அபயம் பெற்ற அற்புத பூமி
மக்கள் விரும்பிச் செல்கின்ற இடங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டத்தை மக்காவில் உள்ள இறையில்லமான கஃபாவில் நம்மால் காண முடிகிறது.
மக்கள் உள்ளங்களை ஈர்க்கும் புனிதத் தலமாகவும் பாதுகாப்பு மையமாகவும் இதை ஆக்குமாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ததின் விளைவால் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போகக் கூடிய இடமாக இன்றைக்கு கஃபதுல்லாஹ் இருந்து கொண்டிருக்கிறது.
“இறைவா! இவ்வூரை பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!” என்று இப்ராஹீம் கூறிய போது, “(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது” என்று அவன் கூறினான்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களின் உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لَهَا وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ – عَلَيْهِ السَّلاَمُ – لِمَكَّةَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காகப் பிரார்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிராத்தித்தது போன்று நான் மதீனாவிற்காக அதன் ஸாஉ, முத்து ஆகியவற்றில் (வளம் ஏற்பட) பிரார்த்தித்தேன்.
அறி: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: (புகாரி: 2129)
மக்களின் உள்ளங்களைக் கவரக்கூடிய பல அம்சங்களை அல்லாஹ் இந்த ஆலயத்தில் ஏற்படுத்தி இருக்கிறான். இந்த அம்சங்கள் மக்களைக் கவர வேண்டும் என்றால் அச்சமற்ற பாதுகாப்பான நிலை அங்கு அவசியம் நிலவ வேண்டும். அப்போது தான் மக்கள் இந்த இடத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாகச் செல்வதற்கு முன்வருவார்கள்.
பொதுவாகக் கூச்சல், குழப்பம், சண்டை சச்சரவுகள் இல்லாமல் பயமற்ற நிலையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று மனிதர்கள் எல்லோரும் விரும்புகிறார்கள்.
பாதுகாப்பும் நிம்மதியும் அற்ற இடம் எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் அங்கு மக்களை வரவிடாமல் பயம் தடுத்து விடுகிறது.
இந்தியாவில் தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரத்து மிகவும் குறைந்திருக்கிறது. இந்த நாட்டிலே கண்ணையும் நெஞ்சையும் கவரும் பல அம்சங்கள் இருந்தும் கூட முன்பு போல் வெளிநாட்டுப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகை தருவது கிடையாது.
நம் நாட்டில் பெருகி வரும் வன்முறைகளும் குண்டு வெடிப்புகளும் தான் அயல்நாட்டவர்களின் வருகை தடை படுவதற்குக் காரணமாக இருக்கிறது. அண்டை நாடான இலங்கையில் இயற்கை வளம் நிறைந்திருந்தாலும் அங்கு நடக்கும் யுத்தத்தின் காரணமாக அமைதியற்ற நிலையில் மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் இவர்களுக்கு இந்த உலகமே இருண்டு விடுகிறது.
ஒரு வழிபாட்டுத்தலம் பாதுகாப்புத் தன்மையை இழந்து விட்டால் என்ன கதிக்கு ஆளாகும் என்பதைப் புரிந்து கொள்ள அண்மையில் இராஜஸ்தானில் ஏற்பட்ட கொடூரமான சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்.
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக புரளி கிளம்பியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார்கள். நூற்றுக்கணக்கானோர் நெரிசலில் சிக்கி மாண்டதால் வழிபாட்டு ஆலயம் மையவாடியாகக் காட்சியளித்தது. மக்களின் வாழ்வும் விருப்பமும் பாதுகாப்பான இடத்தை நோக்கியே இருப்பதால் உலக மக்கள் ஒன்று கூடும் இடமான மக்காவை அபயமளிக்கும் பூமியாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். மக்காவில் உள்ள அல்லாஹ்வின் ஆலயம், அழிவுகள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.
“நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர் வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனிவர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!
புனிதமிக்க கஃபதுல்லாஹ்வின் பாதுகாப்புத் தன்மையை விவரிக்கும் சில நிகழ்வுகளை அல்லாஹ் வரலாற்றில் நிகழ்த்தியிருக்கிறான். அல்லாஹ்வின் இந்த ஆலயமும் இதைச் சார்ந்து இருப்பவர்களும் இறைவனால் பாதுகாக்கப்பட்டு நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததைப் பின்வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
மனிதனும் செடிகொடிகளும் இல்லாத ஒரு பாலைவனமாக கஃபதுல்லாஹ் இருந்த போது இறை உத்தரவுப்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவியையும் சிறு குழந்தையாக இருந்த இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் ஆலயத்தில் விட்டுவிட்டு வந்தார்கள். தன் மனைவி மக்களைக் காக்கும் பொறுப்பை அல்லாஹ்விடத்திலே ஒப்படைத்தார்கள்.
