Tamil Bayan Points

6) உளூவின் சட்டங்கள்

நூல்கள்: மத்ஹபுகள்

Last Updated on December 17, 2019 by

உளூவின் சட்டங்கள்

மத்ஹப் நூல்களில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாகவும், ஆதாரமற்றதாகவும் தொழுகையைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலும் பல சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்

தலை என்றால் ஒரு முடி என்று அர்த்தமாம்

தலைக்கு மஸஹ் செய்வது உளுவின் கடமைகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைக்கு எப்படி மஸஹ் செய்ய வேண்டும் என்பதைச் செயல் மூலம் விளக்கியுள்ளனர்.

ஆனால் ஷாஃபி மத்ஹப் சட்டத்தைப் பாருங்கள்!

قوله ولو بعض شعرة واحدة أي ولو كان الممسوح بعض شعرة واحدة فإنه يكفي إعانة الطالبين

ஒரே ஒரு முடிக்கு மஸஹ் செய்தால் அது தலைக்கு மஸஹ் செய்ததாக ஆகும். அதுவே போதுமானதாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றும் ஊர்களில் ஒரு விரலால் ஒரிரு முடியில் மஸஹ் செய்து உளூவையும், தொழுகையையும் பாழாக்கிக் கொள்வதைக் காணலாம்.

நமது வணக்கத்தைப் பாழாக்கும் இந்த மத்ஹபுச் சட்டங்கள் தேவையா என்று சிந்தியுங்கள்!

ஒவ்வொரு தொழுகைக்கும் பல்துலக்குதல்

ஹதீஸ்களின் அடிப்படையில் சட்டம் வகுக்காமல் தம் இஷ்டத்துக்கு மத்ஹபு சட்டங்களை வகுத்துள்ளனர். மிகச் சில சட்டங்களுக்கு ஹதீஸ்களை இவர்கள் ஆதாரம் காட்டினாலும் அந்த ஹதீஸைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு மூளை வரண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதைக் காணுங்கள்!

وإنما يتأكد السواك ولو لمن لا أسنان له لكل وضوء ولكل صلاة فرضها ونفلها وإن سلم من كل ركعتين أو استاك لوضوئها وإن لم يفصل بينهما فاصل حيث لم يخش تنجس فمه وذلك لخبر الحميدي بإسناد جيد ركعتان بسواك أفضل من سبعين ركعة بلا سواك ولو تركه أولها تداركه أثناءها بفعل قليل فتح المعين

ஒவ்வொரு உளூவுக்கும், கடமையான, நபிலான ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குதல் அவசியமாகும். ஒவ்வொரு இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்தாலும், அந்த உளுவின் போது பல் துலக்கி இருந்தாலும் பல் துலக்க வேண்டும். ஏனெனில் பல் துலக்கி இரு ரக்அத்கள் தொழுவது பல் துலக்காமல் இரு ரக்அத்கள் தொழுவதை விட எழுபது மடங்கு சிறந்தது என்று உறுதியான ஹதீஸ் உள்ளது. தொழுகையைத் துவக்கும் போது பல் துலக்காமல் விட்டு விட்டால் தொழுகைக்கு இடையில் குறைவான செயலுடன் பல் துலக்க வேண்டும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஃபத்ஹுல் முயீன்

இதில் சொல்லப்படுவது புரிகிறதா? இஷா தொழுகைக்காக நீங்கள் உளூ செய்கிறீர்கள். அப்போது பல் துலக்குகிறீர்கள். இஷாவின் முன் சுன்னத் தொழும் போது பல் குச்சியால் பல் துலக்கி விழுங்கி விட்டு தொழ வேண்டும். அதன் பின் இஷா தொழ ஆரம்பிக்கிறீர்கள். அப்போதும் பல் துலக்க வேண்டும். இஷாவுக்குப் பின் சுன்னத் தொழுகிறீர்கள். அப்போதும் பல் துலக்க வேண்டும். அதாவது பல்லைத் தேய்த்து விட்டு விழுங்க வேண்டும்.

