அல்லாஹ்வின் தூதரே  அழகிய ஆசிரியர்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனித சமுதாயம் பின்பற்றுவதற்கு ஏற்ற மார்க்கம், இஸ்லாம் மட்டுமே! மனிதனை சக்திக்கு மீறிய சோதிக்கிற எந்தவொரு சட்டத்தையும் இதில் பார்க்கவே முடியாது. இந்த மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் புரிந்து கொள்ளவும் நடைமுறைப் படுத்தவும் மிகவும் எளிதானது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ

‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 39) 

பாடமும் எளிதானது; ஆசிரியரும் சிறப்பாகப் போதிப்பவர். இந்தப் பாக்கியம் எல்லா மாணவர்களுக்கும் கிடைத்து விடாது. ஆனால், நாம் பெற்றிருக்கிறோம். இஸ்லாம் எளிதாக இருப்பது போன்று, அதன் வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எளிதாக எடுத்துச் சொல்லும் தன்மையைப் பெற்றிருந்தார்கள். மார்க்கத்தை எளிமையாக புரியவைத்தார்கள். அவ்வாறு அவர்களின் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..

எளிதாக்கிச் சொல்லிய  ஆசிரியர்
 إِنَّ اللهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا، وَلَا مُتَعَنِّتًا، وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا

…அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 2946) 

மார்க்கம் சொல்வதற்கு வந்திருப்பதாகக் கூறாமால், அதை எளிமையாக சொல்வதற்கு வந்திருப்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். இங்கு தமது கற்பிக்கும் தன்மையையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கேற்ப, குறைவான சொற்களில் நிறைவான பொருள் கொள்ளும் வகையில் பேசும் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தந்திருந்தான்.

أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ فَوُضِعَتْ فِي يَدِي

நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் (ஜவாமிஉல் கலிம்) வழங்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என்று  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 7013) 

இரத்தின சுருக்கமாக போதித்த ஆசிரியர்

நீண்ட நெடிய கருத்துக்களை ஓரிரு வார்த்தைகளில் விளக்கும் திறமை நபிகளாருக்கு இருந்தது. பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய விசயங்களைக் கூட இரத்தின சுருக்கமாக தெளிவுபடுத்தி விடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கற்றுத் தருவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ رَجُلٌ غَرِيبٌ، جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ، لَا يَدْرِي مَا دِينُهُ، قَالَ: فَأَقْبَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَيَّ، فَأُتِيَ بِكُرْسِيٍّ، حَسِبْتُ قَوَائِمَهُ حَدِيدًا، قَالَ: فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللهُ، ثُمَّ أَتَى خُطْبَتَهُ، فَأَتَمَّ آخِرَهَا

நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். நான் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வெளியூர்காரர் தமது மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளார். அவர் தமது மார்க்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார்” என்று (என்னைப் பற்றிச்) சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை நிறுத்திவிட்டு, என்னை நோக்கி வந்துசேர்ந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது.

அதன் கால்கள் இரும்பினால் ஆனவை என்று நான் எண்ணுகிறேன்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நாற்காலியில் அமர்ந்து, அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து சிலவற்றை எனக்குப் போதிக்கலானார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது உரையை முழுமையாக்கினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் அசத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1590) 

அதிகமாக அறிந்திருக்கிறோம் என்பதை விடவும் அடிப்படையான விசயங்களை முதலில் அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு அறிய வந்தவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். கற்றுக் கொள்ள நாடுவோருக்கு தகுந்த ஏற்பாட்டினை வாய்ப்பை தருவது நபியின் வழக்கம். இதற்கு பின்வரும் சம்பவமும் சான்றாக உள்ளது.

قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ

‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி)
நூல்: (புகாரி: 101) 

கல்விப் பணியில் இருப்போர் கற்றுத் தருவதில் ஆர்வம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவரது அறிவாற்றல் மூலம் அடுத்தவர்களுக்கு பயன் கிட்டும். இல்லாவிட்டால், கொத்துக் கொத்தாக பூத்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றுதான் அவரது நிலை இருக்கும்.

