Tamil Bayan Points

7) தொழுகையின் சட்டங்கள்

நூல்கள்: மத்ஹபுகள்

Last Updated on December 17, 2019 by

தொழவைக்கும் இமாமுக்கு தகுதி என்ன?

தொழுகை நடத்தும் இமாமாக ஒருவரை நியமிக்க வேண்டுமானால் அவருக்கு கீழ்க்காணும் தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தார் கூறுகிறது.

ثُمَّ أَصْبَحُهُمْ: أَيْ أَسْمَحُهُمْ وَجْهًا، ثُمَّ أَكْثَرُهُمْ حَسَبًا (ثُمَّ الْأَشْرَفُ نَسَبًا) زَادَ فِي الْبُرْهَانِ: ثُمَّ الْأَحْسَنُ صَوْتًا. وَفِي الْأَشْبَاهِ قَبِيلَ ثَمَنِ الْمِثْلِ: ثُمَّ الْأَحْسَنُ زَوْجَةً. ثُمَّ الْأَكْثَرُ مَالًا، ثُمَّ الْأَكْثَرُ جَاهًا (ثُمَّ الْأَنْظَفُ ثَوْبًا) ثُمَّ الْأَكْبَرُ رَأْسًا وَالْأَصْغَرُ عُضْوًا، ثُمَّ الْمُقِيمُ عَلَى الْمُسَافِرِ، ثُمَّ الْحُرُّ الْأَصْلِيُّ عَلَى الْعَتِيقِ. ثُمَّ الْمُتَيَمِّمُ عَنْ حَدَثٍ عَلَى الْمُتَيَمِّمِ عَنْ جَنَابَةٍ. الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار)

இமாமாகத் தேர்வு செய்யப்படுபவர் அழகிய முகம் உடையவராக இருக்க வேண்டும். பின்னர் பாரம்பர்யத்தால் சிறந்தவராக இருக்க வேண்டும். பின்னர் அழகான குரலுடையவராக இருக்க வேண்டும். பின்னர் அழகிய மனைவியை உடையவராக இருக்க வேண்டும். பின்னர் அதிகப் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். பின்னர் அதிகம் பதவிகள் உடையவராக இருக்க வேண்டும். பின்னர் அதிகம் தூய்மையான ஆடை அணிந்தவராக இருக்க வேண்டும். அடுத்து அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்.

மத்ஹபுகளுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பது இந்தச் சட்டத்தில் இருந்து தெரிகிறது. இமாம்களுக்கான இந்தத் தகுதிகள் திருக்குர்ஆனிலோ, நபிகளின் வழிகாட்டுதலிலோ காணப்படவில்லை. பாரம்பர்யம், குலம் ஆகியவற்றால் எந்தச் சிறப்பும் கிடையாது என்ற இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக இது அமைந்துள்ளது.

பணம் படைத்தவராகவும், பதவிகள் உடையவராகவும் ஒருவர் இருப்பது மார்க்கத்தில் எந்தத் தகுதியையும் அதிகப்படுத்தாது. இந்த அடிப்படையையும் இது தகர்க்கிறது. ஒருவரது மனைவி அழகானவராக இருக்க வேண்டும் என்பது இமாமாக இருக்கும் தகுதியில் ஒன்றாக எப்படி அமையும்? அழகான மனைவி உடையவராக இருந்து இமாமாக சேர்க்கப்பட்டவரின் மனைவி இறந்து விட்டால் அல்லது விவாகரத்தாகி விட்டால் உடனே இமாமை நீக்க வேண்டுமா?

அழகு என்பது சுமார் முப்பது வயது வரை தான் இருக்கும். அப்படியானால் முப்பது வயதுக்குக் குறைவானவர் தான் இமாமாக இருக்க வேண்டுமா? இமாமின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அவரது மனைவியை ஊரில் உள்ள அனைவரும் பார்த்தால் தான் முடிவு செய்ய முடியும். ஊரில் உள்ள எல்லாப் பெண்களுடனும் இமாமின் மனைவியை நிறுத்தினால் தான் இதை அறிய முடியும்.

தலை பெரிதாகவும், உறுப்பு சிறிதாகவும் இருப்பது எப்படி இமாமின் தகுதியாக ஆகும்?

இதைச் சட்டமாக எழுதி வைத்தவர்கள் கடுகளவு கூட மார்க்க அறிவு அற்ற அறிவிலிகளாக இருந்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. மத்ஹபு ஆலிம்களும் இதைக் கடைப்பிடிப்பதில்லை. மத்ஹப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதைக் கடைப்பிடிப்பதில்லை. மத்ஹப் காவலர்களாலும் கடைப்பிடிக்க முடியாத கிறுக்குத்தனங்களின் தொகுப்பே மத்ஹப் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. உலகில் உள்ள ஒரே ஒரு ஹனஃபி பள்ளிவாசலில் கூட இதைக் காடைப்பிடிக்க முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய இஸ்லாமிய வழிமுறைக்கும் இது எதிராக உள்ளது.

عن أبى هريرة قال قال رسول الله -صلى الله عليه وسلم- إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ . صحيح مسلم

அல்லாஹ் உங்கள் தோற்றத்தைப் பார்க்க மாட்டான். மாறாக உங்கள் உள்ளங்களைத் தான் பார்ப்பான் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 5012

உடலமைப்பை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்ற அடிப்படைக்கு மாற்றமாக தலை பெரிதாக இருப்பதையும், உறுப்பு சிறிதாக இருப்பதையும், முகம் அழகாக இருப்பதையும், பணம் படைத்தவராக இருப்பதையும், மனைவி அழகாக இருப்பதையும் இமாமத்துக்கு உரிய தகுதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

693 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنِ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ»

உங்கள் தலைவரின் தலை, உலர்ந்த திராட்சை போல் இருந்தாலும், அவர் அபீசீனியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்டுப்படுங்கள் என்பது நபிமொழி

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரீ 693

தலை பெரியதாக இருப்பதை இமாமத்துக்கு அளவுகோலாக ஹனஃபி மத்ஹப் குறிப்பிடுகிறது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலை சுருங்கிப் போய் இருந்தாலும் தலைவருக்குக் கட்டுப்படுங்கள் என்கிறார்கள்.

காசுக்காகத் தொழலாம்

மறுமை நன்மையை நாடி அல்லாஹ்வுக்காகத் தான் ஒருவர் தொழ வேண்டும். இது பாமரனுக்கும் தெரியும். இறைவனுக்காக அல்லாமல் காசுக்காகத் தொழலாம் என்று மத்ஹப் நூலில் எழுதப்பட்டதைப் பாருங்கள்!

