Tamil Bayan Points

07) கிதாபும் ஸுபுரும்

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

7) கிதாபும் ஸுபுரும்

நபிமார்கள் வேதத்தை மட்டும் இறைவனிடம் பெற்றுத் தருபவர்கள் அல்லர். வேதமல்லாத இன்னொரு வழிகாட்டுதலையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஸுபுரையும், ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

(திருக்குர்ஆன்:3:184.)

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஸுபுரையும், ஒளிவீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

(திருக்குர்ஆன்:35:25.)

இறைத் தூதர்கள் இரண்டு வழிகாட்டி நெறிகளுடன் அனுப்பப்பட்டனர் என்று இவ்விரு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான். கிதாப் என்றாலும், ஸுபுர் என்றாலும் ஏடு என்பதே பொருளாகும். கிதாப் எனும் ஏட்டையும் ஸுபுர் எனும் ஏட்டையும் இறைத் தூதர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்பதை வேதம் என்று நாம் புரிந்து கொள்கின்றோம். அப்படியானால் கிதாபுடன் அருளப்பட்ட ஸுபுர் என்பது என்ன? இறைவன் அனுப்பிய ஸுபுரை நிராகரிப்பது இறை வேதத்தையே நிராகரிப்பதாக ஆகாதா? இரண்டு வகையான வஹீயை இறைவன் அருளியுள்ளதால் தான் கிதாபையும், ஸுபுரையும் (ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும்) அனுப்பினோம் என்று கூறுகின்றான்.

கிதாபும் ஃபுர்கானும்

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், ஃபுர்கானையும் (பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும் வழி முறையையும்) மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!

(திருக்குர்ஆன்:2:53.)

ஃபுர்கான் என்றால் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்று பொருள். வேதமும் சில இடங்களில் ஃபுர்கான் என்று கூறப்பட்டாலும் இங்கே கிதாபையும், ஃபுர்கானையும் என இரண்டு வழிகாட்டி நெறிகள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மூஸா நபியவர்களுக்கு வேறு வகையில் அருளப்பட்ட வஹீ தான் இங்கே ஃபுர்கான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  • ! கிதாபையும் ஹிக்மத்தையும்
  • ! கிதாபையும் ஹுக்மையும்
  • ! கிதாபையும் இன்னொரு செய்தியையும்
  • ! கிதாபையும் மீஸானையும்
  • ! கிதாபையும் ஸுபுரையும்
  • ! கிதாபையும் ஃபுர்கானையும்

என்றெல்லாம் கிதாபுடன் இன்னொரு செய்தி இணைத்துக் கூறப்பட்டிருக்கும் போது ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.

  • ! வேதத்தை விளக்குவதற்காகவே உம்மை அனுப்பியுள்ளோம்.
  • ! வேதத்தை விளக்குவதற்காகவே தவிர உம்மை அனுப்பவில்லை.
  • ! இவர் வசனங்களை ஓதிக் காட்டி, வேதத்தைக் கற்றுத் தருவார்.
  • ! எந்தத் தூதருக்கும் அவரது தாய்மொழியிலேயே வேதத்தை அருளினோம். அவர் விளக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம்.
  • ! அவர் பேசுவதெல்லாம் வஹீ தான்.
  • ! இறைவனின் வஹீ மூன்று வகைகளில் உள்ளன.
  • ! தூதர்கள் அனுப்பப்படுவதற்கான நோக்கம்.
  • ! அவரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.
  • ! தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

என்றெல்லாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல சான்றுகளையும், ஆதாரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி ஹதீஸ்களைப் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம் என்பதைச் சந்தேகமற நிரூபித்தோம். முடிவாகச் சொல்வதென்றால் நபிகள் நாயகத்தின் விளக்கமாக அமைந்துள்ள ஹிக்மத்தை, மீஸானை, ஃபுர்கானை அதாவது ஹதீஸை யார் நிராகரித்தாலும் அவர்கள் மறுப்பது குர்ஆனைத் தான் என்பதில் ஐயமே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய வழிகாட்டுதல் இன்றி வேறு வஹீ மூலம் நடைமுறைப்படுத்திய பல விஷயங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அங்கீகாரம் செய்துள்ளான். நபியின் கட்டளை தனது கட்டளையே என ஏற்றுள்ளான். அத்தகைய சட்டங்களைக் காண்போம். நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போரின் கூற்று எந்த அளவுக்கு அறியாமைமிக்கது என்பது அதிலிருந்து உறுதியாகும்.