கைக்குழந்தையுடன் அந்தப் பாலைவனத்தில் தனியாக விடப்பட்ட ஹாஜர் (அலை) அவர்களுக்கு வானவர் ஒருவர் கூறிய ஆறுதல் இந்த ஆலயத்தின் தனித்தன்மையை உணர்த்துகிறது.
அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) அருந்தினார்கள். தம் குழந்தைக்குப் பாலூட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், “நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான்” என்று சொன்னார்.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 3364)
நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் மக்காவில் உள்ள இறை ஆலயத்தை இடித்துத் தகர்ப்பதற்காகப் படை திரட்டி வந்தான்.
சூடான கற்களை எரியும் பறவைகளால் இவனையும் இவனது படையையும் அல்லாஹ் அழித்து, தன் இல்லத்தைப் பாதுகாத்தான். இந்த நிகழ்வை திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள், மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2434)
கியாமத் நாள் வரை இந்த ஆலயம் அபய பூமியாகவே விளங்கும். இதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். உலகின் எல்லா பகுதிகளுக்கும் தஜ்ஜால் சென்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இறையில்லம் உள்ள மக்காவிலும் புனித நகரமான மதீனாவிலும் இவனால் நுழைய முடியாது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்!
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1834)
«يَغْزُو جَيْشٌ الكَعْبَةَ، فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ، يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ» قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، وَفِيهِمْ أَسْوَاقُهُمْ، وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ: «يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ»
“ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடை வீதிகளும் இருக்குமே!” என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கு ஏற்ப எழுப்பப்படுவார்கள்!” என்றார்கள்.
அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 2118)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணி வகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றிவிடுவான்!
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 1881)
பொதுவாக ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் திரளும் போது அங்கு சண்டை சச்சரவுகளும் கூச்சல் குழப்பங்களும் திரண்டு விடுகிறது. மக்கள் அதிகமாகக் கூடுகின்ற இடங்களில் இவற்றை நம்மால் காண முடிகிறது.
லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற கஃபதுல்லாஹ்விற்குள் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் நிம்மதியை நிலைநாட்டுவதற்காகவும் புனித மிக்க இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.
இந்த ஆலயத்தின் புனிதத்தைக் கருதி இங்கே எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புற்பூண்டுகளுக்கும் செடிகொடிகளுக்கும் உயிர் இருப்பதால் இவற்றையும் கிள்ளக் கூடாது.
மற்ற இடங்களில் வேட்டையாடுவது போல் இங்கே வேட்டையாடக் கூடாது.
மற்ற இடங்களில் அனுமதிக்கப்பட்ட இந்தக் காரியங்களை புனித மிக்க இந்த ஆலயத்தில் செய்வது கூடாது.
இதைக் கடைப்பிடித்து புற்பூண்டுகளுக்கும் உயிரிகளுக்கும் நாம் இடஞ்சல் செய்யாமல் இருக்கும் போது மனிதர்களுக்கு இடஞ்சல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளி அளவு கூட நம் மனதில் எழ விடாமல் இந்தச் சட்டங்கள் தடுத்து விடுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போர் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்!.
இங்குள்ள முட்களை வெட்டக்கூடாது; வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது; பிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது; இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது!” என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், “இத்கிரைத் தவிர!” என்று பதிலளித்தார்கள்.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1834)
சில நேரங்களில் அமைதி நிலைநாட்டுவதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். மக்களுக்குக் கேடு தரக்கூடிய வஸ்துக்கள் இந்தப் புனித ஆலயத்திற்குள் நுழைந்து விட்டால் நிம்மதியை நிலை நாட்டுவதற்காக அவற்றைக் கொல்வதற்கு அனுமதி உள்ளது.
அநியாயக்காரர்கள் வேண்டுமென்றே போர் செய்வதற்காக இந்த ஆலயத்திற்குள் வந்தால் அக்கிரமத்தை ஒடுக்கி அபயத்தை ஏற்படுத்துவதற்காக இந்த ஆலயத்திற்குள்ளே அவர்களை எதிர்த்துப் போரிடலாம்.
எதிரிகளைக் கொன்று இந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தலாம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது.
மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவை! இஹ்ராம் கட்டியவர் அவற்றைக் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்.
அறி: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 1829)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமைக் காலக் கலாச்சாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 6882)
புனித மிக்க இறை ஆலயத்தில் ஒருவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். தொழ நினைப்பவரை எவரும் தடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து முனாஃபின் மக்களே! இந்த ஆலயத்தில் இரவிலோ அல்லது பகலிலோ எந்த நேரத்தில் ஒருவர் இதனை தஃவாப் செய்து தொழ நினைத்தாலும் அவரைத் தடுக்காதீர்கள்.
அறி: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)
நூல்: (திர்மிதீ: 868) (795)
இத்தகைய சிறப்பு மிக்க பூமியை, கஅபாவை ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ..!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.