ஷாஃபி மத்ஹப்காரர் இருபது ரக்அத் தராவீஹ் தொழுகிறார் என்றால் ஒவ்வொரு இரு ரக்அத்களின் போதும் பல் துலக்க வேண்டும். அதன் பின் வித்ருக்காக பல் துலக்க வேண்டும். அதாவது ரமலானில் இஷா தொழுகைக்கு வருபவர் 15 தடவைக்கு மேல் பல் துலக்க வேண்டுமாம்.

இதற்குக் காரணம் ஹதீஸைக் கடைப்பிடிக்கிறார்களாம்! பல் துலக்கி தொழுவது அதிகம் சிறப்பு என்று ஹதீஸில் வந்துள்ளதைச் செயல்படுத்துகிறார்களாம்!

இவனுகளைப் போல் மூடர்களை உலகில் எங்காவது காண முடியுமா?

உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்றால் அந்த உளு நீங்கும் வரை அந்தத் தூய்மை நீடிக்கும். அந்த உளூ மூலம் எத்தனை தொழுகையும் தொழலாம். உளூ இருந்தாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்ய வேண்டும் என்று இவர்களே கூறுவதில்லை.

ஒரு உளூவுக்குப் பல் துலக்கினால் அந்த உளூ நீங்கும் வரை பல் துலக்கியதும் நீடிக்கும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

பல் துலக்குதல் என்பது பல் குச்சியால் பல்லைத் தேய்ப்பது மட்டுமல்ல. பல்லைத் தேய்த்து வாய் கொப்பளித்து அந்த நீரைத் துப்புவதும் சேர்ந்துதான் பல் துலக்குதலாகும். ஆனால் ஷாஃபி மத்ஹபினர் தொழுகையைத் துவக்கும் போது குச்சியால் பல்லைத் தேய்த்து விட்டு அந்தக் குச்சியை பாக்கெட்டில் போட்டு தொழுகின்றனர். இதற்குப் பெயர் பல் துலக்குதலா?

அது மட்டுமின்றி இதை ஒருவன் மறந்து விட்டால் தொழுகையில் இருந்து கொண்டே பல் துலக்க வேண்டுமாம். வடிகட்டிய அடிமுட்டாள்களால் தான் மத்ஹபு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

உளுவில் சந்தேகம் வந்தால்..?

وَلَوْ عَلِمَ أَنَّهُ لَمْ يَغْسِلْ عُضْوًا وَشَكَّ فِي تَعْيِينِهِ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى؛ لِأَنَّهُ آخِرُ الْعَمَلِ. الدر المختار

ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்பதில் அவர் சந்தேகப்படுகிறார். அப்படியானால் (இடது காலாகத் தான் அது இருக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

உளூ செய்து முடித்த பின் ஏதோ ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்று யாருக்கும் சந்தேகம் வராது. கையைக் கழுவினோமா என்று சந்தேகம் வரும். அல்லது காலைக் கழுவினோமா என்று சந்தேகம் வரும். ஏதோ ஒன்றைக் கழுவவில்லை என்று எவருக்கும் சந்தேகம் வராது. எந்த உறுப்பைக் கழுவியது குறித்து சந்தேகம் வருகிறதோ அந்த உறுப்பைக் கழுவவில்லை என்று முடிவு செய்து அதை மீண்டும் கழுவ வேண்டும் என்று முடிவு செய்வதற்குத் தான் ஆதாரங்கள் உள்ளன.

ஏதோ ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்று சந்தேகம் வந்தால் இறுதியாகக் கழுவ வேண்டிய இடது காலாகத் தான் இருக்கும் என்று முடிவு எடுக்க எந்த வசனம் ஆதாரம்? எந்த ஹதீஸ் ஆதாரம்? இடதுகாலைக் கடைசியாக கழுவுவதால் அதைத்தான் கழுவவில்லை என்று முடிவு செய்ய எந்த லாஜிக்கும் இல்லை. கடைசியில் கழுவியது தான் ஒருவனுக்கு மற்றதை விட நன்றாக நினைவிலிருக்கும்.

