அகீகாவுக்குப் பதிலாக தர்மம் செய்யலாமா?
அகீகாவுக்குப் பதிலாக தர்மம் செய்யலாமா?
நம்முடைய வணக்க வழிபாடுகளை மார்க்கம் கற்றுக் கொடுத்தவாறு அமைத்துக் கொண்டால் தான் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக் கொள்வான். அதற்குரிய நன்மையையும் கொடுப்பான்.
இறைவன் குழந்தையைத் தந்ததற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆட்டை அறுத்துப் பலியிடுவதுதான் அகீகாவாகும். இறைவனுக்காக ஆட்டைப் பலிகொடுத்தால் தான் இந்த வணக்கத்தை நாம் செய்தவராக முடியும்.
இறைவனுக்காக பிராணியை அறுப்பதும் வணக்கமாகும். தர்மம் செய்வதும் வணக்கமாகும். அகீகாவில் இந்த இரண்டு வணக்கங்களும் அடங்கியுள்ளது. இந்த இரண்டு அம்சங்களையும் செய்பவரே அகீகாவை நிறைவேற்றியராவார்.
ஒருவர் ஆடு வாங்குவதற்குத் தேவையான பணத்தை தர்மம் செய்தால் அகீகாவில் செய்ய வேண்டிய ஒரு அம்சத்தை மட்டுமே நிறைவேற்றுகிறார். பிராணியைப் பலியிடுதல் என்ற அம்சத்தை விட்டு விடுகின்றார். எனவே இவருக்குத் தர்மம் செய்த நன்மை கிடைக்குமே தவிர அகீகாவை நிறைவேற்றிய சிறப்பு கிடைக்காது.
அகீகா என்பது குர்பானி போன்றது. குர்பானி கொடுக்க நினைப்பவர் பிராணியை விலைக்கு வாங்கி அதை அறுத்தால் தான் அவர் குர்பானி என்ற வணக்கத்தைச் செய்தவராக முடியும். இதற்கு மாற்றமாக ஒரு ஆட்டுக்குரிய தொகையை தர்மம் செய்தால் அவர் இந்த வணக்கத்தைச் செய்தவராக மாட்டார்.