Tamil Bayan Points

6) சிலுவை மரணம் சாபத்திற்குரியது

நூல்கள்: இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

Last Updated on October 30, 2022 by

6) சிலுவை மரணம் சாபத்திற்குரியது

பைபிளின் கோட்பாட்டின் படி இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவர் சாபத்திற்கு உரியவர் என்று பைபிள் கூறுகிறது.

“மரத்தில் தொங்க விடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்

உபாகமம் 21:23

இயேசு கடவுளின் நேசர்களில் ஒருவராக இருக்கும் போது அவருக்கு சாபத்துக்கு உரிய துர்மரணம் ஏற்பட்டிருக்க முடியாது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்று யாராவது நம்பினால் இயேசு கடவுளின் சாபத்துக்கு உரியவர் எனக் கூறி இயேசுவை இழிவு செய்தவராவார்.

நீதிமான்களைக் கர்த்தர் கைவிடுவதில்லை

தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ள செய்தி தெரிந்த பின் இயேசு கடவுளிடம் திரும்பத் திரும்ப மன்றாடியுள்ளார். நீதிமானாகிய இயேசு தன்னைப் படைத்த கர்த்தரிடம் அழுது புலம்பி மன்றாடி இருக்கும் போது அதைக் கர்த்தர் கண்டு கொள்ளாமல் இருப்பாரா?

உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

லூக்கா 22:42,43

வானத்தில் இருந்து ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான் என்று லூக்கா கூறுகிறார். இயேசு செய்த பிரார்த்தனையை கர்த்தர் ஏற்றுக் கொண்டு அவரைக் காப்பாற்றவே தூதனை அனுப்பி பலப்படுத்தினார்.

தன்னைக் காப்பாற்றுமாறு கர்த்தரிடம் இயேசு மன்றாடி இருக்கும் போது கடவுள் அவரைக் காப்பாற்றி இருப்பார். ஏனெனில் நல்லோர்களின் வேண்டுதல் கர்த்தரால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பைபிள் கூறுகிறது.

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

(சங்கீதம் 34:19)

இதன் அடிப்படையில் பார்த்தாலும் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டிருக்க முடியாது. இயேசு சிலுவையில் கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்து கர்த்தரின் வலது பாரிசத்தில் அமர்ந்தார் என்பது உண்மையானால் இயேசு இப்படி பிரார்த்தித்திருக்க மாட்டார்.

கர்த்தரே சீக்கிரம் என்னை அழைத்துக் கொண்டு உமக்கௌ அருகில் அவைத்துக் கொள்வீராக என்று தான் பிரார்த்தனை செய்திருப்பார். அவ்வாறு பிரார்த்தனை செய்யாமல் தன்னைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்ததில் இருந்து சிலுவைப்பலி என்பது பொய்யான தகவல் என்று அறிந்து கொள்ளலாம்.

எண்ணற்ற முரண்பாடுகள்

இயேசு சிலுவையில் அறையப்படுவது தொடர்பான செய்திகளில் அநேக முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகளும் சிலுவைப் பலியில் உள்ள சந்தேகத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது.

காட்டிக் கொடுத்ததில் முரண்பாடு

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.

மத்தேயு 26:14,15

அவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத் தொடங்கினார்கள்.

அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடி தான் என்றார்.

மத்தேயு 26:21-26

அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார்.

லூக்கா 22:47,48

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டு போங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே அவரண்டையில் சேர்ந்து: ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர் மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்.

மாற்கு 14:44-46

இயேசு அன்றைய மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஒருவன் முத்தமிட்டு காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏதும் இருக்கவில்லை.

பொதுவாகக் காட்டிக் கொடுக்கப்படுதல் என்பது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே இது கற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும். இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏதும் இல்லை என்று இயேசுவே மறு மொழி கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறது போல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.

நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனே கூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கை நீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.

லூக்கா 22:52,53

இயேசு தமக்கு நேரிடப் போகிற எல்லாவற்றையும் அறிந்து எதிர் கொண்டு போய் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான் தான் என்றார்.

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.. நான் தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.

இயேசு பிர்தியுத்தரமாக: நான் தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால் இவர்களைப் போக விடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.

