அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்

பயான் குறிப்புகள்: கொள்கை

முன்னுரை

ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு பிறந்த, அப்துல் காதிர் ஜீலானி என்ற அறிஞரின் பெயரால் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களை இறைவன் அளவுக்கு உயர்த்தியும் அவர்களிடம் எதையும் கேட்கலாம் என்றும் அவர்கள் நம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் பல ஆதாரமற்ற கதைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் உலாவரச் செய்துள்ளனர்.

ஆனால் அந்த அறிஞர் இவர்களின் இந்த செயலுக்கு முற்றிலும் மாற்றமாக, ஓரிறைக் கொள்கை போதித்தவராகவும் திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியவராகவும் அவரின் நூல்களிலேயே தெளிவாக நாம் காணமுடிகிறது. அவற்றில் சில..

இறைவனல்லாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே!

இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்து விட்டாய். இறைவனிடமே முறையிடு. படைத்தவனை விடுத்து படைக்கப்பட்டவர்களிடம் நீ முறையிடாதே! அல்லாஹ் தான் (அனைத்திற்கும்) சக்தி பெற்றவன். மற்றவர்களுக்கோ எந்தச் சக்தியுமில்லை.

(நூல்: அல்பத்ஹுர்ரப்பானீ)

அல்லாஹ் அல்லாதவர்களிடம் அழைப்பவன் நயவஞ்கன்

“என் சொல்லைக் கேளுங்கள்! நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவன். அவனுக்கு வழிப்பட்டு நடப்பதற்கும், அவனது வாசலுக்கும்தான் உங்களை நான் அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்காமல் தன் பக்கம் அழைப்பவன் முனாபிக் (எனும் வேஷதாரி) ஆவான்.

(நூல்: அல்பத்ஹுர்ரப்பானீ)

அல்லாஹ்வைத் தவிர உதவியாளன் யாரும் இல்லை. அவன் மூலமே எல்லாக் கவலைகளும் சோதனைகளும் விலகும்.

வல்லமையும் கண்ணியமுமிக்க அல்லாஹ்வின் அச்சத்தை விட்டுவிடாதே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நீ அஞ்சாதே! அல்லாஹ்வைத் தவிர எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடு! அவன் மீது மட்டுமே நம்பிக்கை வை! அவனிடமிருந்தே எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறு! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் பற்றிப் பிடிக்காதே! தவ்ஹீத்! தவ்ஹீத்!

(நூல்: அல்பத்ஹுர்ரப்பானீ)

விதியை மீறி யாரும் எதையும் தரமுடியாது

விதிப்பலகையில் இறைவனால் எழுதப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விதியிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இறைவன் விதிக்காத ஒன்றை ஒரு மனிதனுக்கு வழங்க படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெற்றிருக்கவில்லை. இறைவன் விதிக்காத ஒரு தீமையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தி விட படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெறாது.

(நூல்: குன்யத்துத் தாலிபீன்)

இறைவன் (மனிதர்களின்) உணவைப் பங்கிட்டு நிர்ணயித்து விட்டான்; அதைத் தடுப்பவன் எவனும் இல்லை. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது குறையப் போவதுமில்லை, குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கூடப் போவதுமில்லை. கஷ்டம் என நிர்ணயிக்கப்பட்டது சுகமளிப்பதாக மாறப் போவதில்லை. இன்பம் என நிர்ணயிக்கப்பட்டது துன்பமாக மாறப் பொவதுமில்லை.

(நூல்: குன்யத்துத் தாலிபீன்)

நாளை நடப்பதை அறிவேன் என்று கூறுபவன் வழிகெட்டவன்

ஒரு பெரியார் நடந்ததையும், நடக்கவிருப்பதையும் அறிவார் என்ற கொள்கையும், வழிகெட்ட 72 கூட்டத்தினரின் கொள்கைகளில் ஒன்றாகும்.

(நூல்: குன்யத்துத் தாலிபீன்)

அல்லாஹ்வுக்கு நிகரான வார்த்தைகளை மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு நிகரான பெயர்கள் சூட்டுவதும், பட்டப்பெயர்கள் சூட்டுவதும் கூடாத ஒன்றாகும்.

