அனஸ் பின் நள்ர் பற்றிய இறைவசனம்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின் போது முஸ்லிம்கள் தோல்வி யுற்ற நேரத்தில் அவர், இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் அவருக்கெதிரில் வரக் (கண்டு), சஅத் பின் முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன் என்று கூறினார். சஅத்
(ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நாங்கள் அவர் உட-ல் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரது உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப் பட்டிருக்கக் கண்டோம். அவருடைய சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரது சகோதரி கூட அவரது விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.
அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறை நம்பிக்கையாளர் களிடையே உள்ளனர்… என்கிற (33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.