قِيلَ لِشَخْصٍ صَلِّ الظُّهْرَ وَلَك دِينَارٌ فَصَلَّى بِهَذِهِ النِّيَّةِ يَنْبَغِي أَنْ تُجْزِئَهُ وَلَا يَسْتَحِقُّ الدِّينَارَ. – الدر المختار

நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன் என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகிறது. அவர் அந்த நோக்கத்தில் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்றே கூற வேண்டும். ஆனால் தங்கக் காசை அவருக்குக் கொடுக்க வேண்டியதில்லை.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் யாவும் இறையச்சத்தை வளர்ப்பதற்காகக் கடமையாக்கப்பட்டவை. கவனக் குறைவாகவும், வேறு நோக்கத்திற்காகவும் செய்யப்படும் எந்த வணக்கமும் இறைவனால் ஏற்கப்படுவதில்லை. உங்கள் உள்ளங்களையே இறைவன் பார்க்கிறான் என்ற கருத்தில் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.

سنن النسائي 3140 – أَخْبَرَنَا عِيسَى بْنُ هِلَالٍ الْحِمْصِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ شَدَّادٍ أَبِي عَمَّارٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»

இறைவனுக்காக கலப்பற்ற முறையில் செய்யப்படும் நல்லறத்தையும், அதன் மூலம் அவனது திருப்தி மட்டும் எதிர்பார்க்கப்படும் நல்லறத்தையும் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : நஸாயீ

இவற்றையெல்லாம் அலட்சியம் செய்து விட்டு ஒரு மனிதன் தருவதாகக் கூறும் தங்கக் காசுக்காக அதையே நோக்கமாகக் கொண்டு தொழுதால் அத்தொழுகை நிறைவேறும் எனக் கூறுவதை ஏற்க முடியுமா? காசுக்காகத் தொழலாம் எனக் கூறி நமது இறயச்சத்தைப் பாழாக்கிய இவர்கள் இமாம்களா? இந்த நூலின் அடிப்படையில் உங்களை வழிநடத்தும் உலமாக்கள் சொல் கேட்டால் உங்கள் மறுமை வாழ்வு என்னவாகும் என்று சிந்தியுங்கள்!

தொழுகையில் பைபிள் ஓதலாம்!

தொழுகையில் திருக்குர்ஆனைத் தான் ஓத வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கூட ஓத முடியாது என்பது எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ள சட்டமாகும். ஹனஃபி மத்ஹபின் சட்டத்தைப் பாருங்கள்!

قَرَأَ بِالْفَارِسِيَّةِ أَوْ التَّوْرَاةِ أَوْ الْإِنْجِيلِ، إنْ قِصَّةً تُفْسِدُ، وَإِنْ ذِكْرًا لَا – الدر المختار

தொழுகையில் பாரசீக மொழியில் ஓதினாலோ, அல்லது தவ்ராத், இஞ்சீலை (பைபிளை) ஓதினாலோ அது கதைப் பகுதியாக இருந்தால் தொழுகை பாழாகிவிடும். போதனைகளாக இருந்தால் தொழுகை பாழாகாது.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

திருக்குர்ஆனின் ஃபார்ஸி மொழிபெயர்ப்பை திருக்குர்ஆனுக்குப் பதிலாக ஓதலாம் என்று இதில் கூறப்பட்டுள்ளது. எந்த மொழிபெயர்ப்பாக இருந்தாலும் மூலத்தின் இடத்தை நிரப்பாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் பைபிளில் இடம் பெற்றுள்ள போதனைகளை தொழுகையில் குர்ஆனுக்குப் பகரமாக ஓதலாம் எனவும் இதில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டியது தான் இஸ்லாம் என்ற இஸ்லாத்தின் அடிப்படையைச் சிறிதளவாவது அறிந்திருந்தால் அனைவரின் தொழுகைகளைப் பாழாக்கும் இப்படி அறிவீனமான சட்டத்தை எழுதி வைத்திருப்பார்களா?

இந்தச் சட்டம் எந்த வசனத்தில் இருந்து எடுக்கப்பட்டது? எந்த ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இந்த நூலில் குறிப்பிடவில்லை. மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கும் உலமாக்களாலும் இதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றறிந்த பலர் இஸ்லாத்தை ஏற்றனர். நீங்கள் தொழுகையில் தவ்ராத்தையும், இஞ்சீலையும் ஓதிக்கொள்ளுங்கள் என அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்களா? அல்லது அவர்கள் ஓதுவதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகாரம் கொடுத்தார்களா? அப்படி எதுவும் இல்லை.

மக்ரிப் தொழுகையின் முன் சுன்னத் மக்ரூஹா?

 وَلَا يُتَنَفَّلُ بَعْدَ الْغُرُوبِ قَبْلَ الْفَرْضِ) ش: أي قبل صلاة المغرب. م: لِمَا فِيهِ مِنْ تَأْخِيرِ الْمَغْرِبِ ش: وتأخير المغرب مكروه فيكره ما يكون سببا للتأخير.- الهداية

சூரியன் மறைந்த பிறகு மக்ரிப் தொழுவதற்கு முன்னால் எந்த உபரியான தொழுகைகளும் நிறைவேற்றக் கூடாது. அதன் காரணமாக மஃரிப் தாமதமாகிவிடும். மக்ரிபைத் தாமதப்படுத்துவது மக்ரூஹ் ஆகும். மக்ரூஹ் ஏற்படக் காரணமாக உள்ளவையும் மக்ரூஹ் ஆகும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

ஹதீஸ்களைப் படிக்காமல் இஷ்டத்துக்கு இப்படி எழுதி வைத்துள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக உள்ளது.

நபி வழியைப் பாருங்கள் :

صحيح مسلم 303 – (837) وحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ وَهُوَ ابْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنَّا بِالْمَدِينَةِ فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ لِصَلَاةِ الْمَغْرِبِ ابْتَدَرُوا السَّوَارِيَ، فَيَرْكَعُونَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ، حَتَّى إِنَّ الرَّجُلَ الْغَرِيبَ لَيَدْخُلُ الْمَسْجِدَ فَيَحْسِبُ أَنَّ الصَّلَاةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيهِمَا»

நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித்தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் அதிகமானவர்கள் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 1521

صحيح البخاري 1183 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنِ الحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ المُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلُّوا قَبْلَ صَلاَةِ المَغْرِبِ»، قَالَ: «فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”மக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்’ என்று (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது அதை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, ”இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல் : புகாரி 1183

இதே விஷயம் புகாரி 1184 வது ஹதீஸிலும் இடம் பெற்றுள்ளது.

எதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களோ அதை மக்ரூஹ் என்று சொல்வது என்றால் இது அறிவா மடமையா?

ஒரு கை, ஒருகால் மட்டும் படுமாறு ஸஜ்தாச் செய்யலாம். தலையை மட்டும் தாழ்த்தினாலே  ருகூவு செல்லும்

அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழ வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளார்கள். அந்தத் தொழுகையை மத்ஹப்காரர்கள் எந்த அளவுக்குப் பாழாக்கியுள்ளார்கள் என்று பாருங்கள்!