குர்ஆன் கூறாத கிப்லா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தக் கிப்லா மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. அது பற்றி பின்வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்?என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்என்று கூறுவீராக!

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

(திருக்குர்ஆன்:2:142,143,144.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். அதன் பின்னர் இது மாற்றப்பட்டு கஃபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

ஹதீஸ்களை மார்க்க ஆதாரங்களாகக் கொள்ளாதவர்களால் ஏற்கனவே இருந்த கிப்லா எது என்பதற்கு விளக்கம் கூற முடியாது. ஆயினும் கஃபா அல்லாத வேறொரு திசையை நோக்கித் தொழுது வந்தனர். பின்னர் கஃபாவை நோக்கித் தொழுமாறு கட்டளையிடப்பட்டனர் என்பதை அவர்களால் மறுக்க முடியாது.

இம்மூன்று வசனங்களில் முதல் வசனத்தை அதாவது 142 வது வசனத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்? என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள்.!

(திருக்குர்ஆன்:2:142.)

முஸ்லிம்கள் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது வந்தனர் என்பதும், இப்போது அந்தக் கிப்லாவை விட்டு விட்டு வேறு கிப்லாவுக்கு மாறி விட்டனர் என்பதும், அவ்வாறு மாறியதை அன்றைய அறிவிலிகள் விமர்சித்தனர் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.

இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் இக்கருத்தை மனதில் பதிவு செய்து கொண்டு 144 வது வசனத்தைப் பார்ப்போம்.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக

(திருக்குர்ஆன்:2:144.)

முஸ்லிம்கள் முன்னர் எந்தக் கிப்லாவை நோக்கித் தொழுதார்களோ அந்தக் கிப்லாவை அல்லாஹ் மாற்ற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் ஆசையாகவும், விருப்பமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே கிப்லாவை மாற்றும் கட்டளைக்காக அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிப்லாவை விரும்பினார்களோ அந்தக் கிப்லாவையே நோக்குமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான் என்ற விபரங்கள் இந்த வசனத்தில் இருந்து தெரிய வருகின்றன. முஸ்லிம்கள் இப்போது ஒரு கிப்லாவுக்கு மாறியதும், முன்னர் வேறு கிப்லாவை நோக்கித் தொழுததும் இரண்டுமே அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வேறு கிப்லா மாற்றப்பட்ட கட்டளை 144 வசனத்தில் உள்ளது. ஆனால் முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்களே அதற்கான கட்டளை குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் குர்ஆனில் அந்தக் கட்டளை காணப்படவில்லை. முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்கள் என்ற தகவல் தான் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

முன்னர் நோக்கிய கிப்லா பற்றிய கட்டளை குர்ஆனில் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அந்தக் கட்டளையைப் பிறப்பித்திருப்பார்கள். நபிகள் நாயகம் சுயமாக அந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்களா? நிச்சயமாக இல்லை. ஏனெனில் 143 வது வசனத்தில் முந்தைய கிப்லாவையும் நாமே நிர்ணயித்தோம் என்று பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.

(திருக்குர்ஆன்:2:143.)

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக முந்தைய கிப்லாவை நிர்ணயம் செய்திருந்தால் சுயமாக அவர்களே அதை மாற்றியிருப்பார்கள். மாற்றுவதற்கான கட்டளை இறைவனிடமிருந்து வருமா என்று அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கத் தேவை இல்லை. முந்தைய கிப்லாவை நோக்குமாறு இறைவன் கட்டளை பிறப்பித்ததும் உண்மை, அக்கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை.

இவ்விரு உண்மைகளிலிருந்து தெரியும் மூன்றாவது உண்மை, இறைவன் கட்டளைகள் யாவும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறைத் தூதர்களின் இதயங்களில் ஜிப்ரீலின் துணையில்லாமல் தனது கருத்துக்களை இறைவன் பதியச் செய்வான். அதுவும் இறைக் கட்டளை தான் என்பதே அந்த மூன்றாவது உண்மை.

