அப்பாவி பெண்ணை படுகொலை செய்த போலி மந்திரவாதி
அப்பாவி பெண்ணை படுகொலை செய்த போலி மந்திரவாதி
கடவுள் பக்தியை நம்பும் அப்பாவி பக்தர்களை தவறான வழியில் அழைத்துச் சென்று அவர்களை நரபலி கொடுக்கும் நிகழ்வுகள் நம் நாட்டில் பல நிகழ்ந்துள்ளன. பக்தியின் பெயரால் பாலியல் மோசடிகள், பண மோசடிகள், கொலைகள் நடந்தாலும் கூட மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரம் நடந்துள்ள ஒரு கொடூர கொலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலிச்சாமியார் ஒருவர் தன்னை நம்பி வந்த அப்பாவி பெண் பக்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு ஓடிய நிகழ்வு புதுச்சேரி பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேனி (வயது 27). இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவர்களின் வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர் கோவிந்தராசு. இவர் அந்தப் பகுதியில் பில்லி சூனியம் பேய் ஓட்டுதல் போன்ற வேலைகள் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த செப்.,19 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாக கூறிச் சென்ற கிருஷ்ணவேனி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது கணவர் அசோக் அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்தார். அவரோடு சேர்ந்து போலிச்சாமியார் கோவிந்தராசுவும் தேடியுள்ளார்.
கிருஷ்ணவேனியை தேடி கிடைக்காமல் காவல்துறையில் புகார் அளித்தார் அசோக். வழக்கைப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினருக்கு போலிச்சாமியார் கோவிந்தராசுவின் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கிருஷ்ணவேனியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் கோவிந்த ராசு. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார் கோவிந்தராசு.
பக்கத்து வீட்டில் இருந்த கிருஷ்ணவேனிக்கு ஒரு தங்கை உண்டு. தங்கைக்கு பல ஆண்டுகள் திருமணம் நடக்காமல் இருந்துள்ளது. கோவிந்தராசுவின் பில்லி சூனிய வேலைகளை அறிந்த கிருஷ்ணவேனி அவரிடம் சென்று தன் தங்கைக்கு திருமணம் தள்ளிப்போவதை தெரிவித்துள்ளார். அதைக் கேட்ட கோவிந்தராசு, உன் தங்கைக்கு தோஷம் இருக்கிறது அதைக் கழிக்க வேண்டும் என்று சொல்லி பூஜை செய்திருக்கிறார்.
கோவிந்தராசு பூஜை செய்த சில நாட்களில் கிருஷ்ணவேனியின் தங்கைக்கு திருமணம் நடந்து விட்டது. இதனால் கோவிந்தராசுவை கண்மூடித்தனமாக நம்பத் துவங்கினார் கிருஷ்ணவேனி. எதுவாக இருந்தாலும் கோவிந்த ராசுவிடம் கேட்ட பிறகே செய்யத்துவங்கியுள்ளார்.
கிருஷ்ணவேனியின் குருட்டு பக்தியை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோவிந்தராசு அடிக்கடி அசோக் வீட்டு வளாகத்தில் தட்டு தாயத்து என எதையாவது புதைத்து விட்டு உன் வீட்டுக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டார்கள் அதற்கு பூஜை பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி கிருஷ்ணவேனியிடம் பணத்தை கறக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணவேனியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி இருப்பதைக் கண்ட கோவிந்தராசு அதை எப்படியாவது அபகரிக்க நினைத்துள்ளார்.
வழக்கம் போல எதையாவது சொல்லி கிருஷ்ணவேனியிடம் தங்க நகையை வாங்கி விடலாம் என திட்டமிட்டுள்ளார். கிருஷ்ணவேயை அழைத்த கோவிந்தராசு, உன் கணவனுக்கு மிகப்பெரிய தோஷம் இருக்கிறது, அதற்கு பரிகாரம் செய்யவில்லையானால் அவர் விரைவில் செத்து விடுவார் என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டு பதறிப்போன கிருஷ்ணவேனி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
உன் தோஷம் நீங்க வேண்டுமானால் காளி கோவிலில் வைத்து தோஷம் கழிக்க வேண்டும் என்றும் அதற்காக சுமங்கலி போல உடையணிந்து உன் வீட்டில் உள்ள நகையெல்லாம் போட்டுக் கொண்டு நான் சொல்லும் இடத்திற்கு வந்து விடு என கூறியுள்ளார் கோவிந்தராசு. இதனை உண்மை என நம்பிய கிருஷ்ணவேனி தன்னிடம் இருந்த 5 பவுன் தங்க செயின் உள்ளிட்ட மற்ற நகைகளையும் அணிந்து கொண்டு வந்த கிருஷ்ணவேனியை யாரும் பார்க்காத வகையில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அமரவைத்து கரிக்கலாம்பாக்கத்திலிருந்து பாகூர் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள காளி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் கோவிந்தராசு.
அந்தப் பக்தி ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியாகும். அந்தக் கோவிலில் முன்பே தயாராக பூ பழம் எலுமிச்சை குங்குமம் என பூஜை போன்ற செட்டப்களை ஏற்கனவே செய்து வைத்திருந்த கோவிந்தராசு, அந்த இடத்தில் கிருஷ்ணவேனியை அமரவைத்து கைகளைக் கட்டியுள்ளார் கோவிந்தராசு. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யும் படி கிருஷ்ணவேனியிடம் சொல்ல அவரும் அதுபோல செய்துள்ளார்.
அப்போது கோவிந்தராசு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணவேனியின் கழுத்தை பலங்கொண்டு அறுத்துள்ளார். கழுத்து துண்டிக்கப்பட்டதால் கத்தக்கூட முடியாமல் அப்படியே சரிந்து விழுந்து இறந்துள்ளார் கிருஷ்ணவேனி. கிருஷ்ணவேனி இறந்து போனதை உறுதிப்படுத்திக் கொண்ட கோவிந்தராசு, நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டார். அதன்பிறகு அசோக் தன் மனைவியை காணாமல் தேடும் போது அவரோடு சேர்ந்து தேடுவது போல நடித்துள்ளார் கோவிந்தராசு.
அதன்பிறகு காவல்துறையின் விசாரணையில் மாட்டிக் கொண்டு தற்போது சிறையில் இருக்கிறார். ஆன்மீகம் என்பது ஒரு மனிதனைப் பண்படுத்த வேண்டுமே தவிர அவரை பழி வாங்கிவிடக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. கிருஷ்ணவேனி தன் தங்கைக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று கோவிந்தராசுவிடம் தோஷம் கழித்து அதன் பிறகு தன் தங்கைக்கு திருமணம் நடந்ததாக நம்பியுள்ளார்.
ஆனால் கோவிந்தராசுவிடம் தோஷம் கழிக்காமல் இருந்திருந்தால் கூட அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவரின் தங்கைக்குத் திருமணம் நடந்திருக்கும் என்பதே உண்மை. கோவிந்தராசுவைப் போன்ற போலி சாமியார்கள், பக்தியை நம்பி வரும் அப்பாவி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த சம்பவங்கள் இதுபோல பல நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மறைவானவற்றின் ஞானம் படைத்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை நம்பினால், மனிதர்கள் என்பதை விட அதைத் தாண்டி வேறு எந்த ஞானமும் இல்லை என்று நம்பினால் மட்டும்தான் பக்தியின் பெயரால் இதுபோன்ற கொடூர கொலைகளை நடைபெறுவதைத் தடுக்க முடியும். மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்: 6:59) ➚
Source : unarvu : ( 05/10/18 )