ஒருவன் முதலில் செய்ய வேண்டிய காரியத்தையும் மறக்கலாம். நடுவில் செய்ய வேண்டிய காரியத்தையும் மறக்கலாம். கடைசியில் செய்யவேண்டிய காரியத்தையும் மறக்கலாம். இதுதான் யதார்த்தமானது. உளூச் செய்யும் போது இடது காலைக் கழுவாது விட்டிருந்தால் சட்டென்று நினைவுக்கு வந்து விடும். மேலும் கழுவப்பட்ட காலுக்கும், கழுவப்படாத காலுக்கும் வித்தியாசம் இருக்கும். அதை வைத்து கால் கழுவப்பட்டதையும், கழுவப்படாததையும் கண்டுபிடிக்க முடியும்.

வலது கால் சுத்தமானதாகவும், இடது கால் அழுக்காகவும் இருந்தால் இடது கால் கழுவப்படவில்லை என்று கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒப்பிட்டுப் பார்க்க இரண்டு கால்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. இரண்டு கால்களும் ஒரே மாதிரியாக சுத்தமானவையாக இருந்தாலும் இடது காலைத்தான் கழுவவில்லை என்று முடிவு செய்து அதைக் கழுவ வேண்டுமாம்; அது நன்றாகக் கழுவப்பட்டிருந்தாலும் அது கழுவப்படவில்லை என்று கிறுக்குத் தனமாக நாம் கருதிக் கொள்ள வேண்டுமாம்.

இவர்கள் கூறுவது போல் ஏதோ ஓர் உறுப்பு கழுவப்படவில்லை என்று சந்தேகம் வருவதாகவே வைத்துக் கொள்வோம். எந்த உறுப்பு என்று நினைவுக்குக் கொண்டு வர முடியாவில்லை என்றால் அனைத்து உறுப்புகளிலும் சந்தேகம் இருந்து கொண்டு உள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை முழுமையாக உளூச் செய்து கொள்ள வேண்டும் என்பதுதானே பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு முடிவு செய்வதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

1300 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِى خَلَفٍ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا شَكَّ أَحَدُكُمْ فِى صَلاَتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلاَثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ لَهُ صَلاَتَهُ وَإِنْ كَانَ صَلَّى إِتْمَامًا لأَرْبَعٍ كَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ ».

ஒருவர் தொழுத ரக்அத்களின் எண்ணிக்கை மூன்றா, நான்கா என்ற சந்தேகம் வந்தால் சந்தேகத்தை (அதாவது நான்கு என்பதை) எறிந்து விட்டு உறுதியானதை (அதாவது மூன்று என்பதை) எடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 990

இங்கே நான்காவதைத் தொழுதோமா இல்லையா என்று சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்துக்குரியதைச் செய்யவில்லை என்று முடிவு செய்யுமாறு இந்த நபிமொழி வழிகாட்டுகிறது. நான்காவது ரக்அத் தொழுதோமா என்று சந்தேகம் வந்தால் அதைத் தொழவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

இதே அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பும் கழுவப்பட்டதா இல்லையா என்று சந்தேகத்திற்குரியதாகி விடுவதால் எதையும் கழுவவில்லை என்ற முடிவுக்கு வந்து மீண்டும் உளூச் செய்வது தான் சரி. இது வலிமையான சந்தேகத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியதாகும்.

ஏதேனும் உறுப்பு கழுவப்படாமல் விடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலிமையில்லாததாக இருந்தால் அதைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறு முடிவு செய்வதற்கு ஒரு நபிவழியை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம்.

137 – حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»

ஒருவர் தொழுகையில் இருக்கும் போது காற்றுப் பிரிந்தது போல் சந்தேகம் ஏற்பட்டால் நாற்றம் அல்லது சப்தம் கேட்காத வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்பது நபிமொழி.

நூல் : புகாரி 137

திட்டவட்டமில்லாத சந்தேகங்களுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆக ஹதீஸ்களின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்வதை விடுத்து முட்டாள்தனமாக முடிவு செய்துள்ளனர்.

