ஃபமன்ஷஹித என்பதற்கு சாட்சியமளிக்கிறாரோ என்று பொருளா?

கேள்வி-பதில்: பிறை மற்றும் பெருநாள்

ஃபமன்ஷஹித என்பதற்கு சாட்சியமளிக்கிறாரோ என்று பொருளா?

“ஃபமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர”  என்பதற்கு “யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ”, என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும்.

ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.

மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டால் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர் என்று பொருத்தமாக அமைந்துள்ளது. இதை விளங்காமல் உளறியுள்ளனர்.

புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸின் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.

இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.

யார் ரமளானை அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.

புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.

ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாளட்களில் பெரு நாள் ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா – மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன.

வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.