Tamil Bayan Points

09) ஹதீஸ்களில் குழப்பமா?

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

9) ஹதீஸ்களில் குழப்பமா?

குர்ஆனை விளங்குவதற்கும், இறைவனின் கட்டளைகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும் ஹதீஸ்கள் அவசியம் என்பதைக் குர்ஆன் வசனங்களிலிருந்து கண்டோம். குர்ஆனை மட்டும் பின்பற்றுவோம் என்று கூறிக் கொள்பவர்கள் ஹதீஸ்களை நிராகரிப்பதற்கு வேறு சில காரணங்களையும் கூறுகின்றார்கள்.

  • ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.
  • கருத்து தெளிவில்லாமல் உள்ளன.
  • ஹதீஸ்களின் நம்பகத் தன்மை குறைவு

போன்ற காரணங்களை முன்வைக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹதீஸ்களை உரிய முறைப்படி விளங்கினால் ஹதீஸ்கள் தெளிவானவையாகவே உள்ளன. குர்ஆனைக் கூட உரிய முறையில் அணுகாமல் தர்க்கம் செய்யும் நோக்கத்தோடு அணுகினால் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் குர்ஆனுக்கும் பொருந்துவதைக் காணலாம்.

இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதமாக உள்ளதால் அதில் தன்னிலையாகக் கூறப்படும் அனைத்தும் அல்லாஹ்வின் கூற்றாகத் தான் இருக்க வேண்டும். நான் படைத்தேன்; நாம் படைத்தோம்என்றெல்லாம் கூறப்படும் போது அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறுவதாக நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அப்படி இருந்தால் தான் அது அல்லாஹ்வின் கூற்றாக இருக்க முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் பாருங்கள்!

எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள். (என்று வானவர்கள் கூறுவார்கள்)

(திருக்குர்ஆன்:37:164,165,166.)

மேற்கண்டவாறு அல்லாஹ் கூறுவது போல் வாசக அமைப்பு இருந்தாலும் உண்மையில் இது வானவர்களின் கூற்றாகும். நாங்கள் துதிப்பவர்கள்; அணி வகுத்து நிற்பவர்கள் என்பது அல்லாஹ்வின் கூற்றாக இருக்க முடியாது. வாசக அமைப்பு அல்லாஹ்வே இவ்வாறு கூறுவது போலிருந்தாலும் வானவர்களின் கூற்றை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான் என்று புரிந்து கொள்கிறோம்.

அதனால் தான் என்று வானவர்கள் கூறுவார்கள்என்பது மூலத்தில் இல்லாமல் இருந்தும் அடைப்புக் குறிக்குள் சேர்த்துள்ளோம். வாசக அமைப்பை வைத்து குர்ஆன் தெளிவில்லை என்று யாரும் கூறுவதில்லை. சொல்லாமலே விளங்கக் கூடிய இடங்களில் இது போல் பேசுவது எல்லா மொழிகளிலும் உள்ளது தான் என்ற அடிப்படையில் சரியாக நாம் விளங்கிக் கொள்கிறோம். இது போல் தான் ஹதீஸ்களையும் அணுக வேண்டும். அவ்வாறு அணுகினால் ஹதீஸ்கள் தெளிவில்லை என்று கூற மாட்டார்கள்.

இது போல் அமைந்த மற்றொரு வசனத்தைப் பார்ப்போம்.

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை (என்று இறைவன் கூறச் சொன்னான்)

(திருக்குர்ஆன்:19:64.)

இவ்வசனத்தில் நாம் இறங்க மாட்டோம் என்பது அல்லாஹ் கூறுவதாக இருக்க முடியாது. ஜிப்ரீல் அவர்களின் கூற்றுத் தான் இது. ஜிப்ரீல் அவர்களின் கூற்று எப்படி அல்லாஹ்வின் வேதத்தில் இருக்க முடியும்? குர்ஆன் முழுவதும் ஜிப்ரீலின் கூற்று போன்ற தோற்றத்தை இந்த வாசக அமைப்பு ஏற்படுத்துகிறது. ஆனாலும் குர்ஆனில் ஜிப்ரீலின் சொந்தப் பேச்செல்லாம் இடம் பெற முடியாது என்பதால் என்று இறைவன் கூறச் சொன்னான் என்று இதைப் புரிந்து கொள்கிறோம். இது போல் மற்றொரு வசனத்தைப் பாருங்கள்!

