அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுகை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இவ்வுலகில் மனிதன் பல தருணங்களில் அழுகின்றான். கணவர், மனைவி, தாய், தந்தை, சகோதரர், சகோதரிகள் போன்ற உறவுகள் துண்டிக்கப்பட்டால் அழுகிறான். அதேப்போன்று தான் செய்கின்ற வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டால் அதற்காகவும், பொருளாதார மோசடி போன்றவைக்கும் அழுகிறான். மேலும், சிலர் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலோ, தனக்கு ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டாலோ இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளானாலோ, உணர்ச்சிவசப்படும் போதோ போன்ற பல்வேறு தருணங்களில் கண்ணீர் வடிக்கின்றான்.

அதிலும் சந்தோசம் அடைந்தாலோ ஆனந்த கண்ணீர் வடிக்கின்றான். ஆனால், நாம் அழுகின்ற அழுகையை அல்லாஹ்விற்காக எத்தனை பேர் அழுது இறுக்கின்றோம். அல்லாஹ்விற்காக அழுத கண்கள் என்ற தலைப்பில் இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அல்லாஹ்விற்காக அழுதால் நாளை மறுமையில் அர்ஷின் நிழல் கிடைக்கும்

அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், படைப்பினங்களையும், மறுமை வாழ்க்கை பற்றியும், மண்ணறை வாழ்க்கை பற்றியும் எவர் ஒருவர் அல்லாஹ்வை நினைத்து தனிமையில்  அழுகின்றாரோ அவருக்கு நாளை மறுமை ‘(நியாயத் தீர்ப்பு) நாளில் அனைவரையும் விசாரிக்கும் முன்னரே அந்த மஹ்ஷர் மைதானத்தில், திறந்த வெட்ட வெளியில் சூரியன் நம்முடைய தலைக்கு மிக அருகிலிருக்கும். அப்போது ஏழு விதமான நன்மைகளை செய்தோருக்கு  அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும். அதில் ஒருவர் தாம், அல்லாஹ்வை நினைத்து தனிமையில் அழுபவர். 

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்புபடுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்.

உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 660) 

நபி (ஸல்) அவர்களின் அழுகை அல்லாஹ்விற்காகவும், மறுமைக்காகவும் தான் அமைந்திருந்தது, இவ்வுலக வாழ்க்கைகாக இல்லை

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.

(ஒரு முறை) உமர் (ரலி) ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) தம் (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக ‘அராக்’ மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள்.

அவர்கள், தம் தேவையை முடித்துக்  கொண்டு வரும் வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களின் துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிக் செயல்பட்ட இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷாவும், ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்களின் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை’ என்று சொன்னேன். அப்போது (இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்’ என்று கூறிய உமர் (ரலி), பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்.

‘அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, ‘நீங்கள் இப்படிச் செய்யலாமே’ என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் என்னிடம், ‘கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க இறைத்தூதர் கோபமாக இருந்தார்கள்’ என்று கூறினார்.

உடனே நான் எழுந்து, அதே இடத்தில் என்னுடைய மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, ‘என் அருமை மகளே! நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)’ என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு’ என்றார். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை அதாவது ஆயிஷாவைப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!’ என்று (அறிவுரை) சொன்னேன்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி(ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு ஸலமாவிடம் (அறிவுரை கூறச் சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு ஸலமா, ‘கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்’ என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு ஸலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். எனவே, நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து) விட்டேன்.

மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களின் அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) ‘ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது.

அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால், அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். ‘திறங்கள், திறங்கள்’ என்று கூறினார். (கதவைத் திறந்த) நான், ‘ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகிவிட்டார்கள்’ என்றார்.

உடனே நான், ‘ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!’ என்று கூறிவிட்டு, என்னுடைய உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார்.

அவரிடம் நான், ‘இந்த உமர் இப்னு கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!’ என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன்.

உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 4913) 

நபியவர்கள் காட்டிய கருணை

இயற்கையாகவே மனிதனுக்கு அல்லாஹ் இரக்க குணத்தை வளர்த்திருக்கின்றான். அந்த இரக்க குணத்தை பிற மனிதர்களிடம் காட்டுவதும் ஒரு வகையான வணக்கமாக கருதப்படும். இறைத்தூதர் அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த போதும் கூட இதே கருணையால் தான் கண்ணீர் விட்டதாக இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். 

دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ»

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?’ எனக் கேட்டதற்கு

நபி (ஸல்) அவர்கள், ‘அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்’ என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, ‘கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது; எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 1303) 

ஸைனப் மகன் மரணத்தருவாய்
أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ – قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ – فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப் (ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, ‘எடுத்ததும், கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!’ என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப்போன பழைய தோல்துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத் (ரலி) கேட்டதற்கு நபி (ஸல்), ‘இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல் : (புகாரி: 1284) 

தமது சமூகத்தை நினைத்து அழுகிறார்கள்

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள “இறைவா! நிச்சயமாக! இவை (சிலைகள்) மக்களில் அதிகம் பேரை வழி கெடுத்துவிட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவரை) நீயே மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கின்றாய்” என்ற (அல்குர்ஆன்: 14:36) ஆவது வசனத்தையும், ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள “(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” என்ற (அல்குர்ஆன்: 5:118) ஆவது வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.

அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு “இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள். அப்போது வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), “ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று (உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும்; என்றாலும்) “நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேளுங்கள்” என்றான்.

அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும் தாம் கூறியவற்றை (மேற்கண்டவாறு) தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், “”ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம்” என்று கூறுக என்றான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 346) 

நபி தோழர்களும் மறுமைக்காகத் தான் அழுதார்கள்
خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا»، قَالَ: فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُجُوهَهُمْ لَهُمْ خَنِينٌ، فَقَالَ رَجُلٌ: مَنْ أَبِي؟ قَالَ: فُلاَنٌ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ: {لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ} [المائدة: 101]

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ‘நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள்.

அப்போது ஒருவர், ‘என் தந்தை யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இன்னார்’ என்று கூறினார்கள். அப்போதுதான் ‘இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும’ எனும் இந்த (அல்குர்ஆன்: 05:101) வது இறைவசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 4621) 

وَّلَا عَلَى الَّذِيْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوْا وَّاَعْيُنُهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا يَجِدُوْا مَا يُنْفِقُوْنَؕ‏

(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் “உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை” என்று நீர் கூறியபோது, (நல்வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.

 (அல்குர்ஆன்: 9:92)

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால்

ஒரு பெண் இயல்பாக உணர்ச்சிவசப்பட கூடியவர். தனக்கு ஆசைப்பட்டு விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால் உடனே அழுதுவிடுவாள். அதேப்போன்று குடும்பத்தில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனை என்றாலோ உடனே கண்ணை கசக்குவாள். அவை யாவும் இவ்வுலக வாழ்க்கைக்காகவே தவிர வேறில்லை.

ஆனால், நபியவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களோ தான் ஹஜ் செய்ய வேண்டிய நேரத்தில் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதால் என்னால் முழுமையாக இபாதத் செய்ய முடியாமல் போகுமே என்று அழுதார்கள். இது கூட வணக்கத்தில் தான் சேரும். தான் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டிய இபாதத்தை செய்ய முடியவில்லை என்று என்னும் எண்ணமே இபாதத். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதுபோல் நினைக்கின்றனர். 

خَرَجْنَا لاَ نَرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قَالَ: «مَا لَكِ أَنُفِسْتِ؟». قُلْتُ: نَعَمْ، قَالَ: «إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ» قَالَتْ: وَضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ

‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள்.

நான் ‘ஆம்!’ என்றேன். ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபத்துல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்’ என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ‘குர்பானி’ கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 294) 

சஃஅத் சம்பவம்

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்து வாழ்ந்த மண்ணிலே உயிர் விட வேண்டுமென்று தான் ஆசைப்படுவார்கள். அதிலும், எனது உயிர் எவ்வித கஷ்டமின்றி நன்றாக பிரிய வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், சஅத் அவர்களோ தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போக அழுது கொண்டிருந்தார்கள். தான் ஹிஜ்ரத் செய்து போகின்ற இடத்தில் தான் மரணிக்க வேண்டும். அப்போது தான் ஹிஜ்ரத் செய்து அடையக்கூடிய முழு நன்மையையும் அல்லாஹ்விடத்தில் இருந்து கிடைக்கும்.

அதனால், அல்லாஹ்வின் தூதரிடத்தில் தனது உடல் நிலை சரியாக வேண்டுமென்று பிரார்த்தனை செய்ய கோரினார்கள். இதனை செவியுற்ற நபியவர்கள் சஅத்தே! உனக்கு ஹிஜ்ரத் செய்த நன்மையை அல்லாஹ் உனக்கு தருவான் என்று கூறினார்கள். 

நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (உடல் நலிவுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். “நான் சஅத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நாடு துறந்து சென்ற இந்த மண்ணிலேயே (மக்காவிலேயே) இறந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக! இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக!” என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகிறாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் இரண்டு பாகங்களில் (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்றார்கள்.

அவ்வாறாயின் பாதியிலாவது (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்று சொன்னார்கள். “அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும் (இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா)?” என்று கேட்டேன்.நபி (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) ஈவதும் ஈகைதான்.

நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் ஈகைதான். உமது செல்வத்திலிருந்து உம்முடைய துணைவி உண்பதும் ஈகைதான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் (அல்லது நல்ல நிலையில்) விட்டுச்செல்வதே சிறந்ததாகும்” என்று கூறினார்கள். (“கையேந்தும் நிலையில்” என்று கூறும்போது) தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 3352) 

குடும்பம், நாளை மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அழுகை

அபூஹுரைரா (ரலி), தன்னுடைய தாய் இறைநம்பிக்கையாளராக ஆக வேண்டுமென்று மனமுவந்து கண்ணீர் விட்டு அழும் அழுகை, அல்லாஹ்விற்காக தான்.

தன் தாய் நேர்வழி அடைய வேண்டி அல்லாஹ்வின் தூதரிடம் சென்று தனது தாய்க்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்கிறார். அதனை கேட்டு, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அபூஹுரைராவின் தாயாருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். உடனே, அல்லாஹ் அதனை நிறைவேற்றினான். அதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்,  நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்த பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார்கள். 

என் தாயார் இணைவைப்பாளராக இருந்த போது, இஸ்லாத்திற்கு (வருமாறு) அவருக்கு நான் அழைப்பு விடுத்துவந்தேன். ஒரு நாள் நான் அவருக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுத்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார்.

 உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தாயாருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்துவந்தேன். அவர் மறுத்துவந்தார். இன்றைய தினமும் அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் உங்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார். ஆகவே, (இந்த) அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டுப் மகிழ்ச்சி அடைந்தவனாக நான் (வீட்டை நோக்கிப்) புறப்பட்டேன். நான் வீட்டு வாசலை அடைந்தபோது (உள்ளே) அது தாழிடப்பட்டிருந்தது. என் தாயார் என் காலடிச் சப்தத்தைக் கேட்டுவிட்டு, “அபூஹுரைரா அங்கேயே இரு” என்று கூறினார்.

அப்போது தண்ணீர் புழங்கும் சப்தம் எனக்குக் கேட்டது. என் தாயார் குளித்துவிட்டு, தமது சட்டையை அணிந்துகொண்டு, முக்காட்டுத் துணி அணியாமல் விரைந்து வந்து கதவைத் திறந்தார். பிறகு, “அபூஹுரைரா! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் உறுதி மொழிகிறேன்” என்று கூறினார்.

 உடனே நான் மகிழ்ச்சியில் அழுது கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான். அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டிவிட்டான்” என்று சொன்னேன். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நல்ல வார்த்தைகளைச் சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும் என் தாயார்மீதும் நேசம் ஏற்படவும் அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும், தாங்கள் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! உன்னுடைய இந்தச் சிறிய அடியார் (அபூஹுரைரா) மீதும் அவருடைய தாயார்மீதும் இறை நம்பிக்கையாளர்களான உன் அடியார்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறைநம்பிக்கையாளர்கள்மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். எனவேதான், என்னைப் பார்க்காவிட்டாலும் என்னைப் பற்றிக் கேள்விப்படும் எந்த ஓர் இறை நம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 4904) 

அடக்கஸ்தலங்களுக்கு சென்று மரணத்தை நினைவு கூர்ந்து அழுதல்

அல்லாஹ், தன் அடியார் செய்த அனைத்தும் பாவங்களையும், தான் நாடினால் மன்னிப்பான். ஆனால், தனக்கு இணைவைத்தோரை ஒரு போதும் மன்னிக்க மாட்டான். அவ்வாறு இணைவைத்து இறந்த நபிகள் நாயகத்தின் தாய் இறந்தப்பின் அவரின் அடக்கஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்ய நபி (ஸல்) அவர்கள் கோரினார்கள்.

ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதேப் போன்று நம்மில் யாரேனும் இணைவைத்தோர் இறந்தாரேயானால் அவரின் பிள்ளைகள் கூட தன் பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ய கூடாது. நபிகளாரோ! அடக்கஸ்தலங்களுக்கு சென்று மரணத்தை நினைவு கூறுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். மரணம் நம்மை நெருங்கும் முன்னே ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பத்தார் வழிகேட்டில் இருப்பாரேயானால் அவைகளை நல்வழிப்படுத்த வேண்டும்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

زَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي، فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள். (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1777) 

குர்ஆனை செவியுற்று அழுகை

குர்ஆனை ஓதும் போது அதில் அல்லாஹ் அருளிய வசனங்களை நினைத்து அழுவதும் அல்லாஹ்விற்காகவே! அரபி தெரிந்தவர்கள் அல்லது சில வசனங்களுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்தவர்களுக்கு தொழுகையிலோ அல்லது தொழுகையல்லாத நேரங்களில் சொர்க்கம், நரகம், இவ்வுலகம், அல்லாஹ்வின் தண்டனை, அருட்கொடைகள், நியாயத் தீர்ப்பு நாள், நன்மை, தீமை, பரிகாரம், பாவமன்னிப்பு வழிகாட்டுதல், நேர்வழி, சட்டங்கள் போன்ற பல்வேறு செய்திகளை ஓதும் போது சிலருக்கு அழுகை வரும். அதுவும் கூட அல்லாஹ்விற்க்காகவே தான்.

