99) அடக்கம் செய்யப்பட்ட உடலைத் தோண்டி எடுத்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

என் தந்தையுடன் மற்றொருவரும் சேர்ந்து ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்டார். இதை என் மனம் ஒப்பவில்லை. எனவே என் தந்தையின் உடலை வெளியே எடுத்துத் தனியாக வேறு கப்ரில் மறு அடக்கம் செய்தேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(புகாரி: 1352)

மற்றொரு அறிவிப்பில் ஆறு மாதம் கழித்து அவரது உடலை வெளியே எடுத்தேன். அவரது காதைத் தவிர உடலின் மற்ற பாகங்கள் சற்று முன் வைக்கப்பட்டது போல் இருந்தன என்று கூறப்படுகிறது. (புகாரி: 1351)

உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்கள் இருவருக்கு ஒரு கப்ர் என்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டனர். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் மனம் ஒப்பாமல் தம் தந்தையை மட்டும் வெளியே எடுத்து தனி கப்ரில் அடக்கம் செய்தனர். இது உஹதுப் போர் நடந்து ஆறு மாதத்தில் நடந்துள்ளது. இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தனர். இதன் பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களின் இந்தச் செயல் நபியவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

இது போன்ற சாதாரண காரணத்துக்காக உடலை வெளியே எடுக்கலாம் என்றால் மரணத்தில் சந்தேகம் ஏற்படும் போது உண்மையைக் கண்டறிவதற்காக வெளியே எடுப்பது தவறில்லை என்பதை அறியலாம்.