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

(திருக்குர்ஆன்:1:4.)

குர்ஆன் அல்லாஹ்வுடைய கூற்று என்றால் உன்னையே வணங்குகிறோம் என்பதும் அல்லாஹ்வின் கூற்று என்பது போல் தான் வாசக அமைப்பு உள்ளது. ஆனால் வாசக அமைப்பைக் கவனிக்காமல் இவ்வாறு நம்மை இறைவன் கேட்கச் சொல்கிறான் எனப் புரிந்து கொள்கிறோம்.

எதிர் வாதங்களும் ஏற்கத்தக்க பதில்களும்

மேலோட்டமாகப் பார்க்கும் போது சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோன்றும். அது போன்ற சில ஹதீஸ்களைத் தான் மக்களைக் குழப்புவழ்ற்கு இவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ் கலை அறிஞர்களே கடந்த காலங்களில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதற்கான முதல் விதியே குர்ஆனுக்கு முரண்படாமல் இருப்பது தான். ஹதீஸ்கள் தேவை இல்லை என்ற கொள்கை உடையவர்கள் மக்களைக் குழப்புவதற்கு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துவது குர்ஆனுக்கு முரண்படுவதாக இவர்கள் நினைக்கும் சில ஹதீஸ்களைத் தான். இது போன்ற ஹதீஸ்களை எடுத்துக் காட்டி பார்த்தீர்களா ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதுகின்றன எனக் கூறி பாமர மக்களைக் குழப்புகின்றனர்ர். ஆனால் இந்த இடத்தில் இரண்டு தவறுகள் செய்கின்றனர்.

சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ்களை மட்டும் தான் மறுக்கலாம். சில ஹதீஸ்கள் முரணாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக அனைத்து ஹதீஸ்களையும் இவர்கள் மறுப்பது இவர்கள் செய்யும் முதல் தவறாகும். இதனால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களையும் மறுத்து குர்ஆனை மறுத்த குற்றவாளிகளாகி விடுகின்றனர்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்று இவர்கள் கூறும் பல ஹதீஸ்கள் உண்மையில் குர்ஆனுக்கு முரணாக இல்லை. போதிய அறிவும் ஆய்வும் இவர்களிடம் இல்லாததால் குர்ஆனுக்கு முரணில்லாத பல ஹதீஸ்களை முரண் என்று நினைப்பது இவர்கள் செய்யும் இரண்டாவது தவறாகும். அது போன்ற சில ஹதீஸ்களை நாம் எடுத்துக் காட்டுவோம்.

தொழுகையில் அத்தஹிய்யாத்து ஓதும் போது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு ……… என்ற வாசகத்தை ஓத வேண்டும் என ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்பதாகும்.

நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நபியே என்று கூற முடியும். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நபியே என்று எவ்வாறு கூற முடியும்? இது இணைவைத்தல் இல்லையா? ஹதீஸ்களை ஏற்றுக் கொண்டால் ஷிர்க்கான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஹதீஸ்களை ஏற்க முடியாது என்று கூறுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அவர்களை அழைப்பது இணை வைத்தல் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவ்வாறு அழைக்கக் கூடாது என்பதைத் தான் நாமும் கொள்கையாகக் கொண்டுள்ளோம். அழைப்பதற்குரிய சொல் அமைப்பு (விளி வேற்றுமை) பெரும்பாலும் அழைப்பதற்குத் தான் பயன்படுத்தப்படும் என்றாலும் சில நேரங்களில் அழைக்கும் நோக்கம் இல்லாமலும் பயன்படுத்தப்படும்.

