Tamil Bayan Points

56) 68 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

68 வது வசனம்

68. நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

(அல்குர்ஆன் : 36 : 68.)

இறங்கு முகம்

மனிதனுக்கு வாழ்நாள் அதிகமாக வழங்கப்படும் போது படைப்பில் இறங்குமுகத்தை நோக்கி செல்வான். குழந்தை பருவத்தில் நம்மை வேறொருவர் கை பிடித்து அழைத்து செல்லும் நிலையில் இருப்போம். பிறகு இளமை பருவத்தில் தானாக செயல்படுவோம். பின்பு முதுமை பருவத்தில் மீண்டும் சிறு குழந்தை போன்று நம்மை யாரேனும் அழைத்து செல்லும் நிலைக்கு ஆளாவோம்.

தானாக நடக்க இயலாமல் கைத்தடி வைத்து நடக்கவும் செய்கிறோம். ஒவ்வொரு தேவைக்கும் வேறு யாரையாவது எதிர்பார்த்து காத்திருப்போம். மேலும் பேச்சின் நிலைகளும் மாறிவிடும். சீரான முறையில் பேசுவதற்கு இயலாமல் மிகவும் சிரமப்படுவோம். இவ்வாறு குழந்தை போன்று ஆகிவிடுவதை இவ்வசனம் இறங்குமுகம் என்று கூறுகிறது. இதை மற்றொரு வசனமும் விளக்குகிறது.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் : 16 : 70.) 

சுயமாக செயல்பட முடியாத, தள்ளாத வயதேற்படும் நிலையை விட்டு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

சஅத்பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரிவந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற்.

பொருள்: இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். கருமினத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.

நூல் புகாரி-2822

சிலர் தள்ளாத வயதில் தாமும் சிரமப்பட்டு பிறரையும் சிரமப்படுத்துவர். இதனால் பெற்ற பிள்ளைகள் கூட பெற்றோரை சிரமமாக நினைப்பார்கள். இது போன்று சிரமப்படுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு நாம் தேடவேண்டும்.