Tamil Bayan Points

61) 73 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

73 வது வசனம்

73. அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

(அல்குர் ஆன் : 36 : 74.) 

கால்நடைகள் போன்ற பல அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் இருப்பதை பற்றி அல்லாஹ் கேட்கிறான். மேலும் இவ்வசனத்தில் பொதுவாக பயன்கள் உள்ளன என்றுதான் வந்துள்ளது. மற்ற சில வசனங்கள் அதை விளக்குகிறது.

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.

(அல்குர் ஆன் : 16:80.)

கூடாரம், ஆடைகள் போன்ற பல பொருட்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து நாம் பயன்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான். இதை நிதர்சனமாக காண்கிறோம்.

நாம் உபயோகிக்கும் ஃபேண்ட் பெல்ட், செருப்புகள் போன்றவை கால்நடைகளின் தோல்களால் ஆனவை. இவை மட்டுமின்றி மறைமுகமாகவும் கால்நடைகளின் உறுப்புகள் பயன்படுகின்றன. வீடியோ கேமராவை நிறுத்துவதற்குரிய ஸ்டான்டில் கூட அதன் வளைவு தன்மைக்காக கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதை செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் கால்நடைகளை மனிதர்களுக்கு அல்லாஹ் கீழ்படியச் செய்துள்ளதால்தான் நடக்கிறது.

இஸ்லாத்தின் பார்வையில் உயிர்வதை

இவ்வாறு கால்நடைகளை பயன்படுத்துவதையும், அறுப்பதையும் சிலர் உயிர்வதை என்று கூறி தவறு என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். இதை பற்றிய விளக்கத்தை அறிய வேண்டும்.

பொதுவாக கால்நடைகள் மனிதர்களுடைய நன்மைக்காகதான் படைக்கப்பட்டுள்ளன. அதன் இயக்கம், உடல் உறுப்புக்கள் அனைத்தும் மனிதனுக்கு பயன்படுகின்றன. அவற்றை இஸ்லாம் கூறும் வகையில் குரல்வலையில் அறுக்கும் போது அவற்றின் இரத்தம் முழுவதுமாக வெளியேறி கிருமிகள் வெளியேறி அதை உண்ணும் மனிதர்களுக்கு நோய் ஏற்படாமல் இருக்கிறது.

மேலும் பிராணிகளுக்கு குறைந்தபட்ச வலி உணர்வு மட்டுமே இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. நூறு மாடுகளில் ஐம்பதை இஸ்லாமிய முறைப்படியும் ஐம்பதை மற்ற சில முறைப்படியும் அறுத்தால் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்ட மாடுகள்தான் குறைந்த வலியை உணருகிறது என கருவிகளில் பதிவாகின்றது.

இஸ்லாமிய முறைப்படி குரல்வலையை அறுக்கும் போது உடனடியாக இரத்தம் வெளியேறி இதனால் சில நிமிடங்கள் மட்டுமே பிராணி வலியை உணர்கிறது. பிறகு இரத்தத்தை வெளியேற்றுவதற்காகதான் துடிக்கிறது. மற்ற முறைகளில் தலையை துண்டிக்கும் போதோ, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யும் போதோ அதிக நேரம் வலியை உணர்கிறது. மேலும் இரத்தம் முழுவதுமாக வெளியேறாமல் உடலில் கிருமிகள் தேங்கி அதை உண்பவர்களுக்கு பல நோய்களும் ஏற்படுகின்றன. எனவே இஸ்லாத்தின் முறைப்படி அறுப்பதுதான் சரியானதாகும்.

மேலும் இதை உயிர்வதை என்றுகூறுபவர்களும் மறைமுகமாக பல உயிர்களை கொள்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீர், தாவரம் போன்றவற்றிலும் பல நுண்ணுயிர்கள் உண்டு என்று அறிவியல் நிரூபித்துள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது நுண்ணுயிர்களும் சேர்ந்தே உயிரிழக்கிறது. கால்நடைகளை பற்றி உயிர்வதை என்று கூறுபவர்கள் இதை நுண்ணுயிர்வதை என்று கூறுவதில்லை.

மேலும் கால்நடைகளை விவசாயத்திற்காக பயன்படுத்தும் போதும் அவை சிரமத்திற்குள்ளாகின்றன. தன் குட்டிகளுக்காக சுரக்கும் பாலை மனிதர்கள் எடுத்து பருகுகிறார்கள். இதுவும் அவற்றுக்கு சிரமம் அளிப்பதுதான். ஆனால் இவற்றையெல்லாம் உயிர்வதை என்று கூறுவதில்லை.

துருவ பிரதேசங்களில் உள்ளவர்களிடம் உயிரினங்களை சாப்பிடக்கூடாது என்று கூறினால் அவர்கள் உயிர்வாழவே இயலாது. மேலும் இத்தகைய பிராணிகளை அறுப்பதை தவறு என்று கூறுபவர்கள் அவை தாமாக உயிரிழந்தாலும் அவற்றை உண்பது கிடையாது. இவ்வாறு இவர்கள் ஒரு தலைபட்சமாக விளங்குவது தவறாகும். இவர்களுடைய முன்னோர்களின் வழிகாட்டல்படிதான் இதை உயிர்வதை என்று கூறுகிறார்கள். அறிவார்ந்த ரீதியில் அல்ல.

உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்கே!

இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களனைத்தும் ஏதேனும் ஒரு விதத்தில் மனிதனுக்கு பயன்படும் வகையில்தான் அல்லாஹ் அவற்றை படைத்துள்ளான். (இறைவன் தடை செய்தவற்றை தவிர) இதை புரிந்து கொண்டு முறையாக அவற்றை உபயோகிக்க வேண்டும். தேவையின்றியோ துன்புறுத்தும் வகையிலோ அவற்றை அறுப்பது கூடாது. இத்தகைய பிராணிகளை நமக்கு வசப்படுத்தி கொடுத்த அல்லாஹ்வின் பெயரை கூறி அறுக்க வேண்டும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (“அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.

நூல் புகாரி-5565