மறுமை நாளில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு நபியை அல்லாஹ் சாட்சியாளராக கொண்டு வருவான். அப்போது அவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று அல்லாஹ் விவரிக்கிறான். அதேப்போன்று நபியை பார்த்து அல்லாஹ் சொல்கின்றான். நபியே! உம்முடைய சமூகத்தாருக்கு உங்களையே நான் சாட்சியாளராக கொண்டு வருவோம். இந்த செய்தியை திருக்குர்ஆனில் ஓதும் போது நபியவர்களுக்கு அழுகை வருகின்றது.  

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ عَلَيَّ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، آقْرَأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْزِلَ، قَالَ: «نَعَمْ» فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ حَتَّى أَتَيْتُ إِلَى هَذِهِ الآيَةِ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ، وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} [النساء: 41]، قَالَ: «حَسْبُكَ الآنَ» فَالْتَفَتُّ إِلَيْهِ، فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!’ என்று கூறினார்கள். நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். எனவே, நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன்.

‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில் கொண்டு வரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’ எனும் (அல்குர்ஆன்: 04:41) வது வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘இத்துடன் போதும்!’ என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களைப் பார்த்தேன்; அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (புகாரி: 5050) 

எங்கிருந்தோ வந்த அம்பு பாய்ந்து ஒருவர் கொல்லப்படுதல்

பத்ர் போரில் கொல்லப்பட்ட ஒருவரின் தாயார் தன் மகன் இருந்ததற்காக வருத்தப்படாமல், அழாமல் தன் மகனுடைய மறுமை வாழ்க்கையைப் பற்றி வருத்தம் தெரிவித்த தாயார். இன்று நம்மில் எத்தனை பேர் தன் பிள்ளைகளை மார்க்கம் கற்க அனுப்புகின்றனர். உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மீதமிருக்கும் நேரத்தில் சிறிது மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி அனுப்புகின்றார்கள். ஸஹாபாக்கள், ஸஹாபிய பெண்மணிகள் வாழ்ந்து காட்டிய அனைத்தும் நமக்கு பெரும் பாடிப்பினையே! அவை வெறும் செய்தியாக வாசித்து செல்லாமல் அதில் நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன என்று சிந்தித்து மறுமையை நாடியே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ البَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، أَلاَ تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ، وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ، اجْتَهَدْتُ عَلَيْهِ فِي البُكَاءِ، قَالَ: «يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الفِرْدَوْسَ الأَعْلَ

ஹாரிஸா இப்னு சுராகா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது.

அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வவேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 2809)

குர்ஆனை ஒதும்போதும் செவியுறும் போதும் அழுதல்

நம்மில் எத்தனை பேர் குர்ஆனை ஓதும் போது அதன் அர்த்தத்தை உணர்ந்து ஓதுகின்றோம். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: யாருக்கு அல்லாஹ் நேர்வழி வழங்கினானோ அவர்களின் பண்பு எப்படி இருக்குமென்றால் அளவற்ற அருளாளனின் வசனங்களை செவியுற்றால் அவர்கள் உடனே அழுது ஸஜ்தா செய்வார்கள். 

 اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا

அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள்.

(அல்குர்ஆன்: 19:58)

தொழுகையில் குர்ஆன் ஒதும் போது அழுகை
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ

நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதை போன்ற சத்தம் அவர்களது நெஞ்சில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அதாவது அழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் சகீர்
நூல்: (நஸாயீ: 1214)

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்களை நரகம் தீண்டாது
عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللَّهِ

அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்களும், இரவு முழுவதும் விழித்து அல்லாஹ்வுடைய பாதையில் காவல் காத்த கண்கள் ஆகிய இரண்டு கண்களையும் நரக நெருப்பு தீண்டாது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: (திர்மிதீ: 1639) 

முஃமின்கள் இறை அச்சத்தின் காரணமாகவே அழுவார்கள்
وَيَخِرُّوْنَ لِلْاَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا

அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.

(அல்குர்ஆன்: 17:109)

மறுமையின் முதல் நிலை
كَانَ عُثْمَانُ، إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تُذْكَرُ الجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ القَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ» قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالقَبْرُ أَفْظَعُ مِنْهُ»

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.” சொர்க்கம் , நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை . ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? ” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். “மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்”

நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது ” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (”எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் ” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்)

அறிவிப்பவர்: ஹானிஃ (ரஹ்)
நூல்: (திர்மிதீ: 2308) (2230)

மேற்கூறப்பட்ட அனைத்து செய்திகளும் மனிதன் அல்லாஹ்விற்காக அழும் அழுகையாகும். அவ்வாறு அழுவதும் இபாதத்தாகவே கருதப்படும். 

மேற்கூறப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் நம் வாழ்வில் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.