Tamil Bayan Points

09) கஃபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?

நூல்கள்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

Last Updated on March 3, 2022 by

8. கஃபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?

கேள்வி: ‘நீங்கள் ஹஜ் செய்யும் போது கஃபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஃபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம்’ என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார். அவருக்கு என்ன விளக்கம் அளிக்கலாம்?

– எம். சையத் அலி, சாக்கிநாக்கா, மராட்டியம்.

பதில்: கஃபா என்னும் செவ்வகமான கட்டிடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இவ்வாறு உங்களிடம் கேட்டிருக்கிறார்.

கஃபா என்னும் கட்டிடம் தொழுகை நடத்துவதற்காக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் அது சிதிலமடைந்த பின் இப்ராஹீம் (அலை) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது. அவர்களெல்லாம் அக்கட்டிடத்துக்குள்ளேயே தொழுதார்கள். நமது நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எப்படி தூய இடமாக உள்ளதோ அது போன்ற தூய இடம் மட்டும் தான் உள்ளே இருக்கிறது. எந்தப் பள்ளிவாசலும் எப்படி எந்தச் சிலையும், வழிபாட்டுச் சின்னமும் இல்லாமல் உள்ளதோ அது போன்ற வெற்றிடம் தான் கஃபாவுக்கு உள்ளேயும் இருக்கிறது.

மக்கள் தொகை பல கோடி மடங்கு பெருகி விட்ட நிலையில் அதனுள்ளே போய்த் தொழமுடியாது என்பதால் தான் உள்ளே யாரும் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை.

கஃபாவுக்குள்ளே நான்கு சுவர்களும் தூண்களும் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை அவருக்கு விளக்குங்கள்! உண்மையைப் புரிந்து கொள்வார்.