழுதோ அவருக்கு நாம் மனமாற நன்றி தெரிவிப்போம்.
ஒரு சில உதவிகள் செய்த மனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாம், நமக்கு ஆரோக்கியத்தை வழங்கியவன், உணவளித்தவன், அருள்வளங்களை அள்ளித் தந்தவன், நேர்வழியில் நடத்துபவன், ஆபத்தான கட்டங்களில் அபயம் அளிப்பவன், நமது வாழ்வில் கவலையைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கியவனான வல்ல இறைவனுக்கு நமது நன்றியை உளப்பூர்வமாகத் தெரிவிக்க அல்ஹம்துலில்லாஹ் எனக் கூற வேண்டும்.
இறைவனைப் புகழ்ந்த இறைத்தூதர்கள்
மனித குலத்திற்கு வழிகாட்டுவதற்காக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத் தூதர்கள், தங்கள் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவனைப் புகழ்ந்துள்ளனர்.
இப்ராஹீம் (அலை)
நெடுங்காலம் குழந்தை இல்லாத நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்தற்காக இறைவனைப் புகழ்ந்தார்கள்.
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.
நூஹ் (அலை)
பாவிகளிடமிருந்து தன்னையும், தன் சமுதாய மக்களையும் காப்பாற்றியமைக்காக நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்.
நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் “அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ எனக் கூறுவீராக!
சுலைமான் (அலை) மற்றும் தாவூத் (அலை)
ஜின் இனத்தையும் பறவை இனத்தையும், காற்றையும் தனக்கு வசப்படுத்திக் கொடுத்து ஆட்சி அதிகாரங்களை வழங்கிய இறைவனை நபி சுலைமான் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்கள் புகழ்ந்தார்கள்.
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். ‘‘நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ என்று அவ்விருவரும் கூறினர்.
உஹதுக் களத்தில் உத்தமத் தூதர்
உஹதுக் களத்தில் நபிகளார் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்களது தாடை உடைக்கப்பட்டது. தலை மகுடம் உடைந்து போனது. கடும் கோபம் கொண்ட நபியவர்கள் எதிரிகளைச் சபித்தார்கள். நபியின் முகத்தில் ரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெல்வார்கள்? என ஆவேசமடைந்தார்கள். அப்போது இறைவன் நபிகளாரை அறிவுறுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தை இறக்கினான்.
(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
எதிரிகளை மன்னிக்கவோ அல்லது தண்டிக்கவோ தான், தூதருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இறை அதிகாரத்தில் தலையிட்டு, எதிரிகள் விஷயத்தில் தீர்ப்பளிக்க நபிக்கு அதிகாரமில்லை என இறைவன் அறிவுறுத்தினான்.
உஹதுக் களத்தில் முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் படுதோல்வி அடையாத நிலை இருந்தது. பேரிழப்பிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் காப்பாற்றியமைக்கு நபிகளார் இறைவனை அதிகமதிகம் புகழ்ந்தார்கள்; போற்றினார்கள். பிரார்த்தனையும் புரிந்தார்கள்.
அதைப் பின்வரும் நபிமொழியில் விரிவாக அறியலாம்.
உஹதுக் களத்தில் எதிரிகள் பின்வாங்கிச் சென்ற பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஹாபாக்களை அணிவகுத்தார்கள். என் இறைவனைப் புகழும் வரை அணியில் இருங்கள் என்றார்கள். மக்களும் நபிகளாருக்குப் பின் அணிவகுத்தார்கள்.
இறைவா!அனைத்துப் புகழும் உனக்கே உரித்தாகட்டும்.
இறைவா! நீ காத்தவனை அழிப்பவன் இல்லை. நீ அழிக்க நினைத்தவனைக் காப்பவன் யாருமில்லை. நீ வழிகேட்டில் விட்டவனை நேர்வழி காட்டுபவன் யாருமில்லை. நீ நேர்வழி காட்டியவனை வழிகெடுப்பவன் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவனில்லை. நீ கொடுக்க நினைத்ததைத் தடுப்பவன் யாருமில்லை. நீ விரட்ட நினைத்தவனை அரவணைப்பவன் யாருமில்லை. நீ அரவணைக்க நினைத்தவனை விரட்டுபவன் யாருமில்லை.
இறைவா! உனது அபிவிருத்தியையும் அருளையும் அன்பையும் உணவையும் எங்களுக்கு விசாலமாக்குவாயாக! இறைவா! அகலாத, விலகாத, நிலையான அருளை உன்னிடம் வேண்டுகிறேன்.
இறைவா! ஏழ்மை நாளில் உனது அருளை வேண்டுகிறேன். அச்சமுடைய நாளில் பாதுகாப்பைக் கேட்கிறேன்.
இறைவா! நீ எங்களுக்கு வழங்கியவற்றின் தீங்கிலிருந்தும் நீ எங்களுக்குத் தடுத்தவற்றின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
இறைவா! இறை நம்பிக்கையை எங்களுக்கு விருப்பமுள்ளதாகவும் எங்கள் உள்ளங்களுக்கு அழகானதாகவும் ஆக்கி வை. இறைமறுப்பு, பாவம், வரம்புமீறுதல் போன்ற காரியங்களை எங்களுக்கு வெறுப்பானதாக ஆக்கி வை. எங்களை நேர்வழிபெற்றோரில் சேர்த்து விடுவாயாக!