பைத்தியமாக்கும் பல் குச்சி

உளூச் செய்யும் போது பல் துலக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர். எப்படி பல் துலக்குவது என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறை எதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.

ஆனால் ஹனஃபி மத்ஹப் நூலில் பல்துலக்குவதற்கான சட்டம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

وَيَسْتَاكُ عَرْضًا لَا طُولًا، وَلَا مُضْطَجِعًا ؛ فَإِنَّهُ يُورِثُ كِبَرَ الطِّحَالِ، وَلَا يَقْبِضُهُ ؛ فَإِنَّهُ يُورِثُ الْبَاسُورَ، وَلَا يَمُصُّهُ ؛ فَإِنَّهُ يُورِثُ الْعَمَى، ثُمَّ يَغْسِلُهُ، وَإِلَّا فَيَسْتَاكُ الشَّيْطَانُ بِهِ، وَلَا يُزَادُ عَلَى الشِّبْرِ، وَإِلَّا فَالشَّيْطَانُ يَرْكَبُ عَلَيْهِ، وَلَا يَضَعُهُ بَلْ يَنْصِبُهُ، وَإِلَّا فَخَطَرُ الْجُنُونِ قُهُسْتَانِيٌّ . الدر المختار

பல் துலக்கும் குச்சியை அகல வாட்டத்தில் வைத்து பல் துலக்க வேண்டும். நீள வாட்டத்திலும், படுக்கை வாட்டத்திலும் வைத்து பல் துலக்கக் கூடாது. ஏனெனில் இது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும். அதை முழுக் கையால் பற்றிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் அது மூல நோயை உருவாக்கி விடும். அதை வாயில் வைத்து சப்பக் கூடாது.

ஏனெனில் அது பார்வையைக் குருடாக்கி விடும். அதைக் கழுவி விட வேண்டும். கழுவவில்லை என்றால் அதை வைத்து ஷைத்தான் பல் துலக்குவான். அதை ஒரு ஜான் அளவில் தான் வைத்திருக்க வேண்டும். அதை விட நீளமாக வைத்திருந்தால் ஷைத்தான் அதில் சவாரி செய்வான். அதைக் கீழே கிடத்தி விடாது நாட்டி வைக்க வேண்டும். இல்லையேல் பைத்தியம் பிடித்து விடும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இந்த அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு என்ன ஆதாரம்?

இந்தச் சட்டங்களுக்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை இந்த நூலே ஒப்புக் கொள்கிறது. அதனால்தான் நபிமொழியைக் காரணம் காட்டாமல் விளைவுகளைக் காரணம் காட்டுகிறது.

நீள வாக்கில் பல்துலக்கினால் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்படி அறிந்து கொண்டார்கள்? அன்றைக்கே கல்லீரலை எக்ஸ்ரே எடுத்து அல்லது ஸ்கேன் எடுத்து வீங்கி இருப்பதைக் கண்டுபிடித்தார்களா? நிஜமாகவே ஒருவனுக்கு இதனால் கல்லீரல் வீங்கி இருந்தால் அன்றைய மருத்துவ அறிவைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறிருக்க இந்த அறிவீனர்கள் அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

முழுக்கையால் பிடித்தால் தான் போதிய அழுத்தம் கிடைக்கும். இரு விரல்களால் பிடித்தால் பல் துலக்குவதற்குத் தேவையான அழுத்தம் கிடைக்காது என்று கூறியிருந்தாலாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு செய்தால் மூல நோய் ஏற்படும் என்று எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார்? மேலே சொன்னவாறு இதையும் நிரூபித்துக் காட்டத் தயாரா?

ஒரு ஜானுக்கு மேல் இருந்தால் அதில் ஷைத்தான் சவாரி செய்வான் என்று எழுதியுள்ளனர். இதை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாது. வஹீ மூலம் தான் கண்டுபிடிக்க முடியும். அதாவது அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொன்னால் தான் இதை அறிய முடியும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை. எனவே இச்சட்டத்தை இட்டுக்கட்டி சொல்லி உள்ளனர். இவர்களின் தலையில் ஷைத்தான் ஏறி உட்கார்ந்து கொண்டு இப்படி எழுத வைத்துள்ளான் என்று தெரிகிறது.

