அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி இறைத்தூதராக நம் நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்கும் அறிய வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் நற்குணங்களைத் தன் திருமறையிலும் நமக்கு அறிவித்து கொடுத்துள்ளான்.

நபித்துவம் கிடைப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி நபி (ஸல்) அவர்கள் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்ததோடு, நமக்கு இறைவன் கூறுவது போல் முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள்.

அல்குர்ஆன் கூறுகிறது:

அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் நம்பிக்கை கொண்டவர்களே! அழகிய முன்மாதிரி என்று இறைவனே சொல்லக்கூடிய அளவிற்கு நம் நபி (ஸல்) அவர்கள் இருக்க நம்மில் சிலர் தனக்கு முன்மாதிரி என்று சில நடிகர், நடிகைகளையும் வேறு சிலரையும் கூறிக்கொண்டு நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அல்லாஹ் அதிலிருந்து நம்மை காப்பானாக)

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ

நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்.

(அல்குர்ஆன்: 68:4)

அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களை திருமறையில் புகழ்ந்து கூறுகின்ற அளவிற்கு பல அழகிய நற்குணங்கள் நிறைந்த நம் நபி (ஸல்) அவர்களே உலகத்திற்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்று உணர்ந்து அவர்களின் நற்குணங்களை தம் வாழ்வில் செயல்படுத்திட வேண்டும்.

பொறுமையும், மென்மையும்

தலைவராக இருக்கும் அனைவருக்கும் பொறுமையும், மென்மையும் அவசியம். அப்போதுதான் தன்னைவிட கீழிருக்கும் மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களின் செயல்கள் சில சமயங்களில் கோபத்தை ஏற்படுத்தும்படி இருக்கும்போது அவர்களிடம் மென்மையாக நடந்துக் கொண்டு பொறுமைகாத்து அவர்களுக்கு நல்வழிக் காட்டிடவும் முடியும்.

அத்தகைய பெரும் நற்குணங்களை நபிகளார் பெற்றிருந்ததால்தான் மிகவும் மோசமான செயல்பாடுகளைக் கொண்ட அரபு மக்களிடம் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு மென்மையோடும், பொறுமையோடும் அவர்கள் எவ்வித துன்பங்களை நபி (ஸல்) அவர்களுக்கு தந்திருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாது நடந்து கொண்டதால்தான் அம்மக்களை நபிகளார் அவர்களால் அரவணைத்துச் செல்ல முடிந்தது, என வல்ல ரஹ்மானே கூறுகிறான்.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!.

(அல்குர்ஆன்: 3:159)

இத்தகைய முன்மாதிரி, நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கும்போது நாம் ஏன் பிறரைப் பின்பற்றி பாவத்தில் மூழ்கக்கூடிய காரியங்களை செய்ய வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள், மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு நபி (ஸல்) அவர்களையே கொல்ல முயன்றவர்களிடமே நபி (ஸல்) அவர்கள் பொறுமைக்காத்து மென்மையுடன் நடந்துள்ளார்கள் எனில் சிறுசிறு விஷயத்துக்குகூட நாம் ஏன் பொறுமை இழந்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பகைக் கொள்கிறோம்.

இதனால் நமக்கு என்ன பயன் கிடைத்துள்ளது. அல்லது இனி என்ன கிடைக்கபோகிறது என்று ஆராய்ந்தால் ஒன்றுமேயில்லை, நாம் நன்மையை தவற விடுகிறோமே தவிர இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதால் நமக்கு பலன் ஏதுமில்லை என உணர்ந்து இனியேனும் அவர்களிடமும் ஒற்றுமையுடன் பழகுவோம். அல்லாஹ் திருமறையில் கூறும் போது.

நன்மையை ஏவி தீமையை தடுப்பீராக! பகைமை உடையவர்க்கும் நன்மையைச்செய் பகைவர்களும் நன்பர்களாகிவிடுவர்.

எனவே இதை நினைவில் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போல் நமக்கு ஏற்படவில்லை அல்ஹம்துலில்லாஹ். அதனால் பல ஆண்டுகள் பல தலைமுறைகளென உறவை, நட்பை முறித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் சகோதரர்கள் இனியேனும் அதனை மறந்து நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியென ஏற்று பகைமை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

குர்ஆனே அவர்கள் குணம்

 قَالَتْ: «فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ الْقُرْآنَ»

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் குணம் எப்படியிருந்தது எனக்கேட்டபோது நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது எனக் கூறினார்கள்.

(முஸ்லிம்: 1357)

பார்த்தீர்களா! நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் எந்த குணங்கள் இருக்க வேண்டுமென கட்டளையிட்டதோ அதுவாகவே வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் நாமோ குர்ஆன் என்ற மிகப்பெரும் அற்புதத்தை நம் கைகளில் பெற்றிருந்தும் அதனை சரியாகப் பயன்படுத்தாது ரமலான் மாதத்திலும், வெள்ளிக் கிழமைகளிலும், இறந்த வீடுகளிலும் இன்னும் பிற குறிப்பிட்ட நாட்களிலும் தான் அதனை ஓதவேண்டும் என்று சில மூடநம்பிக்கைகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு பெரும்பெரும் நன்மைகளை இழந்து வருகிறோம்.

ஆனால் விஞ்ஞானிகளும், பிற உலக அறிஞர்களும் இதனைக் கண்டு வியந்து பிறருக்கும் அதை வெளிப்படுத்தி பலரும் இதை ஆராயத்தக்க வகையிலும் செயல்படுத்தத்தக்க வகையிலும் வியந்து போற்றுகின்றனர். மேலும் இஸ்லாத்தை ஏற்கவும் இந்த அருள்மறையாம் திருமறை அமைந்துள்ளது. (அல்லஹம்துலில்லாஹ்)

இப்படியிருக்க நாம் ஏன் இதை சிந்திக்கவில்லை. குர்ஆன் தன்னை ஓதியவருக்கு மறுமையில் பரிந்துரை செய்யும். வேறெவரும் நமக்கு உதவிட முடியாது. அல்லாஹ் நாடினால் தவிர. எனவே நாம் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது என்பது பெயரளவிலின்றி செயலிலும் இருக்க குர்ஆனை நாம் சிந்தித்து ஓதுவதோடு நில்லாமல் நபி (ஸல்) அவர்களை போன்று அதிலுள்ளவற்றை நம் வாழ்விலும் செயல்படுத்த வேண்டும்.

ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார்.​ உடனே தன் பேரரை நோக்கி,​​ “”சீ!​ சீ!​ அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு,​​ “”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டு பொதுச் சொத்தை தம் குடும்பத்தினர் சாப்பிடுவதைத் தடை செய்தார் அண்ணலார் அவர்கள்.

ஆகவே இறைத்தூதரின் வழி நடந்து இம்மை,​​ மறுமை வெற்றிகளைப் பெறுவோமாக!