(وَمِنْهَاالرُّكُوعُ) بِحَيْثُ لَوْ مَدّ يَدَيْهِ نَالَ رُكْبَتَيْهِ – الدر المختار

இரு கைகளையும் நீட்டினால் முட்டுக்காலை அடையும் அளவுக்கு ருகூவு செய்தல் தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

 (و) الخامس: (السجود) بوضع الجبهة وإحدى اليدين وإحدى الركبتين وشيء من أطراف أصابع إحدى القدمين – اللباب في شرح الكتاب

நெற்றி, இருகைகளில் ஒரு கை, இரு முட்டுக்கால்களில் ஒரு முட்டுக்கால், இரு பாதங்களில் ஒரு பாதத்தின் விரலின் சிறு பகுதி தரையில் படும் வகையில் ஸஜ்தா செய்வது தொழுகையின் ஐந்தாவது கடமையாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய அல் லுபாப்

وَإِنْ طَأْطَأَ رَأْسَهُ فِي الرُّكُوعِ قَلِيلًا وَلَمْ يَعْتَدِلْ فَظَاهِرُ الْجَوَابِ عَنْ أَبِي حَنِيفَةَ أَنَّهُ يَجُوزُ- الدر المختار

ருகூவின் போது ஒருவர் தனது தலையைத் தாழ்த்தினால் அது போதும் என்பது அபூஹனீஃபா இமாமின் கருத்தாகும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

தலையை மட்டும் தாழ்த்தினால் ருகூவு ஆகிவிடும் என்றும், ஒரு கால், ஒரு கை ஒரு பாதம் படும் வகையில் சஜ்தா செய்தால் போதும் என்றும் கடுகளவு மார்க்க அறிவு உள்ள எவராவது கூறுவார்களா?

ஆய்வு என்ற பெயரில் உளறிக் கொட்டியவை தான் மத்ஹப் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

1027 – أخبرنا قتيبة قال حدثنا الفضيل عن الأعمش عن عمارة بن عمير عن أبي معمر عن أبي مسعود قال قال رسول الله صلى الله عليه و سلم : لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فيها صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ – سنن النسائي

ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் அன்சாரி (ரலி)

நூல்கள் : நஸாயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா

389 – أَخْبَرَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلًا لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ: «مَا صَلَّيْتَ؟» قَالَ: وَأَحْسِبُهُ قَالَ: «لَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

ருகூவையும், ஸுஜூதையும் முழுமையாகச் செய்யாத ஒரு மனிதரைக் கண்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், அவர் தொழுது முடித்ததும் அழைத்து, நீர் தொழவில்லை. இந்த நிலையில் நீ மரணித்தால் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய இயற்கை மார்க்கத்தை விட்டும் விலகியவனாகவே மரணிப்பாய் எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 389

எந்தத் தொழகை கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்களோ அந்தத் தொழுகையைக் கூடும் எனக் கூறி நமது தொழுகைகளைப் பாழாக்கும் மத்ஹபுகள் இனியும் தேவையா?

அஸ்ஸலாம் என்று மட்டும் கூறி தொழுகையை முடிக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக் கூறுவார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால் மத்ஹபுச் சட்டம் என்ன கூறுகிறது என்று பாருங்கள்!

(وَلَفْظُ السَّلَامِ) مَرَّتَيْنِ فَالثَّانِي وَاجِبٌ عَلَى الْأَصَحِّ بُرْهَانٌ، دُونَ عَلَيْكُمْ – الدر المختار

இரண்டு தடவை அஸ்ஸலாம் என்ற வார்த்தையைக் கூறுவது தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும். இரண்டாவது தடவை கூறுவது வாஜிபாகும். அலைக்கும் என்பது கடமையன்று.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அஸ்ஸலாம் என்று மட்டும் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துள்ளார்களா? அல்லது அவ்வாறு முடிக்கலாம் என்று அனுமதித்துள்ளார்களா? நிச்சயமாக இல்லை. மத்ஹபுகள் மார்க்கத்தைக் கேலிப் பொருளாக ஆக்குகிறது. இறைவனைப் பற்றிய அச்சமும், இறைத்தூதர் பற்றி கடுகளவு மரியாதையும் இல்லாத அறிவீனர்களால் தான் மத்ஹபுச் சட்டங்கள் எழுதப்பட்டுள்ளன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அல்லாஹு அக்பருக்குப் பதிலாக எதையும் கூறி தொழலாம்

(وَصَحَّ شُرُوعُهُ) أَيْضًا مَعَ كَرَاهَةِ التَّحْرِيمِ (بِتَسْبِيحٍ وَتَهْلِيلٍ) وَتَحْمِيدٍ وَسَائِرِ كَلِمِ التَّعْظِيمِ الْخَالِصَةِ لَهُ تَعَالَى وَلَوْ مُشْتَرَكَةً كَرَحِيمِ وَكَرِيمٍ فِي الْأَصَحِّ، وَخَصَّهُ الثَّانِي بِأَكْبَرُ وَكَبِيرٌ مُنَكَّرًا وَمُعَرَّفًا. زَادَ فِي الْخُلَاصَةِ وَالْكُبَارُ مُخَفَّفًا وَمُثَقَّلًا (كَمَا صَحَّ لَوْ شَرَعَ بِغَيْرِ عَرَبِيَّةٍ) أَيِّ لِسَانٍ كَانَ، وَخَصَّهُ الْبَرْدَعِيُّ بِالْفَارِسِيَّةِ لِمَزِيَّتِهَا بِحَدِيثِ «لِسَانُ أَهْلِ الْجَنَّةِ الْعَرَبِيَّةُ وَالْفَارِسِيَّةُ الدَّرِّيَّةُ» – الدر المختار

சுப்ஹானல்லாஹ் என்றோ, அல்ஹம்து லில்லாஹ் என்றோ, லாயிலாஹ இல்லல்லாஹு என்றோ, அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்தும் எந்தச் சொல்லைக் கொண்டோ, அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்கும் பொதுவான கரீம், ரஹீம் என்றோ, அக்பர், அல்அக்பர், கபீர், அல்கபீர் என்றோ கூறி தொழுகையைத் துவக்கலாம். அரபி அல்லாத எந்த மொழியைக் கொண்டும் தொழுகையைத் துவக்கலாம். ஆனால் பர்தயீ என்பார் பார்சி மொழியில் மட்டும் தான் தொழுகையைத் துவக்கலாம். ஏனெனில் சொர்க்கவாசிகளின் பாஷை அரபியும் பார்சியும் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் என்று கூறுகிறார்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஹனஃபி மதத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக எப்படியெல்லாம் போர் தொடுத்துள்ளனர் என்று பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அனைத்து தொழுகைகளையும் அல்லாஹு அக்பர் என்று கூறியே ஆரம்பித்துள்ளனர். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று கூறி மற்றவர்களும் அவ்வாறே ஆரம்பிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளனர்.

அதை அப்பட்டமாக மீறும் வகையில் இப்படி மார்க்கத்தில் விளையாடி உள்ளனர். இதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இஷ்டத்துக்கு நாங்கள் எதையும் சொல்வோம்; மக்கள் அதைக் கேட்க வேண்டும் என்ற இறுமாப்பு தவிர வேறு இல்லை.

