அஞ்சா நெஞ்சம் கொள்வோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

உலகில் மனிதர்கள் பல வகையான ஏற்றத்தாழ்வுகளுடனே வாழ்ந்து வருகின்றனர். குட்டை, நெட்டை, கறுப்பு, சிவப்பு, ஏழை, பணக்காரன் போன்ற எண்ணற்ற ஏற்றத் தாழ்வுகள் மனிதர்களுக்கிடையில் உள்ளன. ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாக, சிறு துரும்பைக் கண்டால் கூட பதறுபவர்களாக இருப்பார்கள். மறு சிலரோ எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை சட்டை செய்யாதவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறாக மனிதர்களில் எதையும் தைரியத்துடன் எதிர் கொள்பவர்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள் என இரு வகையினர் இருப்பதை நடைமுறையில் காண்கிறோம்.

மனிதர்களின் குறைபாடுகளில் முக்கியமானதும், களையப்பட வேண்டியதும் அச்ச குணமே ஆகும். மனதில் பயம் இருப்பவர்களால் எந்தச் செயலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. அவர்களால் எதிலும் வெற்றி பெற முடியவதில்லை. ஆகவே இஸ்லாம் முஸ்லிம்களுக்கு தைரியத்தை அறிவுறுத்துகிறது.

பெரும் பாவம்

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் கோழையாக இருக்கக் கூடாது. தாம் களமிறங்கும் எந்த ஒரு நல்ல செயலிலும் அஞ்சா நெஞ்சத்துடன் இறுதி வரை இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களுக்கு அது முன் வைக்கும் அறிவுரையாகும்.

எதற்கெடுத்தாலும் அஞ்சுவதைத் தவிர்த்து மன தைரியத்துடன் ஒவ்வொரு செயலையும் அணுக வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. கோழைத்தனத்தை வன்மையாகப் பழிக்கின்றது.

எனவே தான் போர்க்களத்தில் கோழைத்தனமாகப் புறமுதுகிட்டு பின்வாங்குவதை பெரும்பாவத்தில் ஒன்றாக நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்” என்று கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2766) 

கோழைத்தனத்தை இஸ்லாம் எந்த அளவு பழிக்கின்றது என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

நபி மூஸா (அலை) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட துவக்கம், கொடிய அரசனான ஃபிர்அவ்னிடம் ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொல்லுமாறு இறைவன் கட்டளையிட்ட சமயம், அடுத்து சூனியக்காரர்களுடனான போட்டி ஆகிய சந்தர்ப்பங்களில் மூஸா நபியவர்கள் தைரியமின்றி அச்சத்துடன் காணப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

يٰمُوْسٰۤى اِنَّـهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ‏

وَاَ لْقِ عَصَاكَ‌ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ يٰمُوْسٰى لَا تَخَفْ اِنِّىْ لَا يَخَافُ لَدَىَّ الْمُرْسَلُوْنَ ‌ۖ

மூஸாவே! நான் தான் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ். உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். “மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்.”

(அல்குர்ஆன்: 27:9,10)

اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى
قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ
وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ
وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ
يَفْقَهُوْا قَوْلِیْ
وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏
هٰرُوْنَ اَخِى ۙ‏
شْدُدْ بِهٖۤ اَزْرِىْ
وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ
كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا
وَّنَذْكُرَكَ كَثِيْرًا ؕ‏
اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا
قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى‏

நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்) “என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக. நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்.) “மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 20:24-36)

قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى
قَالَ بَلْ اَلْقُوْا‌ۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى
فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى‏
قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى‏

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். “அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்” என்று கூறினோம்.

(அல்குர்ஆன்: 20:65-68)

இந்தச் சந்தர்ப்பங்களில் அல்லாஹ் அன்னாரது அச்சத்தைப் போக்கி மன தைரியத்தை ஊட்டுகின்றான். அதன் பிறகு ஒரு போர் வீரனைப் போன்று தமது பிரச்சார வாளைச் சுழற்றினார்கள் என்ற இந்த வரலாற்றுச் செய்தியும் ஒரு முஸ்லிம் எதற்கும் அஞ்சலாகாது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்வதாக அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்

மேலும் எதற்கும் அஞ்சாத உறுதியான முஸ்லிமே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
الْمُؤْمِنُ الْقَوِىُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِى كُلٍّ خَيْرٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5178) 

அல்லாஹ்வின் தூதர் ஓர் அஞ்சா நெஞ்சர்

இன்றைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தமது தொண்டர்களால் அஞ்சா நெஞ்சர், போர்வாள் போன்ற பல அடைமொழிகளோடு அழைக்கப்படுவதை அறிகிறோம். அவ்வாறு அழைக்கப்படும் தலைவர்களில் பெரும்பாலானோர் உண்மையில் அவ்வாறிருக்க மாட்டார்கள். கட்சிக்கு ஒரு துன்பம் அல்லது தனக்கு ஒரு துன்பம் என்றவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அனைத்தையும் அம்போ என விட்டு விட்டு ஓடிவிடுவார்கள்.