பல் குச்சியை நாட்டி வைக்காவிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்று எழுதி வைத்துள்ளனர். பைத்தியம் எதனால் ஏற்படுகிறது என்று பல காரணங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதில் பல் குச்சியைப் படுக்க வைப்பது இடம் பெறவில்லை. அப்படியானால் இப்படி உண்மைக்கு மாறானதை எழுதியவர்களுக்குத் தான் பைத்தியம் இருந்துள்ளது என்று தெரிகிறது.

இரு விரல்களால் பல் துலக்குதல்

திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பற்றிய ஞானம் மத்ஹபு அறிஞர்களுக்கு அறவே இல்லை என்றாலும் பொது அறிவாவது இருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இயற்றிய சட்டங்களைப் பார்த்தால் மன நோயாளிகளின் உளறலைப் போல் அமைந்துள்ளதை நாம் காணலாம். அது போல் அமைந்த ஒரு சட்டத்தைப் பாருங்கள்!

وَالْأَفْضَلُ أَنْ يَسْتَاكَ بِالسِّبَابَتَيْنِ، يَبْدَأُ بِالسَّبَّابَةِ الْيُسْرَى ثُمَّ بِالْيُمْنَى، وَإِنْ شَاءَ اسْتَاكَ بِإِبْهَامِهِ الْيُمْنَى وَالسَّبَّابَةِ الْيُمْنَى، يَبْدَأُ بِالْإِبْهَامِ مِنْ الْجَانِبِ الْأَيْمَنِ فَوْقَ وَتَحْتَ، ثُمَّ السَّبَّابَةُ مِنْ الْأَيْسَرِ كَذَلِكَ – الدر المختار

இடது ஆட்காட்டி விரல், வலது ஆட்காட்டி விரல் ஆகிய இரு ஆட்காட்டி விரல்களைக் கொண்டு பல்துலக்குவது சிறந்ததாகும். முதலில் இடதுகை ஆட்காட்டி விரலாலும், பின்னர் வலதுகை ஆட்காட்டி விரலாலும் பல் துலக்க வேண்டும்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

பல் துலக்குதல் போன்ற காரியங்கள் வலது கையால் செய்ய வேண்டும் என்பது நபிவழியாகும்.

168 – حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ» صحيح البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்துகொள்ளும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப்பக்கத்தையே விரும்பி வந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 168

மத்ஹபு உலமாக்களுக்கு இது போன்ற நபிமொழிகள் கூட தெரியவில்லை. நாகரீகமுள்ள எந்த மனிதனாவது இடது கை விரல்களை வாய்க்குள் நுழைத்து பல்லைத் தேய்ப்பானா? இரு ஆட்காட்டி விரல்களால் ஒருவன் பல்துலக்கினால் அவனைக் கிறுக்கனாகத்தானே மக்கள் கருதுவார்கள்? உங்களைக் கிறுக்கர்களாக ஆக்கும் இந்த மத்ஹபுகள் உங்களுக்குத் தேவையா?

இந்த அறிவீனர்கள் வகுத்துத் தந்த சட்டங்களை நாகரீகமுள்ள மக்கள் பின்பற்றலாமா? சிந்தித்துப் பாருங்கள்.

கொடுவாய் எச்சிலை விழுங்குதல்

தூங்கி எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். பல் துலக்காமல் உண்பதாலும், பருகுவதாலும் கேடுகள் ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் மத்ஹபு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பாருங்கள்!

 وينبغي أن يبلع ريقه أول استياكه أي إلا لعذر إعانة الطالبين

பல் துலக்கியதும் அந்த எச்சிலை அப்படியே விழுங்குவது அவசியமாகும்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத் தாலிபீன்

இது அறுவருப்பானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இது அவசியம் என்று மார்க்கச் சட்டம் சொல்வதாக இருந்தால் இதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? ஹதீஸ் எது? மத்ஹபு உலமாக்களால் ஆதாரத்தைக் காட்ட இயலாது.

