அல்லாஹ்வா? அவ்லியாவா?

பயான் குறிப்புகள்: கொள்கை

அல்லாஹ்வா? அவ்லியாவா?

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்றைய மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு ஒரே ஒரு ஏக நாயனை மட்டும் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான்.

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

(அல்குர்ஆன்: 98:5)

ஆனால் அவர்களோ இறந்து போன நல்லடியார்களைக் கடவுளர்களாக ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் ஏன் அவர்களை வணங்குகிறீர்கள் என்ற கேள்வி அவர்களிடம் முன் வைக்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதிலை திருக்குர்ஆன் கூறுகின்றது.

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

இன்றைய முஸ்லிம்களும் தங்கள் தேவைகளுக்கு அவ்லியாக்களைத் தான் அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றார்கள். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் ஏன் வணங்கக் கூடாது என்று நாம் அவர்களிடம் கேட்கும் போது, அன்றைய மக்கா காஃபிர்கள் என்ன பதிலை அளித்தார்களோ அதே பதிலைத் தான் இவர்களும் அளிக்கின்றார்கள்.

இங்கு தான் அன்றைய மக்கா காஃபிர்களின் கடவுள் கொள்கையும் இன்றைய முஸ்லிம்களின் கடவுள் கொள்கையும் ஒரு மையப் புள்ளியில் சந்திக்கின்றது; ஒன்று மற்றொன்றுடன் ஒத்துப் போகின்றது. இந்த அம்சத்தில் இன்றைய முஸ்லிம்கள் குர்ஆனை விட்டு வெகு தூரம் விலகி போய் விடுகின்றார்கள். ‘அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்’ என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் தலை தெறிக்க ஓட்டமெடுக்கின்றார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல! ஒட்டுமொத்த இந்தியாவில் வாழ்கின்ற முஸ்லிம்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். இதன் மூலம் குர்ஆன் கூறுகின்ற கடவுள் கொள்கையை விட்டும் முற்றிலும் விலகி அன்றைய மக்கா காஃபிர்கள் கொண்டிருந்த கடவுள் கொள்கையைத் தான் இவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய முஸ்லிம்களிடம் உங்களுக்கு அல்லாஹ்வின் மீது விருப்பம் அதிகமா? அவ்லியாக்கள் மீது விருப்பம் அதிகமா? என்று கேட்டால் அவர்கள் அவ்லியாக்கள் என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர்கள் அவ்லியாக்கள் மீது அலாதியான பிரியத்தையும் அளவு கடந்த நேசத்தையும் கொண்டிருக்கின்றார்கள். இது மக்கா காஃபிர்களின் நம்பிக்கையை ஒத்திருக்கின்றது. அதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் தெளிவாக விளக்குகின்றான்.

وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ ۖ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

(அல்குர்ஆன்: 39:45)

இது மக்கா காஃபிர்களின் மன நிலையைப் படம்பிடித்துக் காட்டும் வசனமாகும். இந்த நிலையை நூற்றுக்கு நூறு அப்படியே இன்றைய முஸ்லிம்களிடமும் பார்க்கலாம். அல்லாஹ் என்று சொல்லும் போது இவர்களின் உடலில் எந்த அசைவையும் பார்க்க முடியாது. ரஹ்மான் ரஹீம் என்று அல்லாஹ்வின் பெயர்களைச் சொல்லும் போது இவர்களிடம் எந்த அசைவும் தென்படாது.

ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்று சொல்லும் போது கத்தஸஹுல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அல்லாஹ் அவரது அந்தரங்கத்தைத் தூய்மைப்படுத்துவானாக!) என்று பூரித்துப் புளங்காகிதம் அடைகின்றனர்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்; அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்று சொன்னால் அன்றைய காஃபிர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதே நிலைமையை, முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு இன்று இணை வைத்துக் கொண்டிருக்கும் இவர்களிடமும் பார்க்கலாம்.

وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَىٰ أَدْبَارِهِمْ نُفُورًا

குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

(அல்குர்ஆன்: 17:46)

ذَٰلِكُمْ بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ كَفَرْتُمْ ۖ وَإِنْ يُشْرَكْ بِهِ تُؤْمِنُوا ۚ فَالْحُكْمُ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ

அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்.