மத்ஹபுகள் காட்டித் தரும் வழியில் தொழுதால் அந்தத் தொழுகைகள் அல்லாஹ்வால் ஏற்கப்படுமா? அமல்கள் அனைத்தையும் அழித்து நரகத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட மத்ஹபு தேவையா?

சொர்க்கவாசிகளின் பாஷை அரபியும், ஃபார்சியுமாகும் என்பது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸாகும். அபூஹனீஃபா ஃபார்ஸி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்பதால் இப்படி இட்டுக்கட்டியுள்ளனர்.

தொழுகையை சலாம் சொல்லி முடிப்பதற்குப் பதிலாக காற்றுப் பிரிய விட்டு முறிக்கலாம்

மத்ஹபு அறிஞர்கள் எவ்வளவு மூடர்களாகவும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மதிக்காதவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்குப் பின்வரும் சட்டம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

(قَوْلُهُ وَمِنْهَا الْخُرُوجُ بِصُنْعِهِ إلَخْ) أَيْ بِصُنْعِ الْمُصَلِّي أَيْ فِعْلِهِ الِاخْتِيَارَ، بِأَيِّ وَجْهٍ كَانَ مِنْ قَوْلٍ أَوْ فِعْلٍ يُنَافِي الصَّلَاةَ بَعْدَ تَمَامِهَا كَمَا فِي الْبَحْرِ؛ وَذَلِكَ بِأَنْ يَبْنِيَ عَلَى صَلَاتِهِ صَلَاةً مَا فَرْضًا أَوْ نَفْلًا، أَوْ يَضْحَكُ قَهْقَهَةً، أَوْ يُحْدِثُ عَمْدًا، أَوْ يَتَكَلَّمُ، أَوْ يَذْهَبُ، أَوْ يُسَلِّمُ – رد المحتار

தொழுகையை முடிக்கும் போது (ஸலாம் கொடுப்பதற்குப் பதிலாக) தொழுகையில் செய்யக் கூடாத செயலைச் செய்தோ, அல்லது பேசக் கூடாத பேச்சைப் பேசியோ, அல்லது தனக்கு விருப்பமான செயலை ஏதாவது ஒரு விதத்தில் செய்தோ தொழுகையை விட்டு வெளியேறலாம். உடனே எழுந்து வேறு கடமையான அல்லது உபரியான தொழுகையில் ஈடுபடுதல், அல்லது அஹ்ஹஹ்ஹா என்று வெடிச்சிரிப்பு சிரித்தல், அல்லது வேண்டுமென்றே காற்று விடுவது, பேசுவது, அப்படியே எழுந்து சென்று விடுவது, யாருக்காவது ஸலாம் சொல்வது இது போன்ற செயல்களைச் செய்து தொழுகையை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

தொழுகையை எந்த அளவுக்குக் கேலிக் கூத்தாக ஆக்கியுள்ளனர் என்று பாருங்கள்.

 3 – حدثنا قتيبة و هناد و محمود بن غيلان قالوا حدثنا وكيع عن سفيان و حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن [ بن مهدي] حدثنا سفيان عن عبد الله بن محمد بن عقيل عن محمد بن الحنفية عن علي : عن النبي صلى الله عليه و سلم قال مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ – سنن الترمذي

“தொழுகையின் திறவுகோல் (உளூ எனும்) சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அலீ (ரலி)

 நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56

ஸலாம் கொடுத்துத் தான் தொழுகையை முடிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க அதைக் கேலி செய்யும் வகையில் ஹாஹாஹா என்று சிரித்தும், காற்று பிரியவிட்டும் தொழுகையை முடிக்கலாம் என்று ஹனஃபி மத்ஹபு கூறுகின்றது. தொழுகையையே விளையாட்டாக ஆக்கிய மத்ஹப்கள் ஒழிக்கப்பட வேண்டாமா?

தொழுகையில் நாயையும், பூனையையும் அழைக்கலாம்! பேசலாம்!

மத்ஹப்களின் அறிஞர்கள் தொழுகையை எந்த அளவுக்குக் கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளனர் என்பதற்கு பின்வரும் சட்டமும் ஆதாரமாக அமைந்துள்ளது.

وَلَوْ اسْتَعْطَفَ كَلْبًا أَوْ هِرَّةً أَوْ سَاقَ حِمَارًا لَا تَفْسُدُ لِأَنَّهُ صَوْتٌ لَا هِجَاءَ لَهُ (عَمْدُهُ وَسَهْوُهُ قَبْلَ قُعُودِهِ قَدْرَ التَّشَهُّدِ سِيَّانِ) وَسَوَاءٌ كَانَ نَاسِيًا أَوْ نَائِمًا أَوْ جَاهِلًا أَوْ مُخْطِئًا أَوْ مُكْرَهًا – الدر المختار

நாய் அல்லது பூனையை, இச் கொட்டி அழைத்தாலோ, கழுதையை ஓட்டினாலோ தொழுகை வீணாகி விடாது. காரணம், அது எழுத்துக்கூட்டி வாசிக்க முடியாத வெறும் சப்தம் தான். அத்தஹிய்யாத் இருப்பு அளவிற்கு அவர் உட்கார்வதற்கு முன்னால் இப்படிச் செய்தாலும் தொழுகை வீணாகாது. தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இரண்டும் சமம் தான். மறந்தோ, உறங்கிக் கொண்டோ, அறிந்தோ, தவறியோ, நிர்ப்பந்தமாகவோ எப்படிச் செய்தாலும் தொழுகை வீணாகி விடாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே நாயை அழைத்தால் தொழுகை பாழாகாது என்று இவர்கள் எழுதியுள்ளதில் இருந்து அல்லாஹ்வை இவர்கள் எந்த அளவு இழிவுபடுத்துகின்றனர் என்று தெரிகிறதா? ஹஜ்ரத்துக்கு முன்னால் ஊமையாக இருக்க வேண்டும் என்று சட்டம் எழுதி வைத்துள்ள இந்தக் கயவர்கள் அல்லாஹ்வுக்கு முன்னால் அல்லாஹ்வை எந்த அளவுக்கும் கேலி செய்யலாம் என்று கருதுகின்றனர்.

ஷாஃபி மத்ஹபின் சட்டத்தைப் பாருங்கள்!

ولا تبطل الصلاة بتلفظه بالعربية بقربة توقفت على اللفظ كنذر وعتق كأن قال نذرت لزيد بألف أو أعتقت فلانا فتح المعين

ஜைத் என்பவனுக்கு ஆயிரம் கொடுப்பதாக நான் நேர்ச்சை செய்கிறேன்; இன்னாரை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து விட்டேன் என்பது போன்ற சொற்கள் மூலம் நேர்ச்சை, அடிமையை விடுதலை செய்தல் போன்ற காரியங்களைத் தொழுது கொண்டு இருக்கும் போது அரபு மொழியில் பேசினால் தொழுகை பாழாகாது.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

இந்தச் சட்டங்கள் திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் இருந்து எடுக்கப்பட்டன? எந்த ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டன என்று எடுத்துக் காட்டுவார்களா?

