அல்லாஹ்வை நினைப்பது
இவ்வுலகில் நாம் பிறந்ததன் நோக்கமே வல்லோனாகிய வல்ல அல்லாஹ்வை நினைத்து துதிப்பதற்காகவே! மாறாக, அதை மட்டும் விட்டுவிட்டு இவ்வுலகை வாழ்க்கையை விரும்பக்கூடியவர்களாக நாம் இருக்கின்றோம். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி பின் வரும் செய்திகளில் பார்ப்போம்.
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை)அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
மக்களை அதிகம் சொர்க்கத்திற்கு நுழையச் செய்கின்ற காரியம் எது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இறையச்சமும், நற்குணமுமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (திர்மிதீ: 2004) (1927)
பயணம் புறப்படவிருந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே எனக்கு உபதேசியுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இறையச்சத்தையும், (மேடான பகுதியில் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதையும்) பற்றிப் பிடித்துக்கொள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (திர்மிதீ: 3445) (3367)
இறையச்சம் தவறுகளிலிருந்து காக்கும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தை கூறலாம்.
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒரு யூதனின் மகள் என்று ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய செய்தி ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்குக் கிடைத்த போது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் வந்த போது அவர்கள் அழுது கொண்டு இருந்ததை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் ஒரு யூதனின் மகள் என்று ஹஃப்ஸா என்னைப் பற்றி பேசியுள்ளர் என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நீ யூதனின் மகள் இல்லை). நபியின் (பரம்பரையில் வந்த) மகள். உனது சிறிய தந்தையும் நபியாவார். நபியின் பொறுப்பில் நீ இருக்கிறாய். இவ்வாறிருக்க நாங்கள் உன்னிடத்தில் எப்படி பெருமையடித்துக் கொள்ள முடியும்? என்று கேட்டார்கள். பிறகு ஹஃப்ஸா (ரலி) அவர்களைப் பார்த்து ஹஃப்ஸாவே அல்லாஹ்வை அஞ்சிக்கொள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (திர்மிதீ: 3894) (3829)
மறுமையில் நரகவாசிகளில் அதிகமானோர் விபச்சார குற்றத்திற்காக நரகத்தில் புகுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மக்களை அதிகமாக நரகத்தில் எது தள்ளுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் வாயும், மர்மஸ்தானமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (திர்மிதீ: 2004) (1927)
இறையச்சம் நம்மிடத்தில் இருந்தால் எந்த ஆசையாலும் நம்மை வழிகெடுக்க இயலாது. இதற்கு சிறந்த உதாரணமாக யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றை கூறலாம். நாட்டை ஆளும் மன்னனின் மனைவி யூசுப் (அலை) அவர்களை விபச்சாரத்திற்கு அழைத்த போது யூசுப் (அலை) இணங்க மறுத்துவிட்டார்கள்.
சிறைச்சாலைக்குப் போனாலும் பறவாயில்லை. ஒருபோதும் விபச்சாரத்தில் வீழ்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது அல்லாஹ்வின் நினைப்பும் பயமும் தான். இதை பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து ‘வா!’ என்றாள். அதற்கவர் ”அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்” எனக் கூறினார்.
யூசுஃப் (அலை) அவர்கள் மட்டுமின்றி சாதாரண மனிதர்களையும் இறையச்சம் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் பாதுகாத்திருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றனர்.
அவர்களில் ஒருவர், இறைவா! என் தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தராதவரை தன்னை அடைய முடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன்.
அவளது இரு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய (மணபந்த) உரிமையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீஅறிந்தால் இதை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாக பாறை விலகியது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : (புகாரி: 2215)
”இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!” எனும் (அல்குர்ஆன்: 49:2) ஆவது வசனம் அருளப்பெற்ற பின் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்து விட்டார்கள். ‘நான் நரகவாசிகளில் ஒருவன்’ என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வராமல் (வீட்டிலேயே) அடைந்து கிடந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (ஸாபித் குறித்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம், ”அபூஅம்ர்! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ”அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள் ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.
அப்போது ஸாபித் (ரலி) அவர்கள், ”இந்த (அல்குர்ஆன்: 49:2) ஆவது வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான், நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார்கள். இதை சஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 4846)
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
ஸாபித் (ரலி) சப்தமிட்டு பேசும் வழக்கம் உடையவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இது போன்று சப்தமிட்டு பேசக்கூடாது என்ற உத்தரவை இவர் குறித்து அல்லாஹ் இறக்கவில்லை. மாறாக அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக சச்சரவில் ஈடுபட்டதால் இவ்விருவர் விஷயத்தில் இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(ஒரு முறை) நல்லவர்களான அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு) பனூதமீம் தூதுக் குழுவினர், நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்கர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல்ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்;
மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ”எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள் ”தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது தான், ”இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்” எனும் (அல்குர்ஆன்: 49:2) ஆவது வசனம் முழுமையாக அருளப்பெற்றது.
அறிவப்பவர் : இப்னு ஸுபைர் (ரலி)
நூல்: (புகாரி: 7302)
அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)
நூல்: (புகாரி: 52)
அல்லாஹ்வை நினைப்பதினால் வெற்றி பெறுவீர்கள் என்கிற வசனம் மூலம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ்வை அதிகமாக நினை கூறல் வேண்டும். இறையச்சம் என்பது வெறும் சொல்லளவில் இல்லாமல் நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் இறைவனை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்ச வேண்டும். அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!