Tamil Bayan Points

9) நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள்

நூல்கள்: மத்ஹபுகள்

Last Updated on December 17, 2019 by

நபிகள் நாயகத்தின் முடிகளுக்கு கணக்கு காட்டும் மூடர்கள்

இவர்களின் வடிகட்டிய முட்டாள்தனத்தை மேலும் பாருங்கள்

واعلم أن لحيته عليه الصلاة والسلام كانت عظيمة ولا يقال كثيفة لما فيه من البشاعة وكان عدد شعرها مائة ألف وأربعة وعشرين ألفا بعدد الأنبياء كما في رواية إعانة الطالبين

மொத்த நபிமார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நபிகள் நாயகத்தின் தலைமுடிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரமாகும்.

நூல் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

ஒருவரின் தலை முடிகளின் எண்ணிக்கையைக் கூறுவது சாத்தியமா? முடிகள் விழுந்தும் முளைத்துக் கொண்டும் இருக்கும். எல்லா நேரத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிகள் இருக்காது. ஒருவரது தலையில் உள்ள முடிகளை அவருக்கு நெருக்கமான மனைவியால் கூட சொல்ல முடியாது.

இதை எழுதியவனிடம் போய் உன் மனைவியின் தலையில் உள்ள முடிகள் இத்தனை என்று சொல்ல முடியுமா என்று கேட்டால் முடியாது என்று பதிலளிப்பான்.

துணிந்து பொய் சொல்லும் கூட்டத்தினர் தான் மத்ஹபு சட்ட வல்லுனர்கள் என்பது இதிலிருந்தும் தெரிகிறது.

எழுதி கரைத்துக் குடிக்கலாம்

தட்டு எழுதிக் கொடுத்தல், மாவிலையில் எழுதிக் கொடுத்தல் போன்ற வழிகளில் ஆலிம்சாக்கள் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் வாசலைத் திறந்து விட்டுள்ளதும் ஆலிம்சாக்கள் மத்ஹபுகளைக் கட்டி அழுவ காரணமாகும்.

وعبارة المغني ولا يكره كتب شيء من القرآن في إناء ليسقى ماؤه للشفاء خلافا لما وقع لابن عبد السلام في فتاويه من التحريم إعانة الطالبين

குர்ஆனின் சில பகுதிகளை ஒரு தட்டில் எழுதி நோய் நிவாரணத்துக்காக கரைத்துக் குடிப்பது வெறுக்கத்தக்கதல்ல.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

மலக்குக்களை ஜனாசாவாக்கிய மத்ஹப்கள்

ஜின் என்ற இனத்தினர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும், வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் அறிவோம். மத்ஹபு சட்ட வல்லுனர்கள் மலக்குகளையும், ஜின்களையும் எப்படி நம்புகிறார்கள் என்று பாருங்கள்!

قال ش ق: وكالبشر الجن والملك، بناء على الصحيح من أن كلا منهما أجسام لها ميتة، فهي طاهرة. أما الجن: فلتكليفهم بشرعنا، وإن لم نعلم تفصيل أحكامهم. وأما الملائكة: فلشرفهم. إعانة الطالبين

மனிதனின் செத்த உடலைப் போல் ஜின்கள் மற்றும் வானவர்களின் செத்த உடல்களும் தூய்மையானவையாகும். இதற்குக் காரணம் ஜின்கள் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளனர். வானவர்கள் சிறந்த படைப்பாக உள்ளனர் என்பதுதான் இதற்குக் காரணம்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

வானவர்களுக்கும், ஜின்களுக்கும் மனிதனைப் போன்ற உடல் கிடையாது என்ற அறிவு இல்லாமல் கற்பனையாகச் சட்டம் எழுதி வைத்துள்ளனர். இத்தகைய மூடர்கள் எழுதிய மத்ஹப் சட்டம் நமக்குத் தேவையா?

தையல் கூலியை ஆட்டையைப் போடுதல்

மத்ஹபு சட்ட வல்லுனர்களின் கூர்மையான சிந்தனையைப் பாருங்கள்!

فلو دفع ثوبه إلى خياط ليخيط أو قصار ليقصره أو صباغ ليصبغه ففعل ولم يذكر أحدهما أجرة ولا ما يفهمها فلا أجرة له لأنه متبرع فتح المعين

தைப்பதற்காக ஒரு துணியை தையல் தொழிலாளியிடம் ஒருவன் கொடுக்கிறான். அல்லது சலவை செய்வதற்காக சலவைத் தொழிலாளியிடம் கொடுக்கிறான். சாயம் ஏற்றுவதற்காக சாயத் தொழிலாளியிடம் கொடுக்கிறான். ஆனால் இருவரில் யாரும் கூலி பேசவில்லை. அப்படியானால் அதைச் செய்து தந்தபின் அதற்கு கூலி கொடுக்க வேண்டியதில்லை. இலவசமாகச் செய்து கொடுத்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்