1227 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ – وَتَقَارَبَا فِى لَفْظِ الْحَدِيثِ – قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ هِلاَلِ بْنِ أَبِى مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِىِّ قَالَ بَيْنَا أَنَا أُصَلِّى مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ. فَرَمَانِى الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَاثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَىَّ. فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِى لَكِنِّى سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَبِأَبِى هُوَ وَأُمِّى مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِى وَلاَ ضَرَبَنِى وَلاَ شَتَمَنِى قَالَ « إِنَّ هَذِهِ الصَّلاَةَ لاَ يَصْلُحُ فِيهَا شَىْءٌ مِنْ كَلاَمِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ». أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلاَمِ وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَّانَ. قَالَ « فَلاَ تَأْتِهِمْ ». قَالَ وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ. البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் தொழுது கொண்டிருந்த போது அக்கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே நான் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்கு அருள் செய்யட்டும்) என்று கூறினேன். அனைவரும் என்னைப் பார்வையால் துளைக்கலானார்கள். ஏன் என்னைப் பார்வையால் துளைக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். உடனே அவர்கள் தமது கைகளால் தமது தொடைகளில் தட்டினார்கள்.

என்னை மவுனமாக இருக்கச் சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டு மவுனமானேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடிந்து கொள்ளவில்லை. என்னைத் திட்டவில்லை. தொழுகை, மக்களின் பேச்சுகளுக்கு உரியதல்ல. இறைவனைத் துதிப்பதும், பெருமைப்படுத்துவதும், குர்ஆன் ஓதுவதும் தான் தொழுகை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்களை விட சிறந்த ஆசிரியரை நான் கண்டதில்லை.

அறிவிப்பவர் : முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)

நூல் : முஸ்லிம் 836

தும்மல் போட்டவர் அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னால் யர்ஹமுகல்லாஹ் என்று கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். ஆனால் தொழுகையில் இவ்வாறு கூற அனுமதி இல்லை என்றும், பேசுவதற்கு அனுமதியில்லை என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் மத்ஹபுச் சட்டமோ தொழுகையில் நாயை அழைப்பதும், கழுதையை விரட்டுவதும் கூடும் என்று கூறுகின்றது.

இறையச்சம் இல்லாமல் மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகளைப் பின்பற்றினால் மறுமையில் வெற்றிபெற முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள்!

தொழுது கொண்டே வியாபாரம்

தொழுகை என்பது அல்லாஹ்விடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும். தொழுகையை எந்த அளவுக்கு மத்ஹபுகள் கேலிக் கூத்தாக்குகின்றன என்று பாருங்கள்!

 فلو باع في صلاته بالإشارة انعقد البيع ولا تبطل صلاته وبه يلغز ويقال لنا إنسان يبيع ويشتري في صلاته عامدا عالما ولا تبطل صلاته – إعانة الطالبين ج: 4 ص: 16

ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் போது சைகை மூலம் விற்பனை செய்தால் அந்த வியாபாரம் செல்லும். தொழுகை பாழாகாது. தொழும்போது அறிந்த நிலையில் வேண்டுமென்றே ஒருவன் விற்கிறான்; வாங்குகிறான். அவனது தொழுகை முறியாது என்று இதைத் தான் விடுகதையாகச் சொல்கின்றனர்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

ஒருவன் தொழும் போது இன்னொருவன் வந்து உங்கள் வீட்டை எனக்கு விற்கிறீர்களா என்று கேட்கிறான். தொழுபவன் சைகையால் தலையை அசைத்து ஆம் என்கிறான். எவ்வளவு என்று அவன் கேட்கிறான். எட்டு விரலைக் காட்டி எட்டு ரூபாய் என்கிறான். இப்படிச் செய்தால் தொழுகை செல்லுமாம். வியாபாரமும் செல்லுமாம்.

அல்லாஹ்வின் அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இதை ஏற்பானா? உங்கள் மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் மத்ஹபுகள் தேவைதானா? சிந்தித்துப் பாருங்கள்!

தொழுகையைக் கேலிக்கூத்தாக்கிய மத்ஹபுகள்

தொழுகை மூலம்தான் ஒரு அடியான் அல்லாஹ்வை நெருங்குகிறான். அந்தத் தொழுகையை எந்த அளவுக்கு மத்ஹபு சட்ட வல்லுனர்கள் கேலிக்கூத்தாக்கியுள்ளனர் என்று பாருங்கள்!

مَعَهُ حَجَرٌ فَرَمَى بِهِ طَائِرًا لَمْ تَفْسُدْ،. الدر المختار

தொழுபவனிடம் ஒரு கல் இருக்கிறது. அதை ஒரு பறவை மீது வீசினால் தொழுகை முறியாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

لَا بَأْسَ بِتَكْلِيمِ الْمُصَلِّي وَإِجَابَتِهِ بِرَأْسِهِ كَمَا لَوْ طُلِبَ مِنْهُ شَيْءٌ أَوْ أُرِيَ دِرْهَمًا وَقِيلَ أَجَيِّدٌ فَأَوْمَأَ بِنَعَمْ أَوْ لَا أَوْ قِيلَ كَمْ صَلَّيْتُمْ فَأَشَارَ بِيَدِهِ أَنَّهُمْ صَلَّوْا رَكْعَتَيْنِ الدر المختار

தொழுது கொண்டு இருப்பவர் தலை மூலம் பேசுவதும், சைகை செய்வதும் தவறல்ல. உதாரணமாக தொழுகையாளியிடம் ஒரு பொருளை யாராவது கேட்கும் போது, அல்லது ஒரு வெள்ளிக்காசைக் காட்டி இது தரமானதா என்று கேட்கும் போது ஆம் என்றோ இல்லை என்றோ தலையால் சைகை செய்தால் குற்றமில்லை. அல்லது எத்தனை ரக்அத் தொழுதுள்ளீர்கள் என்று கேட்கும் போது இரு விரல்களைக் காட்டி இரு ரக்அத்க்ள் என்று சைகை செய்தால் குற்றமில்லை. தொழுகை முறியாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இந்தியாவில் ஜும்ஆ கிடையாது

ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகை நடத்துகின்றனர். ஆனால் அவர்களின் மத்ஹப் சட்டப்படி இந்தியாவில் ஜும்ஆத் தொழுகை நடத்த முடியாது.

 )لَا تَصِحُّ الْجُمُعَةُ إلَّا فِي مِصْرٍ جَامِعٍ، أَوْ فِي مُصَلَّى الْمِصْرِ، وَلَا تَجُوزُ فِي الْقُرَى) لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { لَا جُمُعَةَ وَلَا تَشْرِيقَ وَلَا فِطْرَ وَلَا أَضْحَى إلَّا فِي مِصْرٍ جَامِعٍ } وَالْمِصْرُ الْجَامِعُ : كُلُّ مَوْضِعٍ لَهُ أَمِيرٌ وَقَاضٍ يُنَفِّذُ الْأَحْكَامَ وَيُقِيمُ – فتح القدير

பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது. பெரு நகரங்களில் தவிர மற்ற ஊர்களில் ஜுமுஆவோ, நோன்புப் பெருநாளோ, ஹஜ்ஜுப் பெருநாளோ இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதே இதற்கு ஆதாரம். எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளனரோ அதுவே பெருநகரமாகும்.

