Tamil Bayan Points

58) 70 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

70 வது வசனம்

70. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).

அல்குர்ஆன் 36 : 70 

படிப்பினை பெறுபவர்கள்தான் உயிருடன் உள்ளவர்கள்

உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காக குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்று இவ்வசனம் கூறுகிறது.

உயிருடன் உள்ளோரை தானே எச்சரிக்கை செய்யமுடியும்? என்று கருதலாம். இந்த குர்ஆனின் எச்சரிக்கை மூலம் யார் பயன்பெறுகிறார்களோ அவர்களே உயிருடன் உள்ளோர்க்கு சமம். மற்றோர் இறந்தவர்களுக்கு சமம் என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்தும் விதமாகவே இவ்வசனம் அமைந்துள்ளது.

பின்வரும் வசனங்கள் இவ்விளக்கத்தை உறுதி செய்கிறது.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன் : 35 : 22.) 

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. குருடர்களின் வழி கேட்டை நீக்கி அவர்களுக்கு நேர் வழி காட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போர்க்கே நீர் கேட்கச் செய்வீர்!

(அல்குர்ஆன் : 27: 80,81.) 

மேற்கண்ட வசனங்களில் உயிருடன் உள்ளவர்கள் சிறப்பித்து கூறப்படுகிறார்கள். குறிப்பாக 27 வது அத்தியாயம் 81 வது வசனத்தில் “குருடர்களின் வழி கேட்டை நீக்கி அவர்களுக்கு நேர் வழி காட்டுபவராகவும் நீர் இல்லை.” என்ற வாசகம் கருத்து ரீதியாகவே கூறப்பட்டுள்ளது. உயிருடன் இருந்தும் தன் அறிவை முறையாக பயன்படுத்தாதவர்களை கருத்து குருடர்கள்.என்று கூறும் வழக்கமுண்டு. யாசீன் அத்தியாயத்தின் 70 வது வசனமும் அது போன்றதே.

இவ்வசனத்தில் மற்றொரு படிப்பினையும் உண்டு. இன்றைக்கு நம் சமுதாயத்தில் இறந்தவர்களுக்காக யாசீன் அத்தியாயத்தை ஓதும் வழக்கம் உண்டு. இறந்தவரின் தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டு ஓதுவார்கள். அத்தகையவர்கள் 70 வது வசனத்தை கவனிக்க வேண்டும். உயிருடன் உள்ளவர்களை எச்சரிப்பதற்காகவே இந்த குர்ஆனே அருளப்பட்டது. மேலும் உயிருடன் உள்ளோருக்கு மட்டும்தான் குர்ஆன் பயன்தரும் எனும் போது இறந்தவர்களுக்காக இந்த அத்தியாயத்தை ஓதுவது ஏற்புடையதல்ல. அதற்கு ஆதாரமும் இல்லை.

குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க வேண்டும்

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 70 வது வசனத்தில் உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்கு இந்த குர்ஆனை அருளியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை பலன் தர வேண்டுமென்றால் அதை பொருளுணர்ந்து படிக்க வேண்டும். அரபியில் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடாமல் அதன் பொருளையும் சிந்திக்கவேண்டும். உதாரணமாக பின்வரும் வசனத்தை காணலாம்.

(முஹம்மதே!)வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன் : 29 : 45.) 

இவ்வசனம் தொழுகை தீமையை விட்டு தடுக்கும் என்று கூறுகிறது.

இதை முறையாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தொழுகையை சாதாரண உடற்பயிற்சி என்று நினைத்து தொழுதால் அவருக்கு பயன்தராது. அனைத்து தொழுகைகளிலும் நாம் ஓதுகிற குர்ஆன் வசனங்களை சிந்திக்க வேண்டும். இமாமை பின்பற்றி தொழும்போது அவர் ஓதும் வசனங்களையும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் என்ன போதிக்கின்றது என்பதை அறியும் போது தான் தொழுகை மானக்கேடானவற்றை தடுக்கும்.

குர்ஆனை அதன் பொருளுணர்ந்து படித்து செயல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையும் 70வது வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

தண்டனை வழங்குவதில் நேர்மை

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 70 வது வசனத்தில் ” (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).” என்று உள்ளது.

இறைநிராகரிப்பாளர்களை எந்த சான்றுமின்றி தண்டித்தால் அது அநீதியிழைத்ததை போன்று ஆகிவிடும். இதை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடை அல்லாஹ் செய்துள்ளான்.

அல்லாஹ்வை மறுத்தாலோ அல்லது இணைவைத்தாலோ மறுமையில் தண்டிக்கப்படுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதை படித்த பிறகும் ஒருவன் இத்தீமையை செய்யும் போது அது தண்டனைக்குரிய குற்றமாகி விடுகிறது. இறைவனின் தண்டனைக்கு தன்னை தகுதியாக்கி விடுகிறான்.

உதாரணமாக அரசாங்கம் ஒரு சட்டத்தை விதித்த பிறகு ஒருவன் அதை மீறிவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு பின் இவனை தண்டிப்பதற்கு அரசாங்கம் காரணமல்ல. இவனுடைய அலட்சியமும் தவறுமே காரணம்.

இவ்வாறே இறைமறுப்பாளர்கள் குர்ஆனை படித்த பிறகும் மீறும் போது அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு தகுதியாகி விடுகிறார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.