எதனை அழைத்தால் அது செவியேற்காதோ அவற்றையும் அழைப்பது போல் நாம் பேசுகிறோம். நிலவே! மலரே! காற்றே! என்றெல்லம் நாம் அழைப்பது போல் பேசுகிறோம். விளி வேற்றுமையாகப் பயன்படுத்தியதால் அவற்றை நாம் அழைக்கிறோம் என்று யாரும் கருத மாட்டார்கள். உண்மையில் நாம் அழைக்கும் நோக்கத்தில் அதைப் பயன்படுத்தினோமா என்பது தான் இதில் முக்கியமானது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் அழைப்பது போன்ற சொல்லைப் பயன்படுத்தினாலும் அவர்களை அழைப்பதாக எந்த முஸ்லிமும் நினைப்பதில்லை. நாம் அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள் என்றும் நம்புவதில்லை. அவ்வாறு நம்புவது கூடாது. அவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்ற பொருளில் தான் இதைப் பயன்படுத்துகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இவ்வாறு கூறுவது ஒரு புறமிருக்கட்டும். அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் நபித்தோழர்கள் இவ்வாறு தான் கூறினார்கள். மதீனாவிலும், இன்னும் பல ஊர்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் அப்போது இருந்தனர். எந்த ஒரு நேரத்திலும் யாராவது தொழுது கொண்டிருப்பார். அத்தொழுகையில் அவர் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நிச்சயம் கூறி இருப்பார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது கேட்கும் என்றால் ஒவ்வொரு விநாடியும் அலைக்கு முஸ்ஸலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அப்படி கூறிக் கொண்டிருந்ததில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலை ஒருவரும் எதிர்பார்த்ததுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் கூட பலர் தொழுதுள்ளனர். அவர்கள் அத்தொழுகையில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நிச்சயம் ஓதி இருப்பார்கள். அருகில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அந்த ஸலாம் கேட்கவும் இல்லை. இதைச் சொன்னவரும் நபிகள் நாயகத்தின் பதிலை எதிர்பார்க்கவும் இல்லை. அவர்களை அழைப்பது போல் வாசக அமைப்பு இருந்தாலும் உண்மையில் அவர்களை அழைப்பது இந்தச் சொல்லின் நோக்கம் இல்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு இப்போது நாம் கூறும் ஸலாத்தை மலக்குகள் எத்தி வைக்கின்றார்கள் என்று தான் ஹதீஸ் அடிப்படையில் நம்புகின்றோமே தவிர அவர்களை அழைத்து நேரடியாக ஸலாம் கூறுவதாக அன்றும் முஸ்லிம்கள் நினைத்ததில்லை. இன்றும் நம்புவதில்லை. எனவே இது இணைவைத்தல் என்ற வகையில் சேராது. இதை விளங்காத காரணத்தால் தான் இவர்கள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

திருக்குர்ஆனில் கூட இது போன்ற வாசக அமைப்பு உள்ளது.

அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா? என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!

(திருக்குர்ஆன்:43:45.)

இந்த வசனத்தில் உமக்கு முன்னால் அனுப்பப்பட்ட தூதர்களிடம் நீர் கேட்பீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இறந்துவிட்ட நபிமார்களிடம் போய் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கேட்க முடியும்? இந்த வசனம் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக உள்ளது என்று கூறி குர்ஆனை மறுக்க முடியுமா?

இறந்துவிட்ட நபி (ஸல்) அவர்களை அய்யுஹந் நபிய்யு என்று சொல்வது ஷிர்க் என்றால் இறந்துவிட்ட நபிமார்களிடம் போய் கேட்குமாறு அல்லாஹ் கூறுவதும் ஷிர்க் தானே? அதிலும் இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையாக இதைக் கூறுகின்றான். அல்லாஹ்வுடைய கட்டளையை நபி (ஸல்) அவர்கள் நிச்சயம் செயல்படுத்தியதாக வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவது இணைவைப்பாகும். இல்லையென்றால் நடைமுறை சாத்தியமில்லாத கட்டளையை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் என்று கூறி அந்த வசனத்தை மறுக்க வேண்டும்.

எந்தக் காரணத்திற்காக ஹதீஸை நிராகரித்தார்களோ அதே காரணம் குர்ஆனிலும் உள்ளது. அதனால் குர்ஆனையும் நிராகரித்து இஸ்லாத்தை விட்டே வெளியேறிப் போக வேண்டும். இது தான் குர்ஆனை மட்டும் பின்பற்றுவோம் என்று கூறுபவர்களின் இறுதி நிலையாக இருக்கும்.

இறந்து போன நபிமார்களை அழைக்கச் சொல்வது போல் வாசக அமைப்பு இருந்தாலும் இதன் கருத்து அதுவல்ல. இறந்தவர்களிடம் எதையும் கேட்க முடியாது என பல வசனங்கள் உள்ளதால் அதற்கு முரண்படாத வகையில் இவ்வசனத்தைப் புரிந்து கொள்கிறோம்.

