அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நாம் ஒவ்வொரு நாளும் தொழுகையில் அல்குர்ஆனை ஓதுகிறோம். ஓதக் கேட்டோம். ஆனால் நாம் அழுவதில்லை.
அல்குர்ஆன் ஓதினால் அழ வேண்டுமா? ஏன்? இதோ அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்!
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.
அவர்கள் செய்து கொண்டு இருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!
தன்னை ஓதும் போது கண்கள் குளமாவதை திருக்குர்ஆன் எதிர்பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலைக்கு நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளங்கள் நடு நடுங்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் இதை இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகச் சுட்டிக் காட்டுகின்றான்.
அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்கி அடைகின்றனர்.
இந்த வசனத்தைச் சுட்டிக் காட்டி, “அவ்லியாக்களின் பெயரைச் சொன்னால் ஆனந்தப் பரவசம் அடைகிறார்கள்” என்று குராபிகளை விமர்சனம் செய்கின்றோம்.
ஆனால் கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் அல்லாஹ் கூறுகின்ற தன்மைகள் நம்மிடம் உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.
குர்ஆனை ஓதும் போது ஈமான் அதிகரிக்க வேண்டும்; அந்த ஈமான் அதிகரித்ததற்கு அடையாளம் நமது கண்கள் நனைவதாகும்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். நான், “உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.
“(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும் (அல்குர்ஆன்: 4:41) வது வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் “நிறுத்துங்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
அறி : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி: 4582)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடிப்பதை நாம் இங்கு பார்க்கிறோம். நபியவர்களைப் போன்று தான் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்குர்ஆன் வசனங்களில் ஈடுபாடு கொண்டு கண்ணீர் வடிப்பார்கள். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்களின் மரண வேளையின் போது, அபூபக்ர் (ரலி)யைத் தொழுவிக்கும்படி ஏவுகையில் ஆயிஷா (ரலி) மறுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது. “மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.
மேலும் “அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன்.
அவர்களிடம் கூறிய போது. “நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) என்னிடம் “உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ என்று கூறினார்கள்.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 716)
அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்த காலத்தில் அவர்களது அழுகை மக்கத்துக் காஃபிர்களை அலறவும், அதிரவும் வைத்தது.
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:
என் பெற்றோர் அபூபக்ரும், உம்மு ரூமானும் எனக்கு விவரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. மக்காவில் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அபிசீனிய நாட்டை நோக்கி நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
அவர்கள் யமன் செல்லும் வழியில் “பர்குல் கிமாத்’ என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அல்காரா எனும் குலத்தின் தலைவராவார். அவர், “அபூபக்ரே எங்கே செல்கிறீர்கள்” என்று கேட்டார். “என் சமுதாயத்தினர் என்னை நாட்டை விட்டு வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளி விட்டனர். ஆகவே நான் பூமியில் பரவலாக பயணம் செய்து நிம்மதியாக என் இறைவனை வணங்கப் போகிறேன்” என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள்.
அப்போது இப்னு தஃகினா, “அபூபக்ரே தங்களைப் போன்றவர்கள் நாட்டை விட்டு தாமாகவும் வெளியேறக் கூடாது, மற்றவர்களால் வெறியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கின்றீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். கஷ்டப்படுவோரின் பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகின்றீர்கள்” என்று புகழ்ந்து கூறினார். பின்னர் “தங்களுக்கு நான் அடைக்கலம் தருகிறேன். நீங்கள் மக்காவிற்குத் திரும்பிச் சென்று உங்களது சொந்த ஊரிலேயே இறைவனை வணங்குங்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட அபூபக்ர்(ரலி) தமது அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்து விட்டு மக்காவிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃகினாவும் மக்காவிற்குத் திரும்பினார். அன்று மாலை இப்னு தஃகினா குறைஷிக் குல பிரமுகர்களைச் சந்தித்து அவர்களிடம், “அபூபக்ரைப் போன்றவர்கள் மக்காவிலிருந்து தாமாக வெளியேறுவதோ, அல்லது பிறரால் வெளியேற்றப் படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கக் கூடிய, உறவுகளைப் பேணி, சிரமப்படுவோரின் பாரங்களைச் சுமந்து, விருந்தினர்களை உபசரித்து சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி வரும் ஓர் ஒப்பற்ற மனிதரையா நாடு துறந்து வெளியேறிச் செல்லும் நிலைக்கு நீங்கள் உள்ளாக்குகிறீர்கள்” என்று கேட்டார்.