தலைச்சிறந்த முன்மாதிரி

சுற்றியிருக்கும் மக்களுக்கு சத்தியத்தை சொல்ல வேண்டுமெனும் ஆர்வம் நபியிடம் மோலோங்கி இருந்தது. சுருக்கமாக கூறின், எல்லா விதத்திலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைச்சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக்கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை.

(மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்“ என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 935) 

“அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை” என்று நபித்தோழர் கூறுகிறார். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதருடைய அணுகுமுறை எந்தளவுக்கு நன்றாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதை செவியேற்பவர், யர்ஹமுகல்லாஹ் என்று பதில் சொல்ல வேண்டும். தொழுகை என்பது இறைவனிடம் உரையாடுவதற்கு நிகரானது என்பதால் அதில் இருக்கும் நிலையில் தும்மியருக்கு பதில் சொல்லக் கூடாது.

இது தெரியாமல் தொழுகையில் பதில் கூறியவருக்கு நபியவர்கள் நல்ல முறையில் தவறைச் சுட்டிக் காட்டுகிறார்கள்; தொழுகையின் நோக்கத்தையும் விளக்குகிறார்கள். இவ்வாறு, கேட்பவரின் நிலைக்கேற்ப கற்றுத்தரும் பண்பாளராக நபிகளார் இருந்தார்கள்.

أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ
كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

 அறிவிப்பவர்: உமர் இப்னு அபீஸலமா (ரலி)
நூல்: (புகாரி: 5376) 

பெரும்பாலான பெரியவர்கள் சிறுவர்களுக்கு ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தருவதில்லை. வளர்ந்து ஆளானதும் அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள் எனக் கருதிவிட்டு அடிப்படைச் செய்திகளைக் கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். சிலரோ போதிக்கும் பெயரில் அதிக கண்டிப்பைக் காட்டுகிறார்கள். கண்டிப்பே கூடாதென நாம் வாதிடவில்லை. கற்கும் ஈடுபாட்டைக் கெடுக்காத வகையில் அது எல்லைக்குள் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பாருங்கள். கண்டிப்பை கட்டுக்குள் வைத்துவிட்டு குழந்தையின் மனதில் ஆழப்பதியும் வகையில் பக்குவமாக சொல்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வகையில்தான் அண்ணலாரின் அணுகுமுறை இருந்தது.

நிறுத்தி நிதானமாக கற்பித்த ஆசிரியர்
عَنْ أَبِي هُرَيْرَةَ ،
 أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يُصَلِّي، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَجَاءَ فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ لَهُ : “
ارْجِعْ فَصَلِّ ؛ فَإِنَّكَ لَمْ تُصَلِّ “. فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ سَلَّمَ، فَقَالَ : ” وَعَلَيْكَ، ارْجِعْ فَصَلِّ ؛ فَإِنَّكَ لَمْ تُصَلِّ “. قَالَ فِي الثَّالِثَةِ : فَأَعْلِمْنِي. قَالَ : ” إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ، فَكَبِّرْ وَاقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ وَتَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا

ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் ‘திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! என பதில் சலாம் கூறிவிட்டு) ‘திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது) மூன்றாவது முறையில் அந்த மனிதர், ‘அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

‘நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக!

பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6667) 

தொழுகை முக்கியமான முதல் கடமை. இப்படியிருக்க அது பற்றி தெரியாமல் இருக்கிறீர்களே என்று நபியவர்கள் கோபம் கொள்ளவில்லை. அவர் சரியாக தொழாததிற்கு காரணம் அறியாமையா அல்லது அலட்சியமா என்பதை மீண்டும் மீண்டும் தொழச்சொல்வது மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, தொழுகை பற்றிய செயல்முறையை நிறுத்தி நிதானமாக கற்பிக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
« إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ، ثُمَّ قُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ، فَأَنْتَ عَلَى الفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ » قَالَ: فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا بَلَغْتُ: اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، قُلْتُ: وَرَسُولِكَ، قَالَ: «لاَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ»

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன்.

உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்’ என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்‘ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்’.

அறிவிப்பவர்: பராவு இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: (புகாரி: 247) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியமான பிரார்த்தனையைக் கற்றுத் தருகிறார்கள். மனனம் செய்தவர் ஒப்புவிக்கும் போது ஒரு வார்த்தையை மாற்றி விடுகிறார். அப்போது அவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை. இதிலும் நமக்கு தக்கப் பாடம்  உள்ளது.

ஒரு முறையிலேயே ஒரேயடியாக கற்றுக் கொள்ள வேண்டுமென எவரையும் எதிர்பார்ப்பது கூடாது. கற்பவரிடம் பிழை நிகழும் போது சகட்டு மேனிக்கு திட்டாமல் திருத்திக் கொடுக்க வேண்டும். அது குறித்து ஏதேனும் கேள்வி கேட்டால் தெளிவுபடுத்த வேண்டும். இப்படித்தான் நபியவர்கள் இருந்தார்கள்.

عَنْ عَائِشَةَ
أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنَ المَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ، قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ، فَتَطَهَّرِي بِهَا» قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ؟ قَالَ: «تَطَهَّرِي بِهَا»، قَالَتْ: كَيْفَ؟، قَالَ: «سُبْحَانَ اللَّهِ، تَطَهَّرِي» فَاجْتَبَذْتُهَا إِلَيَّ، فَقُلْتُ: تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து நீங்கிக்கொள்ள தாம் எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குஜக்கும் முறையைக் கூறினார்கள். கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக்கொள்!’’ என்று பதிலளித்தார்கள்.

அந்தப் பெண்மணி, “அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்!’’ என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் “எப்படி(த் தூய்மைப்படுத்த வேண்டும்)?’’ என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்டவாறு) சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்கொள்!’’ என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக!’’ என்று கூறினேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 314) 

மேற்கண்ட சம்பவத்தை கொஞ்சம் கவனியுங்கள். ஒரு பெண் மாதவிடாய் குறித்து கேட்பதால் முடிந்தளவு மூடலாக சொல்கிறார்கள். பெண்களுக்கு ஆண்கள் பாடம் கற்றுத் தரும் போது பேச்சிலே, விளக்கத்திலே கூட வரம்பு மீறிவிடக் கூடாது எனும் பாடம் இச்சம்பவத்திலே பொதிந்துள்ளது.

எதைச் சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எவருக்குச் சொல்கிறோம் என்பதையும்  நபிகளார் கவனிக்கிறார்கள். எவராயினும் தகுந்த மனநிலை, வாழ்க்கை சூழல் இல்லாத போது அவரால் படிப்போடு ஒன்றிப் போக முடியாது. ஆகவே, கற்பவரின் நிலைக்கேற்ப கற்பித்தலை கையாள்வது அவசியம்.

சலிப்புக்கு இடம் அளிக்காத சிறந்த ஆசிரியர்
أَتَيْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا  كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»

சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்‘ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.

அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி)
நூல்: (புகாரி: 631) 

கல்வியைத் தேடி ஆர்வத்தோடு வந்திருந்தாலும் குடும்பத்தாரிடம் செல்ல நாடிய பிறகு, படிப்பிலே கவனம் நிலைக்காது. ஊர் திரும்ப முடியவில்லை எனும் ஏக்கம் கற்பதின் மீது வெறுப்பை விதைத்து விடக்கூடாது.