இந்த விபரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது குர்ஆன் அல்லாத இன்னொரு வகையான வஹீ மூலம் அவர்களுக்கு முந்தைய கிப்லா பற்றிய கட்டளை வந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் முந்தைய கிப்லாவை நோக்கியுள்ளார்கள். இதனாலேயே புதிய கிப்லாவை நபிகள் நாயகம் சுயமாக முன்னோக்காமல் அல்லாஹ்வின் மறு கட்டளைக்குக் காத்திருந்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ உண்டு என நாம் ஏற்கனவே பொதுவாகக் கூறியதற்கு இது குறிப்பான ஆதாரமாக உள்ளது. குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான். உங்கள் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இரண்டாவது கிப்லாவை நோக்கும் கட்டளை போல் முதல் கிப்லாவை நோக்கும் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள்! கியாம நாள் வரை அப்படி ஒரு கட்டளையை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

மேலும் முந்தையை கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கியது எனது கட்டளைப்படியே என்று 143 வது வசனத்தில் அல்லாஹ் கூறுவது ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டும். அனைத்துக் கட்டளைகளையும் அல்லாஹ் குர்ஆன் மூலம் மட்டும் கூறாமல் சில கட்டளைகளைக் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் ஏன் கூற வேண்டும்? என்று சிலருக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு அல்லாஹ் இவ்வசனத் தொடரிலேயே ஆணித்தரமாகப் பதில் அளிக்கிறான்.

வந்த வழியே திரும்பிச் செல்வோலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். எவ்வளவு அற்புதமான சொற்றொடர் பாருங்கள்! குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறக் கூடிய இவர்களுக்காகவே இவ்வசனம் இறங்கியது போல் இருக்கவில்லையா?

முந்தையை கிப்லாவை நோக்கும் கட்டளை குர்ஆனில் இல்லை தான், ஆனாலும் நாம் தான் அந்தக் கிப்லாவையும் ஏற்படுத்தியிருந்தோம். குர்ஆனில் இல்லாவிட்டாலும் இத்தூதர் மனோ இச்சைப்படி பேச மாட்டார் என உறுதியாக நம்பி அதனடிப்படையில் செயல்பட முன் வருபவர் யார்? வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார்? என்பதை அடையாளம் காட்டவே இவ்வாறு செய்தோம் என இறைவன் பதிலளிப்பது போல் இவ்வசனம் அமைந்திருக்கவில்லையா?

அதாவது வேண்டுமென்றே தான் இக்கட்டளையை குர்ஆன் மூலம் பிறப்பிக்காமல் இறைத் தூதர் வழியாக அவன் பிறப்பித்துள்ளான். இறைத் தூதர் பிறப்பித்த கட்டளையைத் தனது கட்டளை எனவும் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கின்றோம். இந்த வசனங்களிலிருந்து எழுகின்ற வேறு சில கேள்விகளையும் எழுப்புவது பொருத்தமாக இருக்கும்,

இவ்வசனங்களில் எந்த இடத்திலும் தொழுகைக்காக மஸ்ஜிதுல் ஹராமை முன்னோக்குங்கள் எனக் கூறப்படவில்லை. மாறாக கிப்லா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹதீஸின் விளக்கத்தை ஓரம் கட்டிவிட்டு கிப்லாவுக்குப் பொருள் கொள்வது என்றால் முன்னோக்கும் திசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்பு என்று 2:149 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்பு, நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையிலேயே உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என 2:150 வது வசனம் கூறுகின்றது.

தொழும் போது இவ்வாறு செய்யுமாறு இவ்வசனங்களில் கூறப்படவில்லை.

பிரயாணம் செய்யும் போது கஃபாவை நோக்கியே பிரயாணம் செய்ய வேண்டும் என்பது தான் ஹதீஸ் துணையின்றி விளங்கும் போது தெரியும் விஷயமாகும். எனவே இந்திய முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் எந்தப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் ஏறத்தாழ மேற்கு நோக்கியே பயணம் செய்ய வேண்டும். அத்திசையில் தான் கஃபா உள்ளது.