அபூபக்ர் (ரலி) க்கு இப்னு தஃகினா அடைக்கலம் தருவதாகக் கூறியதை குரைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ தொழவோ தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் இவரது வணக்க வழிபாடுகளைப் பார்த்து, குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்பதை அவரிடம் கூறிவிடுங்கள்” என்று கூறினார்கள்.
அதன்படி அபூபக்ர் (ரலி) தமது இல்லத்திற்குள்ளேயே அல்லாஹ்வை வணங்கியும் தமது தொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் குர்ஆன் வசனங்களை வீட்டிற்கு வெளியே ஓதாமலும் இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மாற்று யோசனை தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.
அப்போது இணைவைப்பவர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் (ரலி) யைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும் போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழக்கூடியவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை தங்களது இளகிய மனம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணைவைப்பவர்களான குரைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது.
அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆள் அனுப்பினார்கள். அவர் குரைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்கு உள்ளேயே அவருடைய இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்ற நிபந்தனையோடு நீங்கள் அடைக்கலம் தந்தீர்கள். அதனால் தான் அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளித்தோம். அதை அவர் மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத் தொழுது கொண்டும், ஓதிக் கொண்டும் இருக்கிறார்.
எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகி விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் தனது வீட்டில் தனது இறைவனை வணங்குவதோடு நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்துவேன் என்றால் அவரிடம் உங்களது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனென்றால் உங்களது உடன்பாட்டை முறித்து உங்களுக்கு மோசடி செய்வதை நாங்கள் வெறுக்கிறோம். அதே சமயம் அபூபக்ர் இவ்வாறு பகிரங்கமாகச் செய்வதையும் எங்களால் அனுமதிக்க முடியாது” என்று கூறினார்கள்.
இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி)யிடம் வந்து, “நான் எந்த நிபந்தனையின் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்! அல்லது எனது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தந்து விடுங்கள். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதர் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) உமது அடைக்கலத்தை “உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்” என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 2297)
இப்படி குர்ஆன் ஓதும் போது அடக்க முடியாத அளவுக்கு அழுபவர்களாக அபூபக்ர் (ரலி) இருந்துள்ளனர்.
இது போன்று ஏனைய நபித்தோழர்களும் அழுதுள்ளனர்.
“(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று அவர்களிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்….” எனும் (திருக்குர்ஆனின் 98வது) அத்தியாயத்தை உங்களுக்கு ஓதிக் காட்டும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “என் பெயரைக் குறிப்பிட்டா கூறினான்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அழுதார்கள்.
அறி : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 3809)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவுகளும் நபித்தோழர்களை அழ வைத்துள்ளது.
خَطَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ قَالَ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا قَالَ فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وُجُوهَهُمْ لَهُمْ خَنِينٌ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் ஒரு போதும் கேட்டதில்லை. அவர்கள், “நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால் நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமான அழுவீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக் கொண்டு சப்தமிட்டு அழுதார்கள்.
அறி : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 4621)
இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.
“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்” என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6806)
எனவே இப்படிப்பட்ட தன்மையைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக குர்ஆன் ஓதும் போது நமக்கு அழுகை வர வேண்டும் என்றால் அதன் அர்த்தம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
குர்ஆனைப் பொருள் தெரிந்து ஓத ஆரம்பித்தால் அதுவே நம்முடைய உள்ளத்தை உருகவும், கண்களில் கண்ணீரைப் பெருகவும் செய்து விடும். எனவே குர்ஆன் விரும்புகின்ற இந்த அழகிய பண்புகளைப் பெறுகின்ற நல்லடியார்களாக நாமும் ஆக முயற்சிப்போமாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.