அலகு குத்துவது உண்மையான ஆன்மிகமாகுமா..?

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

அலகு குத்துவது உண்மையான ஆன்மிகமாகுமா?

பங்குனி உத்திர விழாவையட்டி முருகன் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் பலர் கூர்மையான ஈட்டிகளை வாயில் குத்தியும், முதுகில் கம்பிகளை குத்தி கிரேனில் தொங்கியபடி வந்தும் மக்களை பதைபதைக்க வைத்தனர். இதற்கு போலீசார் வேறு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருந்தது தான் உச்சகட்ட கொடுமையாகும். தலைக் கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களைப் போக்குவரத்து போலீசார் வழிமறித்து அபராதம் போடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? தலைக் கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டால் தலையில் அடிபட்டு உயிர் போய்விடும். இப்படி உயிர்ப்பலி ஏற்படக் கூடாது எனத் தடுக்கும் முகமாகவே தலைக் கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை சரி என ஒப்புக் கொண்டால் முதுகில் கம்பிகளை மாட்டிக் கொண்டு கிரேனில் தொங்கி வரும் பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு வரும் இந்த பக்தர்கள் எந்நேரமும் கீழே விழலாம். அப்படி விழுந்தால் நிச்சயம் உயிர்ப்பலி ஏற்படும். இந்த உயிர்ப் பலியை தடுக்கும் கடமை போலீசாருக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? ஆனால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய போலீசார் தங்கள் கடமையைச் செய்யாமல் இதற்கு பாதுகாப்பு கொடுப்பது கடமை மறந்த செயலாகும். முதுகில் இரும்புக் கொக்கிகளை குத்தி, அந்தரத்தில் தொங்கி வருவதிலும், கன்னத்தில் அலகு குத்தி வருவதும் பக்தி என பக்தர்கள் நினைத்தால் இந்த மூடநம்பிக்கையை முதலில் மாற்ற வேண்டும்.கடவுள் கருணை வடிவானவன். அவன் கொடூரமானவன் இல்லை. இந்த எண்ணம் இருந்தால் மக்கள் இது மாதிரி நடந்து கொள்ள முன் வருவார்களா? எனவே கடவுள் குறித்த இந்த நல்லெண்ணத்தை மக்கள் மனதில் முதலில் விதைக்க வேண்டும்.

ஒரு சமயம் நபிகள் நாயகம் அவர்கள் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு ஏன் இவ்வாறு வெயிலில் நிற்கிறீர்? என வினவினார்கள். இவ்வாறு வெயிலில் நிற்பதாக நான் கடவுளுக்கு நேர்ச்சை செய்தேன். அந்த நேர்ச்சையை நிறைவேற்றும் வகையில் வெயிலில் நின்று கொண்டிருக்கிறேன் என அவர் பதிலுரைத்தார். இதனைக் கேட்ட நபிகள் நாயகம் இது மாதிரியான அர்த்தமற்ற நேர்ச்சைகளை நிறைவேற்றி உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். எனவே நேர்ச்சையை முறித்து விட்டு நிழலில் வந்து அமருங்கள்! என கட்டளையிட்டார்கள்.

இதுதான் உண்மையான ஆன்மீகம். இந்த ஆன்மீக நெறியை அனைவரும் அறிந்து, உடலை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளை செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக நாக்கில் ஈட்டியை குத்துவது, கன்னத்தில் ஈட்டி குத்துவது, முதுகில் அலகு குத்துவது போன்ற உடலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயல்களைச் செய்வதிலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். இப்படி விலகி இருத்தலே உண்மையான ஆன்மீகம் என மக்கள் உணர வேண்டும்.

Source : unarvu ( 06 /04 / 2018 )