முந்தைய நபிமார்களிடம் கேட்டுப் பார் என்றால் அவர்களின் அறிவுரைகள், போதனைகளில் தேடிப் பார் என்பதே இதன் பொருளாக இருக்கும் என்று நாம் முடிவுக்கு வருகிறோம். இந்த இடத்தில் வாசக அமைப்பைக் கருத்தில் கொள்வதில்லை. நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்என்பதில் இதே பார்வை இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதே இவர்களின் குழப்பத்துக்குக் காரணம்.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

(திருக்குர்ஆன்:24:2.)

விபச்சாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் தான் தண்டனை என்று அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவாகக் கூறி விட்டான். திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று அல்லாஹ் வேறுபடுத்தவில்லை. எனவே திருமணம் ஆனவர்களானாலும், திருமணம் ஆகாதவர்களானாலும் அவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு நூறு கசையடிகள் தான் தண்டனை; மரண தண்டனை கிடையாது என்பது இவர்களின் வாதம்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை எனவும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடிகள் எனவும் ஹதீஸ்களில் இரு வகையான தண்டனைகள் கூறப்படுகின்றன. இவ்வசனத்திற்கு முரணாக இது உள்ளதால் இதை ஏற்கக் கூடாது என்று இவர்கள் கூறுகின்றனர். விபச்சாரக் குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை கிடையாது என்ற தங்களின் வாதத்தை வலுப்படுத்திட மற்றொரு சான்றையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்ட பின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்.

(திருக்குர்ஆன்:4:25.)

(இது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கம்)

அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன என்பதை இவ்வசனம் கூறுகிறது. அதாவது அடிமையாக இல்லாத திருமணமான பெண்கள் விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை அளிக்கப்படுமோ அத்தண்டனையில் பாதி அளவு அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்யும் போது அளிக்க வேண்டும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

விபச்சாரம் செய்யும் திருமணமான பெண்களுக்கு மரண தண்டனை என்றால் அதில் பாதி தண்டனை எப்படி வரும்? மரண தண்டனையில் பாதி என்பதைக் கற்பனை செய்ய முடியாது. ஆனால் அவர்களின் தண்டனை நூறு கசையடி என்றால் அதில் பாதி தண்டனை ஐம்பது கசையடி ஆகும். எனவே திருமணமானவர்களுக்கு மரண தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படுவது இவ்வசனத்துடன் நேரடியாக மோதுகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கு இரு வகையான தண்டனைகள் எனக் கூறியதும் நடைமுறைப்படுத்தியதும் குர்ஆனுக்கு எதிரானதா? இவர்களின் இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ளது தானா? இது பற்றி நாம் விளக்கமாக ஆராய்வோம்.

திருக்குர்ஆனில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்களது வாதத்தை யாரும் மறுக்க முடியாது. மொழி பெயர்ப்பாளர்கள் தவறாக மொழி பெயர்த்ததன் அடிப்படையிலேயே இவ்வாதம் எழுப்பப்பட்டுள்ளது. விவாகம் செய்யப்பட்ட பெண்களின் தண்டனையில் பாதி என்று சிலர் மொழி பெயர்த்துள்ள இடத்தில் முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு விவாகம் செய்யப்பட்ட பெண்கள் என்று சிலர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த இடத்தில் இவ்வாறு மொழி பெயர்ப்பது தவறாகும்.

முஹ்ஸனாத் என்ற சொல் பல அர்த்தம் கொண்ட சொல்லாகும். பயன்படுத்தும் இடத்துக்கு ஏற்ப அதன் பொருள் மாறும். உதாரணத்துக்குச் சில வசனங்களைப் பார்ப்போம்.

4:24 வசனத்தின் துவக்கத்தில் முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 4:23 வசனத்தின் தொடர்ச்சியாகும். யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று இவ்வசனத்தில் பட்டியல் போடப்படுகிறது. அதன் தொடர்ச்சியில் முஹ்ஸனாத் களையும் திருமணம் செய்யக் கூடாது என்று குறிப்பிடப்படுகிறது.

கணவனுடன் வாழ்பவள் அல்லது பிறரது மனைவி என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம். அப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். இன்னொருவனின் மனைவியை ஒருவர் மணந்து கொள்ளக் கூடாது என்று இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்கிறோம்.