ஆதாரம் : ஹனஃபி மத்ஹபின் சட்டநூலாகிய பத்ஹுல் கதீர்

 (وَيُشْتَرَطُ لِصِحَّتِهَا) سَبْعَةُ أَشْيَاءَ: الْأَوَّلُ: (الْمِصْرُ وَهُوَ مَا لَا يَسَعُ أَكْبَرُ مَسَاجِدِهِ أَهْلَهُ الْمُكَلَّفِينَ بِهَا) وَعَلَيْهِ فَتْوَى أَكْثَرِ الْفُقَهَاءِ – الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار)

ஜும்ஆ நிறைவேறுவதற்கு ஏழு நிபந்தனைகள் வேண்டும். அதில் ஒன்று ஜும்ஆ நடக்கும் ஊர் பெருநகரமாக இருக்க வேண்டும். தொழுகை கடமையாக்கப்பட்ட அவ்வூர்வாசிகளை, அந்த ஊரிலுள்ள பெரிய பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என்பதே பெரிய நகரம் என்பதற்கான அளவுகோலாகும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

)وَ) الثَّانِي : )السُّلْطَانُ) وَلَوْ مُتَغَلِّبًا أَوْ امْرَأَةً فَيَجُوزُ أَمْرُهَا بِإِقَامَتِهَا لَا إقَامَتُهَا (أَوْ مَأْمُورَةً بِإِقَامَتِهَا) رد المحتار

ஜும்ஆவின் இரண்டாவது நிபந்தனை மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ அனுமதியளிக்க வேண்டும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறியதாக ஆதாரம் காட்டி இச்சட்டத்தைக் கூறியுள்ளனர். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவே இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி நரகத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தபோது சிறிய ஊர்களில் ஜும்ஆ நடத்தி அதில் நிகழ்த்தும் உரையில் அரசைக் கண்டித்து பேசினால் ஆட்சியின் மீது மக்களுக்குக் கோபம் ஏற்படும். இதைத் தவிர்க்க சிறு ஊர்களில் ஜும்ஆ நடத்தாத வகையில் சட்டம் இயற்றித் தாருங்கள் என்று முஸ்லிம் மன்னர்களின் கோரிக்கை அடிப்படையில் தான் இந்தச் சட்டத்தை உருவாக்கினார்கள். இப்படி ஒரு ஹதீஸ் இல்லாமல் இருந்தும் நபியே சொன்னார்கள் என்று எழுதி வைத்து பெரிய நகரங்களில் ஜும்ஆ எனும் கடமையை அழித்து ஒழித்தார்கள்.

பெரிய நகரங்களில் பேசப்படுவதை அரசால் கண்காணிக்க முடியும் என்பதால் அங்கு மட்டும் தான் ஜும்ஆ நடத்த வேண்டும் என்று சட்டம் போட்டார்கள். இதற்காகத் தான் மன்னரோ, மன்னரின் அதிகாரம் பெற்றவரோ அனுமதித்தால் தான் ஜும்ஆ நடத்த வேண்டும் என்று எழுதி வைத்தார்கள்.

இப்போது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இருந்தும், மன்னரின் அனுமதி இல்லாமல் இருந்தும் எப்படி ஜும்ஆ நடத்துகின்றனர்?

وَفِي مَجْمَعِ الْأَنْهُرِ: أَنَّهُ جَائِزٌ مُطْلَقًا فِي زَمَانِنَا لِأَنَّهُ وَقَعَ فِي تَارِيخِ خَمْسٍ وَأَرْبَعِينَ وَتِسْعِمِائَةٍ إذْنٌ عَامٌّ وَعَلَيْهِ الْفَتْوَى- الدر المختار وحاشية ابن عابدين

நமது காலத்தில் சிற்றூர்களிலும் ஜும்ஆ நடத்தலாம். ஏனெனில் ஹிஜ்ரி 945 ஆம் ஆண்டு எல்லா ஊர்களிலும் ஜும்ஆ நடத்த பொது அனுமதி அளிக்கப்பட்டது. அதை ஆதாரமாக வைத்து இப்போது ஜும்ஆ நடத்தலாம். இது தான் பத்வாவுக்குரிய சொல்லாகும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அல்லாஹ் கடமையாக்கிய ஜும்ஆவை மன்னர் உத்தரவு இல்லை என்று கூறி ஒழித்தார்கள். ஒரு மன்னர் 945 ஆம் ஆண்டு அனுமதித்த காரணத்தால் தான் இந்தியாவில் ஜும்ஆ தொழ முடிகிறதாம். அந்த மன்னர் மட்டும் அனுமதி அளிக்காமல் இருந்தால் ஹனஃபிகள் ஜும்ஆ தொழுதிருக்க மாட்டார்கள். இப்போது ஒரு முஸ்லிம் மன்னர் ஆட்சிக்கு வந்து எனது அனுமதி இல்லாமல் ஜும்ஆ நடத்தக் கூடாது என்றால் அப்போதும் இவர்கள் ஜும்ஆ தொழும் பாக்கியத்தைப் பறித்து இருப்பார்கள்.

ஒருவரின் செயலால் மற்றவரின் தொழுகை முறியும் சட்டம்

ஷாஃபி மத்ஹபின் சட்டப்படி ஜும்ஆ தொழுகை நிறைவேற நாற்பது பேர் இருப்பது அவசியமாகும். ஆதாரமில்லாமல் இவர்களே எழுதி வைத்துள்ள இந்தச் சட்டத்தையொட்டி உருவாக்கியுள்ள துணைச் சட்டத்தைப் பாருங்கள்!

ونصها ومتى أحدث منهم واحد لم تصح جمعة الباقين وبه يلغز فيقال جمع بطلت صلاتهم بحدث غيرهم مع أنه ليس بإمام لهم ولا مؤتم بأحدهم إعانة الطالبين

நாற்பது பேர் ஜும்ஆ தொழுது கொண்டு இருக்கும் போது அவர்களில் ஒருவருக்கு மட்டும் உளூ நீங்கி விட்டால் மற்ற அனைவரின் ஜும்ஆவும் செல்லாது.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

இந்தச் சட்டத்துக்கு ஆதாரமான குர்ஆன் வசனம் எது? ஹதீஸ் எது? ஒன்றும் இல்லை. நாற்பது பேரில் ஒருவரின் உளு முறிந்து விட்டது என்பதை 39 பேர் எப்படி அறிந்து கொள்வார்கள்? என்ற அறிவு கூட இல்லாமல் இப்படி உளறியுள்ளனர்.