அப்பொழுது சீமோன் பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு;. பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார்.

யோவான் 18:4-11

வேலைக்காரன் காதை வெட்டியது

இயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் பெரும் படையுடன் வந்திருக்கும் போது பிரதான ஆசாரியானுடைய காதை பேதுரு வெட்டியதாக மேற்கண்ட வசனத்தில் யோவான் கூறுகிறார். காது வெட்டிய கதையை மத்தேயுவும் கூறுகிறார்.

இயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் வந்திருக்கும் போது வேலைக்காரனை பேதுரு ஏன் வெட்ட வேண்டும்? அதனால் இயேசு தப்பித்துக் கொள்வாரா? இயேசு மாட்டிக் கொண்டவுடன் எனக்கு இயேசுவைத் தெரியாது என்று கூறும் அளவுக்கு நெஞ்சுறுதி மிக்க (?) பேதுரு பெரும் படையினர் முன்னிலையில் அவர்களின் வேலைக்காரனை வெட்டியிருக்க முடியாது.

அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்

மாற்கு 14:50

அதிகாரிகள் வந்த உடன் இயேசுவை அம்போ என்று விட்டு விட்டு ஓட்டம் பிடித்தவர்கள் அரசு ஊழியரின் காதை வெட்டும் அளவுக்குத் துணிந்திருக்க முடியாது.

இயேசுவின் மீது அந்த அளவுக்கு பாசம் இருந்தது என்றால் யூதாஸ் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு கூறியவுடன் அவனை வெட்டி இருக்க வேண்டும். அல்லது காட்டிக் கொடுத்த பிறகாவது அவனை வெட்டி இருக்க வேண்டும்.

எந்த அதிகாரியும் தமது ஊழியரைத் தாக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். பேதுரு வேலைகாரனின் காதை வெட்டி இருந்தால் அந்த நிமிடமே பேதுருவின் தலையைச் சீவி இருப்பார்கள்.

அல்லது அவரையும் பிடித்துக் கொண்டு போய் இருப்பார்கள். ஆனால் இது அந்தப் படையினர் மத்தியில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல் அதிகாரிகள் இருந்ததாக பைபிள் சித்தரிப்பது நம்பும்படி இல்லை.

கற்பனையாகவே இதைப் புணைந்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

காட்டிக் கொடுப்பது தெரியும்; தெரியாது

இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டாரா? அல்லது தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக் கொண்டாரா என்பதில் சுவிஷேசங்கள் முரண்படுவது சிலுவைப் பலியில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

தனது சீடர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சீடர்கள் மத்தியில் கூறியதாகவும், காட்டிக் கொடுக்கும் யூதாஸிடம் நேருக்கு நேராகவும் இதை இயேசு கூறினார் என்றும், தன்னை முத்தம் செய்வதன் மூலம் அவன் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் ஒரு புறம் கூறுகிறது.

அவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத் தொடங்கினார்கள்.

அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடி தான் என்றார்.

மத்தேயு 26:21-26

இவ்வாறு கூறும் மத்தேயு தனக்குத் தானே முரண்பட்டு கூறுவதைப் பாருங்கள்! அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான், அவனோடே கூடப் பிரதான ஆசரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.

மத்தேயு 26:47-50

காட்டிக் கொடுப்பவன் வந்து முத்தம் செய்யும் போது என்னத்திற்காக வந்துள்ளாய் என்று இயேசு கேட்டதிலிருந்து தன்னைக் காட்டிக் கொடுக்கவே அவன் வந்துள்ளான் என்பது இயேசுவுக்குத் தெரியவில்லை. இயேசுவுக்கு இவன் முத்தம் செய்து காட்டிக் கொடுப்பான் என்பது இயேசுவுக்குத் தெரியும் எனக் கூறிய மத்தேயு இப்போது இயேசுவுக்குத் தெரியாது என்கிறார்.

சிலுவையைச் சுமந்தது யார்?

சிலுவையில் அறைவதற்காக இயேசுவை இழுத்துச் செல்லும் போது அவருக்குரிய சிலுவையை யார் சுமந்து சென்றார் என்ற செய்தியைக் கூறும் போதும் சுவிஷேசக்காரர்கள் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.

போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்த போது கசப்புக் கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து குடிக்க மனதில்லாதிருந்தார்.

மத்தேயு 27:32-34

சிரேனே ஊரானும் அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில் அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பல வந்தம் பண்ணினார்கள்.

கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய் வெள்ளைப் போளம் கலந்த திராட்ச ரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாற்கு 15:21-23

அவர்கள் இயேசுவைக் கொண்டு போகிற போது நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து சிலுவையை அவர் பின்னே சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள். திரள் கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின் சென்றார்கள்.

லூக்கா 23:26,27

இயேசுவின் சிலுவையை சீமோன் என்பவன் சுமந்து வந்தான் என்று மேற்கண்ட மூன்று சுவிஷேசக்காரர்கள் கூறுகிறார்கள். இதற்கு முரண்பட்டு இயேசுவே தனது சிலுவையை சுமந்து சென்றதாக யோவான் கூறுகிறார்.

அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்து கொண்டு எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.

யோவான் 19:17

குறிப்பிட்ட தூரம் வரை சீமோனும் அதன் பிறகு இயேசுவும் சுமந்திருக்கலாம் என்று கூறி சமாளிக்கவும் முடியாது. ஏனெனில் சிலுவையில் அறையப்படும் இடமாகிய கொல்கொதா எனும் இடம் வரை சிலுவையை சீமோன் சுமந்ததாக மாற்கு கூறுகிறார். அதே கொல்கொதா இடம் வரை இயேசு சிலுவையைச் ச்சுமந்ததாக யோவான் கூறுகிறார்.

இயேசுவை நிந்தித்தவர் ஒருவரா? இருவரா?

இயேசு சிலுவையில் அறையப்படும் போது அவருக்கு வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவருமாக இரண்டு திருடர்கள் சிலுவையில் அறையப்பட்டனர் என்று பைபிள் கூறுகிறது. இந்த விபரத்திலும் முரண்பாடு காணப்படுகிறது.

அந்த வழியாய் நடந்து போகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.

அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைக் தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்.

அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.

மத்தேயு 27:39-44

நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.

மாற்கு 15:32

இரண்டு திருடர்களும் இயேசுவை நிந்தனை செய்ததாக மத்தேயுவும் மாற்கும் கூறுகிறார்கள். ஆனால் லூக்கா இதற்கு முரண்பட்டுக் கூறுகிறார். ஒரு திருடன் இயேசுவை நிந்தித்ததாகவும் இன்னொரு திருடன் இயேசுவுக்கு பரிந்து பேசியதாகவும் அவர் கூறுகிறார்.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்;. நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்;

இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்து கொண்டு இயேசுவை நோக்கி: ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 23:40-43

கல்லறைக்கு முதலில் வந்தவர் யார்

சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. கல்லறைக்குள் வைக்கப்பட்ட உடல் காணாமல் போனது பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களும் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

மத் 28:1

வாரத்தின் முதல் நாளில் மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் வந்து கல்லறையில் இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார்.

ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு.

மாற்கு 16:1

மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் சலாமே என்பவளும் கல்லறையில் இருந்து இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக மாற்கு குறிப்பிடுகிறார்.

கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப் போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

லூக்கா 23:55,56

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரிகளோடுங் கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.

லூக்கா 24:1

கலிலேயோவில் இருந்து வந்திருந்த பெண்களும் இன்னும் அநேக பெண்களும் வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்கு வந்து இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக லூக்கா கூறுகிறார்.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

யோவான் 20:1,2

இருட்டோடு இருட்டாக மகதலேனா மரியாள் மட்டும் வந்து கல்லறையில் இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக யோவான் கூறுகிறார்.

கல்லறையில் இயேசு காணாமல் போனதைக் கண்டவர் மகதலேனா மரியாள் மட்டுமா? அல்லது இரண்டு மரியாள்களா? அல்லது இரண்டு மரியாள்களுடன் சலாமே என்னும் பெண்ணும் ஆக மூவரா? அல்லது அநேக பெண்கள் கூட்டமா? இவற்றுள் எது சரி? தக்க ஆதாரம் இல்லாமல் ஆளாளுக்கு கற்பனை செய்து கூறியதால் தான் இப்படி முரண்படுகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது?

