Tamil Bayan Points

07) இறைத்தூதர்களை நம்புதல்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

Last Updated on April 23, 2023 by

பாடம் 6

இறைத்தூதர்களை நம்புதல்

 

இறைத்தூதர்கள் என்றால் யார்?

இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக மனித சமுதாயத்தி­ருந்தே தேர்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள் ஆவார்கள். இறைத்தூதர்களை நபிமார்கள் என்றும் ரசூல்மார்கள் என்றும் குறிப்பிடுவர்.

 

எல்லா  சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள்  அனுப்பப்பட்டுள்ளனரா?

ஆம்! எல்லா சமுதாயத்திற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.

 

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ(36) سورة النحل

”அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.   

(அல்குர்ஆன் 16:36)

 

 

இறைத்தூதர்களின் எண்ணிக்கை  எவ்வளவு?

இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் மொத்த எண்ணிக்கை பற்றி குறிப்பிடும் ஆதரப்பூர்வமான எந்த ஹதீஸிம் கிடையாது.  இவ்வுலகிற்கு ஏராளமான நபிமார்களை அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

 

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ مِنْهُمْ مَنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَنْ لَمْ نَقْصُصْ عَلَيْكَ … (78) سورة غافر

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை.

(அல்குர்ஆன்  40:78)

 

குர்ஆனில் பெயர் கூறப்பட்ட நபிமார்கள்  எத்தனை பேர்.?

திருமறைக் குர்ஆனில் இருபத்தைந்து இறைத்தூதர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

6: 83…86   வரை 18 நபிமார்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. நூஹ் (அலை)
  3. இபுறாஹீம் (அலை)
  4. இஸ்ஹாக் (அலை)
  5. யஃகூப் (அலை)
  6. தாவூத் (அலை)
  7. சுலைமான் (அலை)
  8. அய்யூப் (அலை)
  9. யூசுப் (அலை)
  10. மூஸா (அலை)
  11. ஹாரூன் (அலை)
  12. ஜக்கரிய்யா (அலை)
  13. யஹ்யா (அலை)
  14. ஈஸா (அலை)
  15. இல்யாஸ் (அலை)
  16. இஸ்மாயீல் (அலை)
  17. அல்யஸவு (அலை)
  18. யூனுஸ் (அலை)
  19. லூத் (அலை)
  20. இத்ரீஸ் (அலை)      (19:50)
  21. ஹுத் (அலை) (26:125)
  22. ஸா­ஹ் (அலை) (26:143)
  23. ஷுஐப்(அலை) (26:178)
  24. துல்கிஃப்லு (அலை) (38:48)
  25. முஹம்மது (ஸல்) (33:40)

 

 

முதல் நபி  யார் ?

ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள்.

ஆனால், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள்.  இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

மறுமையில் மக்கள் நூஹ் (அலை) அவர்கள் வந்து உலக மக்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள்தான் முதலாமவர் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­)  

  நூல் : புகாரீ (3340)

 

 

இறுதித்தூதர்  யார் ? அதற்குரிய ஆதாரம் என்ன?

இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். நபித்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது.

 

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا(40) سورة الأحزاب

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்.

(அல்குர்ஆன் 33:40)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய சமுதாயத்தில் 30 பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிப்பார்கள். நான்தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர் :  ஸவ்பான் (ர­)  

நூல் :  திர்மிதீ (2145)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகமக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளார்களா?

ஆம் நபி (ஸல்) அவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நபியாக அனுப்பட்டுள்ளனர்.

 

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا (28) سورة سبأ

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன் 34:28)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ர­)

நூல்:புகாரி (438)

 

நபி என்ற சொல்லுக்கும் ரசூல் என்ற சொல்லுக்கும் வித்தியாசம் உண்டா?

நபி என்பவர் இறைவனிடமிருந்து பெற்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்,

ரசூல் என்பதின் பொருள் தூதர் என்பதாகும். . இஸ்லாமிய மார்க்கத்தில் தூதர் என்பவர் இறைவனிமிருந்து செய்தியை மக்களுக்கு கொண்டு வருபவர் ஆவார்.

நபி, ரசூல் இரண்டும் இறைத்தூதர்களைக் குறிக்கும் இரு வார்த்தைகள். இரண்டும் ஒன்றே. நபிக்கும் ரசூலுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது.

 

 

பெண்களில் நபிமார்கள் உண்டா?

இறைத்தூதர்களாக ஆண்கள் மட்டும்தான் அனுப்பப்பட்டுள்ளனர். பெண்கள் இறைத்தூதர்களாக அனுப்படவில்லை. இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாம்.