அல்லது என்னை விட்டு விடுங்கள் என கதறி அழும் பரிதாப காட்சியையைத் தான் காண முடிகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க இந்த அற்பர்களை அஞ்சா நெஞ்சர் என வர்ணிப்பது நகைச்சுவைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. தலைவனே இப்படி என்றால் இவரது தொண்டர்களின் வீரத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை.

ஆனால் நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துணிவு மிக்க தலைவராகத் திகழ்ந்தார்கள்.

பத்ருக் களம் நபிகளாரின் துணிச்சலுக்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.

இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களின் மீது வலிய திணிக்கப்பட்ட முதல் போர் பத்ருக் களம். எதிரிகள் ஆயிரக்கணக்கானோர் போர்த்தளவாடங்களுடன் வலிமையான நிலையில் இருந்த போதும் சொற்ப நபர்களுடன் சொற்ப ஆயுதங்களுடன் இறை உதவியின் மீதுள்ள நம்பிக்கையில் வலிமையான அந்த அணியைச் சந்திக்க தலைமை தாங்கிப் புறப்பட்டு சென்றார்கள் எனில் இது நபிகளாரின் துணிச்சலைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அது மட்டுமின்றி கோழைத்தனத்தை நபிகளார் தமது வாழ்வில் முற்றிலுமாக வெறுத்தார்கள். ஆதலால் தான் தமது துஆவில் கோழைத்தனத்தை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவதை அன்றாட வழக்கமாக்கி இருந்தார்கள்.

 أَنَسَ بْنَ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலில் இருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பது வழக்கம்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: (புகாரி: 2823) 

நபிகளாரின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் சம்பவமும் ஆதாரமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

 عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبَقَهُمْ عَلَى فَرَسٍ وَقَالَ وَجَدْنَاهُ بَحْرًا

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். “(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், “இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்” என்று கூறினார்கள்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 2820) 

இத்தகைய அஞ்சா நெஞ்சரின் தொண்டர்களான நாம் எத்தகைய துணிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்? ஆனால் நம்மில் பலரோ பேய் என்ற தவறான நம்பிக்கையினால் நடுநிசியைத் தாண்டிவிட்டால் வெளியில் வரவே அஞ்சும், தொடை நடுங்கிகளாக இருக்கிறோம் எனில் இது சரியா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எது துணிச்சல்?

இன்றைக்குத் துணிச்சல், வீரம், தைரியம் என்றாலே அடுத்தவனை அநியாயமாக அடித்து உதைப்பது என்ற அளவில் தான் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாம் இதைப் போதிக்கவில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது துணிச்சலும் அல்ல.

தைரியம், வீரம் என்பது நம் கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கும் போது அதைக் கண்டித்துக் குரலெழுப்புவது ஆகும். அந்தத் தீமைக்கு எதிராக நமது கண்டனத்தைப் பதிவு செய்வதும் தைரியத்தில் உள்ளதாகும். ஒரு முஸ்லிம் இவற்றைச் செய்வதிலிருந்து கோழையாகப் பின்வாங்கிடக் கூடாது. தவறைக் கண்டிக்கும் இத்துணிச்சலை நபியவர்கள் ஈமானில் ஒரு முக்கிய அங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்:

« مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறி: அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நூல்: (முஸ்லிம்: 78) 

சாதாரண நிகழ்வொன்று நடந்தாலே அச்சம், பயம், நடுக்கம் ஆகியவை அனைவரையும் பற்றிக் கொள்கிறது. இதை எப்படி எதிர் கொள்வது? இதை எதிர்த்தால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற தயக்கம் தடைக் கல்லாய் நிற்கிறது. இந்த தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படுமாயின் தைரியத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் துணிவுள்ளவர்களாக நாம் செயல்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் தைரியத்தில் உள்ள முக்கியமான அம்சமாகும்.

ஏனெனில் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதை சிறந்த ஜிஹாத் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

أَلَا إِنَّ أَفْضَلَ الْجِهَادِ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறி: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: (அஹ்மத்: 11143) (18074)

நபியவர்கள் ஒரு சமயம் பாதையில் நடந்து வரும் போது தம் கண்முன்ணே ஒரு வியாபாரி அநியாயமான முறையில் பொருளை விற்பதை அறிந்த போது உடனே அதைத் தட்டிக் கேட்பவர்களாக இருந்துள்ளார்கள் என்று வரலாறு நமக்குச் சான்றளிக்கின்றது.