எந்த ஒரு நிகழ்ச்சியை நம்புவதற்கும், நிரூபிப்பதற்கும் அது நிகழ்ந்த நேரம் பற்றிய தகவல் முக்கியமானதாகும். அதில் முரண்பாடு ஏற்பட்டால் அந்தச் சம்பவம் நிரூபணமாகாது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் என்ன என்ற முக்கியமான விஷயம் குறித்து பைபிளில் காணப்படும் முரண்பாடு அதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம் மணி வேளையாயிருந்தது.

மாற்கு 15:26

இயேசு மூன்றாம் மணி நேரத்தில் சிலுவையில் அறையப்பட்டார் என்று மாற்கு கூறுகிறார்.

மாற்கு கூறுவதைப் பொய்யாக்கும் வகையில் யோவான் கூறுவதைக் கேளுங்கள்!

அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். அவர்;கள்: இவனை அகற்றும் அகற்றும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து:

உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்; பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

யோவான் 19:14,15,16

மூன்று மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அவரது விசாரணை அதற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் இயேசு ஆறு மணிக்கு பிலாத்துவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆறு மணிக்கு விசாரிக்கப்பட்டவர் அதற்கு முன்பு எப்படிச் சிலுவையில் அறையப்பட முடியும். சிலுவையில் அறையப்பட்டவரை எழுப்பி பிலாத்து விசாரித்தாரா?

ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு 27:45,46

ஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்திலே இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்; என்று அர்த்தமாம்.

மாற்கு 15:33,34

அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டடார்.

லூக்கா 23:44-46

ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை இருள் ஏற்பட்டதாகவும் ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு உயிரை விட்டதாகவும் மத்தேயுவும் மாற்குவும், லூக்காவும் கூறுகிறார்கள்.

அதாவது எந்த நேரத்தில் இயேசு பிலாத்துவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தாரோ அந்த நேரத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார் என்று இம்மூவரும் கூறுகிறார்கள்.  சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் காணப்படும் முரண்பாடு இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

கல்லைப் புரட்டியதில் முரண்பாடு

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான்.

மத் 28:1,2

வாரத்தின் முதல் நாளில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் வந்த போது அவர்கள் பார்க்கும் விதத்தில் அவர்கள் முன்னிலையில் வானத்தில் இருந்து தேவ தூதன் இறங்கி கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்ததாக மத்தேயு கூறுகிறார். மாற்குவும் இந்தக் கருத்தை கூறுகிறார்.

கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,

லூக்கா 24:2

ஆனால் மூன்று பெண்களும் வந்த போது முன்னரே கல் புரட்டப்பட்டதைக் கண்டதாக லூக்கா கூறிகிறார்.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

யோவான் 20:1

மகதலேனா மரியாள் இருட்டோடு வந்த போது கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்து போட்டிருக்கக் கண்டதாக யோவான் கூறுகிறார்.

இந்தப் பெண்கள் வரும் போது கல்லறையின் மீது கல் வைக்கப்பட்டு அவர்கள் வந்த பிறகு புரட்டப்பட்டதா? முன்னரே புரட்டப்பட்டிருந்ததா? எது உண்மை? ஏன் இதத் தடுமாற்றம்?

கல்லறைக்கு பெண்கள் வந்த நேரம் எது?

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

மத் 28:1

வாரத்தின் முதலாம் நாளில் விடிந்து வரும்போது இரண்டு மரியாள்களும் கல்லறைக்கு வந்ததாக மத்தேயு கூறுகிறார்.

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரிகளோடுங் கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.

லூக்கா 24:1

அதிகாலையில் என லூக்கா கூறுகிறார்.

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிற போது கல்லறையினிடத்தில் வந்து,

மாற்கு 16:2

சூரியன் உதயமாகிற போது என்று மாற்கு கூறுகிறார்.

சூரியன் உதிக்கும் போது என்பதும் அதிகாலை என்பது ஒன்று தான் என்று இதற்கு விளக்கம் கூற முடியும்.