 

وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ (43) سورة النحل

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.

(அல்குர்ஆன் 16:43)

 

ஒவ்வொரு தூதருக்கும் தனி வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதா?

ஆம். ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் தனித்தனி வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.

 

لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا

உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற் படுத்தியுள்ளோம்.

(அல்குர்ஆன் 5:48)

 

 

நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதற்கு ஆதாரம் என்ன?

நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்தான். பின்வரும் வசனத்தில் அல்லாஹ் பல நபிமார்களை தன்னுடைய அடியார்கள் என்றே குறிப்பிடுகின்றான்.

 

وَاذْكُرْ عِبَادَنَا إبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ أُوْلِي الْأَيْدِي وَالْأَبْصَارِ(45) سورة ص

வ­மையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 38:45)

 

நபிமார்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களா?

நபிமார்கள் அனைவரும் மனிதத் தன்மைக்கு உட்பட்டவர்கள்தான். ஆனால் நபிமார்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி வரும். நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இறைச் செய்தி வராது. இதனை பின்வரும் வசனத்தி­ருந்து அறிந்து கொள்ளலாம்.

 

 

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا(110) سورة الكهف

”நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)

 

 

நபிமார்களுக்கு இறைவனுடைய அதிகாரத்தில் பங்கு உண்டா?

நபிமார்களுக்கு இறைவனுடைய அதிகாரத்தில் எவ்வித பங்கும் கிடையாது. இதற்கு பின்வரும் இறைவசனம் சான்றாகும்.

 

قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ(188) سورة الأعراف

 ”அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்க வில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மை களை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:188)

 

நபிமார்கள் தாமாக அற்புதம் செய்ய முடியுமா?

எந்த இறைத்தூதரும் தாமாக அற்புதம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் விருப்பத்தின் படியே அவர்கள் அற்புதம் செய்ய முடியும். இதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.

وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ  سورة الرعد

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

(அல்குர்ஆன் 13:38)

 

நபிமார்களுக்கு மனைவிமார்களும், குழந்தைகளும் உண்டா?

ஆம்! நபிமார்களுக்கு மனைவிமார்களும், குழந்தைகளும் உண்டு. இதனை பின்வரும் வசனத்தி­ருந்து அறிந்து கொள்ளலாம்.

 

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً  سورة الرعد

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவி யரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.

(அல்குர்ஆன் 13:38)

 

ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையா? அல்லது மகனா?

ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியார்தான். அவர்கள் அல்லாஹ்வின் மகன் என்று நம்புபவன் காஃபிர் ஆவான். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.

உடனே அவர் (அக்குழந்தை), ”நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். ” என்று கூறினார். (அல்குர்ஆன் 19 30)

இது ஈஸா(அலை) தொட்டில் குழந்தையாக இருந்தபோது பேசிய வார்த்தைகளாகும்.

 

 

ஈஸா (அலை) அவர்கள் யூதர்களால்  சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்களா?

ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. மாறாக அல்லாஹ் அவரை காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டார். ஈஸா (அலை) அவர்களைப் போன்று மாறாட்டம் செய்யப்பட்ட வேறொரு மனிதரையரே யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும். 

”அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். (அல்குர்ஆன் 4:157,158)

 

 

ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு இறக்கப்படுவார்களா?

ஆம் ! ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகம் அழிக்கப்படுவதற்கு முன்னால் இவ்வுலகிற்கு இறக்கப்படுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மர்யமின் குமாரர் (ஈசா) அவர்கள் நீதி செலுத்தும் நடுவராக உங்களிடையே இறங்குவார்கள். அவர்கள் வந்தவுடன் சிலுவையை உடைப்பார்கள்; பன்றியைக் கொல்வார்கள்; ஜிஸ்யா’ வரியை (ஏற்க) மறுப்பார்கள்; எவரும் பெற்றுக்கொள்ள முன்வராத அளவுக்கு செல்வம் பெருகி வழியும். இவையெல்லாம் நடக்காதவரை உலக முடிவு (மறுமை) நாள் வராது. (நூல்:புகாரி 2476)

 

 

நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கலாமா?

நபிமார்களுக்கு எந்த எந்த சிறப்புகளைக் கூறியுள்ளானோ அதைக் கொண்டுதான் அவர்களைச் சிறப்பிக்கவேண்டும். நாமாக நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக்கூடாது.  இதற்கு பின்வரும் வசனம் சான்றாகும்.

 

لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ  سورة البقرة

. ”அவனது தூதர்களில் எவருக்கிடை யேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம்; ( என முஃமின்கள் கூறுவார்கள்.

  (அல்குர்ஆன் 2:285)