அல்லாஹ்வின் சட்டம் – நிலை நாட்டப்பட்ட நீதி
ரிசானா – நிலை நாட்டப்பட்ட நீதி
ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண் ரிசானா….
பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும், இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று திட்டமிட்டு பரப்பி வரும் ஊடகங்களும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தைக் களங்கப்படுத்தப் போராடி வருவதால் அவர்களுக்குப் பதிலளிப்பதற்காக இந்தக் கட்டுரை.
குற்றவாளி இலங்கைப் பெண் என்பதால் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்கராகவோ, ஐரோப்பியராகவோ இருந்தால் ராயல் பர்டன் எனப்படும் ராஜ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது.
அரசு சார்ந்த குற்றங்களுக்குத் தான் ராஜமன்னிப்பு பொருந்தும். தனிநபர் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காத வரை சவூதி மன்னரால் எதுவும் செய்ய முடியாது.
ஒரு மலையாளியைக் கொலை செய்த குற்றத்திற்காக 3 சவூதி இளைஞா்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. காரணம், அந்த மலையாளியின் வாரிசுதாரர்கள் மன்னிக்கவில்லை என்பதால்..
15 ஜுலை 1977 ஆம் ஆண்டு இளவரசி மிஸ்ஸால் பிந்த் ஃபஹத் பின் முஹம்மத் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத், படிக்கச் சென்ற இடத்தில் லெபனானில் நடந்த விபச்சார குற்றத்திற்க்காக ஜித்தாவில் வைத்து அவருடைய 19 வது வயதில் தலை வெட்டப்பட்டார்.
அதே போன்று 25 மார்ச் 1975ல் மன்னர் ஃபைஸல் பின் அப்துல் அஜீஸ் ஆலே சௌத் அவர்களை சுட்ட கொன்ற மன்னருடைய தம்பி மகன் இளவரசர் ஃபைஸல் பின் முஸைத் ரியாத் சதுக்கத்தில் பொது மக்கள் முன்னால் 18 ஜூன் 1975 தலை வெட்டப்பட்டார்.
ஆக, சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமே. இங்கு நாடு, மொழி, மதம் எதுவும் பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மட்டுமே பார்க்கப்படுகின்றது.
ஒரு முன்னாள் பிரதமரையும் காவல்துறை உயர் அதிகாரியையும் இன்னும் 15 பேரையும் கொன்றவர்களை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரின் மனநிலையிலிருந்து பாராமல் ஜனாதிபதி மன்னித்தால் விடுதலை என்று கூறும் இந்தியத் திருநாட்டின் சட்டம் சவூதியில் இல்லை தான்.
டெல்லி பெண்ணைக் கற்பழித்துக் குடலை உருவிக் கொன்ற கயவர்களை பிரணாப் முகர்ஜி நினைத்தால் மன்னித்து விடலாம் என்று கூறும் இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.
படித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஏழை வாட்ச்மேனின் மகள் வினோதினியின் முகத்தை அமிலம் ஊற்றிச் சிதைத்து, கண்களைப் பறித்து, அவளை நிர்மூலமாக்கிய காமுகனையும் அரசாங்கம் நினைத்தால் மன்னித்து விடலாம் என்ற இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.
பாதிக்கப்பட்டவன் மன்னித்தால் தவிர வேறு யாரும் – அவர் மன்னராக இருந்தாலும் அதில் தலையிட முடியாது என்று சொல்லும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தான் சவூதியில் இருக்கின்றது.
இதுபோன்ற சர்வதேச விமர்சனங்களுக்கு அஞ்சியே 30 லட்சம் ரியால்கள் (கிட்டத்தட்ட 5 கோடி இந்திய ரூபாய்) தருகிறேன், மன்னித்து விடுங்கள் என்று சவூதி அரசாங்கம் கெஞ்சியும் அந்தப் பெற்றோர் மன்னிக்கவில்லை என்றால் அவர்கள் அடைந்த பாதிப்பின் தன்மை நமக்குத் தெரியவில்லையா?
ராஜ மன்னிப்பு இந்த விஷயத்தில் உண்டு என்றால் இப்படி நஷ்ட ஈடு தருகிறோம் என்று கெஞ்சுவதற்குப் பதில் அதைச் செய்திருக்குமே! இதைச் சிந்திக்க வேண்டாமா?
கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர், குற்றவாளியை மன்னித்திருக்கலாம். ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் மன்னிக்காமல் விட்டதற்காக அவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது. சட்டம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையைத் தான் இங்கு நாம் பார்க்க வேண்டும்.
சர்வதேச நிர்ப்பந்தத்திற்கோ, விமர்சனங்களுக்கோ பயந்து இந்தத் தண்டனையை நிறைவேற்றாமல் இருந்தால் தான் அது அநீதி. இந்த விஷயத்தில் சவூதி அரசாங்கம் நீதியை நிலைநாட்டியுள்ளது.
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தவறு செய்யவில்லை என்று ரிசானா எழுதியதாக ஒரு கடிதத்தைக் காட்டுகிறார்கள். ரிசானா நிரபராதி என்பதற்கு இந்த அறிவுஜீவிகள் சமர்ப்பிக்கும் மிகப் பெரிய ஆதாரம் இது தான்.
குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை மறுப்பது மட்டுமே அவர் நிரபராதி என்பதற்கு ஆதாரமாகி விடுமா? உலகின் எந்த நாட்டிலாவது குற்றவாளியின் மறுப்பு சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா? கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள், இன்னொருவனுக்கு மரண தண்டனை விதித்தார்கள். அந்தக் குற்றவாளிகள், “சாமி சத்தியமாக நாங்கள் கொல்லவில்லை” என்று சொல்லி விட்டால் விடுதலை செய்து விட வேண்டும் என்று இந்த அறிவு சூனியங்கள் வாதிடுவார்களா?
இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் சரியாக விசாரிக்காமல் இந்தக் குற்றவாளிகளைக் கொன்று விட்டார்கள், நிரபராதிக்குத் தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று பாகிஸ்தான்காரன் வந்து குற்றம் சாட்டினால் இவர்கள் சும்மா விடுவார்களா? அப்படியானால் சம்பந்தமில்லாமல் சவூதி அரேபிய காவல்துறையின் விசாரணையில் தலையிட இவர்கள் யார்?
ரிசானா எழுதியதாகக் கூறப்படும் அக்கடிதத்தில், விசாரணையின் போது நிர்ப்பந்தப்படுத்தி என்னிடம் கொலை செய்ததாகக் கையெழுத்து வாங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கி, அவளைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் சவூதி அரசாங்கத்திற்கு என்ன வந்துவிட்டது? அப்படிச் செய்திருந்தால் 5 கோடி தருகிறேன், மன்னித்து விடுங்கள் என்று கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் என்ன?
எடுத்தேன் கவிழத்தேன் என்று இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு விடவில்லை. ஏழு வருட விசாரணைக்குப் பின் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தனை பெரிய மன்னராட்சியைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கமே ஒரு குற்றவாளியை மன்னிக்கும் விஷயத்தில் தலையிட முடியவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மட்டுமே விடுதலை என்று கூறி, அடித்தட்டு மக்களின் சட்டமாகத் திகழும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. பழிக்காமல் இருங்கள்.