Tamil Bayan Points

08) கியாமத் நாளை நம்புதல்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 7
கியாமத் நாளை நம்புதல்

 

கியாமத் நாள் என்றால் என்ன?

வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.

பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்கு சுவர்க்கம் என்ற  பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் நரகத்தில் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது.  இதுவே கியாமத் நாள் ஆகும்.

 

 

கியாமத் நாளை நம்புவது அவசியமா?

கியாமத் நாளை நம்புபவர்களே முஃமின்கள் ஆவர். அல்லாஹ் கூறுகிறான்.

 

يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ (114) سورة آل عمران

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (முஃமின்களாகிய)  அவர்கள் நம்புகின்றனர்.

(அல்குர்ஆன் 3:114)

 

 

இவ்வுலகிலுள்ள அனைத்தும் அழிக்கப்படும் என்பதற்கு ஆதாரம் என்ன?

 

 

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ(26)وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ(27) سورة الرحمن

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27)

 

 

இவ்வுலகம் அழிக்கப்பட்ட பிறகு மீண்டும் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்களா?

ஆம்! இவ்வுலகம் அழிக்கப்பட்ட பிறகு மீண்டும் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு அலலாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப கூ­ வழங்கப்படும்.

 

وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ(281) سورة البقرة

அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:281)

 

கியாமத் நாள் எப்போது ஏற்படும்?

கியாமத் நாள் எப்போது ஏற்படும் என்பதை மலக்குமார்கள், நபிமார்கள் உட்பட யாருமே அறியமுடியாது. அது பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டும்தான் உள்ளது.

ஆதாரம்

 

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ لقمان

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது .

(அல்குர்ஆன் 31:34)

 

கியாமத் நாள் என்ன கிழமையில் ஏற்படும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கியாமத் நாள் வெள்ளிக் கிழமையிலே தவிர ஏற்படாது”

அறிவிப்பவர்:அபூ ஹூரைரா (ர­)

நூல்:திர்மிதி (450)

கியாமத் நாள் வெள்ளிக் கிழமை ஏற்படும் என்றாலும்அது எந்த வருடத்திலுள்ள எந்த மாதத்திலுள்ள வெள்ளிக் கிழமை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது.

 

கியாமத் நாளின் மிகப் பெரும் அடையாளஙகள் எத்தனை? அவை யாவை?

கியாமத் நாளின் மிகப் பெரும் அடையாளங்கள் பத்து ஆகும். அவை

  1. புகை, 2. தஜ்ஜால், 3. (பேசும்) பிராணி, 4. மேற்கி­ருந்து சூரியன் உதிப்பது, 5. மர்ய மின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்கு தல், 6. யஃஜூஜ், மஃஜூஜ், 7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்தி லும், 10. இறுதியாக யமன் நாட்டி­ருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்.
  2. (நூல் முஸ்­ம் 5558)