அபூபக்கர் தர்மம் – ஈமான் – குகை
அபூபக்கர் தர்மம்
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை. எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன். உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது போன்று (பாதியை வைத்துவிட்டு வந்துள்ளேன்) என்று கூறினேன். அபூபக்ர் தம்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்துவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வைத்துவிட்டு வந்தேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் அபூபக்ரை எந்த (நன்மையான) விஷயத்திலும் என்னால் முந்தவே முடியாது என்று நான் கூறிக் கொண்டேன்.
நூல் : திர்மிதி (3608)
இந்த செய்தியில் ஹிஷாம் பின் சஃத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் முயீன் அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகிய இமாம்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி முஸ்னத் பஸ்ஸாரில் இஸ்ஹாக் பின் முஹம்மத் என்பவரின் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ மற்றும் இமாம் நஸயீ ஆகியோர் கூறியுள்ளார்கள்.
அபூபக்கர் ஈமான்
இந்தச் சமுதாய மக்களின் ஈமானுடன் அபூபக்ரின் ஈமான் (தராசில்) வைக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மிகைத்து நிற்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை ரவ்வாத் பின் ஜர்ராஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் மூளை குழம்பியவர் என்று இமாம் புகாரி அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விடப்பட வேண்டியவர் என்று இமாம் தாரக்குத்னீ கூறியுள்ளார். எனவே இச்செய்தி பலவீனமானது.
குகை
நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ர) அவர்கள் ஸவ்ர் குகைக்குள் நுழைந்தார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் குகைக்குள் இருந்த எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட்டு மீதமிருந்த ஒரு ஓட்டையை தம் காலால் அடைத்துக் கொண்டார்கள். அப்போது ஒரு பாம்பு அவர்களைக் கொட்டியது. தம் மடியில் உறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை எழுப்ப மனமில்லாமல் அபூபக்ர் (ர) அவர்கள் வேதனையைத் தாங்கிக் கொண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் தம் எச்சிலை பாம்பு கடித்த இடத்தில் தடவி விஷத்தை எடுத்தார்கள் என்று ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இந்நிகழ்விற்குரிய எந்த அறிவிப்பாளர் தொடரையும் நாம் காணவில்லை. இச்செய்தியில் தவறுகள் இருப்பதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது பிதாயதுன் நிஹாயா எனும் வரலாற்று நூல் கூறியுள்ளார். எனவே இது சரியான தகவல் அல்ல.
இருவரும் குகைக்குள் நுழைந்த பிறகு குகைக்கு வெளியே சிலந்தி ஒன்று வலை பின்னியதால் குகைக்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க முடியாது என்று கருதி எதிரிகள் குகைக்குள் நுழையாமல் சென்று விட்டார்கள் என்ற தகவலும் பரவலாக மக்களுக்கு மத்தியில் பேசப்படுகிறது.
இச்செய்தி முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் பின் ஸஃபர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படவில்லை என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.