(நூல்: குன்யத்துத் தாலிபீன்)

வழிகெட்ட கொள்கை

இறந்தவர்கள் இந்த உலகத்துக்கு திரும்பி வருவார்கள் என்ற கொள்கை வழிகெட்ட ராபிளியாக் கூட்டத்தாரின் கொள்கையாகும்.

(நூல்: குன்யத்துத் தாலிபீன்)

மத்ஹப் வழியை விட்டுவிடு, நபிவழியை மட்டுமே பின்பற்று

திருக்குர்ஆனின் அடிப்படையில் செயல்படுவது “அல்லாஹ்வின் அருகாமையில் உன்னை நிறுத்தும்! நபிவழியின் பிரகாரம் செயல்படுவது, நபியின் அருகே உன்னை நிறுத்தும்!

குர்ஆனை மனனம் செய்கிறாய்! அதன்படி செயல்பட மாட்டேன் என்கிறாய்! நபியின் சுன்னத்தை மனனம் செய்கிறாய்! அதன்படி செயல்படுகிறாய் இல்லை! ஏன் இவ்வாறு செய்கிறாய்?

(நூல்: அல்பத்ஹுர்ரப்பானீ)

ஏழையே! பயனற்ற பேச்சுக்களை விட்டுவிடு! மேலும் மத்ஹபு வெறியையும் விட்டு விடு!

(நூல்: அல்பத்ஹுர்ரப்பானீ)

குர்ஆனையும், நபிவழியையும் உனக்கு முன்னால் வைத்துக் கொள்! அதன்படி செயல்படு. அவர் சொன்னார்; அதில் சொல்லப்பட்டுள்ளது என்பது போன்ற கூற்றில் நீ மிரண்டு ஏமாந்துவிடாதே!

(நூல்: குன்யத்துத் தாலிபீன்)

இன்று அவர் பெயரால் உள்ள கட்டுக் கதைகளில் சில.
துறவு நிலை

மாபெரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள்.

அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள்.

மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் உளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபுஹ் தொழுகையையும் தொழுவார்கள்.

ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள்.

முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை

ஸைய்யதுனா முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார்.

இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம், அவர் சொன்னார்: “நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும். நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹிய்யதீன் (மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) ஆவீர்கள்” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார்.

அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்

கௌஸுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 89 ஆம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள்: “எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள்.

மறைவு

40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த குதுபுர் ரப்பானி முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் “சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது.

கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91 வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்களாம்.

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்களாம்.

  •  “என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி வருவேன்”என்றும்,
  • “எனது அனுமதியுடன் தான் சூரியன் சந்திரன் உதிக்கின்றன” என்றும்,
  • “உலகில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடப்பதில்லை” என்றும் அவர்கள் கூறியதாக நம்பப்பட்டும் வருகின்றது.

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது எந்த நூலிலும் இவ்வாறு கூறியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் எழுதப்பட்டுள்ள எந்த நூற்களிலும் அவர்கள் இப்படிச் சொன்னதாக ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை.

மாறாக ஹிஜ்ரீ-ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெரியார் இந்த ஷிர்க்கான சொற்களைச் சொன்னதாக 1100-ல் எழுதப்பட்ட மவ்லிது கிதாபுகளில் தான் காணப்படுகின்றது. அவர்களின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப்பின் வந்தவர்கள்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.

அவர்கள் மரணமடைந்து 600 ஆண்டுகளாக, “அவர்கள் இப்படிச் சொன்னதாக” எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. இதுவே திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுக் கூறிய பொய்கள் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரமாகும்.

மாறாக இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கின்ற விதத்தில்தான், அவர்களே எழுதிய “குன்யதுத்தாலிபீன்” என்ற நூலில் காணப்படுகின்றது. ஆதாரப்பூர்வமாக தொகுக்கப்பட்ட அவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய “ஃபுதூஹுல் கைப்” “அல்ஃபத்ஹுர்ரப்பானி” ஆகிய நூல்களும், இந்தப் பொய்யான தகவல்களை மறுக்கும் விதமாகவே அமைந்துள்ளன.