Tamil Bayan Points

08) உம்மு ஸலமா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

Last Updated on March 5, 2022 by

உம்மு ஸலமா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார். எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும் இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் (ரலி) அவர்களும் அடங்குவர்.

திரும்பவும் மதீனாவுக்கு நபித்தோழர்கள் ஹிஜ்ரத் செய்து சென்ற போது இந்தத் தம்பதியினரும் அவர்களில் இருந்தனர். அபூ ஸலமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். உஹதுப் போரிலும் கலந்து கொண்டு படுகாயம் உற்றவர்களில் இவரும் ஒருவராவார். அதன் பின் ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் பனூ அஸத் என்ற கூட்டத்தினருடன் நடந்த சிரிய போரில் பங்கெடுத்து மீண்டும் படுகாயமுற்று மதீனா திரும்பினார்.அந்தக் காயங்களின் காரணமாகவே மரணத்தைத் தழுவினார்.

இவர் மரணிக்கும் போது இவரது மணைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு பாரா, ஸலமா, உம்ரா, தர்ரா ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற உம்மு ஸலமா (ரலி) அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை வயது என்ற தெளிவான குறிப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது உண்மை.

ஏனெனில் நபியவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக்க் கூறிய போது நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை; என்னால் இனிமேல் குழந்தை பெறவும் இயலாது.என்று பதிலலித்தார்கள். முஸ்னத் அஹ்மத் 15751

உம்மு ஸலமா அவர்களே தாம் வயது முதிர்ந்தவராக இருப்பதையும், குழந்தை பெறும் பருவத்தைக் கடந்து விட்டதையும், தம் வயதுப் பெண்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை என்பதையும் காரணம் காட்டி திருமணத்திற்கு தயக்கம் தெரிவிக்கிறார்கள். இல்லற வாழ்வுக்குரிய தகுதியை இழந்து விட்ட இவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்கு காமமே காரணம் என்றிருந்தால் கண்ணியர் பலரும் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்த சமயத்தில் நபியவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்க பலரும் தயாராக இருந்த நிலையில் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாத முதிய வயதுப் பெண்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்களா? நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை காம உணர்வு மேலோங்கியவர் தேர்வு செய்ய முடியுமா?

இந்தத் திருமணத்துக்கும் காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மணைவியரின் வயதை கவனித்துக் கொள்வதுடன் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது என்ன என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இளமை வேகத்துடன் இருக்கும் காலங்களில் எல்லாம் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்ட நபியவர்கள் தமது ஐம்பத்தியாறு வயதுக்குப் பிறகு தான் பல திருமணங்களைச் செய்யலானார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தத் திருமணம் நடந்த போது அவர்களின் வயது ஐம்பத்தி ஏழாகும். இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை அண்ணியப் பெண்களை ஏறெடுத்தும் பாராமல் முதிய விதவையுடன் மட்டுமே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நபியவர்களுக்கு ஐம்பத்தி ஏழாவது வயதில் காம உணர்வு மேலோங்கியது என்று சொன்னால் அறிவுடைய எவறாவது ஏற்க இயலுமா?

அப்படியே ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொண்டாலும் நான்கு குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இல்வாழ்வில் நாட்டம் இல்லை என்று தாமே ஒப்புக் கொண்டுவிட்ட முதிய விதவையைத் தேர்ந்தெடுப்பார்களா? குழந்தை பெருவதற்குரிய வயதையெல்லாம் கடந்து அதாவது மாதவிடாய் நின்று விட்ட ஒரு பெண்ணைத் தான் காம உணர்வு காரணமாக திருமணம் செய்பவர் தேர்ந்தெடுப்பாரா? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எட்டாவது திருமணத்தைக் காண்போம்.