எனவே அவர்களுக்கு முக்கியமான தகவல்களைச் சொல்லிக் கொடுத்து நபியவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். இப்படி, கற்பவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து, சலிப்புக்கு இடம் அளிக்காத வண்ணம் போதிக்கும் தன்மையை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الْأَيَّامِ؛ كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا

எங்களுக்கு சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சி பல்வேறு நாட்களிலும் (எங்கள் சூழ்நிலையை) கவனித்து நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: (புகாரி: 68) 

நயமாக விளக்கிய ஆசிரியர்

உலக விசயம், மார்க்க விசயம் இந்த இரண்டில் எதைப் போதிப்பவராக இருந்தாலும் அதற்கேற்ப தமது அணுகு முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிடத்தக்க திறமையாகும். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார்கள்.

بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. إِذْ جَاءَ أَعْرَابِيٌّ فَقَامَ يَبُولُ فِي الْمَسْجِدِ، فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَهْ مَهْ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُزْرِمُوهُ دَعُوهُ» فَتَرَكُوهُ حَتَّى بَالَ، ثُمَّ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَاهُ فَقَالَ لَهُ: «إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ» أَوْ كَمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَأَمَرَ رَجُلًا مِنَ الْقَوْمِ فَجَاءَ بِدَلْوٍ مِنْ مَاءٍ فَشَنَّهُ عَلَيْهِ

ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசி ஒருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 480) 

கிராமவாசியை அதட்டும் நபித்தோழர்களை நபியவர்கள் தடுக்கிறார்கள்; அமைதிப் படுத்துகிறார்கள். பள்ளிவாசல் என அறியாமல் அவசர கதியில் சிறுநீர் கழித்து விட்டவரை இடைமறிக்க வேண்டாமென கூறுகிறார்கள். அதன் பிறகு அவரை அழைத்து பள்ளிவாசல் குறித்து நயமாக விளக்குகிறார்கள்.

இதே செய்தி இன்னொரு இடத்தில் வேறு வாக்கியங்களுடன் இடம் பெற்றுள்ளது. அதில், கற்றுத் தரும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்கை நபியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ
قَامَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي المَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهُ وَهَرِيقُوا عَلَى بَوْلِهِ سَجْلًا مِنْ مَاءٍ، أَوْ ذَنُوبًا مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»

‘ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 220) 

தலைச்சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர்

அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு நளினமாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவ்வாறுதான் முஃமின்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளது எனவும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல எப்படிச் சொல்கிறோம் என்பதையும் மனதில் கொள்வது முக்கியம். ஆகையால், அழைப்புப் பணிக்கு தமது தோழர்களை அனுப்பும் போது பின்வருமாறு கூறினார்கள்.

سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ
بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَدَّهُ أَبَا مُوسَى وَمُعَاذًا إِلَى اليَمَنِ، فَقَالَ: «يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا وَتَطَاوَعَا»…

நபி (ஸல்) அவர்கள் என்னையும், முஆத்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)’ என்று (அறிவுரை) கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: (புகாரி: 4344) , 4345

கல்வியைத் தேடும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கற்பித்தல் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அதை விட்டும் விரண்டோடச் செய்துவிடக் கூடாது. இந்த அடிப்படையில் தான் நபிகளாரின் கல்வி போதனைகளும் நடைமுறைகளும் இருந்தன.

ஆகவே, நமக்கு குர்ஆன் ஹதீஸ் விளங்காது என்று உளறுவோரை அலட்சியம் செய்துவிடுங்கள். உரிய அக்கறையோடும் வழிமுறையோடும் கற்க முனைந்தால் மற்றதை விடவும் மார்க்கம் இலகுவாக புரிந்துவிடும்.

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. நவீன காலத்தில் கல்வி உளவியல் எனும் துறையில் கல்வி அறிஞர்கள் நிறைய ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள். அவற்றுக்கான அழகிய பாடம் நபிகளாரின் வாழ்வில் காண முடிகிறது.

இத்தகைய தூதரின் தலைச்சிறந்த வழிகாட்டுதலை உதறிவிட்டு, மற்றவர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள் இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழகிய முறையில் பின்பற்றி ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.