Tamil Bayan Points

59) 71 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

71 வது வசனம்

71. நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?

(அல்குர்ஆன் : 36 : 71.)

அல்லாஹ்வின் கரத்தால் படைக்கப்பட்ட ஆதம் நபி

இவ்வசனத்தின் துவக்கத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதை படிக்கும் போது பின்வரும் சந்தேகம் நமக்கு ஏற்படலாம்.

ஆதம் நபியவர்களைதான் அல்லாஹ் தன் கைகளால் படைத்துள்ளான். ஆனால் இவ்வசனத்தில் கைகளால் உருவாக்கிய கால்நடைகள் என்று கூறப்படுகிறதே என்று தோன்றலாம். இதற்கான பதிலை அறிந்து கொள்ள வேண்டும். ஆதம் நபியவர்களை மட்டும்தான் அல்லாஹ் தன் கைகளால் படைத்துள்ளான்.

“இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

(அல்குர்ஆன் : 38 : 75.) 

ஆதம் நபியவர்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்ததை இவ்வசனம் உறுதிபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்களும் இதை உறுதிபடுத்துகிறார்கள்.

உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்.

உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்).

நூல் புகாரி-3340

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச்செய்த ஆதம் நீங்கள்தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளை தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர்தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்” என்று பதிலளித்தார்கள். “அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “ஆம்” என்றார்கள்.

“அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?” என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள். (இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

ஸஹீஹ் முஸ்லிம்-5159.

இநத் சான்றுகளின் மூலம் ஆதம் அலை அவர்களே இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்.

எனவே யாசீன் அத்தியாயத்தின் 71 வது வசனத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” கூறப்படுவது பேச்சு வழக்கில் உள்ளதாகும். இதை போன்று பல வசனங்கள் உண்டு.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது.

அல்குர்ஆன் 30 : 41

இதில் மனிதர்களின் கரங்கள் செய்தவை என்று கூறப்பட்டிருந்தாலும் அனைத்து உறுப்புகளும் செய்த தீமைகளையும் இது குறிக்கும். கைகள் செய்ததை மட்டும் குறிக்காது. இருப்பினும் கைகள் செய்தவை என்று கூறுவது பேச்சு வழக்காகும்.

30. உங்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் உங்கள் கைகள் செய்ததன் காரணத்தினால் ஏற்பட்டது. அவன் அதிகமானவற்றை மன்னிக்கிறான்.

அத்தியாயம் 42 : 30

இவ்வசனத்திலும் “கைகள் செய்ததன் காரணமாக” என்ற ு கூறும் போது நாவு, கால்கள், கண்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் என்றுதான் நாம் புரிந்து கொள்வோம்.

இது போன்றே யாசீன் அத்தியாயத்தின் 71 வது வசனத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” என்று கூறப்படுவதையும் அல்லாஹ்வின் ஆற்றலால் படைக்கப்பட்டது என்று இலக்கியமாக புரிந்து கொள்ளவேண்டும்.