Tamil Bayan Points

62) 74, 75 வது வசனங்கள்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

74, 75 வது வசனங்கள்

74. தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

75.அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக் கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

(அல்குர்ஆன் 36 : 74,75.)

இணைவைப்பவர்களின் அறியாமை

இவ்வசனங்கள் இணைவைப்பை பற்றியும் இணைக்கடவுளர்களை பற்றியும் பேசுகின்றது.

அல்லாஹ்வையன்றி நல்லடியார்கள் என்று கூறப்படுபவர்களிடத்திலோ அல்லது மண்ணறைகளுக்கு சென்றோ சிலர் உதவி தேடுகின்றனர். இறுதியில் அவற்றுக்கு ஏதேனும் ஒரு தீங்கு என்றால் அவர்கள்தான் முதலில் அதை சீர்செய்கிறார்கள். மண்ணறைகளை பராமரிக்கிறார்கள். இது போன்று தன்னை பராமரிப்பதை கூட தானாக செய்ய இயலாதவர்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுவார்கள் என்று அறிவுப்பூர்வமாக அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான். மற்ற சில வசனங்கள் இதைவிட தெளிவாக விளக்குகிறது.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் : 22 : 73.) 

அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்கள் எத்தகைய மடமையில் உள்ளார்கள் என்பதை இவ்வசனம் உதாரணத்துடன் விளக்குகிறது.

ஒரு ஈயிடமிருந்து எந்த பொருளையும் மீட்க முடியாதவர்களிடம் சென்று பிரார்த்தனை செய்வது மிகப்பெரும் தவறாகும். இப்ராஹீம் நபியவர்கள் இதை அறிவுப்பூர்வமாக விளக்கியுள்ளார்கள்.

“ஓர் இளைஞர் அவற்றைவிமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். “அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்’ என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள்தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

(அல்குர் ஆன் 21 : 60 முதல் 67 வரை.) 

அல்லாஹ்விற்கு இணையாக வணங்கப்பட்டவர்கள் உலகில் மட்டுமின்றி மறுமையிலும் எந்த உதவியும் புரிய மாட்டார்கள். அவர்களே அல்லாஹ்விடம் சரணடைந்துவிடுவார்கள்.

“உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?” (என்று கேட்கப்படும்.) அவ்வாறு நடக்காது. இன்று அவர்கள் சரணடைந்தவர்கள்.

(அல்குர்ஆன் : 37:25,26.) 

எனவே அனைவரும் இத்தகைய இணைவைப்பை விட்டொழிக்கவேண்டும்.