(அல்குர்ஆன்: 40:12)

இவை அனைத்தும் மக்கா இணை வைப்பாளர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த கோரமான வெறுப்பாகும். மக்கா காஃபிர்களும் இன்றைய முஸ்லிம்களும் இந்த அடிப்படையில் ஒரே கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்காவில் வாழ்ந்த அந்த மக்கள் காஃபிர்கள்; அவர்கள் மறுமையை நம்பாதவர்கள்; ஆனால் இந்த முஸ்லிம்களோ மறுமை நம்பிக்கை கொண்டவர்கள்; இவர்களும் அவர்களும் எப்படி ஒன்றாவார்கள்? மக்கத்துக் காஃபிர்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் தெளிவான நம்பிக்கையில் இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய காலத்து இந்த இணை வைப்பு முஸ்லிம்களை விட அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி மிக மிகத் தெளிவான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை நாம் திருக்குர்ஆனில் விளக்கமாகப் பார்க்கலாம்.

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(அல்குர்ஆன்: 43:87)

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’’ எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்: 43:9)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை அவர்கள் விளங்கி வைத்திருந்தனர். மேலும் அல்லாஹ்வை அஸீஸ், அளீம் – மிகைத்தவன், அறிந்தவன் என்பதையும் மக்கத்து முஷ்ரிக்குகள் ஒப்புக் கொண்டிருந்தனர்.

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ்வுக்கே’’ என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?’’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:84), 85)

قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ

“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’’ எனக் கேட்பீராக! “அல்லாஹ்வே’’ என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?’’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:86), 87)

மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வையும், அவனது அர்ஷையும் நம்பியிருந்தார்கள் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ

“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப் படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’’ என்று கேட்பீராக!

“அல்லாஹ்வே’’ என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’’ என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:88), 89)

இந்த வசனங்கள் அனைத்தும் மக்கா காஃபிர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. இன்றைய முஸ்லிம்களும் இதே நம்பிக்கையைத் தான் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களிடம் வானங்கள், பூமியைப் படைத்தது யார்? உங்களைப் படைத்தது யார்? வானத்திலிருந்து மழையைப் பொழிவிப்பவன் யார்? அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டால் அல்லாஹ் என்று தான் பதிலளிப்பார்கள்.

அதே சமயம் கடுமையான ஆபத்திலும் சிக்கலிலும் மாட்டிக் கொண்டால் அல்லாஹ்வை அழைப்பதை விட்டு விட்டு, தங்களுக்குப் பிரியமான அவ்லியாக்களைத் தான் அழைப்பார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் மக்கா காஃபிர்களை விட்டும் வித்தியாசப்படுகின்றார்கள்; வேறுபடுகின்றார்கள். இங்கு மக்கா காஃபிர்களின் இறை நம்பிக்கை இவர்களை விட மிஞ்சி விடுகின்றது.

அல்லாஹ்வை மட்டும் அழைத்த காஃபிர்கள்

அல்லாஹ்வை இப்படியெல்லாம் நம்பியிருந்த அந்தக் காஃபிர்கள், சாதாரண காலங்களில் மற்ற தெய்வங்களை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். மிக நெருக்கடியான காலகட்டங்களில் அல்லாஹ்வை மட்டும் தான் அழைத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் பார்க்கலாம்.

وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ ۚ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன்: 31:32)

فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 29:65)

இப்படி சோதனையான காலத்தில் அந்தக் காஃபிர்கள் இறைவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தித்தனர். ஆனால் இன்றோ இவர்கள் சாதாரண காலத்திலும், அசாதாரண காலத்திலும் அதாவது ஆபத்துக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு நிற்கும் போதும் அல்லாஹ்வை அழைக்காமல் முஹ்யித்தீனை அழைக்கின்றனர்.

குறிப்பாகப் பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப் பயங்கரமான கட்டம்! அந்த நெருக்கடியான, இக்கட்டான கட்டத்தில் இந்தப் பெண்கள் ‘யா முஹ்யித்தீன்’ என்று அழைக்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் கேடு கெட்டவர்கள். இணை வைப்பில் அவர்களை விட மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். மற்ற வகையில் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.

أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَٰؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ ۚ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’’ என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

இதே வாதத்தைகளைத் தான் இன்றைய இணை வைப்பாளர்களும் முன்வைக்கிறார்கள்.

‘நாங்கள் கேட்பதை இந்த அவ்லியாக்கள் தருவார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. இவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்’ என்று மக்கா காஃபிர்கள் சொன்னதைப் போல் சொல்கிறார்கள்.

மக்கா காஃபிர்கள் அல்லாஹ்வின் படைப்பாற்றலை நம்பியிருந்தார்கள். அவர்கள் கண்களால் காணாத, மறுமையில் மட்டுமே பார்க்கக் கூடிய அர்ஷை நம்பியிருந்தார்கள். ஆனால் அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தார்கள். அந்தத் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை கொண்டவர்களைத் தான் காஃபிர்கள், இணை வைப்பாளர்கள் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான். அப்படியானால் இதே கொள்கையைக் கொண்டிருக்கும் இந்த இணை வைப்பாளர்களை, எப்படி முஸ்லிம்கள் என்று கூற முடியும்?

