115. அரஃபா, ஜபலுர் ரஹ்மாவில் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

அரஃபாவில் போய் சேர்ந்தது முதலே துஆ செய்யலாமா? ‘ஜபலுர் ரஹ்மா’ மலையடிவாரத்திலோ, அரஃபாவில் மற்ற எங்குமோ துஆ  செய்யும்போது நின்றுக்கொண்டுதான் துஆ செய்ய வேண்டுமா? இயலாதவர்கள் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாமா? அங்கு எப்போது தல்பியா சொல்லவேண்டும்? துஆ செய்யாத இடைப்பட்ட நேரங்களில் சொல்லவேண்டுமா?

பதில்

அரபாவில் திக்ரு, துஆக்கள் என்ற எந்த வணக்கத்திலும் ஈடுபடலாம். நிற்க இயலாதவர்கள்  உட்கார்ந்தும் செய்து கொள்ளலாம். துஆ செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தல்பியா சொல்லிக் கொள்ளலாம். ஜபலுர்ரஹ்மத் என்று குறிப்பிட்டு வரும்போது அங்கு துஆவைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்’ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வா’ எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்து வந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும் வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.

(முஸ்லிம்: 2137)

நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.

(நூல்: நஸயீ 2961)

இந்த ஹதீஸின் அடிப்படையில் துஆவில் ஈடுபட வேண்டும். துஆவை நின்றும், உட்கார்ந்தும் செய்யலாம்.