Tamil Bayan Points

57) 69 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

69 வது வசனம்

69. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை. இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன் : 36 : 69.)

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மக்களுக்கு கூறும்போது சிலர் இது கவிதை என்று விமர்சித்தனர். அதற்குரிய பதிலை இந்த வசனத்தில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறுவது கவிதை அல்ல இது குர்ஆன்தான் என்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் கவிதை

கவிதை எனும் பெயரில் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.

(அத்தியாயம் : 26 : 224,225,226.) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி-6154

சீழ் சலத்தை விட மிகவும் அறுவறுப்பானதாக கவிதை கூறப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் அதிகமாக சினிமாவின் பாடல்களை கேட்கின்றனர். மேலும் மார்க்கத்தின் பார்வையின் இழிவாக கருதப்படுகின்ற மவ்லிது எனும் கவிதையை நன்மை எனக்கருதி ஓதி வருகின்றனர். நபி (ஸல்) அவர்களின் பெயரால் இவ்வாறு செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

மார்க்கத்திற்கு மாற்றமான கவிதைகள் மட்டும்தான் கூடாது இது அல்லாமல் நல்ல கருத்துக்களை தரக்கூடிய கவிதைகள் கூடும். இதை நபி (ஸல்) அவர்களும் அனுமதித்துள்ளார்கள்.

ஹூனைன் போரின் போது கவிதை பாடுதல்

அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு விட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மைதானா)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “(ஆம், உண்மைதான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர் களாயிருந்தார்கள்.

நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். ஆகவே, முஸ்லிம்கள் (போர்க்களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதரோ பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.)

நான் நபி (ஸல்) அவர்களை தமது “பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “நான் இறைத் தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.

நூல் புகாரி-2864

மேற்கண்ட ஹதீஸில் “நான் இறைத் தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்பதை குறிப்பதற்கு அரபியில் “அன நபிய்யுன் லா கதிப், அன இப்னு அப்தில் முத்தலிப்” என்று இரண்டு வாசகங்களின் இறுதியில் “ப்” என்ற எழுத்தை கொண்டு முடியும் வகையில் கவிதை வடிவில் கூறியுள்ளார்கள்.

மேலும் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கும் கவிதை வடிவில் ஆறுதல் கூறியுள்ளார்கள்.

ஜுன்தப்1 போது அவர்களது விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகின்ற ஒரு விரல் தானே? நீ அடைந்த(பழு) தெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

நூல் புகாரி-2802

இச்செய்தியில் “நீ இரத்தம் சொட்டுகின்ற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு) தெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தானே!” என்ற வாசகத்தை குறிப்பதற்கு அரபியில் “ஹல் அன்த்தி இல்லா இஸ்பஉன் தமீத்தி, வஃபீ சபீலில்லாஹி மா லகீத்தி” என்று இரண்டு வாசகங்களின் இறுதியிலும் “தி” என்று முடியும் வகையில் கவிதை வடிவில் கூறியுள்ளார்கள்.

இது போன்ற தீய அர்த்தங்கள் இல்லாத வார்த்தைகளை கவிதை வடிவில் படிப்பதை நபி (ஸல்) அவர்கள் எந்த முயற்சியும் இல்லாமல் இயல்பாகவே பாடியுள்ளார்கள். இஸ்லாத்தில் அனைத்து கவிதைகளுக்கும் தடையில்லை. நல்ல கவிதைகள் பாடுவது அனுதிக்கப்பட்டுள்ளது. தீய அர்த்தங்கள் கொண்டவைகளுக்கு மட்டும்தான் தடை உள்ளது என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.