வடக்கு, தெற்கு, கிழக்குத் திசைகளில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக் கூடாது. புறப்பட்டால் கஃபாவை நோக்கியே புறப்படு என்பது தான் கட்டளை.

அது மட்டுமின்றி நாம் எங்கே இருந்தாலும் கஃபாவை மட்டுமே நோக்க வேண்டும் என்பதும் இவ்வசனங்களின் கட்டளையாகும். நாட்டின் பிரதமரை நாம் சந்திக்கச் செல்கின்றோம். அவர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். நாம் அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்தால் தான் கஃபாவை நோக்க முடியும். எங்கிருந்த போதும் அத்திசையையே நோக்குங்கள் என்ற கட்டளையை அப்போது தான் செயல்படுத்த முடியும்.

இது தொழுகையில் எங்கே முன்னோக்குவது என்பது குறித்து அருளப்பட்ட வசனங்கள் எனக் கூறும் ஹதீஸ்களை அலட்சியப்படுத்தினால் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்புகளில் (தொழுகையின் போது) என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருப்பதைக் கண்டு ஏமாற வேண்டாம். அது அரபு மூலத்தில் இல்லாமல் மொழி பெயர்ப்பாளர் சேர்த்ததாகும். இது போன்ற கேள்விகள் அவர்களது குருட்டுக் கண்களைத் திறக்க உதவும் என்பதற்காக இதை நாம் குறிப்பிடுகின்றோம்.

நோன்புக் கால இரவில்

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

(திருக்குர்ஆன்:2:187.)

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து சட்டங்கள் வந்தன என்பதை இந்த வசனமும் தெளிவுபடுத்துகிறது. இந்த வசனம் கூறும் செய்தி இது தான்.

நோன்பு நோற்றிருக்கும் போது பகலில் மட்டும் இன்றி இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்தது என்பதும், அத்தடையைக் கடைப்பிடிக்க முடியாமல் நபித்தோழர்கள் பலர் அதை மீறியுள்ளனர் என்பதும், மக்களின் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு அந்தத் தடையை அல்லாஹ் நீக்கி இப்போது முதல் இரவில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று அனுமதி வழங்கினான் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

நோன்பு நோற்றிருக்கும் போது பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஒரு கட்டளை இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? அந்த ஆதாரம் இந்த வசனத்துக்குள்ளேயே அடங்கியுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும் போது அதைத் துரோகம் எனக் கூற முடியாது. தடை செட்டப்பட்டிருந்த ஒரு செயலை அம்மக்கள் செய்திருந்தால் தான் அது துரோகம் எனச் சொல்லப்படும். இவ்வசனத்தில் நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்தீர்கள்என்று அல்லாஹ் கூறுவதால் பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை அறிய முடியும். 

எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான்என்ற சொற்றொடலிருந்தும் இதை அறியலாம். தடை செய்யப்பட்டதைச் செய்தால் தான் மன்னிக்க முடியும். அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும் போது மன்னிக்கும் பேச்சுக்கே அதில் இடமில்லை. பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்ததால் தான் இப்போது முதல் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் எனக் கூறி தடயை நீக்குகிறான். நோன்புக் காலத்தில் பகலில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை இருந்ததையும், அந்தத் தடை இப்போது முதல் நீக்கப்படுகிறது என்பதையும் இம்மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக உள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத வேறு வழியிலும் இறைவனிடமிருந்து சட்ட திட்டங்கள் வழங்கப்பட்டன என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்ற வாதம் உண்மையாக இருந்தால் பகலில் இல்லறத்தில் ஈடுபடக் கூடது என்ற தடை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் குர்ஆனில் எந்த வசனத்திலும் தடை செய்யும் கட்டளை காணப்படவில்லை. ஏற்கனவே தடை இருந்தது என்ற தகவல் தான் உள்ளதே தவிர எந்த வசனம் இதைத் தடை செய்தது என்பது கூறப்படவில்லை. குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி; ஹதீஸ்கள் இறைச் செய்தி அல்லஎன்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்:

பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே அவ்வாறு தடை விதிக்கும் வசனம் எது? குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்று வாதம் செய்வோர் அந்தக் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். கியாம நாள் வரை அப்படி ஒரு கட்டளையை அவர்களால் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்து அவர்கள் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை. நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்என்று இறைவன் கூறிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாமல் நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்; நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் அதை மீறுவது பாவம் தான்; என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.!