ஆனால் யோவான் அதிக இருட்டோட என்று கூறுகிறார்.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

யோவான் 20:1

அதிக இருட்டான நேரத்தை சூரியன் உதயமாகும் போது என்று யாரும் கூற மாட்டார்கள்.

சுகந்தவர்க்கம் இடுவதிலும் முரண்பாடு

ஒரு உடலை அடக்கம் செய்யும் போது அதற்கு வாசனைத் திரவியங்கள் பூசி அடக்கம் செய்ய வேண்டும் என்பது யூத மதத்தின் படி செய்ய வேண்டிய சடங்காகும்.

இந்தச் சடங்கைச் செய்யாமல் இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் அந்த உடலுக்கு பூச வேண்டிய நறுமனத்தை வாங்கிக் கொண்டு அதைப் பூசுவதற்காகவே மூன்று பெண்களும் வந்ததாக மாற்கு கூறுகிறார்.

ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு.

மாற்கு 16:1

கல்லறையையும் அது வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து விட்டு நறுமணம் பூசப்படவில்லை எனபதைக் கண்டு நறுமணப் பொருளை வாங்கிக் கொண்டு அநேகம் பெண்கள் வந்ததாக லூக்கா கூறுகிறார்.

கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப் போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

லூக்கா 23:55,56

மத்தேயு நறுமணம் பற்றிப் பேசவில்லை

ஆனால் யோவான் கூறும் போது இயேசுவை அடக்கம் செய்யும் போதே நூறு ராத்தல் நறுமணப் பொருள் பூசி யூதமதச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டார் எனக் கூறுகிறார்.

ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

யோவான் 19:39,40

இயேசு அடக்கம் செய்யப்படும் போது அவருக்கு உரிய மதச் சடங்குகள் செய்யப்பட்டனவா? இல்லையா? அந்தப் பெண்கள் அந்தச் சடங்குகலைச் செய்ய வந்தார்களா? வெறும் பார்வையாளராக வந்தார்களா? ஏன் இந்த முரண்பாடு? இதில் எது உண்மை?

இயேசுவின் உடலுக்கு நறுமணம் பூசவில்லை என்பதை அப்பெண்கள் கண்டு நறுமணப் பொருள்களைப் பூச நினைத்தால் இரண்டு நாள் கழித்துத் தான் அதைச் செய்வார்களா? உடனடியாக அதைச் செய்திருக்க மாட்டார்களா? என்ற கேள்வியும் இதில் மேலதிகமாக எழுகின்றது.

ஒரு தேவதூதனா? இரண்டு தேவதூதர்களா? அல்லது யாருமே இல்லையா?

இரண்டு மரியாள்கள் கல்லறைக்கு வந்த போது ஒரு தேவதூதன் கல்லறைக்கு மேல் உட்கார்ந்திருந்ததாக மத்தேயு மாற்கு ஆகிய இருவரும் கூறுகிறார்கள்.

தன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல வெண்மையாகவும் இருந்தது.

மத் 28:2,3

அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

மாற்கு 16:5,6

ஆனால் லூக்கா கூறும் போது இரண்டு தேவதூதர்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே நின்றார்கள்.

லூக்கா 24:4

மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்த போது தேவதூதன் யாரும் இருந்ததாக யோவான் கூறவில்லை.

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

யோவான் 20:1,2

இயேசுவின் உடலைக் காணவில்லை என்று சீடர்களை அழைத்து வந்து காட்டிய பிறகு தான் இரண்டு தேவதூதர்களை மகதலேனா பார்த்ததாகவும் யோவான் கூறுகிறார்.

மேலும் இயேசு மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்தார் என்று தேவதூதன் அல்லது தேவதூதர்கள் கல்லறைக்கு வந்த பெண்களிடம் கூறியதாக மூன்று சுவிஷேசம் கூறும் போது யோவான் அதற்கு முரணாகக் கூறுகிறார். இயேசுவின் உடலை யாரோ கடத்திக் கொண்டு போய் விட்டார்கள் என்று அவர் நினைத்து மற்றவர்களிடம் போய்ச் சொன்னதாகக் கூறுகிறார்.

இவர்களில் யார் சொல்வது உண்மை?