95) அடக்கம் செய்யக் கூடாத நேரங்கள்
சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
இந்த மூன்று நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யலாம்.
இரவில் அடக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்வது தவறில்லை.
தமது தோழர் ஒருவர் மரணித்து, குறைவான அளவு கஃபனிடப்பட்டு இரவில் அடக்கம் செய்யப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார்கள். ‘நான் தொழுகை நடத்தும் வரை இரவில் ஒருவரை அடக்கம் செய்ய வேண்டாம்; இதற்கான அவசியம் ஏற்பட்டால் தவிர’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
இரவில் அடக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்றாலும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.