தடுக்கப்பட்ட இரகசியம்

இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!

(திருக்குர்ஆன்:58:8,9.)

இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்தியுங்கள்.

  • ??இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.
  • ??இத்தடையைச் சிலர் மீறியதுடன் பாவமான காரியங்களை இரகசியமாகப் பேசினார்கள்.
  • ??அறவே இரகசியம் பேசக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டு கெட்ட காரியங்களை இரகசியம் பேச வேண்டாம்; நல்ல காரியங்களை இரகசியம் பேசலாம்என்ற கட்டளை இதன் பின்னர் வந்தது,

இம்மூன்று செய்திகளையும் மேற்கண்ட வசனங்களில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியமில்லை என்பது உண்மையாக இருந்தால் ஏற்கனவே இரகசியம் பேசுவதை விட்டும் அடியோடு தடுக்கப்பட்டதைக் கூறும் வசனம் குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அடியோடு இரகசியம் பேசுவதைத் தடை செய்யும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.

இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் காணவில்லையா?என்று திருக்குர்ஆன் கேட்பதிலிருந்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததை விளங்கலாம். அந்தத் தடையை நீக்கும் இவ்விரு வசனங்கள் தான் குர்ஆனில் உள்ளன. தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் குர்ஆனிலிருந்து இந்தத் தடையை எடுத்துக் காட்டவே இயலாது. குர்ஆனில் தடுக்கப்படாத ஒன்று எப்படி தடுக்கப்பட்டதாக ஆகும்? இறைத் தூதர் தடை செய்ததைத் தான் இது குறிக்கின்றது என்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போர் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றனர்.

அல்லாஹ் இரகசியம் பேசுவதைத் தடுத்ததாகக் கூறுகின்றானே! அந்தத் தடை குர்ஆனில் இல்லையே! தடுக்காத ஒன்றை தடுக்கப்பட்டதாகக் கூறி குர்ஆன் தவறான தகவலைத் தருகின்றதே! இது எவ்வாறு இறை வேதமாக இருக்க முடியும்என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்பினால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை என்று கூறக் கூடியவர்களால் தக்க பதில் கூற முடியும். அது தேவையில்லை என்போர் தக்க பதில் கூற முடியாது.

குர்ஆன் மீது சந்தேகத்தை எழுப்பும் வாதம் ஒரு போதும் சரியானதாக இருக்க முடியாது. குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளது. அதுவும் மார்க்க ஆதாரம் தான் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

இறைவனின் வாக்குறுதி

எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

(திருக்குர்ஆன்:8:7.)

இவ்வசனம் நேரடியாகக் கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.

தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.

நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார். இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.

வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.

எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படை பலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை பத்ர் என்னும் இடத்தில் எதிர் கொண்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி தான் இவ்வசனத்தில் கூறப்படுகின்றது. இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். வணிகக் கூட்டம், அவர்களைக் காப்பாற்ற வந்த மக்காவின் இராணுவம் இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்று முன்னரே அல்லாஹ் வாக்களித்துள்ளதாக இவ்வசனம் கூறுகின்றது.

ஏற்கனவே அளித்த வாக்குறுதியை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நினைவுபடுத்துகின்றான். குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்ற வாதத்தின் படி இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் முழுவதும் தேடினாலும் இக்கருத்தைச் சொல்லும் வசனம் ஏதும் இல்லை. இறைவன் வாக்களித்ததாகக் கூறுகின்றான். ஆனால் அந்த வாக்குறுதி குர்ஆனில் இல்லை. குர்ஆன் மட்டுமே போதும் என்பவர்கள் இப்போது குர்ஆன் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாகி விடுகின்றனர். குர்ஆன் உண்மைக்கு மாற்றமான செய்தியைக் கூறுகின்றது என்ற கருத்தை இத்தகையோர் ஏற்படுத்துகின்றனர்.