மன்னர்களுக்கு ஜால்ரா

சங்ககாலப் புலவர்கள் எப்படி மன்னர்களுக்கு ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்தினார்களோ அது போல்தான் மத்ஹபு சட்ட வல்லுனர்களும் இருந்துள்ளனர் என்பதைப் பாருங்கள்!

 أَمَّا مَا اُعْتِيدَ فِي زَمَانِنَا مِنْ الدُّعَاءِ لِلسَّلَاطِينِ الْعُثْمَانِيَّةِ – أَيَّدَهُمْ اللَّهُ تَعَالَى – كَسُلْطَانِ الْبَرَّيْنِ وَالْبَحْرَيْنِ وَخَادِمِ الْحَرَمَيْنِ الشَّرِيفَيْنِ فَلَا مَانِعَ مِنْهُ – الدر المختار

நமது காலத்தில் இரு உலக ராஜாக்கள், இரு கடல்களின் ராஜாக்கள், இரு புனிதத் தலங்களின் ஊழியர்கள் என்றெல்லாம் உஸ்மானியப் பேரரசர்களுக்காக (ஜும்ஆவில்) துஆச் செய்யும் வழக்கம் உள்ளது. இதற்கு எந்தத் தடையும் இல்லை.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாமல் நம் காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யலாம் என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். இவர்களின் மற்ற ஃபத்வாக்கள் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்!

பள்ளிவாசலைக் கட்டியவருக்கே பாங்கு, இகாமத் உரிமை

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன. ஒருவர் தனது சொந்தச் செலவில் பள்ளிவாசலைக் கட்டினாலும் அதில் அவருக்குக் கூடுதல் உரிமை கிடையாது. இந்த அடிப்படையை ஹனஃபி மத்ஹப் எப்படி தகர்க்கிறது என்று பாருங்கள்!

وِلَايَةُ الْأَذَانِ وَالْإِقَامَةِ لِبَانِي الْمَسْجِدِ مُطْلَقًا وَكَذَا الْإِمَامَةُ لَوْ عَدْلًا- الدر المختار

பள்ளிவாயிலைக் கட்டியவருக்குத்தான் பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் அதிகாரம் உண்டு. இது பொதுவானதாகும். (அதாவது வேறு தகுதியைப் பார்க்கத் தேவை இல்லை.) அவர் நேர்மையாளராக இருந்தால் இமாமத் செய்யும் அதிகாரமும் அவருக்கே உரியது.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஒருவர் பள்ளிவாயிலைக் கட்டினால் அதற்குரிய கூலி அவருக்கு அல்லாஹ்விடம் உண்டு. ஆனால் பள்ளிவாசலில் அவருக்கென்று பிரத்தியேகமான எந்த உரிமையும் கிடையாது.

ஏனெனில் பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன என்று அல்லாஹ் கூறுகிறான்.

(திருக்குர்ஆன்:72:18.)

பள்ளிவாசல்களின் உரிமையாளன் அல்லாஹ் என்றால் அவனது அடியார்கள் அனைவருக்கும் அதில் சமமான உரிமைகள் உள்ளன. கிறித்தவ மதத்தில் வழிபாட்டுத்தலங்கள் மதகுருமார்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் வரவு செலவுகள் அனைத்தும் அவர்களுக்கே உரியன. இதனால்தான் பங்குத் தந்தை என்று அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அதைப் பார்த்து காப்பியடித்து இந்தச் சட்டத்தை எழுதி வைத்துள்ளார்கள். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

பள்ளிவாசலைக் கட்டியவருக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறப்பு உரிமை அவரோடு முடிந்து விடாதாம். மாறாக பரம்பரை பரம்பரையாக இந்த உரிமை தொடருமாம். அதே நூல் கூறுவதைக் கேளுங்கள்.

وَلَدُ الْبَانِي وَعَشِيرَتُهُ أَوْلَى مِنْ غَيْرِهِمْ – الدر المختار

பள்ளிவாசலைக் கட்டியவரின் மகனும், அவனது குடும்பத்தினரும் மற்றவர்களை விட அதிக உரிமை படைத்தவர்கள்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இஸ்லாத்தைப் பற்றி ஓரளவாவது அறிந்து வைத்திருக்கின்ற எந்த முஸ்லிமாவது இது மாநபி வழியில் அமைந்த சட்டம் என்று கருதமுடியுமா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.

பாங்கு சொல்லும் போது எழுந்து நிற்றல்

எந்த ஆதாரமும் இல்லாமல் நினைத்தவாறு சட்டங்களை எழுதி வைத்துள்ளனர் என்பதற்கு பின்வரும் சட்டமும் ஆதாரமாக உள்ளது.

وَيُنْدَبُ الْقِيَامُ عِنْدَ سَمَاعِ الْأَذَانِ – الدر المختار

பாங்கு சப்தத்ததைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இப்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

626 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ المُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ الفَجْرِ قَامَ، فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الفَجْرِ، بَعْدَ أَنْ يَسْتَبِينَ الفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ، حَتَّى يَأْتِيَهُ المُؤَذِّنُ لِلْإِقَامَةِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபஜ்ரு தொழுகையின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவார்கள். ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 626

பாங்கு சொல்லி முடியும் வரை படுத்துக் கிடந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லி முடித்தவுடன் எழுந்துள்ளதாக இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. எனவே பாங்கு சொல்லும் போது எழுந்திருக்க வேண்டியதில்லை. இந்த ஆதாரத்துக்கு மாற்றமாக மேற்கண்ட மத்ஹபுச் சட்டம் அமைந்துள்ளது.

கிராமங்களில் பெருநாள் தொழுகை கூடாது

பெருநாள் தொழுகை மிக முக்கியமான தொழுகையாகும். பெண்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தொழுகையாகும். அதையும் இல்லாமலாக்கும் மத்ஹபின் மடமையைப் பாருங்கள்!

وَفِي الْقُنْيَةِ: صَلَاةُ الْعِيدِ فِي الْقُرَى تُكْرَهُ تَحْرِيمًا أَيْ لِأَنَّهُ اشْتِغَالٌ بِمَا لَا يَصِحُّ لِأَنَّ الْمِصْرَ شَرْطُ الصِّحَّةِ- الدر المختار

கிராமங்களில் பெருநாள் தொழுகை தொழுவது ஹராமுக்கு நெருக்கமான மக்ரூஹ் ஆகும். இது செல்லத்தகாத காரியத்தில் ஈடுபடுவதாகும். ஏனெனில் பெருநாள் தொழுகை செல்லத்தக்கதாக ஆவதற்கு பெருநகரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

மன்னர்களுக்காக சட்டத்தை மாற்றியவர்கள்

மத்ஹபின் மிக முக்கியமான இமாம்களே மத்ஹபை எந்த இலட்சணத்தில் பின்பற்றியுள்ளனர் என்று பாருங்கள்!