5:5 வசனத்திலும் முஹ்ஸனாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றிக் கூறப்படுகின்றது. அந்தத் தொடரில் மூமின்களில் உள்ள முஹ்ஸனாத் களும் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. கணவனில்லாத பெண்கள் தான் முஹ்ஸனாத் என்று இங்கே கூறப்படுகிறார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

முஹ்ஸனாத் களை மணந்து கொள்ளலாகாது என்று 4:24 வசனத்தில் கூறி விட்டு முஹ்ஸனாத் களை மணந்து கொள்ளலாம் என்று 5:5 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

4:24 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 5:5 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் பிறருடைய மனைவியை மணப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஆகி விடும்.

அது போல் 5:5 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 4:24 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் கணவனில்லாத பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரீதமான முடிவுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.

5:5 வசனத்தில் கணவனில்லாத பெண்கள் முஹ்ஸனாத்கள் எனப்படுகின்றனர்.

4:24 வசனத்தில் கணவனுடன் வாழும் பெண்கள் முஹ்ஸனாத்கள் எனப்படுகின்றனர்.

இரண்டுமே இவ்வார்த்தைக்குரிய அர்த்தம் என்றாலும் இடத்திற்கேற்ற ஒரு அர்த்தத்தைத் தான் செய்ய முடியும்.

முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இவ்விரண்டு அல்லாத வேறு அர்த்தமும் உள்ளது. அத்தகைய இடங்களில் இவ்விரு அர்த்தங்களும் பொருந்தாமல் போய்விடும்.

முஹ்ஸனாத் பெண்கள் மீது யார் அவதூறு கூறுகிறார்களோ என்று 24:4, 24:23 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

திருமணமான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோஎன்று இங்கே அர்த்தம் கொள்ள முடியாது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் திருமணமாகாத பெண்கள் மீது அவதூறு கூறலாம் என்ற கருத்து வரும். திருமணம் ஆகாத பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோஎன்றும் பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் திருமணம் ஆனவர்கள் மீது அவதூறு கூறலாம் என்ற கருத்து வரும்.

கற்பொழுக்கத்தைப் பேணுபவர்கள் என்பது தான் இங்கே பொருள். இவ்வார்த்தைக்கு இந்தப் பொருளும் உள்ளது. திருமணமானவர்களாகட்டும்! ஆகாதவர்களாகட்டும்! கற்பு நெறியுடன் வாழும் பெண்கள் மீது அவதூறு கூறுவோர் மேற்கண்ட இரு வசனங்களில் எச்சரிக்கப்படுகின்றனர்.

நான்காவதாக ஒரு அர்த்தமும் இச்சொல்லுக்கு உண்டு. அடிமைகளாக இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் பெண்கள் என்பது அந்தப் பொருள்.

முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இப்படி நான்கு அர்த்தம் உள்ளது. விபச்சாரம் செய்யும் பெண்களின் தண்டனை பற்றிப் பேசும் 4:25 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு திருமணமான பெண்கள் என்று இவர்கள் பொருள் செய்ததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

4:25 வசனத்தில் இடம் பெறும் முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனுள்ள பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா? கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா?

இரு விதமாகவும் பொருள் கொள்ள இந்த வார்த்தை இடம் தந்தாலும் இந்த இடத்தில் ஒரு பொருளைத் தான் கொள்ள வேண்டும். அதற்கு நியாயமான காரணமும் இருக்கின்றது.

4:25 வசனத்தில் முஹ்ஸனாத் என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முஹ்ஸனாத் பெண்களை மணந்து கொள்ள யாருக்கு சக்தி இல்லையோ என்பது ஒரு இடம்.

முஹ்ஸனாத் பெண்களின் தண்டனையில் பாதி என்பது இரண்டாவது இடம்.

இந்த இரண்டாவது இடத்தில் தான் திருமணமான பெண்கள் என்று மொழி பெயர்த்துள்ளனர்.

இதே போல் முஹ்ஸனாத் பெண்களை மணந்து கொள்ள யாருக்கு சக்தி இல்லையோ என்பதையும் மொழி பெயர்த்தால் என்னவாகும்? திருமணமான பெண்களை மணந்து கொள்ள யாருக்குச் சக்தி இல்லையோ என்ற கருத்து வரும்.