இரத்த பந்தமான இறைத்தூதர்கள்

இன்னும் சொல்லப் போனால் தங்களது பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் எவர்களை நம்பிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! அவர்கள் மாபெரும் இறைத் தூதர்கள். இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ البَيْتَ وَفِيهِ الآلِهَةُ، فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ، فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَاتَلَهُمُ اللَّهُ، أَمَا وَاللَّهِ لَقَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ». فَدَخَلَ البَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள்.

இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்’’ என்று கூறி விட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 1601, 3352)

இவ்விரு இறைத்தூதர்களும் சாதாரண தூதர்கள் கிடையாது. அந்த அரபியர்களின் தந்தையர்களும் ஆவர். இப்படி அவர்களது இரத்தத்துடன் இரண்டறக் கலந்த அந்தத் தூதர்களைத் தான் தங்கள் பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் நம்பினர். அவர்கள் நம்பிய அந்த மாபெரும் இறைத் தூதர்கள் எங்கே? இறை நேசர்கள் என்ற பெயரில் இங்க இவர்கள் நம்புகின்ற சாதாரண அடியார்கள் எங்கே?

அந்த இறைத் தூதர்கள், நல்லடியார்கள் தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்கள் இறை நேசர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், ஷாகுல் ஹமீது, மஸ்தான் போன்றோர்கள் இறை நேசர்கள் என்பதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கோ நேரடியாக எந்தச் சான்றும் இல்லை.

மக்கா இணை வைப்பாளர்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட  தூதர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த போதும் அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் தகர்த்தெறிந்து, அந்த மக்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று முத்திரையிட்டு விட்டான்.

இன்றைய முஸ்லிம்களோ அந்த நபிமார்களுக்கு அருகில் கூட நெருங்க முடியாத ஆட்களை, வரலாற்றுத் தடயமே இல்லாதவர்களை, ஆதாரப்பூர்வமான வரலாற்றை இழந்து விட்ட சாதாரணமானவர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

இந்த வகையில் மக்கா காஃபிர்களின் கடவுள் நம்பிக்கை சற்று உயர்வாகவும், இவர்களது நம்பிக்கை மிக மிக மட்ட ரகமானதாகவும் அமைந்து விடுகின்றது. இதன்படி பார்க்கும் போது இன்றைய முஸ்லிம்கள் மக்கா காஃபிர்களை விட கீழ் நிலையிலேயே உள்ளார்கள். மக்கா காஃபிர்கள் இன்றைய முஸ்லிம்களை விட மேலானவர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை நிரந்தர நரகவாதிகள் என்று குறிப்பிட்டு விட்டான்.

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ

خَالِدِينَ فِيهَا ۖ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.

அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 2:161), 162)

إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

(அல்குர்ஆன்: 98:6)

இந்த அடிப்படையில் பார்க்கும் போது இன்றைய முஸ்லிம்கள் மக்கா காஃபிர்களை விடவும் அதிகமான நரகத் தண்டனை பெறுவதற்குத் தகுதியானவர்களாகி விடுகின்றார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

இன்றைய முஸ்லிம்கள் என்ன தான் மறுமை நம்பிக்கை கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை, இணை வைப்பின் காரணமாகத் தகர்ந்து போய் விடுகின்றது.

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ

“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன்: 39:65), 66)

இந்த எச்சரிக்கை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! எல்லா இறைத் தூதர்களுக்கும் தான்.

ذَٰلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 6:88)

இறைத் தூதர்கள் இணை கற்பித்தாலே அவர்களது அமல்கள் எல்லாம் அழிந்து போகும் எனும் போது இவர்கள் எம்மாத்திரம்?

இவர்களது இறை நம்பிக்கை, ஏனைய அமல்கள் எல்லாமே இணை வைப்பின் காரணமாக அழிந்து போய் விடுகின்றன. இவர்களது தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள், இன்ன பிற சமூக நலச் சேவைகள் அத்தனையுமே அழிந்து போய் விடுகின்றன.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் போதும். அவ்வளவு பாலும் விஷமாக மாறி வீணாகி விடுகின்றது. அது போல் இணை வைப்பவர்கள் செய்கின்ற அத்தனை அமல்களும் பாழாகிப் போய் விடுகின்றன. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!