وَهُوَ تَأْوِيلُ مَا رُوِيَ عَنْ أَبِي يُوسُفَ وَمُحَمَّدٍ فَإِنَّهُمَا فَعَلَا ذَلِكَ لِأَنَّ هَارُونَ أَمَرَهُمَا أَنْ يُكَبِّرَا بِتَكْبِيرِ جَدِّهِ فَفَعَلَا ذَلِكَ امْتِثَالًا لَهُ لَا مَذْهَبًا وَاعْتِقَادًا – الدر المختار

وَمَا ذَكَرُوا مِنْ عَمَلِ الْعَامَّةِ بِقَوْلِ ابْنِ عَبَّاسٍ لِأَمْرِ أَوْلَادِهِ مِنْ الْخُلَفَاءِ بِهِ كَانَ فِي زَمَنِهِمْ أَمَّا فِي زَمَانِنَا فَقَدْ زَالَ فَالْعَمَلُ الْآنَ بِمَا هُوَ الْمَذْهَبُ عِنْدَنَا- رد المحتار

وحمل الشافعي جميع التكبيرات المروية عن ابن عباس على الزوائد وهذا خلاف ما حملناه عليه والمذهب عندنا قول ابن مسعود وما ذكروا من عمل العامة بقول ابن عباس لأمر أولاده من الخلفاء به كان في زمنهم أما في زماننا فقد زال فالعمل الآن بما هو المذهب عندنا كذا في شرح المنية – الدر المختار

(அபூ ஹனீஃபாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள) அபூ யூசுஃப், முஹம்மத் ஆகிய இருவரும் பெருநாள் தொழுகையில் மூன்று மூன்று தக்பீர்கள் சொல்லாமல் பன்னிரண்டு தக்பீர்கள் கூறி தொழ வைத்தனர். மன்னர் உத்தரவிட்ட அடிப்படையில் தான் இவர்கள் செய்தார்கள். இதை மனதார ஏற்றுக் கொண்டு செய்யவில்லை. இப்போது அது போல் மன்னரின் நிர்பந்தம் இல்லை. எனவே ஆறு தக்பீர்கள் தான் சொல்ல வேண்டும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்.

பெருநாள் தொழுகை எனும் முக்கிய வணக்கத்தை தங்கள் நம்பிக்கைக்கப்படி செய்யாமல் மன்னர் கட்டளையிட்டதால் மாற்றமாகச் செய்துள்ளனர் என்றால் இவர்கள் வகுத்துத் தந்த சட்டங்கள் எந்த அடிப்படையில் அமைந்திருக்கும் என்று சிந்தியுங்ககள்!

மழைத் தொழுகை இல்லை

மத்ஹப் உலமாக்கள் திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்துதான் சட்டங்களை வகுத்துத் தந்துள்ளனர் என்று மத்ஹப்வாதிகள் பில்டப் கொடுப்பது வழக்கம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைக்காக தொழுகை நடத்தியதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஹனஃபி மத்ஹபின் இமாம் அபூஹனீஃபா அவர்கள் மழைத் தொழுகையை மறுத்துள்ளார்கள்.

قَالَ أَبُو حَنِيفَةَ : لَيْسَ فِي الِاسْتِسْقَاءِ صَلَاةٌ مَسْنُونَةٌ فِي جَمَاعَةٍ، فَإِنْ صَلَّى النَّاسُ وُحْدَانًا جَازَ، وَإِنَّمَا الِاسْتِسْقَاءُ الدُّعَاءُ وَالِاسْتِغْفَارُ) لِقَوْلِهِ تَعَالَى فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إنَّهُ كَانَ غَفَّارًا  الْآيَةَ،  وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى وَلَمْ تُرْوَ عَنْهُ الصَّلَاةُ  – الهداية

மழைக்காக தொழும் சுன்னத்தான எந்தத் தொழுகையும் கிடையாது. 71:10,11 வசனங்களில் பாவமன்னிப்புத் தேடுங்கள்; அல்லாஹ் மழையை இறக்குவான் என்று சொல்லப்பட்டுள்ளதால் துஆவும், பாவமன்னிப்பு தேடுவதும் மட்டுமே உண்டு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைக்காக துஆச் செய்தார்களே தவிர மழைக்காக எந்தத் தொழுகையும் தொழவில்லை என்று அபூ ஹனீஃபா கூறுகிறார்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

நபிவழியைப் பாருங்கள்.

1012 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ عَبَّادَ بْنَ تَمِيمٍ، يُحَدِّثُ أَبَاهُ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى المُصَلَّى فَاسْتَسْقَى فَاسْتَقْبَلَ القِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது கிப்லாத் திசையில் திரும்பி, தமது தோள் துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல் : புகாரி 1012, 1024, 1025

இன்னும் இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அபூஹனீஃபா காலத்தில் ஹதீஸ் தொகுக்கப்படாததால் அவருக்கு இந்த ஹதீஸ்கள் தெரியாமல் இருந்துள்ளது. எனவே அந்தக் கால இமாம்களைப் பின்பற்றினால் சரியான மார்க்கம் நமக்குக் கிடைக்க வழியில்லை.

கிரகணத் தொழுகையில் குத்பா கிடையாது

கிரகணத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அந்தத் தொழுகையில் குத்பா உரை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் ஹனஃபி மத்ஹபில் குத்பா இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

(وَلَيْسَ فِي الْكُسُوفِ خُطْبَةٌ) لِأَنَّهُ لَمْ يُنْقَلْ. الهداية شرح البداية

கிரகணத் தொழுகையில் குத்பா கிடையாது. ஏனென்றால் அவ்வாறு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டவில்லை.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா

மாநபி வழியைப் பாருங்கள்!

1044 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: خَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، فَقَامَ، فَأَطَالَ القِيَامَ، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ القِيَامَ وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ مَا فَعَلَ فِي الأُولَى، ثُمَّ انْصَرَفَ وَقَدْ انْجَلَتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَادْعُوا اللَّهَ، وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. …… (கிரகணம் விலகி) வெளிச்சம் வந்ததும் தொழுகையை முடித்து மக்களுக்கு குத்பா உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) ”சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும், எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1044

கிரகணத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள் என்று அபூஹனீஃபா காலத்து அறிஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்போது ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்படவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தை எழுதியவர்களின் காலத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு விட்டன. மேலும் ஷாஃபி இமாம் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் குத்பா உண்டு எனக் கூறுகிறார் என்று ஹனஃபி மத்ஹப் நூல்களில் எடுத்துக் காட்டிவிட்டு ஆனாலும் குத்பா இல்லை என்று எழுதி வைத்துள்ளனர்.

நபியின் வழி இதுதான் என்று தெரிந்த பின்பும் எங்கள் இமாம்கள் கூறியதை மாற்ற மாட்டோம் என்று கூறுவோர் இமாம்களா? மக்களை வழிகெடுப்பவர்களா? மக்களுக்குத் தவறான மார்க்கத்தைச் சொல்வதே மத்ஹபுகளின் ஒரே நோக்கம் என்பது இதிலிருந்து தெரிகின்றது.