குழாயை ஆறாக மாற்றும் அதிசய சட்டம்

ஹனஃபி மத்ஹப் சட்டப்படி ஒரு தடவை உளூச் செய்த தண்ணீரில் மீண்டும் உளூச் செய்யக் கூடாது. குளம் குட்டை போன்ற ஓடாத தண்ணீராக இருந்தால் அது பத்து முழம் ஆளமும், பத்து முழம் அகலமும் கொண்டதாக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூச் செய்யலாம். மேற்கண்ட அளவை விடக் குறைவாக இருந்தால் அதில் கைகளை விட்ட உடன் அது பயன்படுத்திய தண்ணீராகி விடும். அதில் கைகளை விட்டவரும் உளூச் செய்ய முடியாது. மற்றவரும் உளூச் செய்ய முடியாது.

ஆனால் ஒடும் தண்ணீராக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூச் செய்யலாம். அதில் அசுத்தமான பொருள் மிதந்தாலும் அது சுத்தமான தண்ணீராகும். இப்படி ஹனஃபி மத்ஹப் சட்டம் கூறுகிறது. இது ஆதாரமற்ற சட்டம் என்றாலும் இதில் பெரிய அளவில் கிறுக்குத் தனம் இல்லாததால் இதை விட்டு விடலாம்.

ஆனால் ஓடும் தண்ணீர் என்று ஹனஃபி இமாம்கள் கூறியதை மத்ஹபு சட்டப் புத்தகம் எழுதியவர்கள் எப்படி புரிந்து கொண்டு துணைச் சட்டம் எழுதியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கு நிகரான அறிவீனர்கள் உலகில் இருக்க முடியாது என்று அறிந்து கொள்ளலாம்.

அந்தத் துணைச் சட்டம் இதுதான்:

وَكَذَا لَوْ حَفَرَ نَهْرًا مِنْ حَوْضٍ صَغِيرٍ أَوْ صَبَّ رَفِيقُهُ الْمَاءَ فِي طَرَفِ مِيزَابٍ وَتَوَضَّأَ فِيهِ وَعِنْدَ طَرَفِهِ الْآخَرِ إنَاءٌ يَجْتَمِعُ فِيهِ الْمَاءَ جَازَ تَوَضُّؤُهُ بِهِ ثَانِيًا وَثُمَّ وَثُمَّ وَتَمَامُهُ فِي الْبَحْرِ – الدر المختار

ஒருவன் உளூச் செய்வதற்காக இன்னொருவன் தண்ணீர் ஊற்றுகிறான். அவன் உளூச் செய்த தண்ணீர் ஒரு குழாயின் ஒரு முனையில் ஓடுகிறது. அதன் மறுமுனையில் ஒரு பாத்திரம் வைக்கப்பட்டு அதில் அந்தத் தண்ணீர் சேர்கிறது. அந்தத் தண்ணீரில் மீண்டும் மீண்டும் மீண்டும் உளூச் செய்யலாம்.

நூல்: ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இப்போது ஓடும் தண்ணீர் என்ற தகுதி வந்து விட்டதாம். குழாய் வழியாக இல்லாமல் நேரடியாக அந்தத் தண்ணீர் பாத்திரத்தில் பிடிக்கப்பட்டால் அதில் மீண்டும் உளூச் செய்ய முடியாது. குழாய் வழியாக ஓடியதன் மூலம் ஓடும் தண்ணீராக ஆகிவிட்டதால் எத்தனை தடவையும் உளூச் செய்யலாமாம்.

ஓடும் நதிகளில் அதிக அளவில் தண்ணீர் ஒடுவதால் அதில் ஊளுச் செய்யலாம் என்று அந்த மத்ஹப் அறிஞர்கள் கூறியதைக் கூட சரியாக விளங்காத அறிவிலிகள் தான் மத்ஹப் சட்ட நூல்களை எழுதி உள்ளனர். இதைப் படித்து அறியாமையைப் பெருக்கிக் கொண்டவர்கள் தான் அறிஞர்களாக கருதப்படுகிறார்கள்.