குர்ஆன் மட்டுமின்றி வேறு வகையிலும் இறைவன் புறத்தி-ருந்து செய்திகள் இறைத் தூதர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புவோருக்குக் குர்ஆன் மீது எந்தச் சந்தேகமும் ஏற்படாது. ஏனெனில் இறைவன் அளித்த அந்த வாக்குறுதி குர்ஆனில் உள்ளதா என்று தேடிப் பார்ப்பார்கள். குர்ஆனில் இல்லாத போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்த வாக்குறுதியை அல்லாஹ் பதிவு செய்திருப்பான் என்று முடிவுக்கு வந்து தங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்வார்கள்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் முடிவில் நாத்திகர்களாக மாறும் இழிவைச் சந்திப்பதற்கு அவர்களின் தவறான கொள்கையே காரணமாக அமைந்து விடுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் அல்லாத மற்றொரு வகையிலும் செய்தியை இறைவன் வழங்குவான் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.

அல்லாஹ் அறிவித்த இரகசியம்

இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறிய போது, அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற, அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டிய போது அதில் சிலவற்றை (அம் மனைவியிடம்) நபி எடுத்துக் காட்டி, சிலவற்றை எடுத்துக் காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்த போது இதை உங்களுக்கு அறிவித்தவன் யார் என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும், நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) என நபி விடையளித்தார்.

(திருக்குர்ஆன்:66:3.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். உங்களுக்கு இதை யார் சொன்னார்என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.

அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்என்பது தான் நபிகள் நாயகம் அளித்த விடை. அதாவது உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொருவரிடம் சொல்லி விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.

குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாதுஎன்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.

அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும். குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்மந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.

முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.

குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.

அச்சமான நிலையில்

நீங்கள் அஞ்சினால் நடந்தோ, வாகனத்திலோ (தொழலாம்). அச்சம் தீர்ந்ததும் நீங்கள் அறியாமல் இருந்ததை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினையுங்கள்!

(திருக்குர்ஆன்:2:239.)

எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால், நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுவதை எளிதாக யாரும் விளங்கிக் கொள்ளலாம். அச்சம் தீர்ந்து விடுமானால் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் அச்சமில்லாத போது தொழும் முறை என்ன என்பது கூறப்படவே இல்லை. ஆயினும் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் தந்தவாறுஎன்று அல்லாஹ் இங்கே கூறுகிறான். அச்சமில்லாத சாதாரண நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் கற்றுத் தந்ததைத் தான் அல்லாஹ், தான் கற்றுத் தந்ததாகக் கூறுகிறான்.

நபிகள் நாயகத்தின் விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து பெறப்பட்டவை என்பதற்கும், குர்ஆனைப் போலவே நபிகள் நாயகத்தின் விளக்கமும் அவசியம் என்பதற்கும் இது சான்றாகவுள்ளது.

சோதனையான காட்சி

உமக்கு நாம் காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.

(திருக்குர்ஆன்:17:60.)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனது தூதரை நோக்கி உமக்கு ஒரு காட்சியை நான் காட்டியுள்ளேன்; அதன் மூலம் மனிதர்களுக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தியுள்ளேன் என்று கூறுகின்றான்.

அல்லாஹ் காட்டிய அந்தக் காட்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தெரிவிப்பதற்காகக் காட்டிய காட்சி அல்ல. மாறாக அந்தக் காட்சி மனிதர்களுக்குச் சோதனையாக அமைந்துள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் அந்தக் காட்சியை நாம் அவசியம் அறிந்தாக வேண்டும். அப்போது தான் அந்தச் சோதனை என்னவென்று புரிந்து அதற்கேற்ப நடக்க முடியும்.

குர்ஆன் மட்டும் தான் வஹீ என்றால் அந்தக் காட்சி என்ன என்று குர்ஆனிலேயே கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆன் முழுவதும் தேடிப் பார்த்தாலும் மனிதர்களுக்குச் சோதனையான அந்தக் காட்சி எது என்பதற்கான விளக்கம் கிடைக்காது. மனிதர்களுக்குச் சோதனையான அந்தக் காட்சியைக் குர்ஆன் அல்லாத வேறு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விளக்கினான் என்பது தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு அல்லாஹ் அழைத்துச் சென்றான். அதில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சியைத் தான் தனது திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜிற்குச் சென்றதை ஒரு மனிதன் ஏற்றுக் கொண்டுவிட்டால் அவன் இஸ்லாத்தில் நிலைத்திருப்பான். அது எப்படி ஒரே இரவில் விண்ணுலகிற்குச் சென்று வர முடியும்? என்று அல்லாஹ்வின் வல்லமையில் சந்தேகம் கொள்பவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.