இறைவா! எங்களை முஸ்லிம்களாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்களை நல்லடியார்களுடன் இணைத்திடுவாயாக! அவர்கள் இழிவானவர்களோ, குழப்பவாதிகளோ இல்லை.
இறைவா! உன்னைப் மறுத்து உன் பாதையை விட்டுத் தடுக்கும் நிராகரிப்பாளர்களை அழித்துவிடு! அவர்கள் மீது உனது கோபத்தையும் அழிவையும் இறக்குவாயாக!
உண்மையான இறைவனே! மறுப்பாளர்களான வேதக்காரர்களை அழிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: ரிபாஆ (ரலி),
நூல்: (அஹ்மத்: 15492) (14945)
புகழுக்குரியவன் அவனே! நாம் அல்ல!
அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அதில் கடுகளவும் நமக்குப் பங்கில்லை என்ற உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அல்ஹம்துலில்லாஹ் கூற வேண்டும்.
நாம் ஏதாவது ஒரு பயனுள்ள காரியத்தைச் செய்து அதில் மிகப்பெரிய வெற்றி கண்டால் அதற்காகத் தலைதெறிக்க ஆடக்கூடாது. நமது வெற்றிக்கு முழுக் காரணம் அல்லாஹ்வே என்பதை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்து இறைவனைப் புகழ்ந்தால், ‘தான்’ என்ற அகம்பாவத்திலிருந்தும், பெருமை என்ற கொடிய நோயிலிருந்தும் விடுபடலாம்.
பணிவை வெளிப்படுத்திய பெருமகனார்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!’’ என்றார்கள்.
உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் எனும்- நபி (ஸல்) அவர்களின் — கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.
நூல்: (புகாரி: 1356)
தன் வீட்டில் பணிபுரிந்தவரிடம் சத்திய இஸ்லாத்தை எடுத்துரைத்ததன் விளைவாக அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் அதற்கான முழுக் காரணமும் தனது முயற்சியைவிட அல்லாஹ்வின் நாட்டத்தாலேயே நடந்தது. எனவேதான், புகழுக்குரியவன் அல்லாஹ் என்று கூறி நபிகளார் தனது பணிவை வெளிப்படுத்தினார்கள்.
இறைவனுக்குப் பிடித்த இரு பண்புகள்
நபியவர்கள் அஷஜ் (ரலி) அவர்களிடம், ‘‘அஷஜ்ஜே உன்னிடம் இரு பண்புகள் உள்ளன. அவற்றை அல்லாஹ் விரும்புகிறான். அவ்விரு பண்புகள் சகிப்புத்தன்மை மற்றும் வெட்கவுணர்வு ஆகும்’’ என்றார்கள்.
உடனே அஷஜ் (ரலி), ‘‘அல்லாஹ்வுக்குப் பிடித்தமான இருபண்புகளை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உண்டாவதாக’’ என்றார்.
நூல்: (அஹ்மத்: 17828) (17160)
இறைவனுக்குப் பிடித்த இரு பண்புகள் தன்னிடம் இருந்தமைக்குப் பெருமை கொள்ளாத அஷஜ் (ரலி) அவர்கள், அவற்றை வழங்கிய அல்லாஹ்வைப் புகழ்ந்து தனது பணிவை வெளிப்படுத்தினார்கள்.
நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, வெற்றி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றுக்காக ‘என்னால் தான் இதுவெல்லாம் சாதிக்க முடிந்தது’ என்று மமதை கொள்ளாமல் ‘என் இறைவனின் நாட்டப்படியே நடந்தது. அவனையே நான் புகழ்கிறேன்’ என பணிவை வெளிப்படுத்துவோம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வைப் புகழ்வது விரும்பத் தகுந்த காரியமாக இருந்தாலும் சில முக்கிய சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வைப் புகழ்வது நபிகளாரால் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தும்மல் வரும் போது…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 6224)
சாப்பிட்ட பின்னர்..
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா’’ என்று பிரார்த்திப்பார்கள்.
பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி),
நூல்: (புகாரி: 5458)
தூங்கி எழுந்த உடன் ….
நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, “பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’’ ‘(இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்’ என்று கூறுவார்கள்.
(உறக்கத்திலிருந்து) எழும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’’
‘‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது’’ என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி),
நூல்: (புகாரி: 6312)
ஹஜ், உம்ராவின் போது…
லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லாஷரீக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க, வல்முல்க்க லாஷரீக்க லக்
(இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன். புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமில்லை).
இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: (புகாரி: 1549)
தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பின்…..
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து.
இதன் பொருள்:
இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
நூல்: (புகாரி: 795) , 7346
அல்லது
ரப்பனா வல(க்)கல் ஹம்து.
இதன் பொருள்:
எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
நூல்: (புகாரி: 689) , 732, 734, 735, 738, 803, 804, 805, 1046, 1066, 1114, 4559
கடமையான தொழுகை முடிந்த பின்…
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.
நூல் : (புகாரி: 844) , 6330
அல்ஹம்துலில்லாஹ் கூறுவதால் நமக்குக் கிடைக்கவிருக்கும் இம்மை, மறுமைப் பலன்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.