அதாவது திருமணமாகி கணவனுடன் வாழ்பவளை மணந்து கொள்வது அறவே கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இவர்களை அறவே மணந்து கொள்ளக் கூடாது எனும் போது கணவனுள்ள பெண்களை மணந்து கொள்ள யாருக்குச் சக்தி இல்லையோ என்று கூற முடியுமா? கணவனில்லாத பெண்கள் என்ற மற்றொரு பொருளைத் தான் இந்த இடத்தில் கொடுக்க வேண்டும். கணவனில்லாத் பெண்களைத் தான் மற்றவர்கள் மணந்து கொள்ள முடியும்.

இவ்வசனத்தில் முதலில் கூறப்பட்ட முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனில்லாத பெண்கள் என்று மொழி பெயர்க்கும் போது இரண்டாம் இடத்திலும் அவ்வாறு தான் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு வசனத்தில் இரண்டு தடவை ஒரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது இரண்டுக்கும் ஒரு பொருளைக் கொடுப்பது தான் முறையானது.

முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திலும் ஒரே பொருள் கொண்டால் இவர்களின் வாதம் அடிபட்டுப் போய் விடும்.

கணவனில்லாத பெண்களை மணமுடிக்க யாருக்குச் சக்தி இல்லையோஎன்று முதல் இடத்திலும், கணவனில்லாத பெண்ணுக்கு அளிக்கப்படும் தண்டனையில் பாதி என்று இரண்டாவது இடத்திலும் ஒரே விதமாகப் பொருள் கொண்டால் இவர்களின் எதிர்க் கேள்வி அர்த்தமற்றுப் போய்விடும்.

கணவனில்லாத பெண்ணுக்கு அளிக்கப்படும் தண்டனை ஹதீஸ்களின் அடிப்படையில் நூறு கசையடி தான். இதை இரு பாதியாகப் பிரிக்க முடியும். இப்போது இந்த வசனத்தின் கருத்துக்கு மாற்றமாக ஹதீஸ்கள் அமையவில்லை.

கணவன் உள்ள பெண்கள், கணவனில்லாதவர்கள் என்று முரண்பட்ட இரண்டு அர்த்தங்கள் தரக்கூடிய இவ்வார்த்தைக்கு இரண்டாவது அர்த்தம் தான் இவ்வசனத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் இருக்கிறது.

விபச்சாரத்திற்குரிய தண்டனையில் பாதி எனக் கூறாமல் முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக தண்டனைகளைக் குற்றங்களுடன் சேர்த்துக் குறிப்பிடுவது தான் வழக்கமாகவுள்ளது. திருட்டுக் குற்றத்திற்குரிய தண்டனையைக் குறிப்பிடும் போது திருடர்களின் கையை வெட்ட வேண்டும்என்று குறிப்பிடப்படும். இவ்வாறு தான் ஒவ்வொரு குற்றத்துக்கும் குறிப்பிடப்பட வேண்டும்.

அது போல் விபச்சாரம் செய்யும் அடிமைகளின் தண்டனை பற்றிக் கூறும் போது பொதுவாக விபச்சாரத்திற்கு என்ன தண்டனையோ அதில் பாதிஎன்று தான் கூற வேண்டும். விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனை இல்லை என்றால் இப்படித் தான் கூற வேண்டும்.

இவ்வாறு கூறாமல் முஹ்ஸனாத்களுக்கு உள்ள தண்டனையில் பாதி என்று அல்லாஹ் கூறுகிறான். முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை எனவும் முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு வேறு வகை தண்டனை எனவும் இருந்தால் தான் இப்படிக் கூற முடியும்.

முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை, முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு ஒரு தண்டனை என இரண்டு வகையான தண்டனை இருந்தால் மட்டுமே இவ்வாறு கூற முடியும். இதிலிருந்து விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனைகள் இருப்பதைச் சந்தேகமற நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் முஹ்ஸனாத்களின் தண்டனைனயில் பாதி எனக் கூறப்பட்டால் எது பாதியாக முடியுமோ அது பற்றியே கூறப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். எது பாதியாக ஆகாதோ அது பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

திருமணமான பெண்களுக்கு வேறு தண்டனை உள்ளது என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தண்டனை என விளக்கியுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு வகையான தண்டனைகள் என்று வகுத்திருப்பது இவ்வசனத்திற்கு விளக்கம் தானே தவிர முரண் இல்லை என்பதை ஐயமற அறியலாம்.