அதனால் தான் அந்தக் காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாக ஆக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களில் சிலர் மிஃராஜைப் பற்றிக் கூறப்பட்டதும் அதை நம்ப மறுத்து வழிகேட்டில் சென்று விட்டார்கள் என்ற செய்தியும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. எனவே அல்லாஹ் கூறிய அந்தச் சோதனையான காட்சி என்பது மிஃராஜ் தான் என்பதை அறியலாம்.

குர்ஆனுடைய வசனங்களை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு ஹதீஸ்கள் தேவை என்பதை இதிலிருந்தும் விளங்கலாம்.

தெரிந்த மாதங்கள்

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

(திருக்குர்ஆன்:2:197.)

ஹஜ்ஜுடைய மாதங்கள் பற்றிக் கூறும் தெரிந்த மாதங்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுடைய மாதங்கள் எவை என்று மனிதர்கள் தாமாக முடிவு செய்ய முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. ஹஜ்ஜுடைய மாதங்கள் எவை என்பதை அல்லாஹ் மக்களுக்கு அறிவித்துக் கொடுத்திருந்தால் தான் தெரிந்த மாதங்கள் எனக் கூற முடியும்.

ஹஜ்ஜின் மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படி இருந்தும் தெரிந்த மாதங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் அல்லாத வேறு வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் குர்ஆன் முழுமையானது அல்ல என்று கூறும் நிலை ஏற்படும்.

குர்ஆன் அல்லாத வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த வசனத்தில் மற்றொரு செய்தியும் உள்ளது. ஹஜ்ஜுடைய காலம் பற்றிக் கூறும் போது மாதங்கள் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

அரபு மொழி இலக்கணம் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் ஒன்றைக் குறிக்க ஒருமை என்ற சொல் அமைப்பும், ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிக்க பண்மை என்ற சொல் அமைப்பும் உள்ளன. ஆனால் அரபு மொழியில் இருமை என்ற ஒரு சொல் அமைப்பு மேலதிகமாக உள்ளது. தமிழில் ஒன்றுக்கு மேற்பட்டதை பண்மை என்போம். ஆனால் அரபு மொழியில் இரண்டுக்கு மேற்பட்டதைத் தான் பண்மை என்பார்கள்.

ஹஜ்ஜுக்குரிய காலம் சில மாதங்கள் என்றால் இரண்டுக்கு மேற்பட்ட மாதங்கள் எனப் பொருள். குறைந்தது மூன்று மாதங்களாவது இருந்தால் தான் மாதங்கள் எனப் பண்மையாகக் கூற முடியும்.

இந்த இலக்கணத்தை நினைவில் கொண்டு இவ்வசனத்தை நாம் ஆராய்வோம். குர்ஆனுடைய கருத்துப்படி ஹஜ்ஜுடைய மாதங்கள் குறைந்தது மூன்று என்றால் அந்த மூன்று மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆன் மட்டும் போதும் என்போர் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

குர்ஆனிலிருந்து அந்த மாதங்களை உலகம் அழியும் காலம் வரை எடுத்துக் காட்ட இயலாது. ஏனெனில் குர்ஆனில் அந்த மாதங்கள் யாவை என்பது கூறப்படவில்லை. அந்த மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆன் அல்லாத வேறு வகையில் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக் கொண்டால் குர்ஆன் மட்டும் போதும் என்ற இவர்களின் வாதம் நொறுங்கி விழுந்து விடுகிறது.

ஹஜ்ஜில் தமத்துஃவ் என்று ஒரு வகை உண்டு. இந்த வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரமிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். துல்ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன என்பதை நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்பவர்களால் கூற முடியும். அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதத்தில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என்போர் இவ்வசனத்தின் விளக்கத்தை அறியாத நிலையைச் சந்திக்கும் போது குர்ஆனிலேயே சந்தேகம் கொண்டவர்களாக ஆவார்கள்.