அதிகரிக்கும் குற்றங்கள் !

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

அதிகரிக்கும் குற்றங்கள் ! தடுக்கும் வழியென்ன ?

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் வன்முறை, திருட்டு, கொலை, விபச்சாரம், கடத்தல் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றைத் தடுக்க இயலாமல் காவல் துறையும், அரசாங்கமும் தடுமாறி வருகின்றன. குற்றங்கள் அதிகரிக்கும் போக்கைச் சென்றவாரம் நடைபெற்ற சில குற்றச் செயல்களைப் பட்டியலிடுவதின் மூலம் அறியலாம்.

செல்போனால் நடந்த கொலை

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேப்பங்கல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(13) என்ற மாணவன், பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புப் படித்து வந்தார். சந்தோஷ் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களிடம் செல்போன் வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் சந்தோஷை சக மாணவர்கள் 2 பேர் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சங்கிலி பறிப்பு

செங்குன்றத்தை அடுத்த ஆட்டதாங்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரி என்ற மூதாட்டியிடம் முகவரி கேட்பதாகக் கூறி அவரிடம் இருந்த 9 பவன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் வழிப்பறி செய்துள்ளார்.

புகையிலைப் பொருட்கள் பதுக்கல்

சென்னை திருவல்லிக்கேணி போலீசார் பல்லவன் சாலையில் உள்ள சுரேஷ் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். இதில் அவரிடமிருந்து இரண்டே கால் இலட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் எனப்படும் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அழுகிய நிலையில் ஆண் பிணம்

சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் ரயில்வே குடியிருப்பில் உள்ள முட்புதரில், அழுகிய நிலையில் முப்பது வயது மதிப்புள்ள ஆண் பிணத்தைக் காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் நடைபெற்றவை

மேலே குறிப்பிட்ட குற்றங்கள் யாவும் டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றவை. ஓரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காவல் துறை மூலம் விசாரணை செய்யப்பட்டு பத்திரிக்கைகளில் வந்த செய்திகளில் இருந்து உதாரணத்திற்குக் கொடுக்கப்பட்டவைகளே இந்தச் செய்திகள்.

இதுபோன்று ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான குற்றச் செயல்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்திற்கும் கடுமையான சட்டங்கள் பல நாடுகளில் இல்லாமல் இருப்பதே காரணமாக அமைந்துள்ளது. ஆனால் அதே சமயம் இஸ்லாமியச் சட்டம் நடைமுறையில் உள்ள முஸ்லிம் நாடுகளில் பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் மிக மிகக் குறைவாகக் காணப்படுவதாக ஐ.நாவின் ஆய்வறிக்கைக் குறுப்பிடுகிறது.

பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகள்

ஐ.நாவின் ஆய்வறிக்கை ஒன்று பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கின்றது. அப்பட்டியலில், அமெரிக்கா இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன. மேலும் அவ்வறிக்கையில் இந்தியாவில் 22 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில்

நமது நாட்டில் 7 இலட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளில் 15 இலட்சம் பேர் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாலியல் வன்முறை தொடர்பான குற்றங்கள் இஸ்லாமியச் சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில் மிகமிகக் குறைவு உதாரணத்திற்கு, சவுதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் 0.5 சதவீதம் மட்டுமே உள்ளது. கத்தாரில் கொலைச் சம்பவங்கள் 0.5 சதவீதம்.கொள்ளைச் சம்பவங்கள் ஒரு இலட்சத்திற்கு 25 பேர் என்ற அடிப்படையில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடுமையான சட்டங்கள் தேவை

குற்றச் செயல்கள் இஸ்லாமிய நாடுகளில் குறைவாக நடப்பதற்கும், மற்ற நாடுகளில் அதிகமாக இருப்பதற்கும் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் முக்கிய பங்கு வகிக்கிறன. எடுத்துக்காட்டாக, 2011 இல் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவேரைத் தண்டிக்கக் குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் (Protection of Children Against Sexual Offences Bill, 2011) மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி, ஒருவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 50000 அபராதமும் வசூலிக்கலாம். வாய்வழி பாலியல் உறவுக்குக் குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்.

குழந்தைகளிடம் தவறான முறையில் (Fondling) நடக்கும் பெரியவர்களின் செயல்கள் பாலியல் தொந்தரவாகக் கருதப்படும். இச்செயல்களுக்குக் குறைந்த பட்சத் தண்டனையாக 3 வருடம் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைத் தண்டனையும் அபராதமும் ஒருவனை எப்படித் திருத்தும்? ஆண்டுக் கணக்கில் குற்றவாளிக்குச் சோறு போட்டு, வேலை செய்ததற்குச் சம்பளம் அளிக்கும் சட்டத்தின் மூலம் அவன் திருந்தி விடுவானா? அல்லது உண்டு கொழுத்து மீண்டும் அந்தத் தவறைச் செய்வானா? இதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு இச்சட்டத்தின் மூலம் தவறு செய்வதற்கு அச்சம் ஏற்படுமா?

அந்த அச்சம் இல்லாத காரணத்தினால் தான் எட்டாம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்படுகிறான். மேலும், இச்சட்டத்தின் பகுதி 7ல் 16 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக் கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்கவே இது உதவுகிறது. உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம் ஆனால் இஸ்லாமியச் சட்டம் இதற்கு நேர் எதிரானது.

கற்பழிப்பிற்கு மரண தண்டனையும்

திருடுபவனுக்கு மணிக்கட்டுடன் கையை வெட்டும் தண்டனையும் வழங்கப்படுகிறது. இன்னும் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதற்குத் தகுந்தாற்போல் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. இச்சட்டங்களைப் பார்க்கும் மற்றவர்கள் அக்குற்றத்தில் ஈடுபட அச்சப்படுவார்கள். இதன் காரணமாகவே இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டுள்ள நாடுகளில் குற்றங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.

இச்சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதை மீண்டும் நிரூபணம் செய்கின்றன. இந்த உண்மையைக் காணும் ஆட்சியாளர்கள் இஸ்லாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் அன்றாடம் நடக்கும் குற்றங்களும் ஐ.நா சபையின் அறிக்கைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இஸ்லாமியச் சட்டத்தை உலக நாடுகள் அமல்ப்படுத்தும் நாள் என்று வருமோ?