عَنْ أَبِى هُرَيْرَةَ. أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم
مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلاً فَقَالَ « مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ ». قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ « أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَىْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّى

“நபி (ஸல்) அவர்கள் உணவுக் குவியல் அருகே சென்றார்கள். அதனுள் தன் கையைப் புகுத்தினார்கள். விரல்களில் ஈரப்பதம் பட்டது. “உணவுப் பொருள் விற்பவரே! இது என்ன?” என்று கேட்டார்கள். “இறைத்தூதர் அவர்களே! மழை பெய்து விட்டது” என்று அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அந்த ஈரம் பட்ட தானியத்தை மக்கள் பார்க்கும் வகையில் மேற்பகுதியில் நீர் வைத்திருக்க வேண்டாமா? நம்மை ஏமாற்றுகிறவர், நம்மைச் சேர்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 187) 

நாம் காணும் தீமையை நம்மால் இயன்றவரை தைரியத்துடன் தட்டிக் கேட்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துரைக்கின்றது.

தவறை உணர்த்தத் தயங்கி விடாதே!

சில நேரங்களில் அடுத்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்று நமக்கு நன்கு தெரியும். ஆனால் தவறிழைப்பவர்கள் நம்மை விட ஏதாவது ஒரு வகையில் பெரியவர்களாக இருப்பார்கள். பெரிய பதவியில் உள்ளவர்களாகவோ அல்லது பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களாக அல்லது வயதில் மூத்தவராகவோ இருப்பதால் அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டத் தயங்கி விடுவோம். அவரோ நம்மை விடப் பெரியவர்; அவருடைய தவறை நாம் எப்படி சுட்டிக் காட்டுவது என்ற அச்சமே இதற்குக் காரணம். இது தவறான பார்வையாகும். இந்த அச்சமும் ஒரு வகையான கோழைத்தனமாகும்.

தவறு செய்பவர் எத்தகையவராக இருந்தாலும் ஒரு பெரும் சமுதாயமாகவே இருந்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் மனவலிமை நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.

இஸ்லாமிய வரலாறு, பல நல்லோர்களின் வரலாறு இதைத் தான் நமக்கு உணர்த்துகின்றது.

நபிகளார் மரணித்த வேளையில் நபிகளாரின் மரணம் தொடர்பாக நபித்தோழர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. உமர் (ரலி) உட்பட பெரும்பாலான நபித்தோழர்கள் நபிகளார் இன்னும் மரணிக்கவில்லை, அல்லாஹ் அவரை மீண்டும் எழுப்புவான் என்ற தவறான எண்ணத்தில் இருந்தார்கள். இத்தகைய நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள், நபிகளார் இறந்து விட்டார்கள் என்பதை அழகான, பக்குவமான தனது பேச்சின் மூலமாக மக்கள் அனைவருக்கும் உணர்த்தினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) “ஸுன்ஹ்’ என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித் தான் – நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று தான் – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்” என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டான்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) “(நபியவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்” என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, “எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் “அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். மேலும்,

اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ

“நபியே! நீங்களும் இறக்கவிருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே’ என்னும் (அல்குர்ஆன்: 39:30) இறை வசனத்தையும், “முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ அல்லது (போரில்) கொல்லப்பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்’ என்னும் (அல்குர்ஆன்: 3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 3668)3667

அத்தனை நபித்தோழர்கள் தவறான நிலைப்பாட்டில் இருந்த போதும் நெஞ்சுறுதியோடு அவர்களின் தவறான நிலைப்பாட்டை, தனது தெளிவான பேச்சின் மூலம் அபூபக்கர் (ரலி) அவர்கள் உணர்த்தினார்கள். நபியவர்களின் இறப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அபூபக்கர் (ரலி) அவர்களின் உரை இருந்தது எனில் அதற்கு அடித்தளமாக அமைந்தது அன்னாரது மன தைரியமும் யாருக்கும் அஞ்சாத தன்மையுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இது போலவே சமுதாயம் முழுவதும் தவறில் இருந்தாலும் அதை எதிர்ப்பதற்கு அஞ்சாத நெஞ்சம் அவசியம் தேவை என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகின்றது.

முடிவுரை

அவ்வாறு ஒரு சமுதாயத்திடம் காணப்படுகின்ற தவறை நாம் எச்சரிக்கும் போது அதை சரிகாணக் கூடியவர்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பலைகளும் கிளம்பலாம். தொல்லைகள் தொடரலாம். அதை எல்லாம் எதிர்கொள்ள நெஞ்சுரம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் வேண்டும்.

அதை நபியவர்களும் நபித்தோழர்களும் பெற்றிருந்த காரணத்தினால் தான் பல்வேறு எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் தமது இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து தொய்வின்றி நிறைவேற்றலானார்கள்.

அத்தகைய அஞ்சாத நெஞ்சத்தை நாமும் பெற இறைவனிடம் வேண்டுவோமாக!

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.