அற்ப விஷயத்தையும் பின்பற்றிய அண்ணலாரின் தோழர்கள்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம்.
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்பமாட்டான்’’ எனக் கூறுவீராக!
وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۚ
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவதன் மூலமே இறையருள் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படாவிட்டால் ஒரு மனிதன் செய்கின்ற அமல்கள் பாழாகி விடும்.
இது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை மேற்கண்ட வசனங்களிலிருந்து நம்மால் பெற முடிகின்றது.
நம்மில் பெரும்பாலானோர் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுகின்ற விஷயத்தில் மிகவும் பலவீனமானவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆனால் நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள், கட்டுப்படுகின்ற விஷயத்தில் கடுகளவாக இருந்தாலும் அதையும் பின்பற்றினார்கள். அவ்வாறு அவர்களின் வாழ்கையில் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அல்லாஹுடைய தூதருக்கும் கட்டுப்பட்ட நடந்த சில தருணங்களை இந்த உரையில் காண்போம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ, இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும், ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத்தா’’ என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’’ என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’’ என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!’ (அல்குர்ஆன்: 7:199) ➚ என்று கூறியுள்ளான்.
இவர் அறியாதவர்களில் ஒருவர்’’ என்று சொன்னார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
இந்த வசனத்தினுடைய இறுதி வாசகங்களைக் கவனித்துப் பார்த்தால் நபித்தோழர்களின் கட்டுப்படுதல் எந்த அளவுக்கு இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
கட்டுப்பட்டு நடக்கின்ற விஷயத்தில் இன்றைக்குப் பெரும்பாலோனோர் தங்களுடைய கவுரவத்தையே முதன்மையாகக் கருதுகின்றனர். இன்னும் சொல்வதாக இருந்தால் குர்ஆன், ஹதீஸ் ஒன்று சொல்லும் பொழுது, அதை நடைமுறைப்படுத்தினால் நம்முடைய கவுரவம் போய்விடுமோ என்ற பிடிவாதத்தினால் கட்டுப் படுவதை விட கவுரவம் தான் முக்கியம் என்று கருதுகின்றனர்.
ஆனால் கவுரவத்தை விடக் கட்டுப்படுதலே மேன்மையானது என்பதை அற்புதமான முறையில் நிரூபிக்கும் சம்பவம் இதோ:
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உர்வா பின் ஸுபைர், சயீத் பின் முஸய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)
அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்’’ என்று தொடங்கும் (அல்குர்ஆன்: 24:11-20) ➚ பத்து வசனங்களை அருளினான். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான்.
(என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்’’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். – அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’’ எனும் (அல்குர்ஆன்: 24:22) ➚ ஆவது வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் (செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’’ என்றும் கூறினார்கள்.
கொஞ்சம் இந்த ஹதீஸை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! தன்னிடமிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு வாழ்கின்ற ஒருவர், தான் உயிருக்கு உயிராக நேசிக்கின்ற தன்னுடைய மகளை, அல்லாஹ்வின் தூதருடைய மனைவியையே அவதூறு கற்பித்த கூட்டத்துடன் சேர்ந்து அவதூறு கூறினார்.
இனிமேல் என்னுடைய புறத்திலிருந்து உதவியே தர மாட்டேன் என்று இறைவன் மீது அபூபக்கர் (ரலி) சத்தியம் செய்கின்றார்கள். ஆனால் இறைவனின் வசனம் இறங்கிய அடுத்த வினாடியே தன்னுடைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இறைவனுக்காக மன்னித்து இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்படுவது தான் மிகப் பெரியது என்பதை நிரூபித்திருக்கின்றார்.
இன்றைய காலகட்டத்தில் சொத்து தகராறுக்காக, குடும்பப் பிரச்சனைகளுக்காக, கொடுக்கல் – வாங்கல் பிரச்சனைகளுக்காக, வியாபாரத்தில் கூட்டாக இருந்து கொண்டு மனஸ்தாபத்தினால் பிரிந்த பிரச்சனைகளுக்காக, இன்னும் ஏராளமான பிரச்சனைகளுக்காக நம்மில் பலர், சொந்த பந்த உறவினர்களைப் பகைத்து வருடக்கணக்கில் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றோம். நான் பல வருடங்களாக இவரோடு பேச மாட்டேன் என்று பீற்றிக் கொண்டு வேறு சொல்லித் திரிகின்றோம்.
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நல்லவர்களான அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு) பனூதமீம் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூபக்கர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ அல் ஹன்ழலீ (ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்’’ என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) அவர்கள் “தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று’’ என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது தான், “இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்’’ எனும் (அல்குர்ஆன்: 49:2) ➚ ஆவது வசனம் முழுமையாக அருளப்பெற்றது.
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த வசனம் அருளப்பெற்றபின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.
நபித்தோழர்களின் நிலை இப்படி என்றால் நமது நிலை என்ன?
- ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. ஐவேளைத் தொழுகை தொழுது கட்டுப்படுகின்றோமா?
- எவ்வாறு தொழ வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. அவ்வாறு தொழுது கட்டுப்படுகின்றோமா?
- பொய் பேசினால் கடுமையான பாவம் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றது. பொய்யை விட்டும் தவிர்ந்து கட்டுப்பட்டு வாழ்கின்றோமா?
- மோசடி செய்வது கடுமையான பாவம் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றது. மோசடி செய்யாமல் கட்டுப்பட்டு வாழ்கின்றோமா?
- அவதூறு கூறுவது இறைவனுடைய சாபத்தைப் பெற்றுத் தருகின்ற காரியம் என்று சொல்லித் தரப்பட்டிருக்கின்றது. அவதூறு கூறுவதிலிருந்து தவிர்ந்து வாழ்கின்றோமா?
இதுபோன்று திருமறைக் குர்ஆன் நெடுகிலும் கூறப்பட்ட கட்டளைகளுக்குக் கட்டுப்படாமல், நம்முடைய மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டு வருகின்றோம். அவ்வாறில்லாமல், நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலகட்டங்களில் என்னுடைய இறைவனின் வார்த்தைக்கும், தூதரின் வார்த்தைக்கும் என்னால் இயன்ற வரை கட்டாயம் கட்டுப்படுவேன் என்ற சபதத்தை எடுத்துக் கொள்வோமாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.